20 Apr 2019

அம்மாவும் அப்பாவும்



செய்யு - 60
            பவித்ரன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். நரிவலம் ஹாஸ்டலில் வெள்ளைக் கைலி கட்டாத பிள்ளைகளில் அவனும் ஒருத்தனாக இருந்தான். எந்நேரமும் பேண்ட், சட்டைதான். பள்ளிக்கூடம் போகும் போது நீல பேண்ட், வெள்ளைச் சட்டையில் இருந்தால், ஹாஸ்டலுக்கு வந்ததும் கலர் பேண்ட், கலர் சட்டை அல்லது டீ சர்ட்டில் இருந்தான். ஹாஸ்டலில் இருந்த இன்னொரு படிப்ஸ் என்று பிள்ளைகளால் நைச்சியமாக கருவப் பட்டவன் இந்த பவித்ரன்.
            பவித்ரனுக்கு ஒரு மாதிரியான கூம்பிய முகம். அடிக்கடி அவன் வேடிக்கையாக ஓர் ஆங்கிலோ இந்திய பெண்மணி ஆங்கிலமும், தமிழும் கலந்து பேசுவது போல பேசிக் கொண்டிருந்தான். அவனிடம் ஒரு பெண்ணைப் போன்ற நளினத்தைப் பார்க்க முடிந்தது. அவன் கையைப் பிடித்தால், அவனைத் தொட்டால் அதற்கு அவன் காட்டும் பிரதிவினை வித்தியாசமாக இருந்தது. "ன்னா மேன்! ஏங்கிட்ட பெர்மிஷன் கேட்காம ஹியர் அன்ட் தேர் டச் பண்ணிட்டே இருக்கே!" என்பான். இப்படி அவன் பேசுவது ஒரு வேடிக்கைதான் என்று ஹாஸ்டலில் சில பிள்ளைகளும், வேண்டுமென்றேதான் அவன் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிறான் என்று சில பிள்ளைகளும் பேசிக் கொண்டிருந்தனர்.
            "பூம்பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தானாம்! டும் டும் மேளம் கொட்டிச் சேதி சொன்னானாம்!" என்று திடீரென்று பாடிக் கொண்டே ஒரு பெண்ணைப் போல ஆட ஆரம்பித்து விடுவான் பவித்ரன். அந்தப் பாட்டு அவனுக்கு மிகவும் பிடித்தமான பாடலாக இருந்தது. ஹாஸ்டலில் இப்படி ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு பாட்டு பிடித்தமாக இருந்தது.
            ஷாகுல், "முஸ்தபா! முஸ்தபா! டோன்ட் ஒர்ரி முஸ்தபா!" என்று பாட்டு புத்தகத்தை வைத்துக் கொண்டு ஹாஸ்டலின் வெளியே உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தான். ராமராஜ், "ராமேன் ஆண்டாலும் ராவணேன் ஆண்டாலும் எனக்கொன்னும் கவலயில்ல! வார்டன் வந்தாலும் ஹெட் மாஸ்டர் வந்தாலும் எனக்கொரு கவலயில்ல! இந்த ஹாஸ்டல்ல நான்தான்டா வார்டன்! நம்ம பள்ளிக்கூடத்துல நான்தான்டா ஹெட்மாஸ்டர்! எல்லா எடத்துலயும் நான்தான்டா ராஜா! எனக்குத் தூக்குங்கடா கூஜா!" என்று பாடிக் கொண்டிருந்தான்.
            அந்தந்தப் பிள்ளைகள் பாடும் பாட்டுகளை வைத்துக் கொண்டு அவர்களுக்குப் பேரும் ஏற்பட்டிருந்தது. ஷாகுலைப் பிள்ளைகள் 'முஸ்தபா பாட்டுக்காரன்' என்பார்கள். ராமராஜை 'ராமேன் பாட்டுக்காரன்' என்பார்கள். பவித்ரனை 'பூம்பூம் மாட்டுக்காரேய்ம் பாட்டுக்காரன்' என்பார்கள். விகடுவுக்குச் சரியாகப் பாட வராததால் பாட்டுக்கார பேர்களில் இருந்து அவன் தப்பியிருந்தான். பலநேரங்களில் பிள்ளைகள் விகடுவைப் பாடச் சொல்லி வற்புறுத்துவார்கள். எப்படியாவது விகடுவைப் பாட வைத்து அவனுக்கும் ஒரு பேர் கட்டி விட வேண்டும் என்பதில் அவர்கள் குறியாய் இருந்தார்கள்.
