செய்யு - 93
எட்டாம் நம்பர் பஸ்ஸில் எப்போதோ போய்க்
கொண்டிருந்த விகடு இப்போது அடிக்கடி எட்டாம் நம்பர் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தான்.
அவன் வீட்டைப் பற்றியும், காலேஜைப் பற்றியும் பலவிதமாக யோசித்தபடிப் போய்க் கொண்டிருந்தான்.
ப்ளஸ்டூவுக்குப் பிறகு அவனை திருவாரூர் தியாகாராசசுவாமி காலேஜில் சேர்ந்திருந்தார்கள்.
செய்யு மணமங்கலம் பள்ளிக்கூடத்துக்குப் போய்க் கொண்டிருந்தாள்.
வீட்டைப் பொருத்த வரையில் சிதிலமாகிக்
கிடக்கும் கூரை வீட்டை எடுத்துக் கட்டுவதா? அல்லது சிதைந்து கிடக்கும் வீட்டைச் சீர்
செய்து கொள்வதா? வைத்தி தாத்தாவிடமும், லாலு மாமாவிடமும் பேசி வீயெம் மாமாவின் கல்யாணத்தை
முடிப்பதா? அல்லது அதைப் பற்றிப் பேசிப் புதிய பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ளாமல்
இருப்பதா? என்ற குழப்பக் கதியில் நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. இப்படி ஒரு குழப்பக்
கதியில் நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் ஆண்டுகளாகிக் கரைந்து ஓடும் என்பதை நினைத்துப்
பார்க்க ஆச்சரியமாகத்தான் இருக்கும். இந்த உலகில் எவ்வளவோ ஆச்சரியங்கள் நடந்து முடிந்து
விட்டிருக்கின்ற போது இதென்ன பெரிய ஆச்சரியம் என்பது போல இந்த அதிசய ஆச்சரியத்தை
ஒரு பொருட்டென்று மதிக்காத மாதிரி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
எட்டாம் நம்பர் பஸ் ஒவ்வொரு நிறுத்தமாய்
நின்று கொண்டே போய்க் கொண்டே இருந்தது. திடீரென வேகமெடுப்பதும், திடீரென சடர்ன்
பிரேக் போட்டு பஸ்ஸில் இருப்பவர்களை முன்னோக்கித் தள்ளி விடுவதுமாக அது போய்க் கொண்டிருந்தது.
திருவாரூர் மேம்பாலம் வந்ததும் பஸ் மெதுவாக
நகர ஆரம்பித்தது.
திருவாரூரின் சிறப்பு என்னவென்று கேட்டால்
சின்னக் குழந்தையும் சட்டென்று ஆழித்தேர் என்று சொல்லும். இந்தப் பரத துணைகண்டத்தின்
மிகப்பெரியத் தேர் திருவாரூர் தியாகராசருக்காக வருஷத்துக்கு ஒருமுறை ஓடுகிறது.
மற்றுமொரு சிறப்பும் திருவாரூருக்கு இருக்கிறது.
பஸ் ஸ்டாண்டும், ரயில்வே ஸ்டேஷனும் அருகருகே அமைந்திருப்பதும் திருவாரூருக்குச் சிறப்பு.
காலப்போக்கில் இந்தச் சிறப்பு மாறிப் போகலாம். புதிதாகப் பேருந்து நிலையங்கள் உருவானால்
இது மாறிப் போகலாம். அப்படிப் புதிதாகப் பேருந்து நிலையங்கள் உருவாக வரை இதுவும் திருவாரூரின்
ஒரு சிறப்பே.
ஒரு ரோடுதான் பஸ் ஸ்டாண்டையும், ரயில்வே
ஸ்டேஷனையும் பிரிக்கிறது. ரோட்டின் தென்னண்டைப் பக்கம் ரயில்வே ஸ்டேஷன் என்றால் ரோட்டின்
வடவண்டைப் பக்கம் சற்றுத் தள்ளி பஸ் ஸ்டாண்ட். ரெண்டையும் ஒரு சிறுநடை நடக்கும் தூரத்தில்
அடைந்து விடலாம்.
