செய்யு - 91
லாலு வாத்தியார் எம்யெட்டியிலிருந்து விழுந்து
விட்டார் என்று ஊரெங்கும் பேச்சாக இருந்தது. அப்பா அம்மாவைக் கிளப்பிக் கொண்டு டிவியெஸ்
பிப்டியில் பார்க்கக் கிளம்பியது.
லாலு வாத்தியார் வீட்டின் முன்னே போடப்பட்டிருந்த
கொட்டகையில் கட்டிலில் படுத்திருந்தது. தலைமாட்டில் ஒரு டேபிள் பேன் ஓடிக் கொண்டிருந்தது.
இடுப்பில் ஒரு கைலி மட்டும் கட்டியிருந்தது. உடம்பு பார்ப்பதற்கு எண்ணெய்யை அள்ளிப்
பூசியிருந்தது போலிருந்தது. முகம் பார்க்க சகிக்க முடியாத அளவுக்கு ஊதிப் பெருத்திருந்தது.
கால்களும் நன்றாக வீங்கியிருந்தன. லேசாக முனகிக் கொண்டிருந்தார். படுத்துக் கிடக்கும்
இவர்தான் லாலு மாமாவா அல்லது வேணி அத்தையாக மாறி விட்ட லாலு மாமாவின் பெண் வடிவமா என்ற
குழப்பத்தைத் தந்தது அவரது நிலை.
அவர் படுத்திருந்த கட்டில் வேணி அத்தைக்கானது.
அதனால் கூட அந்தத் தோற்றக் குழப்பம் நேர்ந்திருக்கலாம். வேணி அத்தை வீட்டை விட்டு
வெளியே வந்து கொட்டகையில் படுக்க ஆரம்பித்து பத்து ஆண்டுகள் ஆகியிருக்கும். வேணி அத்தை
உடல் பெருத்து நடக்கவோ, நகரவோ முடியாமல் அவதிப்பட்டதால் அதனால் படியேறி வீட்டுக்குள்
போவதே அதுக்கு வாதையாக இருந்தது. அன்றிலிருந்து வேணி அத்தை வெளியில் இருந்த கட்டிலில்
வாசம் செய்ய ஆரம்பித்து விட்டது. சாப்பாடு, காபி, படுக்கை என்று சகலமும் வேணி அத்தைக்கு
அங்குதான் என்றாகி விட்டது. அரிதாக விஷேசம் அல்லது உடம்புக்கு முடியவில்லை என்றால்
ஹாஸ்பிட்டல் என்றுதான் அது வெளிக் கிளம்பியது.
வீட்டில் இருந்தவர்களுடனான பேச்சு வார்த்தைகளும்
வேணி அத்தைக்கு அற்றுப் போய் விட்டது. தனிமையின் ஏக்கம் வேணி அத்தையை அலைக்கழித்தது.
அப்பா போய் வரும் ஒவ்வொரு முறையும், "ரண்டு வார்த்த பேசுறதுக்கு நாதியில்ல.
மனசு ஒரு மாரியா இருக்கு. மாசத்துக்கு ரண்டு தடவ வந்து போனீயள்னா கொஞ்சம் மனசுக்கு
தெளுவா இருக்கும்!" என்று சொல்லும் வேணி அத்தை.
ஈஸ்வரியின் கல்யாணத்துக்குப் பத்திரிகை
வைக்காததில் ஏற்பட்டிருந்து மனஸ்தாபம் அப்பாவை லாலு மாமாவின் வீட்டுப்பக்கமே போக விடாமல்
வைத்திருந்தது. இப்போது அப்பாவும், அம்மாவும் போய் நின்றதில் வேணி அத்தைக்கு பரம
சந்தோசமாக இருந்தது. அது கட்டிலுக்குப் பக்கத்தில் வழக்கமாக போட்டு உட்கார்ந்திருக்கும்
பெரிய ஸ்டூலில் உட்கார்ந்திருந்தது. நாற்காலி எதிலும் உட்கார முடியாத அளவுக்கு அதன்
உடல் கனத்திருந்தது. பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்திலும் அதே போல ஒரு ஸ்டூல்
செய்து போட்டு அதில்தான் அது உட்கார்ந்து கொண்டது. வகுப்பையும் வராண்டாவிலேயே வைத்துக்
கொண்டது வேணி அத்தை.பள்ளிக்கூடத்தின் உள்ளே போய் வெளியே வர அதன் மூச்சு ஒத்துழைக்கவில்லை.
மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கியது.
