உலகெங்கும் அரசியல் என்பது மக்களை விழிப்புணர்வு
மனப்பான்மைக்கு மாற்றுவதாக இருக்கிறது. இந்தியாவில் மட்டும் இலவச மனப்பான்மைக்கு மாற்றுவதாக
இருக்கிறது.
கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சித் தேர்தல்
அறிக்கைகளிலும் ஏதோ ஒரு வடிவத்தில் இலவசம் குறித்த ஒரு வாக்குறுதி இருக்கிறது.
வேலை வாய்ப்புகளை பரவலாக்கி வழங்குவதற்கான
வாக்குறுதிகளை கட்சிகள் சாமர்த்தியமாக இலவசங்களை வழங்கும் வாக்குறுதிகளில் மறைக்கப்
பார்க்கின்றன. மக்களை இலவச மனப்பான்மைக்கு மாற்றி விட்டால் அவர்களின் போராட்ட உணர்வுகளை
வழித்து எடுத்து விடலாம் என கணக்குப் போடுகின்றன.
மக்களுக்கு எதை இலவசமாக வழங்க வேண்டுமோ
அதை காசு கொடுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றன கட்சிகள். கல்வியும், மருத்துவமும்,
சுகாதாரமும், தண்ணீரும், கழிவறை வசதிகளும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். அவைகளை இலவசமாக
பெறுவதற்கு மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது.
இவைகளை எந்தக் கட்சி இலவசமாக வழங்கும்?
இவைகளை இலவசமாக வழங்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு கட்சியிலும் எவ்வளவு கல்வித் தந்தைகள்?
எவ்வளவு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிறுவனர்கள்? எவ்வளவு மினரல் வாட்டர் முதலாளிகள்?
எவ்வளவு கழிவறைக் கான்டிராக்டர்கள்?
கல்வியை இலவசமாக வழங்கி விட்டால் மக்களுக்கு
விழிப்புணர்வு வந்து விடும்.
மருத்துவத்தை இலவசமாக வழங்கி விட்டால்
நோயற்ற சமூகம் உருவாகி விடும்.
சுகாதாரத்தை இலவசமாக வழங்கி விட்டால் ஆரோக்கியமான
சூழ்நிலை உண்டாகி விடும்.
தண்ணீரை இலவசமாக வழங்கி விட்டால் மக்களின்
உயிராதார தேவை நிறைவேறி விடும். கழிவறைகளை இலவசமாக வழங்கி விட்டால் பொது மக்களின்
உபாதைகளும், வாதைகளும் நீங்கி விடும்.
அவைகள் அப்படி ஆகி விட்டால் அவைகளுக்கு
எல்லாம் எப்படி கட்டணம் நிர்ணயிக்க முடியும்?
அப்படி கட்டணங்கள் நிர்ணயிக்க முடியாத
நிலை ஏற்பட்டு விட்டால் கட்சிகளும், கட்சிக்காரர்களும் எப்படி காசு பார்க்க முடியும்
சொல்லுங்கள்?
கட்சிகளின் இலவச வாக்குறுதிகள் ஒவ்வொன்றிலும்
கட்சிகளும், கட்சிக்காரர்களும் காசு பார்க்கும் சூட்சமங்கள் ஒளிந்திருக்கின்றன.
சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்கால்
பணம் என்றால் இலவசப் பொருட்களால் மக்களுக்கு கால் பணம், கட்சிகளுக்கு முக்கால் பணம்.
ஆக, எந்தக் கட்சி இலவச வாக்குறுதியை கைவிடும் சொல்லுங்கள்?
*****
No comments:
Post a Comment