திட்டையிலிருந்து திருவாரூருக்குச் செல்லும்
போது மேம்பாலத்தைத் தாண்டினால் பஸ் ஸ்டாண்டையும், ரயில்வே ஸ்டேஷனையும் நிமிஷ நேரத்தில்
பிடித்து விடலாம். மேம்பாலத்தின் அடியில் ரயில்கள் போவதையும், வருவதையும் பாரத்துக்
கொண்டே நிற்கலாம். ரயில்கள் வந்து போகாத போது தண்டவாளங்களைப் பார்த்துக் கொண்டு
அப்படியே மெய் மறந்து நிற்கலாம். எத்தனையோ நாட்கள் விகடு அப்படி மெய்மறந்து நின்றிருக்கிறான்.
செய்யுவை அழைத்துக் கொண்டு அவன் திருவாரூர் போகும் நாட்களில் அவளும் மேம்பாலத்திலிருந்து
ரயில்களையும், தண்டவாளங்களையும் பார்ப்பதை உலக அதிசயத்தைப் பார்ப்பது போல பார்த்து
நின்றிருக்கிறாள்.
அந்த மேம்பாலத்தில் அப்படி வருபவர்கள்,
செல்பவர்களில் எத்தனைப் பேர் அப்படிப் பார்த்திருக்கிறார்களோ என்னவோ! அந்த மேம்பாலம்
கட்டப்பட்டது பற்றி ஒரு கதை கூட உண்டு. மேம்பாலம் கட்டப்படாததற்கு முன்பு திருவாரூருக்கு
தெற்கே இருந்தவர்கள் ரயில்வே கேட்டைக் கடந்துதான் திருவாரூர் வந்தாக வேண்டும். மீண்டும்
திருவாரூரிலிருந்து ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் ரயில்வே கேட்டைக் கடந்துதான் சென்றாக
வேண்டும். ரயில் வருவதாக இருந்தால் ரயில்வே கேட்டை அடைத்து விடுவார்கள். ரயில்வே கேட்டைத்
திறந்த பிறகுதான் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கமோ, அந்தப் பக்கத்திலிருந்த
இந்தப் பக்கமோ செல்ல முடியும் என்ற நிலை. தெற்கிலிருந்து திருவாரூர் நோக்கி வரும்
அத்தனையும் போக்குவரத்தையும் இந்த ரயில்வே கேட் வெகுவாகப் பாதித்துக் கொண்டிருந்தது.
ரயில்வே ஜங்ஷனுக்கு அருகே அந்த கேட் இருந்ததால் ரயில்வே கேட் திறந்திருந்த நேரத்தை
விட, அடைபட்டிருந்த நேரமே அதிகமாக இருந்தது. அப்படி இருந்த நிலையில் ஒருமுறை பிரசவத்தில்
துடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை திருவாரூர் ஆஸ்பிட்டலுக்காக அவசர அவரமாக கொண்டு
வந்த போது போது கேட் போடப்பட்டிருந்தது. ரயில்வே கேட் திறக்கப்படும் வரையில் காத்திருந்ததில்
பிரசவத்தில் துடித்துக் கொண்டிருந்த பெண் இறந்து போய் விட்டது. அதற்குப் பின்புதான்
இந்தப் பிரச்சனை கவனத்தில் கொள்ளப்பட்டு மேம்பாலம் கட்டப்படும் வேலைகள் ஆரம்பித்து
மேம்பாலம் கட்டப்பட்டு, பஸ் ஸ்டாண்டை வந்து சேர்வதற்கும், பஸ் ஸ்டாண்டிலிருந்து போவதற்கும்
ரயில்வே கேட் பிரச்சனையில்லாமல் போக்குவரத்து சுமுகமாக நடைபெற ஆரம்பித்தது.
இந்த மேலண்டை ரயில்வே கேட் பிரச்சனை ஒருவழியாக
இப்படி மேம்பாலம் கட்டப்பட்டதால் சரியானது. இதே போன்ற பிரச்சனை வாளவாய்க்காலிலிருந்து
திருவாரூருக்குள் நுழையும் வழியில் கீழண்டைப் பக்கம் நெடுநாள் நீடித்தது. அந்தக் கீழண்டைப்
பக்க வழியில் பஸ் போக்குவரத்து இல்லையென்றாலும், பொதுமக்களின் பயன்பாடு அந்தக் கீழண்டைச்
சாலையில் அதிகம். அங்கிருந்த ரயில்வே கேட்டிலும் இதே பிரச்சனைதான். கேட் போட்டு விட்டால்
ரயில்வே கேட்டின் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் பெரும் போக்குவரத்து நெரிசல் உண்டாகி
பெரும் வாதையாக இருந்தது. மேலண்டைப் பக்கம் மேம்பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் கழித்து
கீழண்டைப் பக்கம் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது.
