1 May 2019

வல்லாளத் தேவர்



செய்யு - 71
            வல்லாளத் தேவர் நரிவலத்தில் சாப்பாட்டு ஹோட்டல் வைத்து நடத்தி வந்தார். ஆள் பார்ப்பதற்கு நல்ல ஆஜானுபாகுவான தோற்றம் அத்துடன் கனத்த சரீரம். இடுப்பில் ஒரு வெள்ளை வேட்டி, தோளில் ஒரு சிவப்பு நிற காசித் துண்டு சகிதம் இருப்பார். செக்கச் செவேலென்ற உடம்பு. தொந்தி எழுந்து உட்கார்ந்தாலும் சரி, எழுந்து ஒரு எட்டு வைத்து நடந்து போனாலும் சரி ஓர் ஆட்டம் ஆடித்தான் நிற்கும். நீங்கள் நினைப்பது கூட சரிதான். உடம்பு அப்படியே பிள்ளையார் சாமியின் தோற்றம்தான். முகம் அவ்வளவு அம்சமாக இருக்கும்.  சிரித்த களையான முகம் அவருக்கு. கோபம் மட்டும் முனுக் முனுக்கென்று வந்து விடும். கோபம் வந்த அடுத்த நொடியே அது வந்த சுவடு தெரியாமல் சிரித்துக் கொண்டிருப்பார்.
            அவ்வளவு பெரிய கனத்தச் சரீரத்தோடு அவர் சிறு பிள்ளையைப் போல நிமிஷ நேரம் சும்மா இல்லாமல் எதையாவது விடுவிடுவென்று செய்து கொண்டிருப்பார். ஆளை உட்கார்ந்து பார்க்க முடியாது. சாப்பாட்டு ஹோட்டலில் சகலமும் அவரே. சமைப்பதில் தொடங்கி, பரிமாறுவதிலிருந்து, காசு வாங்கிப் போடுவது வரை எல்லாம் அவரே. காலையில் அவரது மனைவி சாந்தா அம்மாவோ, மருமகனோ வந்து பரிமாறுவதற்கு உதவி செய்து கொண்டிருப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் அவர்தான் எல்லாமும். அசராமல் அவ்வளவையும் செய்வார். அவரால் மெதுவாகவோ, நிதானமாகவோ பேச முடியாது. கடகடவென்று அவசர அவசரமாகத்தான் பேசுவார். கடையில் எல்லா வேலைகளையும் அவரே வேக வேகமாகச் செய்து பேச்சும் அப்படிப் பழகி விட்டதோ என்னவோ. இத்தனை நாள் வேலையில் ஒரு நாள் உடம்புக்கு முடியவில்லை என்று அவர் ஓட்டலை மூடியதில்லை என்பதை நரிவலத்துவாசிகள் ரொம்ப பெருமையாகப் பேசிக் கொள்வார்கள்.
            அவருக்கு ஒரு பெண் பிள்ளையும், இரண்டு ஆண் பிள்ளைகளும். எல்லா பிள்ளைகளுக்கும் கல்யாணத்தை முடித்திருந்தார். பெண் பிள்ளையின் பிள்ளைகள் அதாவது தேவரின் பேரப் பிள்ளைகள் தோள் உயரத்துக்கு வளர்ந்திருந்தன. பேரப் பிள்ளையில் ஒன்று ஆண், இன்னொன்று பெண். ஆண் பிள்ளை டீச்சர் டிரெயினிங்க் முடித்து விட்டு வேலை கிடைக்காததால் திருத்துறைப்பூண்டி கடையொன்றில் கணக்கு எழுதிக் கொண்டிருந்தது. பெண் பிள்ளை விகடு படிக்கும் நரிவலம் பள்ளியில் ஏழாம் வகுப்போ, எட்டாம் வகுப்போ படித்துக் கொண்டிருந்தது. 