            "நமக்கு நீராரும் கடலுடத்த, ஜனகனமன தவிர வேற எதுவும் பாட வராதுப்பா! வேணுன்னாச் சொல்லுங்க! அத்தப் பாடுறேன்!" என்பான் விகடு. அவன் இப்படிச் சொன்னதும், "வேணாண்ணா! விட்ருங்கண்ணா!" என்று பிள்ளைகள் தலைதெறிக்க ஓடுவார்கள். இதற்காகவே ஏதாவது ஒரு பாட்டைப் பாட வேண்டும் என்பதில் விகடு மிகுந்த ஆர்வமாக இருந்தான். தனியாக இருக்கும் வேளைகளில் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் பாடி முயற்சித்துப் பார்த்தான். அவன் பாடுவது படிப்பது போலவே இருந்தது. பாட்டுப் படிப்பது என்ற சொல்லாடலைக் கையாளுபவர்கள் விகடு பாடுவதைக் கேட்டால் அந்தச் சொல்லாடலை நிச்சயம்ஒத்துக் கொள்வார்கள். அந்த அளவில் இருந்தது அவனது பாட்டுத் திறமை. தன் பிற்பாடு வாழ்க்கையில் இது அவன் மனதில் ஒரு குறையாக நிலைத்து, இதற்காக அவன் வாய்பாட்டு வகுப்புக்காகப் போய் அதைப் பாதியில் நிறுத்திய கதையெல்லாம் நடந்தது.
            பிரேம்குமாரின் உதடுகள் "ராத்திரி நேரத்துப் பூஜையில்..." பாடலை முணுமுணுத்துக் கொண்டும் சிணுங்கிக் கொண்டிருக்கும். இதனால் பிரேம்குமாருக்கு 'ராப்பூசைக்கார பிரேம்குமார்' என்ற பெயர் ஏற்பட்டிருந்தது.
            எந்நேரமும் படிப்பு, படிப்பு என்று இருந்ததால் பிரேம்குமாரும், பவித்ரனும் ஒத்துப் போயினர் என்றுதான் விகடு நினைத்துக் கொண்டிருந்தான். பொதுவாக ஹாஸ்டலில் ப்ளஸ்டூ பிள்ளைகள் இருக்கும் அறையிலோ அல்லது பத்தாம் வகுப்பு பிள்ளைகள் இருக்கும் அறையிலோ மற்ற பிள்ளைகள் போக மாட்டார்கள். அவர்கள் பப்ளிக் பரீட்சை எழுத இருப்பதால் பெரும்பாலான நேரம் படித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் படிப்பதை யாரும் தொந்தரவு செய்து விடக் கூடாது என்பதற்காக ஹாஸ்டலில் அப்படி ஒரு கட்டுபாடு அமலில் இருந்தது. மற்ற பிள்ளைகள் இருக்கும் இடங்களில் யார் வேண்டுமானாலும் வருவார்கள், போவார்கள். இதில் ஒரு விதிவிலக்கு என்னவென்றால் பிரேம்குமார் பெட்டி இருக்கும் இடத்தின் அருகே பவித்ரனையும், பவித்ரனின் பெட்டி இருக்கும் இடத்தின் அருகே பிரேம்குமாரையும் மாற்றி மாற்றிப் பார்க்கலாம். சமயங்களில் இருவரையும் ஒன்றாகவும் பார்க்கலாம்.
            அந்தந்த வகுப்புப் பிள்ளைகள் ஹாஸ்டலில் ஒரு குரூப்பாக அத்துடன் ஒரு மார்க்கமாக கிட்டதட்ட கேங்ஸ்டார்கள் போல இருப்பார்கள். மற்ற வகுப்புப் பிள்ளைகளோடு பேசுவார்கள், பழகுவார்கள் என்றாலும் அவ்வளவு நெருக்கம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அதனோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் பிரேம்குமார் மற்றும் பவித்ரனின் நெருக்கம் வித்தியாசமானதுதான்.
            பவித்ரனுக்காவது பத்தாவது பாடத்தில் ஏதேனும் சந்தேகம் என்றால் பிரேம்குமாரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள பழகுவதற்குக் காரணம் இருந்தது. பிரேம்குமாருக்கு ப்ளஸ்டூ பாடத்தில் சந்தேகம் என்றால் அதைப் பத்தாம் வகுப்பு படிக்கும் பவித்ரனிடம் கேட்பதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? என்று அவர்களின் நெருக்கமான பழக்கம் ஹாஸ்டலில் ஒரு பேச்சாக அடிபட்டுக் கொண்டிருந்தது.
            மனசுக்குப் பிடித்த ரெண்டு பேர்கள் கலந்து பழகுகிறார்கள் என்று எந்தப் பழக்கத்தையும் ஹாஸ்டலில் அவ்வளவு எளிதில் விட்டு விட மாட்டார்கள். எல்லாருடைய பழக்கத்தையும் வேர் முதல் கிளையின் நுனி வரை அலசிப் பார்ப்பார்கள் பிள்ளைகள். எந்நேரமும் சதா இப்படி எதையாவது பேசிக் கொண்டிருக்கும் குறைபாடு ஹாஸ்டலில் இருந்த எல்லா பிள்ளைகளிடமும் இருந்தது. இந்த முடிவற்ற, ஓய்வு ஒழிச்சல் இல்லாத எதைப் பற்றியாவது பேசும் பேச்சுக்கு குடும்பத்தைப் பிரிந்திருக்கும் பிள்ளைகளின் ஏக்க உணர்வு கூட காரணமாக இருந்திருக்கலாம். ஐப்பசி மாதத்து மழை போல அவர்கள் எதையாவது பேசிக் கொண்டே இருந்தார்கள்.
