19 Apr 2019

சேப்டி முக்கியம்ண்ணா!



செய்யு - 59
            ப்ளஸ் டூ படித்த பிரேம்குமாருக்கு ஒல்லியான உடம்பு. நல்ல சிவப்பு. நெடுநெடுவென்ற உயரம். எந்நேரமும் புத்தகமும் சிந்தனையுமாக இருக்கும் பிரேம்குமாருக்கு டாய்லெட்டைப் பயன்படுத்துவது பிடிக்காது என்று ஹாஸ்டலில் எல்லா பிள்ளைகளும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
            காலையில் குளிக்கச் செல்லும் போது பள்ளிக்கூடத்தின் கிழக்கே ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு திடலைத் திறந்தவெளி கழிவறையாகப் பிரேம்குமார் பயன்படுத்திக் கொண்டு இருந்ததாக அந்தத் திடலைக் கடக்கும் போதெல்லாம் பேசிக் கொள்வது முக்கிய பேச்சாகிப் போனது. நரிவலத்தில் பெரும்பாலும் கருவக்காடுகள்தாம் திறந்தவெளிக் கழிவறையாக இருந்தது. பிரேம்குமாருக்கு எப்படி இப்படி ஒரு யோசனை வந்ததோ? இந்த யோசனை பிரேத்யேகமான யோசனையில் அந்தத் திடலை அப்படிப் பயன்டுத்திய ஒரே ஆள் பிரேம்குமார்தான். வேறு பிள்ளைகளுக்கு அப்படிப் பயன்படுத்தும் எண்ணம் எதுவும் தோன்றவில்லை.
            பிரேம்குமார் அந்தத் திடலை அப்படி பயன்படுத்தியதில் அந்தத் திடல் நாறுவதாகவும், அப்படியெல்லாம் நாறவில்லை என்பதாகவும் ஹாஸ்டலில் இரு தரப்பினர் இந்தப் பிரச்சனையைப் பற்றி பல நேரங்களில் தீவிரமாக விவாதித்துக் கொண்டு வேறு இருந்தனர்.
            திடல் நாறுவதாகச் சொன்னவர்கள், "ஒரு வருஷமா ஒத்த ஆளு அந்த தெடல்ல போகாத இடமில்ல தெரியும்லா" என்றார்கள். நாறவில்லை என்று சொன்னவர்கள், "அவஞ் சைஸூக்கு அதெல்லாம் காக்கா கணக்குக்கு, குருவிக் கணக்குக்குதாம் போகும்!" என்றார்கள். இதையெல்லாமா ஹாஸ்டலில் பேசுவார்கள் என்று விகடு அதிர்ச்சியடைந்திருக்கிறான். ஒரு கட்டுப்பெட்டி போல ஹாஸ்டலில் இருந்தாலும் பிள்ளைகள் பேசிக் கொள்ளாத விஷயங்களில்லை. எப்படி பிள்ளைகள் ஒருவரைப் பற்றி இவ்வளவு விவரம் திரட்டுகிறார்கள் என்பது ஒரு புதிர்தான். ஹாஸ்டலில் ஒவ்வொரு பிள்ளைகள் பற்றியும் மற்றப் பிள்ளைகள் அவ்வளவு விவரமாகப் பேசுவார்கள். அதுவும் சர்ச்சைக்குரிய பிள்ளைகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். பிரித்து மேய்வார்கள். பிரேம்குமார் பற்றிய பேச்சு அப்படித்தான் வளர்ந்து கொண்டு போகும்.
            பிரேம்குமாருக்கு டாக்டராக வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. எந்நேரமும் ஹாஸ்டலில் படித்துக் கொண்டே இருப்பவர்களைப் பிள்ளைகள் "படிப்ஸ்' என்று கலாய்ப்பார்கள். அப்படி படிப்ஸாக இருந்ததால் வார்டனிடமும், ஹெட்மாஸ்டரிடமும் பிரேம்குமாருக்கு நல்ல பேர் இருந்தது.
            ஹாஸ்டலில் எல்லா பிள்ளைகளும் பள்ளிக்கு வெள்ளைச் சட்டை, நீலப் பேண்ட் என்று சீருடையில் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வெள்ளைக் கைலியும் சட்டையுமாகத்தான் இருப்பார்கள். ஒரு சில பிள்ளைகள் பெர்முடாஸூம், டி சர்ட்டுமாக இருப்பார்கள். சிறுபிள்ளைகள் அணியும் கால்சட்டைச் சகிதமாக எந்தப் பிள்ளையும் காட்சி தர மாட்டார்கள் பிரேம்குமாரைத் தவிர.