தெற்கிலிருந்து மேலண்டைப் பக்கமாக திருவாரூக்குள் நுழைந்தால் மேம்பாலத்தின் வழியாக
கீழே தண்டவாளங்களைப் பார்த்துக் கொண்டோ அல்லது கீழண்டைப் பக்கமாக நுழைந்தால் சுரங்கப்
பாதையின் வழியாக மேலிருக்கும் தண்டவாளங்களை மனக்கண்ணில் பார்த்துக் கொண்டே நுழையலாம்.
அப்படி நுழையும் போது தண்டவாளங்களில் ரயில்கள் சென்றால் அந்த அனுபவம் ரொம்ப விஷேசமாக
இருக்கும். மேலண்டைப் பக்க மேம்பாலத்தின் வழியாகச் செல்லும் போது கீழே தடக் தடக் என்று
ரயில்கள் செல்வது நம் இதயம் நமக்கு மட்டும் கேட்பது போல துடிப்பதைப் போல அந்தச் சத்தம்
இருக்கும். அதுவே கீழண்டைப் பக்கம் சுரங்கப் பாதை வழியாகச் செல்லும் போது மேலே தண்டவாளத்தில்
ரயில்கள் செல்வதை அனுபவிக்க நேரிடும் போது நம் இதயம் ஊருக்கே கேட்கும் அளவுக்கு சத்தத்தோடும்
துடித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் தடக் தடக் என்ற சத்தம்.
இந்தத் தண்டவாளங்களில் வேளாங்கண்ணி, தஞ்சாவூர்,
திருத்துறைப்பூண்டி, காரைக்குடி செல்லும் ரயில்கள் வருவதும் போவதுமாக இருந்து கொண்டிருக்கும்.
கூட்ஸ் வண்டிகளும் கரியை ஏற்றிக் கொண்டே, நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டே போய்க்
கொண்டிருக்கும்.
திட்டையிலிருந்து எட்டாம் நம்பர் பஸ்ஸில்
திருவாரூர் வந்து இறங்கினால் அந்த பஸ் திரும்ப வடவாதி சென்று திரும்பவதற்குள் டவுனில்
வாங்க வேண்டிய சாமான்களை வாங்கிக் கொண்டு பஸ் ஏறி விடலாம். சமயங்களில் கடைகளில் கூட்டம்
என்றால் பஸ்ஸைத் தவற விட்டாகி விடும். அது போன்ற நேரங்களில் பையைக் கடைகளில் வைத்து
விட்டு திருவாரூரை ஒரு சுற்றி சுற்றி வருவது விகடுவுக்கு வழக்கம். வழக்கமாக அவன் பஸ்
ஸ்டாண்ட் பக்கமாக வந்து ரயில்வே ஸ்டேஷன் பக்கமாகச் சென்று அப்படியே நடந்து கீழண்டைச்
சுரங்கப் பாதை இருக்கும் வரை நடந்து வந்து வடக்கே திரும்பிக் கடைத் தெருவின் வழியாக
ஒரு நடை நடந்து இடது பக்கமாக லேடி டாக்கீஸ் ரோட்டில் நடந்து வலது பக்கமாகத் திரும்பினால்
மீண்டும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விடுவான். எப்படியும் அப்படி நடை நடந்து வேடிக்கைப்
பார்த்துக் கொண்டே வந்தால் முக்கால் மணி நேரத்துக்கு மேலாகி விடும். அப்படிச் சுற்றி
வந்து கே.ஆர்.ஆர். கபேக்கு எதிரே இருக்கும் மசாலா பால் கடையில் ஒரு மசாலா பால் குடித்தால்
அதில் ஒரு கால் மணி நேரமாகி விடும். அடுத்த ஒரு மணி நேரத்துக்கு பஸ் ஸ்டாண்டில் நிற்கும்
கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருத்துறைப்பூண்டி பஸ்களில் மாறி மாறி
ஏறி உட்கார்ந்து கொண்டிருந்தால் அடுத்த ஒரு மணி நேரத்தை ஓட்டி விடலாம்.
