செய்யு - 49
ஒரு பக்கமாகச் சாய்ந்து வேனிலிருந்து ஒவ்வொருவராக
வெளியே வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. வேன் சாய்ந்து கிடப்பதைப் பார்த்து
அக்கம் பக்கத்து வயல்களில் வேலைபார்த்தவர்கள் ஒடி வந்தார்கள். கொஞ்ச நேரத்துக்குள்
அக்கம் பக்கத்தில் செய்தி கேள்விப்பட்டு பலரும் கூடி விட்டார்கள். அவர்களே எல்லாருமாய்ச்
சேர்ந்து கவிழ்ந்த வேனை நிமிர்த்து விட்டார்கள். வேனை டிரைவர் ஓட்டிப் பார்த்தார்.
வண்டிக்கு ஒடுவதில் எந்தப் பிரச்சனையுமில்லை என்ற போதுதான் எல்லாருக்கும் நிம்மதியாய்
இருந்தது.
வேன் சாய்ந்ததில் ரத்தம் வரும் அளவுக்குக்
காயம் கோனார் தாத்தாவுக்கு மட்டும்தான். அதுவும் தண்ணீரைத் தொட்டு துடைத்து விட்டப்
பிறகு ரத்தம் வருவது நின்றிருந்தது.
இருந்தாலும் வேன் கவிழ்ந்த அதிர்ச்சி கோனார்
தாத்தாவுக்கு இருந்து. "ன்னாடா இப்படி எல்லாருமா சேந்து நம்மள அழச்சிட்டு வந்து
இப்படிக் கொல்ல பாத்தீங்களேடா!" என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னாலும் அதில்
வலியின் வேதனை இருந்தது. மற்றவர்களுக்கு கை கால்கள் விழுந்த இடங்களில் அடிபட்டதோடு
சரி. பெரிதாக காயம் எதுவும் இல்லை.
"சகுனம் சரியில்லாத மாரில்ல இருக்கு.
வேன திருப்பிட்டு அப்படியே வீட்டுப் பாக்கம் போயிடுவோமா?" என்றார் கோனார் தாத்தா.
அவர் சொல்வது எல்லாருக்கும் சரியாகப் பட்டாலும் குமரு மாமாவுக்குச் சரியாகப் படவில்லை.
"இப்ப ன்னா ஆச்சு? இந்த ரோட்டுல
எந்த வண்டி போனாலும் அது குப்புற அடிச்சிகிட்டுதான் வுழுந்து தொலயும்! அதாங் வேனு
ந்நல்லா போவுதுல்ல. வந்தது வந்துட்டோம். அப்படியே ஒரு எட்டுப் போய் பாத்துட்டு வந்துடுவோம்!
எனக்கும் வெளிநாடு போறதுக்கு நாளு நெருங்கிட்டே இருக்கு. காரியும் சீக்கிரம் ஆனா பரவாயில்ல!"
என்றது குமரு மாமா.
"யாருடா இவம்? அல்லாருக்கும் கருமாதி
ஆனாலும் பரவாயில்ல. நமக்குக் கல்யாணம் ஆகுங்றாம்?" என்றார் கோபமாக கோனார் தாத்தா.
"வந்தது வந்தாச்சு! இப்படியே திரும்பிப்
போய் ன்னாவப்போது? அதாங் வண்டியும் பெரச்சின யில்லாம ஓடுதுல்ல. அப்படியே போயிட்டு
வந்துர்வோம்! தண்டமா வேனு வாடகய கொடுக்குறதுல்ல ன்னா இருக்கு? இது மாரி காரியத்துக்குப்
போறப்ப இது மாரி ஆவுறது சகஜந்தான். ரொம்ப கரவு செரவா பாத்துட்டு நிக்க முடியாது."
என்றார் வைத்தி தாத்தா.
"இதுல வேனுக்கு வாடக வேறய்யா? நம்மள
அழச்சாந்து குப்புற தள்ளிவுட்டதுக்கு அவம்தான் நமக்குப் பணம் கொடுக்கணும்!" என்றார்
கோனார் தாத்தா.
மாணிக்கவிநாயகமும், அப்பாவும் என்ன பதில்
சொல்வதென்று தடுமாறினார்கள். சாமியாத்தாவின் முகத்தில் ஓர் எரிச்சல் இருந்தது.
"எப்படிப்பா வேன் சாஞ்சுச்சு? வுழுந்தப்ப
எப்படி இருந்துச்சுப்பா!" என்றாள் செய்யு. அவளுக்கு வேன் சாய்ந்தது ஒரு விளையாட்டைப்
போலிருந்திருக்க வேண்டும்.
"எந்த நேரத்துல கெளம்புனோமோ? இப்படி
வுழுந்து எழுந்திரிச்சி நிக்குறோம். இதுல இவ வேற? ஏதோ இந்த அளவோட வுட்டிச்சே!"
என்றது அம்மா.
"இதுக்கு மேல ரோடு எப்புடி இருக்கோ?
போயித் திரும்பணும். மறுபடியும் கவுந்துச்சுன்னா தாங்குறதுக்கு எங்கிட்ட ஒடம்புல்ல.
யோசிச்சுப் பண்ணுங்கப்பா!" என்றார் கோனார் தாத்தா.
"ன்னப்பா டிரைவரு? ன்னா சொல்றே?"
என்றது மாணிக்கவிநாயகம்.
