1 May 2019

ஓட்டுக்குத் துட்டு என்ற நிலையும் மாறும்!



            ஓட்டுப் போடுவதற்கு துட்டு கொடுப்பது - வாங்குவது என்ற தேர்தல் பண்பாடு முன்காலத்தில் பண்ட மாற்று முறையைப் போல இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்ற கருத்துகளின் அடிப்படையில் அறிந்து கொள்ள முடிகிறது.
            முற்காலத்தில் மக்கள் குளித்து விட்டுப் பயன்படுத்திக் கொள்ளட்டுமே என்று சோப்புகளை வைக்க சோப்பு டப்பாக்கள்,
            கல்யாணமாகி வந்திருக்கும் தாய்குலங்களில் ஏதேனும் சீர்வரிசைச் செட்டுச் சாமான்கள் குறைந்திருக்கும் ஏக்கம் தெரியாமல் இருக்கட்டும் என்று குத்து விளக்குகள்,
            மங்களகரமாக பெண்கள் நெற்றியில் வைத்துக் கொள்ள உதவட்டுமே என குங்குமச் சிமிழ்கள் என்று இப்படித்தான் பண்டங்களைக் கொடுத்து ஓட்டுகளைக் கேட்டிருப்பதாக வெளியூர்ப் பயணிகள் எழுதியுள்ள குறிப்புகளில் தகவல்கள் காணக் கிடைக்கின்றன.
            பிற்காலத்தில்தான் பூகோள ரீதியாக மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. நாமாக ஒரு பொருளை வாங்கி வாக்காளர்களின் கையில் திணிப்பதை விட வாக்காளர்கள் விருப்பப்பட்டப் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் பணத்தைக் கொடுப்பது சிறந்தது என்று வேட்பாளர்கள் உணரத் தலைபட்டிருக்கிறார்கள்.
            மக்களும் பண்டமாற்று வியாபார முறையிலிருந்து கரன்ஸி வியாபாரத்திற்கு மாறிக் கொண்டது போல இதை ஏற்றுக் கொள்ள தலைபட்டிருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது.
            இப்போது நிகழ்த்தப்பட்ட சமூக ஆய்வுகள் மக்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள துல்லிய மாற்றத்தைத் தெரிவிக்கின்றன. இனியும் ஓட்டுக்கு துட்டு வாங்கக் கூடாது என்ற உறுதியான மனநிலையில் அவர்கள் மாற்றத்தை விரும்ப தலைபட்டு விட்டனர்.
            ஓட்டுக்கு துட்டு கொடுக்கும் வேட்பாளர்களுக்கும் துட்டைக் கொண்டு சேர்ப்பதில் பல சிரமங்களை எதிர்கொள்ள தலைபடுகின்றனர்.
            அதை விடவும் முக்கியமாக விலைவாசிப் பிரச்சனை துட்டுகளின் மதிப்பைச் சமயங்களில் குறைத்து விடுகிறது. உதாரணமாக குவார்ட்டரையே எடுத்துக் கொண்டால் ஓட்டுக்கு துட்டு கொடுக்கும் நாட்களுக்கு முன் இருக்கும் விலையை விட, ஓட்டுக்குத் துட்டு கொடுத்த பின் விலை எகிறி, ஏறி விடுகிறது. இதே கதிதான் சகல பொருட்களுக்கும். இதனால் இம்முறை மாற்றப்படுவதே சரியென்று இருதரப்பிலும் நினைக்கின்றனர்.
            பழைய பண்டமாற்று முறைக்கு மீண்டும் மாறுவதன் மூலம் கொடுக்கல் வாங்கலில் உள்ள சிரமம், விலைவாசிப் பிரச்சனையால் ஏற்படும் சிரமம் போன்றவைகள் ஏற்படாது என்ற கருத்து நிலவத் தொடங்கி விட்டது.
            துட்டாக கொடுப்பதை விட தற்போது தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பிரச்சனைக்கு ஏற்றாற் போல வாட்டர் கேன்களாகக் கொடுப்பது,
            அன்றாட மளிகைச் சாமான்களை நாளொரு விலைக்கு வாங்குவதைப் போக்கும் வகையில் ஒரு மாதத்திற்கான மளிகைச் சாமான்களாய் வாங்கித் தருவது,
            திடீர் விலையேற்றம் மற்றும் தரமற்ற சரக்குகளைத் தடுக்கும் வகையில் தரமான சரக்குகளாகப் போதுமான எண்ணிக்கையில் வாங்கித் தருவது ஏற்புடையதாக இருக்கும் எனும் சிந்தனைப் போக்கு அண்மைக் காலமாக ஏற்பட்டு வருவதாக கள ஆய்வுகள் மூலம் திரட்டப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
            மாற்றம் எனும் தத்துவம் மாறாதது எனும் அடிப்படையில் பார்த்தால் ஓட்டுக்குத் துட்டு என்பது மட்டும் எத்தனை காலத்துக்கு மாறாமல் இருக்க முடியும்? விரைவில் அதுவும் புரட்சிகரமான மாற்றத்தைச் சந்தித்துதானே தீர வேண்டும்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...