16 May 2019

டாக்டராகி என்ஜினியராகி ஹீரோயினாகி...



செய்யு - 86
            வேற்குடியிலிருந்த லாலு மாமாவின் மூத்தப் பெண் ஈஸ்வரி. ஈஸ்வரியைப் போல மகிழ்ச்சியாக இருந்த பெண்ணை விகடு தன் வாழ்நாளில் பார்த்ததில்லை. ரொம்ப செல்லமாக வளர்க்கப்பட்டது அதற்குக் காரணமாக இருக்கலாம். எந்நேரமும் சிரிப்புதான், விளையாட்டுதான், வேடிக்கைதான்.
            சொந்த பந்த வகையறாக்களில் முதலில் சாலிடர் டி.வி.யை வாங்கியது லாலு மாமா. டி.வி.யைப் பார்த்து ஈஸ்வரி நிறைய விளம்பர அறிவை வளர்த்துக் கொண்டிருந்தது. டி.வி.யில் வரும் விளம்பரங்களை அச்சு அசலாக அப்படியே நடித்துக் காட்டும். முக பாவங்கள், உச்சரிப்புகளில் அப்படி ஒரு துல்லியம் இருக்கும்.
            காலமாற்றம் டி.வி.பார்க்கும் கலாச்சாரத்தில் நிறைய மாற்றங்களைக் கொண்டு விட்டது. இப்போது டி.வி.யில் விளம்பரம் வந்தால் ரிமோட்டை எடுத்து மாற்றி விட்டு மறுவேலை பார்ப்பதைப் போன்ற இந்தக் காலகட்டம் போலில்லாமல், எப்போது டி.வி.யில் விளம்பரம் வரும் என்று எதிர்பார்த்த காலகட்டம் அது. விளம்பரம் பார்ப்பதில் அப்படி ஒரு ஈடுபாட்டை விகடு போன்ற முளைத்து மூணு இலை விடாத பிள்ளைகளுக்கு எல்லாம் ஏற்படுத்தியது ஈஸ்வரிதான்.
            டி.வி.யில் வரும் விளம்பரத்துக்கும், ஈஸ்வரி அதை நடித்துக் காட்டுவதற்கும் வேறுபாடு இருக்கிறதா என்பதற்காகவே விளம்பரங்களை அப்படி உத்துப் பார்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. தவிரவும் அப்போது டி.வி.நிகழ்ச்சிகளைப் போல விளம்பரமும் ஒரு முக்கியமான டி.வி.நிகழ்ச்சியாக நினைத்துப் பார்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரே விளம்பரம் எத்தனை முறை வந்தாலும் பார்க்கப் பார்க்க அலுக்காது. சொல்லப் போனால் விளம்பரம் முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று பார்ப்பவர்க்கெல்லாம் தோன்றியது. இதெல்லாம் அந்தக் கால அதிசயங்கள், காலக்கோட்டு மர்மங்கள்.
            இப்படியாக டி.வி. பார்க்க உட்கார்ந்தால், ஈஸ்வரியின் விளம்பர உபயத்தால் எப்போது டி.வி.யில் விளம்பரம் வரும் என்று காத்திருக்க வேண்டிய நிலைமை உண்டாகி விட்டது. இப்படிக் காத்திருந்து விளம்பர பார்த்த கடைசித் தலைமுறை அதுதான். அதற்கப்புறம் விளம்பரத்துக்குக் காத்திருக்காத ஒரு தலைமுறை உருவாகி விட்டது.
            அதிலும் தூர்தர்ஷன் செய்திகள் ஆரம்பிப்பதற்கு முன் 'டடாங் டுடாங் இஷ்ஷ்ஷ்ஷ்' என்ற மியூக்கோடு செய்தி ஆரம்பிக்கும் பாருங்கள்! அதை அப்படியே ஈஸ்வரி செய்து காட்டுவதைப் பார்த்தால் அசந்து போய் விடுவீர்கள். விளம்பரங்களை மிமிக்ரி மற்றும் ஆக்டிங் செய்வதை அடுத்து டி.வி.யில் செய்திகள் வாசித்துக் காட்டுவது ஈஸ்வரிக்குப் பிடித்தமானது. அந்த மியூசிக்கை ஸ்டார்ட் செய்து விட்டு ஈஸ்வரி 'நிறுவனர் கே.பி.கந்தசாமி' என்று போட்டிருக்கும் தினகரன் நியூஸ்பேப்பரை கையில் எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தால் டி.வி.யில் செய்தி வாசிப்பவர் தோற்றுப் போய் விடுவார்.