"ஏம்டி வெங்கு! இந்த மனுஷம் வாராட்டியும்
நீயாவது ஒரு எட்டு நடந்தாந்து ரண்டு வார்த்த நம்மோட பேசிட்டுப் போவக் கூடாதா?"
என்றது வேணி அத்தை பார்த்ததும் பார்க்காததுமாக.
"எங்கத்தே வூட்டுல வேல அப்படி இருக்கு.
அந்தாண்ட இந்தாண்ட நகர முடியுதா? மாமாவுக்கு என்னவோ ஏத்தோன்னு பதறியடிச்சு ஓடியாரேம்!"
என்றது அம்மா.
"நீ வாராட்டியும் ன்னா! ஒம் மவேம்
மகே விகடுவையோ செய்யுவையோ வாரச் சொல்றதுக்கு ன்னா! பேசிப் பாக்க ஆளில்ல யம்மோடியோவ்.
எத்தோ இந்த பள்ளியோடம் போய் வாரதில்ல கொஞ்சம் வெசனம் கொறயுது. அத்து மட்டுமில்லேன்னோ
வெச்சிக்கோ இந்த வியாதி பிடிச்சவள கொண்டு போயி பைத்தியக்கார ஆஸ்பத்திரியில சேக்க
வேண்டியதுதாம்! இப்படி நீங்க வந்து பாத்துட்டுப் போறதுக்காவது இந்த மனுஷம் மாசத்து
ரண்டு வாட்டி இப்படி வுழுந்து அடிபட்டுக் கெடக்கலாம் போ!" என்றது வேணி அத்தை.
லாலு மாமாவுக்கு அதைக் கேட்டதும் கண்கள்
சிவக்க ஆரம்பித்து விட்டது. கன்னக்கதுப்புகள் இரண்டும் நடுங்கத் தொடங்கின.
"இப்பதான மாத்திர போட்டு வுட்டுது.
தூக்கம் வருதா பாரு. கோபம் மட்டும் பொத்துட்டு வருது." என்றது வேணி அத்தை.
"ஆமாம்டி. ஒன்னோட பேசிட்டு இருக்க
வாரதுக்கு நாம்தானா அடிபட்டுக் கெடக்கணும். ஆளு மூஞ்சியயும் மொகரயும் பாரு!"
என்றது லாலு மாமா.
"இந்த மூஞ்சியயும் மொகரயயும் பாத்துதானே
கட்டிகிட்டது. இப்போ ன்னா வந்து கெடக்கு? இப்படி அடிபட்டு கெடக்கலானும் ஏ வெங்கு, இந்த மனுஷம் சரிபட்டு வாராது!" என்றது
வேணி அத்தை.
"எப்படி நடந்துச்சு?" என்றது
அப்பா.
"அத்தே ஏங் கேக்குறீங்க? வாள வாய்க்கால்ட்ட
வாரப்ப லாரிக்கார்ரேம் குறுக்க வுட்டுட்டாம். நாம் சமாளிக்க திருப்பிப் பாத்தா அப்புடியே
வடக்காலே போயிக் கெடக்கேம். ஒடம்பெல்லாம் நல்ல அடி. காலுல ரோதன தாங்க முடியல."
என்றது லாலு மாமா.
"கதய்ய நீங்களே சொல்லுங்க. லாரிக்கார்ரேம்
குறுக்க வுட்டானா? இவுரு குறுக்க வுட்டாராமா?" என்றது வேணி அத்தை.
"நடந்தது நடந்துடுச்சி. இத்தோட விட்டுச்சேன்னு
நெனச்சிக்கணும்!" என்றது அப்பா.
"நீங்க ஒண்ணு கண்ணு மண்ணு புரியாம
பேசிட்டு. லாரிக்கார்ரேம் வுட்டா இவரு இங்கய்யா படுத்துக் கெடப்பாரு. படுத்துக் கெடக்குற
எடமே வேறே!" என்றது வேணி அத்தை.
"ந்தா வாய மூடப் போறீயா ல்லியா?
மனுசேம் நோவுல படுத்துறப்பதாம் தொண தொணன்னுகிட்டு. கொஞ்ச நேரம் ரெஸ்ட்டா இருக்க
வுடறீயா நீயி?" என்றது லாலு மாமா.
"கதய்யெ சொல்லிட்டு சொகுசா இருக்க
வுடறேம். அய்யாவோட ரொக்கியதை ஊருக்கு தெரியாட்டியும் ரண்டு பேருக்காவது தெரியணும்ல!"
என்றது வேணி அத்தை.
அம்மாவும், அப்பாவும் ஒன்றும் புரியாமல்
திருதிருவென்று முழித்துக் கொண்டு நிற்க வேண்டியதாயிற்று.
