4 Apr 2019

மரண அமைதி



செய்யு - 45
            காட்டாற்று வெள்ளத்தை விட கோபம் எவ்வளவு மோசமானது! ஒருவரை திட்ட ஆரம்பித்தால் அடுத்ததை விட அடுத்தது என்று படுமோசமான சொற்களைக் கொண்டு வந்து தள்ளுகிறதே இந்தக் கோபம்! ஒருவரை அடிக்க ஆரம்பித்தால் முன்னர் கொடுத்த அடியை விட பின்னர் விழும் அடி இன்னும் பயங்கரமாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறதே அது! திட்ட திட்ட, அடிக்க அடிக்க அதை அதிகமாக்கிக் கொண்டே போகிறதே தவிர அதைக் குறைந்து விட மாட்டேன்கிறதே இந்தக் கோபம்! அது குறைவதற்கு ஓர் அதிர்ச்சி தேவை. சினிமா படங்களில் காட்டுகிறார்களே விக்கல் நிற்பதற்கு ஓர் அதிர்ச்சி தேவை என்பது போல. அப்படித்தான் கோபத்தை ஓர் அதிர்ச்சியால் மட்டுமே நிலைகுழையச் செய்ய முடிகிறது. அந்த அதிர்ச்சிக்கு வாய்ப்பில்லாத போது கோபம் எதிராளியை நிலைகுழையச் செய்து விடுகிறது. அப்படித்தான் எப்போதும் நடக்க வேண்டும் என்ற கணக்கு இருக்கிறதா என்ன?
            தன் கணக்கு இவ்வளவு மோசமாக தன் கண் முன்னே உடைந்து விழும் என்று ‍ஹெட்மாஸ்டர் திருஞானம் எதிர்பார்த்திருக்க மாட்டார். ‍டிமிக்கிக் கொடுத்த பையனை அடிக்கும் அடியில், பார்த்துக் கொண்டிருக்கும் பள்ளிப் பிள்ளைகள் அதிர்ச்சியடைய வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். எந்த அதிர்ச்சியை அவர் பள்ளிப் பிள்ளைகளுக்குத் தர நினைத்தாரோ அதே அதிர்ச்சியில் அவர் நின்று கொண்டிருந்தார். எப்படியாவது மயங்கி விழுந்த பையன் எழுந்து விட மாட்டானா என்று அவர் பலவிதங்களில் மிகுந்த பிரயாசையோடு நின்று கொண்டிருந்தார். ஒருவேளை அவன் எழாமல் போய் விட்டால் ஒரு கொலையாளி என்ற பட்டத்துடன் நிற்பதை நினைக்கும் போது அவருக்கு உள்ளுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. அந்த நடுக்கத்தைக் காட்டக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
            "சார்! ஆஸ்பிட்டலு தூக்கிட்டுப் போறது நல்லதுன்னு நினைக்குறம்!" என்று வாத்தியார்கள் மத்தியில் குரல் எழுந்தது.
            "ஒண்ணுமில்ல! அவம் அதிர்ச்சியில கெடக்குறாம். இது மாரி எத்தன பாத்துருக்குறோம்?" என்றார் திருஞானம். அப்படி அவர் சொல்லி விட்டாலும் அவரால் கூட அவர் சொன்னதில் சமாதானம் ஆக முடியவில்லை. "இது மாதிரி எத்தனையைப் பார்த்திருக்கிறாய் நீ?" என்று அவர் மனம் அவரை எதிர்கேள்வி கேட்டிருக்க வேண்டும். அந்தக் கேள்வியின் உக்கிரம் தாளாமல் அவர் நடக்கத் தொடங்கினார். ஒவ்வொரு வகுப்பாக பார்வையிடுவதைப் போல கம்பைக் கையிலிருந்து விட்டு விடாமல் ஒவ்வொரு வகுப்பாக எட்டிப் பார்ப்பதும் வெளியில் வருவதுமாக நடந்து கொண்டிருந்தார்.
            ஒவ்வொரு வகுப்பிலும் பிள்ளைகள் மரண அமைதியில் இருந்தனர். அந்த அமைதி அவரை அதிகமாக அச்சுறுத்தியது. நிஜமாகவே அந்த அமைதி ஒரு மரண அமைதியாக ஆகி விடுமோ என்று அவரது பயம் இன்னும் அதிகமாகியது. எந்த வகுப்பாவது சத்தம் போட வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். அப்படி ஒரு வகுப்பு சத்தம் போட்டு அந்த வகுப்பில் போய் நின்று, "சத்தம் போட்டீங்கன்னா... கொன்னே புடுவேம்!" என்று காட்டுக் கத்தலாக கத்த வேண்டும் என்பது போலத் தோன்றியது அவருக்கு.
