9 Apr 2019

பளபளக்கும் புது நோட்டுகள்



            கட்டுக் கட்டாக, பெட்டிப் பெட்டியாக பிடிபடும் பணத்தைப் பார்க்கும் போது பண மதிப்பிழப்பு நடவடிக்கை எதற்காகச் செய்யப்பட்டது? என்ற கேள்வியை எப்படி எதிர்கொள்வது?
            பணம் இப்படி மதிப்பிழந்து பெட்டிப் பெட்டியாக, கட்டுக் கட்டாக பிடிபடுவதுதான் பணமதிப்பிழப்போ என்னவோ!
            இந்தியாவின் பொருளாதாரம் இப்படித்தான் பணம் ஓரிடத்தில் சென்று குவியும் வண்ணம் இருக்கிறது.
            இப்படிப் பிடிபடும் பணம் அரசியல்வாதிகளிடமிருந்து வருகிறதா? கார்ப்பரேட்டுகளிலிருந்து வருகிறதா? பொருளாதார கிரிமினல்களிடமிருந்து வருகிறதா? பெருமுதலாளிகளிடமிருந்து வருகிறதா? என்பதை மட்டும் கண்டுபிடிக்க முடியாது. அதைக் கண்டுபிடிக்கவும் விட்டு விட மாட்டார்கள்.
            இவ்வளவு பணம் அதுவும் புதுப்புது நோட்டுகள் வங்கிகளிடமிருந்து கிடைப்பதைத் தவிர வேறு வழியில்லை. வங்கிகளும் இவ்வளவு பணத்தை கையிருப்பில் வைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை சில நாட்களில் பணம் எடுக்க வருபவர்களை, "இன்றைக்கு ரொக்கம் அவ்வளவுதான். முடிந்து விட்டது. நாளைக்கு வாருங்கள்! முதல் ஆளாக உங்களுக்குத் தந்து விடுகிறோம்!"  என்று சொல்லியனுப்புவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
            அதுவும் இல்லாமல் மிகப் பெரிய பண பரிவர்த்தனைகளை டிஜிட்டல் பரிமாற்றமாக செய்யவே வங்கிகள் வற்புறுத்துகின்றன. ஒரு லட்சத்துக்கு மேல் பணப் பரிமாற்றம் என்றால் பான் எண் உட்பட விவரங்கள் கேட்கின்றன.
            நிலைமை இப்படி இருக்க ஒரு தனிநபரிடம் இவ்வளவு பணம் சேர வாய்ப்பே இல்லை. ஆனால் சேர்கிறது. அதுவும் புதுப்புது நோட்டுக் கட்டுகளாய். சத்தியமாய் படகில் ஓட்டை இல்லாமல் படகு தண்ணீரால் நிரம்பாது. அரசியலில் ஓட்டை இல்லாமல் ஒரு தனிமனிதரிடம் இவ்வளவு பணம் புழங்காது.
            தயவுசெய்து அரசியல் ஓட்டைகளை அடையுங்கள். நாடே ஓட்டை விழுந்த கப்பலாக முழுகிக் கொண்டிருக்கிறது.
            சாமானியர் ஒருவர் தன் வங்கிக் கணக்கில் போட்டு வைத்திருக்கும் தன்னுடைய பணத்தை எடுப்பதற்காக எத்தனை முறை வங்கிக்காக அலைகிறார் தெரியுமா? அவர் எவ்வளவு நேரம் கால் கடுக்க தன்னுடைய பணத்தை வங்கியிலிருந்து எடுப்பதற்காக நிற்கிறார் தெரியுமா?
            அந்தச் சாமனியர்களின் வலி சாபமாய் அரசியல்வாதிகளின் நெஞ்சு வலியாக மாறாமல் இருப்பதற்காவாவது அரசியல்வாதிகள் இந்த விசயத்தில் எதாவது செய்யலாம்!
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...