            இந்த நியூஸ்பேப்பரைப் பற்றியும் சொல்ல வேண்டும். அப்போது வேற்குடியில் நியூஸ்பேப்பர் வாங்கிய நான்கு பேரில் லாலு மாமாவின் குடும்பமும் ஒன்று. அப்போது கிராமத்திற்கு நான்கைந்து பேர் வீட்டில்தான் நியூஸ் பேப்பர் வாங்கிக் கொண்டிருந்தார்கள். அத்துடன் ராணி, குங்குமம், ஆனந்தவிகடன் வாங்குபவர்களும் இருந்தார்கள். இந்த ராணி, குங்குமம், ஆனந்தவிகடன் பற்றியும் சொல்ல ஒரு விசயம் இருக்கிறது. அதைப் பிறகு பார்த்துக் கொள்வோம்.
            கிராமத்தில் இருந்த நியூஸ்பேப்பர் வாங்காத மற்றவர்கள் எல்லாம் நியூஸ்பேப்பர் வாங்குபவர்கள் வீட்டில் சாயுங்கால நேரமாகப் பார்த்து ஏதோ பேச வந்தவர்கள் போல பேச்சுக் கொடுத்து, அப்படியே நியூஸ்பேப்பரை ஒரு புரட்டு புரட்டி விட்டு வந்து விடுவார்கள். இதற்குக் கூச்சப்படுபவர்கள் டீக்கடை, சலூன் கடைக்குப் போய் விடுவார்கள். அதிலும் ஊருக்கு ரெண்டு டீக்கடையோ, ரெண்டு சலூன் கடையோ இருந்தால் அந்த ஊரில் இருப்பவர் அதிர்ஷ்டம் செய்தவர்கள். ரெண்டு கடையிலும் ஒரே நியூஸ் பேப்பர் வாங்க மாட்டார்கள். ஒன்றில் தினத்தந்தி வாங்கினால் கட்டாயம் இன்னொன்றில் தினகரன்தான். இதனால் அப்போது டீக்கடைகளுக்கு தினத்தந்தி டீக்கடை, தினகரன் டீக்கடை என்ற பெயரே ஏற்பட்டிருந்தது.
             நியூஸ் பேப்பர் வாங்குவதிலும் ரொம்ப சாமர்த்தியமாக நியூஸ்பேப்பர் வாங்கியது லாலு மாமதான். லாலு மாமா வேற்குடியில் இருந்த டீக்கடையோடு ஓர் ஒப்பந்த உடன்படிக்கை செய்து கொண்டு தினகரன் நியூஸ் பேப்பரை வாங்கிக் கொண்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி நியூஸ் பேப்பரை வாங்குவதில் பாதி காசை டீக்கடைக்காரரும், பாதி காசை லாலு மாமாவும் பகிர்ந்து கொண்டார்கள். பகல் முழுவதும் டீக்கடையில் இருக்கும் நியூஸ்பேப்பர் இரவானால் லாலு மாமாவின் வீட்டுக்கு வந்து விடும். இதனால் பகல் நேரத்தில் டீக்கடையில் படிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நியூஸ்பேப்பர் இரவு நேரத்தில் லாலு மாமாவின் வீட்டில் படிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். ஒரு மாதத்துக்குப் பிறகு நியூஸ்பேப்பர் பண்டலாக சேர்ந்த பிறகு அதை அப்படியே டீக்கடையில் கொண்டு போய் போட்டு விடுவார்கள். டீக்கடையில் அதை வடை, போண்டா வைத்துக் கொடுக்க, டீ வாங்க வருபவர்களின் லோட்டா அல்லது செம்பில் மூடி வைத்துக் கொடுக்க அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
            லாலு மாமாவின் வீட்டுக்கு யார் வந்தாலும் லாலு மாமாவும், வேணி அத்தையும் ஈஸ்வரியை வரச் சொல்லி, "ஏண்டிம்மா! அந்த 'வாஷிங் பவுடர் நிர்மா'வை நடிச்சுக் காட்டேம்!" என்பார்கள். அந்த விளம்பரத்தின் ஒவ்வொரு பிரேமையும் அட்சரம் பிசகாமல் அத்தனைப் பாத்திரங்களாகவும் மாறி அதே முகபாவத்தோடு நடித்துக் காட்டும் ஈஸ்வரி.    