            வல்லாளத் தேவரின் ஆண் பிள்ளைகளில் மூத்தவருக்கு மூன்று வயதில் ஆண் பிள்ளையிருந்தது. அவர் அங்காடியில் வேலை பார்த்தார். இரண்டாவது பிள்ளைக்கு அப்போதுதான் கல்யாணம் முடித்திருந்தார். அந்த இரண்டாவது பிள்ளைதான் கொஞ்ச காலத்துக்கு தேவருக்கு உதவியாக ஹோட்டலில் இருந்தவர்.
            தேவர் தன் குடும்பத்தையே காலனி போல ஒரு குடையின் கீழ் வைத்திருந்தார். அவரது வீடும் அப்படித்தான் இருந்தது. முன்பக்க ஓட்டு வீடு கிழக்குப் பார்க்க இருந்தது. அதில்தான் தேவரும் அவரது மனைவி சாந்தா அம்மாவும் இருந்தார்கள். பேரப் பிள்ளைகள் எல்லாம் அவர்களோடுதான் அந்த வீட்டில் இருந்தன. நல்ல விசாலமான வீடு. அந்த வீட்டைத் தொடர்ந்து பின்பக்கம் காலனி வீடுகளைப் போல ஒரு குடும்பம் தங்கும் புழக்கத்துக்கு மூன்று வீடுகளை வடக்குப் பார்க்க கட்டியிருந்தார்.
            முதல் வீட்டில் அவரது மகளைக் குடித்தனம் வைத்திருந்தார். மகள் மேல் அவருக்குக் கொள்ளைப் பிரியம் இருந்தது. அதுவும் இப்படி தன் வீட்டுக்குப் பக்கத்திலேயே கல்யாணம் ஆன பின்னும் மகளை வைத்துக் கொண்டு பார்த்துக் கொள்ளும் பாக்கியம் எத்தனை தகப்பன்மார்களுக்குக் கிடைக்கும்! அது வல்லாளத்தேவருக்குக் கிடைத்திருந்தது. மருமகன் மின்சார வாரியத்தில் ரீடிங் குறிக்கும் வேலையில் இருந்தார். அவர் குழந்தைத்தனமாகப் பேசுவதாக நரிவலத்தில் பேசிக் கொள்வார்கள். விவரமாகவோ, சூட்சமமாகவோ பேசத் தெரியாத அப்பிராணியாக இருந்தார்.
            இரண்டாவது வீட்டில் அங்காடியில் வேலை பார்த்த தேவரின் முதல் மகனும், மூன்றாவது வீட்டில் தேவரின் இரண்டாவது மகனும் குடித்தனம் இருந்தனர்.
            மூன்றாவது வீட்டில் குடியிருந்த இரண்டாவது மகனுக்கும் மருமகளுக்கும் கடைசி வீட்டில் குடியிருப்பது ஏனோ பிடிக்காமல் போக, தேவரிடம் போய் முதல் வீட்டைத் தங்களுக்குத் தருமாறும், மூன்றாவது வீட்டில் மகளையும் மருமகனையும் மாற்றி விடுமாறும் கேட்டிருக்கிறார்கள்.
            தேவருக்குக் கோபம் வந்து விட்டது. "இருக்க விருப்பம் இருந்தா இருங்க! இல்லேன்னா கெளம்புங்க!" என்று ஒரு வேகத்தில் சொல்லி விட்டார். ரோஷப்பட்டுக் கொண்டு அன்று கிளம்பிய அவரது இரண்டாவது மகனால் அந்த மூன்றாவது வீடு பூட்டுப் போட்டுக் கிடந்தது. அந்த மூன்றாவது வீடு காலியாக இருந்தது. இந்த வீட்டை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வீட்டுக்குத்தான் பின்னாளில் திட்டையிலிருந்து விகடுவின் குடும்பம் வாடகைக்கு இடம் பெயர்ந்தது.
