இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வந்ததும்
நோட்டுகளை எண்ணும் சிரமம் போய் விட்டது. பத்தாயிரம் என்றால் நூறு ரூபாய் நோட்டுகளுக்கு
100 வரை எண்ண வேண்டும், இரண்டாயிரம் நோட்டுகளுக்கு ஐந்து வரை எண்ணினால் போதுமானதாக
இருக்கிறது.
*****
ஓட்டுக்கு நோட்டு என்றால் வெட்கப்பட வேண்டியது
வாக்காளர்கள் மட்டுமல்ல. அரசியல்வாதிகளும்தான். இவ்வளவு காலமும் மக்களின் பொருளாதாரத்
தேவைகளை நிறைவேற்றாமலே ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதுதான் அதன் பொருள்.
*****
எவ்வளவு காலம்தான் மக்களும் ஓட்டுக்கு
நோட்டு என்று வாங்கிக் கொண்டே இருப்பார்கள்? ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்
ஏன் ஓட்டுக்கு நோட்டு? என்று கேள்வியும் கேட்கவும் செய்வார்கள். எப்படியென்றால் இந்த
உலகில் எதுவும் மாறிப் போகும்! இப்போதிலிருந்தே அரசியல்வாதிகள் படிப்படியாக எச்சரிக்கையாக
இருப்பது நல்லது.
*****
ஓட்டுக்கு நோட்டு என்பது ஒதுக்கிய மிச்சம்.
ஒவ்வொரு திட்டங்களுக்கும்தான் ஒதுக்குவார்களே. நலத்திட்டங்களாய்ப் போய்ச் சேர வேண்டியது
நோட்டுகளாகப் போய் சேர்கிறது. நோட்டுகளாய் வந்து சேர்ந்தது நலத்திட்டங்களாய் வந்து
சேர்ந்திருந்தால் நன்றாக இருக்கும் என்பது இப்போது வேண்டுமானால் வலுவற்ற குரலாக இருக்கலாம்.
வருங்காலத்தில் அதுவே வலுவான குரலாக இருக்கும்.
*****
பக்கத்து வீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரரிடம்
பணம் சேர்ந்ததைப் பார்த்து பொறாமைப்பட்டு புறணிப் பேசுவதைக் கொஞ்ச காலத்துக்கு விட்டு
விட்டு, அரசியல்வாதிகளிடம் இப்படி கட்டுக் கட்டாகப் பணம் சேர்வதைக் கொஞ்ச காலத்துக்கு
புறணி பேச ஆரம்பிக்கலாம் திருவாளர் பொது சனங்கள்!
*****
ஒவ்வொரு அரசியல்வாதியின் வீட்டிலோ அல்லது
அவரது பினாமியின் வீட்டிலோ ஒரு ஏ.டி.எம். மிஷினோ அல்லது ஒரு வங்கிக் கிளையோ இல்லாமல்
இவ்வளவு பணம் சாத்தியமே இல்லை!
*****
No comments:
Post a Comment