            அப்புறம் 'சொட்டு நீலம்டோய்! ரீகல் சொட்டு நீலம்டோய்' நடித்துக் காட்டும். 'நான் உஜாலாவுக்கு மாறிட்டேன். நீங்க!' அதையும் நடித்துக் காட்டும். டி.வி.நிகழ்ச்சியின் இடையில் ஒரு சில நிமிடங்களுக்கு வரும் விளம்பரங்களை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மாற்றி மாற்றி நடித்துக் காட்டும். அதற்கப்புறம் செய்தி வாசிக்கச் சொல்வார்கள். அவ்வளவு பிரமாதமாக செய்தி வாசித்துக் காட்டும்.
            இதைப் பார்க்கும் விகடு உள்ளிட்ட நண்டு சிண்டுகளுக்கெல்லாம் ஈஸ்வரி வேற்குடியில் இருக்க வேண்டிய பிறவியேயல்ல என்று தோன்றும். நிச்சயம் ஈஸ்வரி அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ ஈஸ்வரி இருக்க வேண்டும் என்று அந்தக் கூட்டம் பேசிக் கொள்ளும். வருங்காலத்தில் தன் திறமைகளை வளர்த்துக் கொண்டு ஈஸ்வரி அங்குப் போய் விடும் என்று அந்த நண்டு சிண்டு கூட்டம் ஆளாளுக்கு தங்கள் அபிப்ராயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கும். அபிப்ராயங்கள் சொல்வதோடு அப்படி அமெரிக்காவோ, இங்கிலாந்தோ செல்லும் போது தன்னை மட்டும்தான் ஈஸ்வரி அழைத்துக் கொண்டு செல்லும் என்று சொல்வதில் ஒவ்வொரு நண்டு சிண்டுக்கும் போட்டா போட்டி வேறு நடக்கும். சின்ன பிள்ளைகள் இப்படியென்றால் பெரியவர்கள் அதைத் தாண்டி பேசிக் கொள்வார்கள். "இந்த ஈஸ்வரி புள்ள இருக்கே. அது நம்ம வகையில பொறக்கக் கூடிய பொண்ணேயில்ல. அடேங்கப்பா அத்து பண்றதப் பாத்தா நேருவோட பொண்ணு இந்திரா காந்தி மாரி வாரும்னு நெனக்கிறேம்!" என்று ஈஸ்வரி பற்றி 'உச்' கொட்டுவார்கள்.
            ஆக, சுருக்கமாகச் சொல்வதென்றால் வேற்குடி கிராமத்திலும் சரி, சொந்த பந்த வகையறாக்களின் வகையிலும் சரி பேசிப் பேசி மாய்ந்து போகும்படியான பெரும்புள்ளியாக இருந்தது ஈஸ்வரி.
            ஈஸ்வரி மணமங்கலம் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தது. மேற்கொண்டு ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூவிற்காக மன்னார்குடி கான்வென்டில் சேர்ப்பதாக ஏற்பாடு ஆகியது. லாலு மாமாவுக்குத் தன் பிள்ளைகளை நிறையப் படிக்க வைத்து பெரிய வேலைக்கு அனுப்பி விட வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது.
            பணம் கட்டி ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைப்பதைப் பெருஞ்செலவாக நினைத்த காலக்கட்டம் அது. அப்போது ஊர் உலகத்தையே தனது விளம்பர நடிப்பாலும், செய்தி வாசிப்பாலும் தன் பக்கம் திருப்பி வைத்திருந்த ஈஸ்வரியைப் பற்றிய சிறு சிறு செய்திகளும் பெரிதாகச் சிலாகித்துப் பேசப்பட்டது. நிலைமை அப்படியிருக்க, லாலு மாமா ஈஸ்வரியை பணம் கட்டி ஹாஸ்டலில்  படிக்க வைப்பதில் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கியதை சொந்த பந்தங்களில் பெரிதாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஊரிலும் பெரிதாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். விகடு வீட்டிலும் இதையே பெரிதாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். "பொண்ணுன்னா இப்படில்லா இருக்கோணும்!" என்றது அம்மா.