            தேவர் தன்னுடைய இரண்டாவது மகனிடம் அப்படிப் பேசியதற்காக தேவர் நெடுநாள் வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறார். "ன்னா பெரிசா எம் புள்ள கேட்டுப்புட்டாம்? கடசி வூடா இருக்குறதால ஏத்தோ மனசுல பட்டுருக்கு. நாங்கூட அந்த கடசி வூட்டுக்கு மாறிகிட்டு முன்னாடி வூட்ட கூட கொடுத்திருக்கலாம். ஏத்தோ அப்பங்காரம் ஒரு வேகத்துல பேசிட்டேம். நாம்ம பேசாம அவன யாரு பேசறது? அதுக்குப் போயா இப்படி வூட்ட வுட்டு கெளம்புவாங்க. அப்படி ஏத்தோ ஒரு நெனவுல பேசிட்டேனே தவிர மறுநா நானே வூட்ட மாத்தி விடலாம்னுதாம் நெனச்சிருந்தேம்." என்று வார்த்தைப் பிசாகமல் ஒரே மாதிரியாக நரிவலத்தில் நூறு பேரிடமாவது தேவர் இதைச் சொல்லியிருப்பார். அவர் இப்போது அப்படிப் பேசினாலும் வீட்டை விட்டுப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு  கிளம்பிய மகனையும், மருமகளையும் தேவர் தடுக்கவில்லை என்பதை அவரது மனைவி சாந்தா அம்மாள் குறையாகச் சொல்லும்.
            வீட்டை விட்டுக் கிளம்பிப் போன இரண்டாவது மகனும், மருமகளும் மாவூரில் ஒரு வாடகை வீட்டைப் பார்த்து குடியிருந்தனர். இரண்டாவது மகன் மாவூரில் இருந்த ஓர் ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்தார். தேவருக்கு அதிலும் வருத்தம். "சொந்தமா இருக்குற ஓட்டல்ல எனக்குப் பின்னாலே ராசா மாரி இருந்து பாத்துக்கிறத வுட்டுபுட்டு இப்படி எவனோ நடத்துற ஓட்டல்ல போயி புரோட்டா அடிச்சிட்டுக் கெடக்குறானே!" என்று அதற்கும் ஓட்டலுக்குச் சாப்பிட வருவோரிடமும், பார்ப்போரிடமும் புலம்பிக் கொண்டிருந்தார்.
            வல்லாளத் தேவரின் வீடு ஹாஸ்டலைத் தாண்டி ஒர் பர்லாங் தூரத்தில் இருந்தது. அவரது ஓட்டல் ஹாஸ்டலுக்கும் பள்ளிக்கூடத்துக்கும் நடுவே ஹாஸ்டலிலிருந்து செல்லும் போது இடப்பக்கமாகப் பிரிந்த ‍தெருவில் இரண்டு வீடுகள் தள்ளி இருந்தது. ஓட்டல் விசாலமாக இரண்டு தடுப்புகளைக் கொண்டு கூரை வேயப்பட்டிருக்கும். உள்ளே உள்ள தடுப்பில் சமையல். வெளியே இருந்த இடத்தில் சாப்பாட்டு மேசைகளும், பெஞ்சுகளும் போடப்பட்டு சாப்பிடும் இடமாக இருந்தது.
            வல்லாளத் தேவர் காலையில் நான்கு நான்கரை மணிக்கு ஓட்டலுக்குச் சென்றார் என்றால் பத்தரை மணி வாக்கில் வீட்டுக்கு வந்து அரைமணி நேரம் ஒரு தூக்கத்தைப் போடுவார். பிறகு கிளம்பினார் என்றால் மதிய சாப்பாட்டை முடித்து விட்டு மூன்றரை மணி வாக்கில் வந்து ஒரு மணி நேர தூக்கத்தைப் போடுவார். பிறகு கிளம்பினார் என்றால் ராத்திரி சாப்பாடுகளை முடித்து விட்டு காலை இட்டிலி, தோசைக்குத் தேவையான மாவுகளை அரைத்து வைத்து விட்டு அவர் வீடு திரும்ப இரவு பத்தரை அல்லது பதினோரு மணிக்கு மேலாகி விடும்.