தன் இளமைக் காலங்களில் திருவாரூருக்குச்
செல்வது அபூர்வமாக இருந்த நாட்களில் பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில இப்படி
நடையாய் நடப்பதை வெகுவாக விரும்பிய விகடு, காலேஜ் சேர்ந்து விட்ட இற்றை நாட்களிலும்
இப்படி நடப்பதை வெகுவாக விரும்பினான். ப்ளஸ் டூவுக்குப் பின் அவன் திருவாரூர் தியாகராச
சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அவன் பி.எஸ்ஸி. பாட்டனி படித்துக் கொண்டிருந்தான்.
அப்பா அவனை பி.எஸ்.ஸி.யில் மேதமெடிக்ஸ்
படிக்குமாறு எவ்வளவோ சொல்லி ஓய்ந்து போனார். அவன் பிடிவாதமாக பி.எஸ்.ஸி. பாட்டனி
படித்துக் கொண்டிருந்தான். ஏற்கனவே அவனுக்கு ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூவில் சிறப்புத் தமிழில்
சேர்க்கவில்லை என்ற கோபம் இருந்தது. தனக்கு விருப்பமான பாடத்தைத்தான் தன்னால் நன்றாகப்
படிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவன் பாட்டனியைத் தேர்வு செய்திருந்தான்.
அப்பா தெரிந்தவர்கள் மூலமாக பி.எஸ்.ஸி.
பாட்டனியில் சேரும் அவன் முடிவை எவ்வளவோ மாற்றப் பார்த்தார். லாலு மாமா கூட வந்து
பேசிப் பார்த்தார். மெத்தமடிக்ஸ் படித்து அப்படியே பியெட் முடித்து எப்படியாவது வாத்தியாராகி
விடு என்று அவர் கர்ண கொடூரமாக அறிவுறுத்தினார். மிரட்டினார் என்று கூட சொல்லலாம்.
தாவரங்களுக்கும், தனக்குமான உறவை யாரும் பிரித்து விட வேண்டாம் என்று விகடு அப்போது
வீர வசனம் பேசி அறிவுரைச் சொல்ல வந்தவர்களையெல்லாம் அலட்சியப்படுத்தி வெளியே அனுப்பினான்.
திருவாரூரிலிருந்து நான்கு கிலோ மீட்டர்
தூரத்தில் இருந்த மரணப் பாலத்தைத் தாண்டிச் சென்றால் தியாகாராசக்கொண்டாரம். அங்கு
இருந்த காலேஜூக்கு திருவாரூரிலிருந்து மறுபடியும் ஒரு பஸ் பிடித்துச் செல்ல வேண்டும்.
காலேஜ் விட்டு திருவாரூர் வந்தால் பஸ் ஸ்டாண்ட் வரும் நேரத்துக்கும், வடவாதிக்குச்
செல்லும் எட்டாம் நம்பர் பஸ் வரும் நேரத்துக்கும் எட்டாம் பொருத்தமாக இருந்தது. அதனால்
அவன் காலேஜ் விட்டு வந்தான் என்றால் திருவாரூர் பஸ் ஸ்டாண்டில் ஆரம்பித்து ரயில்வே
ஸ்டேஷன், கடைத் தெரு, லேடி டாக்கீஸ் ரோடு சுற்றி வந்து கே.ஆர்.ஆர். கபேவுக்கு எதிரே
இருந்த மசாலா பால் கடையில் மசாலா பால் குடித்து முடிப்பதற்கும், எட்டாம் நம்பர் பஸ்
வந்து நிற்பதற்கும் நேரம் சரியாக இருக்கும்.