            ஒரு ரவுண்ட் முடித்து வந்து பார்த்தார். மயங்கி விழுந்தவன் அப்படியே கிடந்தான். வாத்தியார்களுக்குக் குழப்பமாக இருந்தது. அவர்கள் ஹெட்மாஸ்டரிடம் என்ன பேசுவது என்று வாக்கியங்களைப் பலவிதமாக மனதில் போட்டுத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்கள் கிடைத்த வாக்கியங்களை வைத்துக் கொண்டு பேசத் தொடங்கினர்.
            "காலயில சாப்புடாம வந்திருப்பாம் சார்! அதாங் மயங்கிட்டாம்!"
            "மயங்கி வுழுந்தாலும் இவ்ளோ நேரம் எழுந்திருக்காம இருக்க மாட்டாங் சார்! அத நெனச்சாதாங் சார் பயமா இருக்கு!"
            "டாக்டரு யாரயாவது இங்க கொண்டாந்தாரது நல்லது."
            "லேட் பண்றது சமயத்துல அசம்பாவிதமா ஆச்சுன்னா ஊர சமாளிக்குறது கஷ்டம் சார்! யோசிச்சு எதாச்சும் பண்ணுங்க சார்!"
            "அந்த பையனோட வூட்டுக்கு தகவல் கொடுத்துப் பாத்தான்னா சார்?"
            ஆளாளுக்குப் பேச ஆரம்பித்ததும், "சித்த சும்மா இருங்க. ன்னா பண்றதுன்னு நமக்குத் தெரியும்!" என்றார் திருஞானம். அவர் அப்படிச் சொல்லி விட்டு, என்ன பண்ணுவது என்று தெரியாமல் குழம்பினார். "எழுந்திரிச்சுத் தொலடா தேப்பய மவனே! செத்துத் தொலைச்சு நம்மய சாவடிச்சுடாதடா நாயே!" என்று அவர் மனசுக்குள் தோன்றியதும் ஒரு நொடி தன்னைத் தானே வெறுத்துக் கொண்டார். அப்படியெல்லாம் நினைக்கக் கூடாது என்று தன்னைத் தானே கட்டுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். திடீரென ஒரு முடிவுக்கு வந்தவராக சுற்றியிருந்த வாத்தியார்களைப் பார்த்த அவர், "பாத்துக்குங்கோ. நாம போயி வூட்டுல கரஸ்பாண்டன்ட பாத்துட்டு வந்திர்ரேம். ஒண்ணும் பயப்பட வேணாம்." என்று  சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு சைக்கிளில் ஏறி நகர்ந்தார். நகர்ந்தவர் நகர்ந்தவர்தான். கடைசியாக அவர் மேலப்பனையனூரில் அவரது காலடித் தடங்கள் பட்டது அன்றுதான்.
            அவர் சைக்கிளில் இலக்கின்றிச் சுற்றத் தொடங்கினார். நாகப்பட்டிணம் வழியாக வேதாரண்யம் வரை சைக்கிள் சக்கரங்கள் சுழன்றன. வேதாரண்யம் ரோட்டிலிருந்த திருத்துறைப்பூண்டி வந்தார். எப்படிதான் அவ்வளவு தூரம் சைக்கிளில் மிதித்துக் கொண்டே வந்தோம் என்பதை நினைக்க நினைக்க அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. திருத்துறைப்பூண்டியிலும் அவர் சைக்கிளில் நிலைகொள்ளாமல் தவித்தது. இந்நேரம் மயங்கி விழுந்தவன் நிலை என்னவாயிற்று அவர் பலவாறாக யோசித்து களைத்துப் போனார். சைக்கிள் போய்க் கொண்டே இருந்தால் தேவலாம் போலிருந்தது. ஊரில் எத்தனைப் பேர் தன்னை உதைக்கக் காத்திருக்கிறார்களோ என்பதை நினைத்த போது அவர் மனதில் இருள் கவிய ஆரம்பித்தது. அதே நேரத்தில் பொழுதும் இருள் கவிய ஆரம்பித்திருந்தது.
            காலையிலிருந்து அன்னம் தண்ணிப் புழங்காமல் இப்படி எப்படித் தன்னால் இருக்க முடிகிறது? என்று ஒரு கணம் அவர் யோசித்துப் பார்த்தார். அந்த யோசனை வந்ததும் அவருக்கு லேசாகப் பசித்தது. பசித்த வயிற்றிடம் கருணை காட்டக் கூடாது என்று அவர் நினைத்துக் கொண்டார். இன்று ஒரு பையன் மயங்கி விழும் அளவுக்கு அடிப்பதற்கு சக்தி தந்தது வயிறு சாப்பிட்ட உணவுதாம் என்று நினைத்து வயிற்றின் மேலும் அதன் பசியின் மேலும் அவருக்கு ஓர் அசூயை ஏற்பட்டது.