"போயிர்லாம்ணா! ஒண்ணும் பெரச்சனயில்ல.
வாரப்பா வேணும்னா நாலுரோடு சுத்தி மாவூர் வழியா வந்துடுவோம். ரோடு அங்க பெரச்சன
இருக்காதுண்ணா! நீங்க ஏதோ சகுனம் அது இதுன்னு சொல்றீங்களே! அத மட்டும் பாத்துக்குங்கோ.
வண்டிக்கும் பெருசா ஒண்ணும் இல்ல. பாத்துக்கலாம்ணா!"
"வந்தது வந்தாச்சு. அப்படியே போயிட்டு
வாரப்ப அப்படியே வந்துடுவம். மறுபடி செட்ட சேத்துக் கெளம்புறதுன்னா இப்போதிக்கு சாதாரணமில்ல.
ச்சும்மா திரும்புறதுக்கு பாத்துட்டே திரும்பிடலாம்!" என்றது குமரு மாமா.
"யப்பாடா வைத்தி! ஒம் மவம் சமாதி
கட்டாம வுட மாட்டாண்டா! கெளம்புங்கடா எல்லாம் எந் நேரம்!"
"எங்கடா அவம் சின்னப் பய?" என்று
கேட்டார் வைத்தி தாத்தா.
"தாத்தா! இதக் கூட பாக்கல பாருங்க!
சின்ன மாமா அந்தோ வர்ருது பாருங்க!" என்றாள் செய்யு.
ஏயெம் மாமா அப்படியே நடந்து போய் தூரத்தில்
இருந்த பெட்டிக் கடையில் பெட்டியோடு சோடா பாட்டில்களைத் தூக்கிக் கொண்டு வந்தது.
"இவம் ஒருத்தம்டா ந்நல்ல வேல பண்ணுனாம்!
ரொம்ப தாகமா இருக்கே! ன்னா பண்றதுன்னு நெனச்சேம். நெனச்சிட்டு இருக்குறப்பவே சோடாவோட
வர்றாம் பாரு!" என்ற கோனார் தாத்தா முதல் ஆளாக சோடாவை வாங்கிக் கொடுத்தார்.
சாமியாத்தா சோடவை வாங்கிக் குடித்து விட்டு
ஏப்பம் விட்டது.
அடி யாருக்கும் பலமாக இல்லை என்பதாகத்தான்
முதலில் எல்லாரும் நினைத்துக் கொண்டார்கள். வலி அன்றிரவு படுத்து காலையில் எழுந்த
போதுதான் எல்லாருக்கும் ஆரம்பித்தது. ஒரு வார காலம் வரை அந்த வேனுக்குள் விழுந்த வலியின்
குடைச்சலால் எல்லாரும் அவதிப்பட்டார்கள். அப்புறம்தான் வலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய
ஆரம்பித்தது. இதை ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்ப காலம் சொல்லிக் கொள்ளவில்லை. அவர்களே
மறந்து போன ஒரு நாளில் குமரு மாமாவோடு எல்லாருக்கும் ஒரு வித மனத்தாங்கள் வந்து போது,
எப்படியோ அது ஞாபகம் வந்து தொலைத்த போதுதான் அதைப் பற்றி பேசிக் கொண்டார்கள்.
ஒரு மனத்தாங்கல் போதாதா எல்லா ஞாபகங்களையும்
கிளறி விட! மறந்து போன ஒன்றை எங்கிருந்தாலும் ஞாபக வேட்டையாடி வார்த்தை வழி துப்பி
விடும் அந்த மனத்தாங்கலில் அதிகம் பாதிக்கப்பட்டது சாமியாத்தாதான்.
அதற்குப்புறம் இந்தப் பெண் பார்த்த படலத்தை
ரொம்ப காலத்துக்கு கோனார் தாத்தா வேடிக்கையாகப் பேசிக் கொண்டு இருந்தார்.
"அத ஏம்டா கேக்குறீங்க? வுழுந்து எழுந்திரிச்சுப் போனா அங்க அருவாமணில கரடி மாரி
ஒருத்தம் நிக்குறாங். யாருடா இவம்னு கேட்டா அவம்தாம் பொண்ணோட அப்பங்றாம். ஒடம்புன்னா
ஒடம்பு அப்படி ஒரு ஒடம்பு. கொழுத்துப் போய் அங்கயும் இங்கயும் சதையும் அதுவுமா தொங்கிட்டு.
ன்னமோ பெரிய ஆச்சாரக்காரம் மாரில்லா பேசுறாம். அது இப்படி, இது இப்படிங்றாம். பொண்ண
பாத்தா கருப்பு. இவம் நம்ம கொமரு ந்நல்ல செவப்பு. வேண்டான்னு சொல்லிடுவோம்னுதாம்
நெனச்சேம். நம்ம பய கொமரு வழிஞ்சிட்டு நிக்குறாம். கட்டுனா அந்த பொண்ணதாம் கட்டுவேம்னு
நிக்குறாம். நாம ன்னா பண்றது? வெச்சிருந்த பச்சியையும் சொச்சியையும் தின்னுபுட்டு
காபிய குடிச்சிட்டு வந்துட்டோம். யாராருக்கு யாருன்னு மேல எழுதிருக்குற அப்புறம் நாம
ன்னா செய்ய முடியும்?"
*****
No comments:
Post a Comment