அவன் படித்த போது தியாகராச சுவாமி காலேஜில்
ஸ்டிரைக்குகள் அதிகம். அப்படிப்பட்ட நாட்களில் காலேஜ் போயி சேர்ந்த அடுத்த அரை மணி
நேரத்தில் திருவாரூர் பஸ் ஸ்டாண்டுக்குத் திரும்பி விடலாம். அப்படியான ஒரு நாளில் அவன்
எட்டாம் நம்பர் பஸ் வருவதற்காகக் காத்திருந்த போது நடக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு முறை
நடக்கும் போது புதிதாய் நடப்பதைப் போலிருந்தது அந்தச் சாலை. அவன் லேடி டாக்கீஸ் ரோட்டில்
நடந்து கொண்டிருந்தான்.
லேடி டாக்கீஸூக்கு அருகே ரோட்டுப் பாக்கத்தில்
படம் பார்க்க வந்தவர்களை வரிசையாக நிறுத்தி வைத்து போலீஸ்காரர்கள் பத்து பதினைந்து
பேர் வரிசையோடு வரிசையாக அருகே நின்று கொண்டிருந்தார்கள். அதை வேடிக்கைப் பார்ப்பதற்காக
ரோட்டின் எதிர்புறத்தில் பெருங்கூட்டமே நின்று கொண்டிருந்தது.
இப்படி ஓர் அசாதாரணமான ஒரு கூட்டத்தை விகடு
அன்றுதான் லேடி டாக்கீஸூக்கு எதிரே பார்த்தான். கூட்டத்தை விட்டு நடந்து விடலாம் என்று
தோன்றிய போது போலீஸ்காரர்கள் வரிசையாக நிறுத்தியிருந்தவர்களை ஒவ்வொருவராக வரச்
சொல்லி பிட்டத்தில் பிரம்புக் கம்பால் நான்கு அடி வைத்தார்கள். அடி வாங்கியவர்கள்
துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடினார்கள். அவர்கள் அப்படி ஓடுவதை வேடிக்கைப் பார்த்தக்
கூட்டம் கைதட்டி ரசித்துக் கொண்டிருந்தது.
விகடு அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவரிடம்
விசாரித்தான்.
"அதாங் பாருங்களேம்பி. வெடலப் பசங்க
ஒண்ணு ரண்டுதான் நிக்குறாம். பாக்குறதுக்கு எல்லாம் கல்யாணம் ஆன கட்டைகளா நிக்குறானுவோ.
இது கெழடுகள வேற பாருங்கம்பி. இந்த வயசுல இந்த மாரி அவித்துப் போட்டு ஆடுற படம் பாக்கலேன்னு
வூட்டுல யாரு அடிச்சிக்குறாவோ?" என்றார் அந்த ஆள்.
"தெனமும் இங்க படம் பாக்குறவங்கள
இப்படிதாம் போலீஸூ அடிக்குதா?" என்று கேட்டான் விகடு.
அந்த ஆள் விகடுவை ஏற இறங்கப் பார்த்து
விட்டுச் சொன்னார், "பாத்தா படிச்சப் பையம் மாரில்ல தெரியுறே! ஊரு ஒலகத்துல நடக்குறது
தெரியுதா ஒனக்கு? இப்போ நம்ம ஜில்லாவுக்கு புதுக் கலக்டர் வந்துருக்காரு தெரியும்ல.
அவருதாம் ஆடர் போட்டுருக்காராம், இந்த மாரி படம் ஜில்லாவுல எங்கேயும் ஓடக் கூடாதுன்னு.
அதாங் போலீஸூ போட்டுப் பொளக்குது!" என்றார் அவர்.
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் விகடு
அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தவன், போலீஸ்காரரிடம் அடி வாங்கியபடி துள்ளிக் குதித்தபடி
ஓடிக் கொண்டிருந்த ஆளைப் பார்த்ததும் ஒரு நொடி அப்படியே நின்றான்.
"இந்த மனுஷத்துக்குப் போலீஸூட்ட
அடி வாங்கலன்னா தூக்கம் வராது போலிருக்கு. தேடிப் போயி அடி வாங்கும் போலருக்கு."
என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டே, ரெண்டடி எடுத்து வைத்தவன் ஓடிக் கொண்டிருந்த
அந்த ஆளைப் பார்த்து மறுபடியும் அப்படியே நின்றான்.
அங்கே... லாலு மாமா விடுவிடுவென்று பிட்டத்தைத்
தடவியபடி ஓடிக் கொண்டிருந்தார்.
*****
No comments:
Post a Comment