            சைக்கிளில் மேற்கொண்டும் எங்கும் நிற்காமல் போய்க் கொண்டே இருப்பது அவருக்குப் பாதுகாப்பாகப் பட்டது. திருத்துறைப்பூண்டியிலிருந்து மன்னார்குடி ரோட்டில் விடுவதா? திருவாரூர் ரோட்டில் விடுவதா? என்று ஒரு கணம் குழம்பியவர் அதைத் தீர்க்க முடியாமல் சைக்கிள் போன போக்கில் போகட்டும் என்று அழுத்தி மிதிக்க ஆரம்பித்தார். அவரது சைக்கிள் திருவாரூர் ரோட்டில் போக ஆரம்பித்தது. மச மசவென்று வந்த இருள் அடர்த்தியாகத் தொடங்கியது.
            அவருக்கு இருளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. இருள் தனக்குப் பாதுகாப்புணர்வைத் தருவதாக நம்பினார். அவரது பாதுகாப்புணர்வை அவ்வபோது சாலையில் சென்ற பேருந்துகளின் வெளிச்சம் அசைத்துப் போடுவது போலிருந்தது. ஒரு சில இடங்களில் எரிந்த தெருவிளக்கின் வெளிச்சம் ஒரு வெள்ளை ஆவி பின்தொடர்வது போன்ற உணர்வை அவருக்கு ஏற்படுத்தியது. மிதிமிதியென்று சைக்கிளை அசராமல் மிதித்து வந்தததில் அவர் உத்தரங்குடியை நெருங்கியிருந்தார். ஒளியைக் கக்கிக் கொண்டு நிற்கும் தெருவிளக்குகளையும், ஒளியைக் கண்டமேனிக்கு கக்கிக் கொண்டு வரும் பேருந்துகளின் லைட்டுகளையும் சைக்கிளை நிறுத்தி விட்டு இறங்கி நின்று கல்லெறிந்து உடைக்க வேண்டும் என்று அவருக்குள் ஓர் ஆவேசம் எழுந்தது. அப்படி ஒருவேளை செய்து தன்னைத் தானே அடையாளம் காட்டிக் கொண்டு விடுவோமோ என்று அச்சமும் அதனைத் தொடர்ந்து எழுந்தது.
            தனக்குத் தேவை இருள் என்பதை அவர் உணர்ந்தார். அந்த இருளை அவருக்கு வாரி வழங்கிய உத்தரங்குடியின் வலது பக்கத்தில் பிரிந்த சாலையின் வழியே அவர் உள் நுழைந்தார். ரோடு மண் ரோடாக இருந்தது. வீடுகள் நெடுந்தூரம் வரை எதுவும் இல்லை. பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வீடுகளைப் பார்க்கக் கூடாதவராய்ப் போல மிக வேகமாக சைக்கிளை மிதித்தார்.
            களக்காட்டு கடைத்தெருவை அவர் அடைந்த போது கடைத்தெருவின் வெளிச்சம் அவரை மீண்டும் பயமுறுத்தியது. முதன்முறையாக அவர் சைக்கிளை விட்டு இறங்கினார். அதிவேகமாக சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நடந்தார். கடைத்தெருவில் நிற்பவர்கள் அவரையே விநோதமாகப் பார்ப்பது போலிருந்தது.
            "யாங்காணும்? நரிவல கோயிலுக்கா போணும்? இப்படிக்கால போகணும்!" என்று கடைத்தெருவில் நின்று கொண்டிருந்த ஒரு கிழவரின் குரல் கேட்டதும், "இப்படிக்காவா?" என்றார் தன்னை அறியாமலே கேட்டார் திருஞானம். பதில் குரல் வர மாதிரி தெரியாமல் போகவே சைக்கிளில் ஏறி உட்கார்ந்து அமுக்கத் தொடங்கினார். அதிவேகம் அதிவேகம் என அழுத்தி மிதித்துக் கொண்டே இருந்தார். வெண்ணாற்றுப் பாலத்தைக் கடந்து, எதிரே வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டு வந்த ஒரு லாரியைக் கண்களை மூடிக் கொண்டு கடந்தார்.
            மெயின்ரோட்டிலிருந்து வலது பக்கம் ஒடித்துத் திருப்பினார். நரிவலம் பள்ளிக்கூடம். எந்த பள்ளிக்கூடத்துக்கு "ம்ஹூம்" சொன்னாரே அந்தப் பள்ளிக்கூடத்தைப் பார்த்தபடியே மிதித்தார்.
            ஒரு பிள்ளையைக் கொன்று விட்ட குற்ற உணர்வு ஏற்பட்டது அவருக்கு. அந்தக் குற்ற உணர்வோடு பிள்ளைக்கறி கேட்ட சிவனாம் ஆண்டியப்பரின் நரிவலம் கோயில் முன்னே சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார்.
            "அப்பனும் நீயே! ஆயும் நீயே! அப்பிள்ளைக்கறிக் கேட்டாயே!" என்ற தெய்வசிகாமணிப் புலவரின் (நரிவலத்தில் வாழ்ந்தவர்) விருத்தப்பா கோயிலின் உள்ளிருந்து அவர் செவிகளில் கேட்டது. அவருக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து எழுந்து பின் ரோமக் கால்கள் வழியாக அச்சமூட்டும் உணர்வு ஊடுருவது போலிருந்தது.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...