            இதை அப்போது கேட்ட விகடு போன்ற நண்டு சிண்டு நாவர வண்டுகளுக்கெல்லாம் ஈஸ்வரி பெரிய பெரிய படிப்பெல்லாம் படிப்பது போலவும், ஜில்லா கலெக்டராகி காரில் வருவது போவது போலும் கனவு வர ஆரம்பித்து விட்டது. படித்தால் ஈஸ்வரி அக்கா போல ஹாஸ்டலில் தங்கிப் படிக்க வேண்டும் என்று மனதுக்குள் சங்கல்பமே உண்டாகி விட்டது. "படிக்க வைக்கிறதுன்னா லாலு வாத்தியாரு மாரி படிக்க வைக்கணும். எப்பாடி எவ்ளோ காசு செலவு பண்ணி ஹாஸ்டல்ல சேத்து கான்வென்ட்ல படிக்க வைக்கிறாம்ப்பா!" என்று ஊரெல்லாம் பேச்சாகி விட்டது.
            லாலு மாமாவுக்கு ரொம்ப பெருமையாக இருந்திருக்க வேண்டும். "டாக்டராவோ, இஞ்சினியராவோ ஆக்காம வுட மாட்டேம்!" என்று பெருமையாகப் பேசியவர்களிடம் சபதம் செய்தது லாலு மாமா. ஈஸ்வரியும், "நாம்ம டாக்டராகி இஞ்சினியராகி சினிமாவுக்குப் போயி ஹீரோயினாகிடுவேம்!" என்றது.
            இதைக் கேட்ட விகடுவுக்கு எல்லாம் அப்போது எப்படி இருந்திருக்கும் சொல்லுங்கள். "ஈஸ்வரிக்கு இருக்குற தெறமைக்கு கமலு, ரஜினியெல்லாம் அவ்வே கூட கியூல நிக்கப் போறாய்ங்க பாருங்களேம்!" என்ற பேச்சாகி விட்டது.
            ஈஸ்வரியை ஹாஸ்டலில் கொண்டு போய் விடும் அந்த நாள் வேற்குடியில் ஒரு விழாவாகக் கொண்டாடப்பட்டது. சொந்த பந்தங்கள் எல்லாம் லாலு மாமாவின் வீட்டில் ஆஜராகி ஆளாளுக்கு ரெண்டு ரூபாயும், அஞ்சு ரூபாயும், கொஞ்சம் வலுத்தக் கையாக இருந்தால் பத்து ரூபாயும் கொடுத்து ஆசிர்வதித்து, "நல்லா படிச்சு நடிகே ஸ்ரீதேவி மாரி வாரணும்!" என்று கண்கலங்கி, ஒரு பெரிய டிரங்க் பெட்டியில் சாமான் செட்டுகளையெல்லாம் வைத்துக் கொடுத்து, வேற்குடி பஸ் ஸ்டாப்பில் லாலு மாமாவையும், ஈஸ்வரியையும் மன்னார்குடி போகும் ரண்டாம் நம்பர் பஸ்ஸில் ஏற்றி விட்டார்கள். அப்பாவும், விநாயகம் வாத்தியாரும் கூடவே அவர்களோடு ஏதோ வெளிநாட்டுப் பயணம் போவது போல மிகுந்த கர்வத்தோடு பஸ் ஏறிப் போனார்கள்.
            ஈஸ்வரி அன்று ஹாஸ்டலுக்குப் பஸ் ஏறிய அன்று அதைப் பார்த்த எல்லா பிள்ளைகளுக்கும் இரவெல்லாம் கனவென்றால் கனவுகள். விகடுவுக்கு படித்து முடித்து பெரிய வேலையில் சேர்ந்து ஈஸ்வரி வேற்குடிக்கு ஏரோபிளேனில் வந்து இறங்குவது போல கனவு வந்தது.
            அப்படியெல்லாம் ஈஸ்வரியைப் பற்றி லட்சியப் புருஷியாகக் கனவு கொண்டிருந்த சின்ன பிள்ளைகளின் கனவுகளில் கருமாந்திரம் செய்வது போல, ஈஸ்வரி அப்படி ஒரு காரியம் செய்திருக்கக் கூடாது. ஹாஸ்டலில் சேர்த்த நாலாம் நாளே அது ஹாஸ்டலை விட்டு ஓடி வந்தது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...