            குடைக்குள் அடித்துக் கொண்டிருந்த மழைக்குள் நனைந்து கொண்டே பேசிக் கொண்டு போய்க் கொண்டிருந்த ராமராஜ், "ஒங்கள அழச்சிட்டு வந்துருக்கக் கூடாதுண்ணே! ர்ரொம்ப போர் அடிக்குறீங்க! எதச் சொன்னாலும் அப்படியே ஸ்டன்னாயி வாயைப் பொளந்து நிக்குறீங்க!" என்றான்.
            "செரி! ஒமக்குப் பிடிக்கலேன்னா ஆள விட்டுடு. நாம்ம இப்படியே நனஞ்சிட்டுப் பள்ளியோடம் போயிடறேம்!" என்றான் விகடு.
            "ச்சும்மா இருங்கண்ணே! நீங்க மட்டும் தனியா போனீங்க... அப்பொறம் வார்டன் நம்மள பின்னி பெடலெடுத்துருவாப்ல. ஒரு வார்த்திக்குக் கூட ஏதும் சொல்லியிடக் கூடாதுங். ஒடனே முனுக்குன்னு கோவம் வந்துடும்."
            "நாம்ம ன்னா பண்ணட்டும்?"
            "ஒண்ணாப்பு பொத்தகத்துல அம்மாவும் அப்பாவும் படம் போட்டு இருக்கும்லேண்ணே! அத ஒண்ணாப்புப் புள்ள பாத்த ன்னா சொல்லும்? சொல்லுங்கண்ணே பாப்போம்!"
            "இத்தே கேக்குறதுக்குத்தாம் கூட்டியாந்தியா?"
            "ச்சும்மா சொல்லுங்கண்ணே! சொல்லுங்கண்ணே!"
            "ன்னாடா ஒம்மோட பெரிய ரோதனயப் போச்சு! நீ சொன்னதுதாம்டா கரெக்டு. நாம்ம ஒன்ன ரொம்ப போராடிக்குறோம்!"
            "பாத்தீங்களா! சமயம் பாத்து கால வாரி விடுறீங்க. அதெல்லாம் ச்சும்மாண்ணே! எவ்ளோ பேரு எதிர்பார்த்தாங்க தெரியுமா? அவங்குள கூப்புடுவேன்னு! நாம்ம ஏம்ணே உங்களக் கூப்புடணும்! ஒங்கள நமக்கு ரொம்ப பிடிக்கும்ணே! ஒரு பதில சொல்லுங்கண்ணே!"
            "அம்மா அப்பா படத்தப் பாத்தா அம்மா அப்பான்னுதாஞ் சொல்லும்!"
            "சொல்லாதுண்ணே! அம்மா படத்தப் பாத்து பொம்பளன்னு சொல்லும். அப்பா படத்த பாத்து ஆம்பளன்னு சொல்லும்!"
            "நீ கேட்டீயா?"
            "நீங்க கேட்டுருக்கீங்களாண்ணே!"
            "ம்ஹூம்!"
            "நாம்ம கேட்டுருக்குறோம்ணே! அதாம்ணே அடிச்சுச் சொல்றேம்!"
            "ச்சும்மனாச்சுக்கும் எத்தயாவது அவித்து விட்றாம்பி!"
            "அப்படித்தான்னே சொல்லும்!"
            "செர்ரி! சொல்லித் தொலஞ்சிட்டுப் போவட்டும்! அதுக்கென்னம்பி இப்போ!"
            "என்னெண்ணே அம்பி அது இதுன்னு ரொம்ப மரியாதயப் பேசுற மாரி இருக்கு!"
            "நீ பேசுற வெசயம் அப்படி இருக்கு. அப்ப அப்படிதாம்பிப் பேசியாகணும்பி!"
            "வெச்சிங்கில்லண்ணே ஆப்பு! பரவாயில்ல ஒங்களுக்காக தாங்கிக்கிறேம்ணா! வெசயத்துக்கு வாரேம்! ஒண்ணாப்புப் பொத்தகம் இருக்குல்லேண்ணே. அதுல அம்மா அப்பா இருக்குல்லேண்ணே. அந்த அம்மாதாம் பவித்ரன்னு. அப்பாதாம் பிரேம்குமாரு."
            ஒன்றும் புரியாத திசைக்கு நாலா பக்கமும் சுழன்றது விகடுவின் முழி.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...