"ந்தா பேசுறத நிப்பாட்ட மாட்டே!"
என்று அதட்டியது லாலு மாமா.
"ம்! போலீஸ்கார்ரேம் அடிச்சாம்ல.
அப்ப நிப்பாட்டச் சொல்றது?" என்றது வேணி அத்தை.
"என்னாச்சு அத்தே?" என்றது அம்மா.
"அத்தாம்படி சொல்ல வரலாம்னா மனுசனுக்கு
ரோஷம் பொத்திட்டு வாரது. ஏம் அத்து ஒங்களுக்குக் கூட தெரியக் கூடாதுன்னு நெனக்கிறாரு?"
என்றது வேணி அத்தை.
"அப்படின்னா வேண்டாமுங்க!" என்றது
அப்பா.
"ந்தா வாய்யே மூடு. எழுந்தேன்னா வெச்சுக்கோ
ன்னா நடக்குமுன்னு தெரியாது!" என்றது லாலு மாமா நாக்கை துரத்தி மிரட்டும் தொனியில்.
"எழுந்துதாம் வாரது. நம்பள எத்தினி
நாளு திட்டியிருப்பாரு. எழுந்து நடக்குறது வக்கில்ல. நிக்க முடியுதா? உக்கார முடியுதான்னு.
இப்போ அத்தையெல்லாம் செய்யறது? ல்லாம் அவங்கவங்களுக்கு வந்தாத்தாம் தெரியும். நீங்க
கதெய்ய கேளுங்க. ஊருல கள்ளு எறக்கக் கூடாதுன்னு போலீஸூ பிடிக்க ஆரம்பிச்சுச்சா. கள்ளுக்குடி
வாத்திக்கு கள்ளு குடிக்க முடியாம ஒடம்பும் ஓடல, ஒடம்புல உசுரும் ஓடல. வண்டிய எடுத்திட்டு
மளிகைச் சாமாம் வாங்கப் போறேம்னு திருவாரூக்குப் போயி பாருல குடிச்சிருக்காரு. இம்மனுசம்
போன நேரம், பாரு எடுத்தவனோட லைசென்ஸீ முடிஞ்சுப் போயி அவ்வேம் நடத்தியிருக்காம்.
போலீஸ்காரேம் சும்மா வுடுமா? ரெய்டு வந்திருக்காங்க. குடிக்க வந்தவங்கள எல்லாம் வரிசையா
நிக்க வெச்சு சூத்தாம்மட்டையில லத்தியால போட்டுருக்காம். இந்த மனுஷனும் ரண்டு வாங்கிட்டு
வாரத வுட்டுட்டு நாம்ம யாரு தெர்யுமா? வாத்தியாருன்னுருக்காரு." என்று சொல்லி
விட்டு நிறுத்தியது வேணி அத்தை.
எதுவும் செய்ய முடியாத விரக்தியில் லாலு
மாமா திரும்பிப் படுக்க முயன்றது. அதனால் முடியவில்லை. முனகியபடியே வேணி அத்தையை வெறித்துப்
பார்த்தது.
"அதுக்கப்புறம்தான் கதெய்யே. வாத்தியாருன்ன
வுடனே தனியா புடிச்சு நிப்பாட்டியிருக்காம். மனுஷேம் நம்மள மட்டும் வுடப் போறாங்கன்னு
நின்னுருக்கு. எல்லாரயும் அடிச்சி அனுப்பி வுட்டப் பெறவு வண்டியில ஏறுன்னு சொன்னதும்
மனுசத்துக்கு ஒடம்பு வெடவெடக்க ஆரம்பிடுச்சு. நம்மளயும் ரண்டு அடி அடிச்சு வுட்டுருங்கன்னு
கதறியிருக்கு. முடியாது வண்டியில ஏறுன்னு போலீஸ்கார்ரேம் சொல்ல, அடிச்சு வுடுங்கன்னு
இந்த மனுசம் சொல்ல ரகளையாப் போச்சு. செரின்னு போலீஸ்கார்ரேம் வேட்டிய அவுத்துட்டு
பட்டாப்பட்டி டிராயரோட அடிக்க ஆரம்பிச்சிருக்கு. நாலு அடி வாங்குனதும் வலி தாங்க முடியாம
போக, வண்டியில ஏறீர்னேன்னு இந்த மனுசம் சொல்ல, போலீஸ்கார்ரேமுக்கு வந்த கோபத்துக்கு
ஆளாளுக்குப் போட்டு அடிச்சதுல மனுசம் சுருண்டு வுழுந்துடுச்சு. அப்புறம்தாம் போலீஸ்கார்ரேம்
வுட்டிருக்கு. சுருண்டு வுழுந்ததாம் வுழுந்தாச்சி. போலீஸ்கார்ரேம் போனதுக்கு அப்புறம்
எழுந்திருச்சி வாரலாம்ல. போலீஸ்கார்ரேம் அடிக்குறத வுட்ட வுடனே எழுந்திருச்சுப் போயி
பாருக்குள்ள வாங்கி வெச்சிருந்த மளிகை சாமாம் பைய எடுக்கப் போயிருக்காரு. இதுல இத்து
வேறயான்னு போலீஸ்கார்ரேம் அத்தயும் புடுங்கிட்டு, பட்டாப்பட்டி டிராயருல வெச்சிருந்த
காசயும் புடுங்கிட்டு அனுப்பிட்டு. அதுக்கப்புறம்தாம் மனுசனுக்குப் புத்தி வந்திருக்கு.