            ஹாஸ்டல் வந்து விட்டால் பிரேம்குமாரை ப்ளஸ்டூ பிள்ளைகள் தங்கி இருக்கும் அறையைத் தவிர எங்கும் பார்க்க முடியாது. சமயங்களில் பத்தாம் வகுப்புப் பிள்ளைகள் படிக்கும் அறையில் படுத்துக் கொண்டே படித்துக் கொண்டிருக்கும். அந்த அறைகளில் கருநீல நிற டிராயருடன் சயனித்த நிலையில் கையில் புத்தகத்துடன் காட்சி தந்து கொண்டிருக்கும். மேலுக்குச் சட்டை கிடையாது. எங்காவது வெளியே கிளம்ப வேண்டுமானால் பேண்ட், சட்டைதாம். ஹாஸ்டலில் வெள்ளைக் கைலி இல்லாத ஒரே ஆள் அதுதாம். வார்டனோ, ஹெட்மாஸ்டரோ கூட்டம் போட்டால் நொடி நேரத்தில் பேண்ட், சட்டையணிந்து வந்து நிற்கும். காலையில் குளிக்கக் கிளம்பும் போதும் அதே நீல நிற கால் சட்டையோடு தோளில் ஒரு துண்டோடு போய்க் கொண்டிருக்கும். இதைப் பற்றியெல்லாம் ஹாஸ்டல் பிள்ளைகள் மாய்ந்து மாய்ந்து பேசிக் கொள்வார்கள்.
            ஹாஸ்டல் பிள்ளைகளோடு ஒரு விஷயம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது பிடிக்கவில்லை என்று விலகிப் போய் விட முடியாது. அப்படிப் போனால் அதை ஒரு விஷயமாக்கி அதைப் பற்றிப் பேச ஆரம்பித்து விடுவார்கள். எந்த விஷயம் பேச்சில் ஆரம்பித்தாலும் அது முடியும் வரை கேட்டுக் கொண்டிருந்துதான் ஆக வேண்டும்.
            ஹாஸ்டலை நோக்கிப் போவது போல ராமராஜூம், விகடுவும் போய்க் கொண்டிருக்கையில், பெய்து கொண்டிருந்த மழை நன்றாகவே வலுக்க ஆரம்பித்தது.
            "ண்ணா! பிரேம்குமார் பத்தி ஒரு விஷயம் இருக்கு! உங்களுக்குத் தெரியுமாண்ணா?" என்றான் ராமராஜ்.
            "ம்ஹூம்!" என்றான் விகடு.
            "சொல்லவா வேணாமா?"
            வேண்டாம் என்று சொன்னால், "விகடண்ணா! பிரேம்குமார் விஷயத்தச் சொன்னா கேட்க மாட்டேங்குது!" என்று ராமராஜ் ஹாஸ்டல் முழுவதும் ஊதித் தள்ளி விடுவானே என்று பயமாக இருந்தது விகடுவுக்கு. "சொல்லு!" என்று சொன்னாலும், "விகடண்ணா! பிரேம்குமார் விஷயத்த எப்படி வாயப் பொளந்து கேட்குதுங்றே!" என்று டாமரம் அடித்து விடுவானே என்று அதுவும் ஒரு யோசனையாக இருந்தது விகடுவுக்கு.
            விகடு மெளனமாக இருந்தான்.
            "ண்ணா! சொல்றேம். இந்த மேட்டரு வெளிய வுட்டுரக் கூடாது!" என்று ராமராஜ் சொன்னதும், "அப்பாடா! இதப் பத்தி ராமராஜ் வாயைத் திறக்க மாட்டான்"  என்று விகடுவுக்குத் தெம்பாக இருந்தது.
            "ண்ணா! ரொம்ப முக்கியம். வெளில வுட்ரவே கூடாது!" என்றான் ராமராஜ்.
            "யப்பா சாமி! அத ஏம்டா எம்மகிட்ட சொல்றே? நீயே வச்சுக்க!" என்றான் விகடு.
            "பத்திங்களா! கயட்டி வுடுறீங்கப் பாருங்க! ஏத்தோ எங்க விகடண்ணாவுக்கு ஒரு இத்தா இருக்கட்டுமேன்னு சொல்றேம். சேப்டி முக்கியம்ணா!"
            "அதா ஜெயில்ல போட்டு அடைச்சி வெச்சிருக்குற மாரி வெச்சிருக்காய்ன்ங்களே. அப்புறம் ன்னா சேப்டி?"
            "அத்தாம் நீங்க பண்ற தப்பு. இதல்லாம் வெளில லீக் அவுட் பண்ண முடியாதுண்ணா. மேட்டரு நடந்துச்சுன்னா அப்புறம் அவ்ளோதாம். உஷார் பண்ணலாம்ணு பாத்தாக்கா..." என்று ராமராஜ் சொல்ல சொல்ல விகடுவுக்கு ஒரு பிசாசின் வாயுக்குள் புகுவது போன்று படபடப்பாக இருந்தது.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...