            திடீரென்று நரிவலத்தில் இருக்கும் வல்லாளத்தேவரைப் பற்றி இவ்வளவு விரிவாக பேசிக் கொண்டிருப்பதற்குக் காரணம் இருக்கிறது. வல்லாளத் தேவர் ஓட்டல் வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்த இரவில்தான்  ராத்திரி தூக்கத்தில் ஹாஸ்டலை விட்டு வெளியே நடந்து கொண்டிருந்த விகடு அவர் மேல் இடித்து விட்டு அவரைக் கடந்து போய்க் கொண்டிருந்தான்.
            தேவருக்கு முனுக்கென்று கோபம் வந்திருக்க வேண்டும். "எவம்டா நீ ஓரமா போற எம்மேல இடிச்சிட்டு நீ பாட்டுக்குப் போறே? வந்தேம்னா வெச்சுக்க தோல உரிச்சி உப்புக் கண்டம் வெச்சிடுவேம் பாத்துக்கோ!" தேவர் சத்தம் போட்டார்.
            விகடு அவன் போக்குக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் போய்க் கொண்டிருந்தது அவரது கோபத்தை அதிகப்படுத்தி விட்டது. கோபத்தில் ஓடிப் போய் விகடுவைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினார். அவன் தன்னை விடுவித்துக் கொண்டு நடப்பதில் குறியாக இருந்ததைப் பார்த்த தேவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. மறுபடியும் போய் பிடித்து உலுக்கினார். விகடு நழுவி நடப்பதில் குறியாக இருந்தான்.
            அவருக்குப் பிடிபட்டுப் போனது. விகடு கட்டியிருந்த வெள்ளைக் கைலியை வைத்தும் சற்று தூரத்தில் திறந்திருந்த ஹாஸ்டல் கேட்டை வைத்தும் அவர் ஒரு முடிவுக்கு வந்தவராய் அவன் கைகளைப் பிடித்து ஹாஸ்டலுக்கு எப்படியோ வழிநடத்திக் கொண்டு வந்தார். வாசல் கேட்டுக்குப் பக்கத்தில் ரெண்டு வாட்ச்மேன் தாத்தாக்களும் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.
            "இப்படி எல்லா லைட்டையும் போட்டுகிட்டு எப்படிதாம் தூங்குறாவ்வோளோ?" என்ற படியே அவர் வாசலில் படுத்திருந்த ரெண்டு வாட்ச்மேன் தாத்தாக்களையும் முதுகில் தட்டி எழுப்பினார்.
            நடந்தவைகளைக் கேள்விப்பட்ட ரெண்டு வாட்ச்மேன் தாத்தாக்களுக்கும் உடம்பு நடுங்க ஆரம்பித்து விட்டது. அவர்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தவர்களாக ஹாஸ்டலின் வெளிகேட்டு, ஹாஸ்டலின் வெளிக்கதவு, பின் கதவு உட்பட அனைத்தையும் அன்றிலிருந்து பூட்டுப் போட ஆரம்பித்தனர்.
            விகடுவின் இந்தச் செயலினால் நடுராத்திரியில் டாய்லெட் போக எழுந்த பிள்ளைகள் ரொம்பவே சிரமப்பட வேண்டியிருந்தது. அவர்கள் பூட்டியிருந்த வெளிக்கதவை பலம் கொண்ட மட்டும் தட்டி சத்தமெழுப்பி ஹாஸ்டலின் வெளிகேட்டுக்குப் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த ரெண்டு வாட்ச்மேன் தாத்தாக்களையும் எழுப்ப வேண்டியதாக இருந்தது. சில இரவுகளில் எவ்வளவு தட்டியும் சத்தம் போட்டும் எழும்பி வராத வாட்ச்மேன் தாத்தாக்களால் பிள்ளைகள் பட்ட அவதிக்கு விகடுவும் இப்படி ஒரு வகையில் காரணமானான்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...