உந்தி உந்தி நடந்து வந்து எம்மெய்டிய நைசா எடுத்து தள்ளிட்டே வாளவாய்க்கா வரிக்கும்
வந்து அப்பொறம் ஸ்டார்ட் பண்ணிட்டு எடுத்தாந்திருக்கு. நல்லவேளயா மனுஷம் வண்டிய அங்கேய்யே
ஸ்டார்ட் பண்ணாம வுட்டுச்சே. பண்ணிருந்துச்சுன்னா வண்டியும் ஸ்டேஷனுக்குப் போயிருக்கும்.
வந்தப்ல ல்லாம் ந்நல்லாத்தாம் ஆச்சிடென்ட் ஆச்சுன்னு வந்தாரு. ராத்திரியும் நல்லாத்தாம்
தூங்குனாரு. காலயில படுத்து எழும்ப முடியல. வெவரத்தச் சொல்லுங்கன்னா... வாளவாய்க்கா...
லாரி... ஆக்சிடண்ட்டுன்னு சொன்னதய சொல்லிட்டு இருந்தாரு. மொசப் புடிக்குறவ்வேம்
மூஞ்சப் பாத்த தெரியாது? வெரத்தச் சொல்லலன்னா டாக்டரும் கெடயாது, மருந்தும் கெடயாதுன்னு
சொன்னதுக்கப்புறம் வெவரம் ஒண்ணொன்னா வருது." என்றது வேணி அத்தை.
"இப்போ திருப்திதான்டி! இனிமே இந்த
கதெய்யே இத்தோட வுட்டுடணும். வேற யார்கிட்டயாவது வாயத் தொறந்தீன்னா வெச்சுக்க...
பொண்டாட்டியும் வாணாம் ஒரு மசுரும் வாணாம்னு கொன்னே புடுவேம் பாத்துக்க!" என்றது
லாலு மாமா.
"நம்மகிட்ட வேற யாரு பேசுறா? ஒம்மட
கதெய்ய சொல்றதுக்கு? எத்தோ இவுங்கதாம் வந்தா கொண்டா பேசுவாங்க, போவாங்க. அத்தேம்
இவங்ககிட்ட சொன்னேம். நம்மோட பேசாதவங்ககிட்ட நாம்ம ஏதுக்கு சம்பந்தமில்லாம பேசப்
போறேம்? இந்தாப் பாருங்க செய்யுவோட அப்பா! இத்தே சொன்னதுக்கப்புறம்தான் மனசுல பாரம்
எறங்குனாப் போலயிருக்கு. யாருகிட்டயும் இத்தே சொல்ல முடியாமா மண்டய வெடிச்சப் போயிடும்
போல ஆயிடுச்சு போங்க. நல்ல வேளயா இன்னிக்கு வந்தீங்க. நாளிக்கு வந்தா கூட மண்டையில்லா
முண்டமாத்தாம் நம்மள பாத்திருப்பீங்க." என்றது வேணி அத்தை.
"அப்படியாது மண்டை வெடிச்சு சாவேம்டி.
ஏம்டி நம்ம பிராணத்த வாங்கிட்டு இருக்கே?" என்றது லாலு மாமா.
"அத்தே வுடுங்க. இப்ப ஒடம்புக்கு
பரவாயில்லயா? ஈஸ்வரிலாம் சொகமா இருக்காங்களா? மாப்புள சொகமா இருக்காங்களா?"
என்றது அப்பா.
வேணி அத்தையின் கண்களில் நீர்த்துளி எட்டிப்
பார்த்தது.
"அந்தக் கதெய்யே ஏம் கேக்குறீங்க?"
என்று ஆரம்பித்தது வேணி அத்தை.
*****
No comments:
Post a Comment