25 Apr 2019

மரணத்தின் வாசனை



செய்யு - 65
            ஓர் அசம்பாவிதச் சம்பவத்தின் நிழல் ஹாஸ்டலை முற்றிலுமாகச் சூழ்ந்திருந்தது. அதை அனுமானிக்க முடியாத படபடப்பு பிள்ளைகள் எல்லாருக்கும் இருந்தது. நேரம் ஆக ஆக அந்தப் படபடப்பு ஒரு கற்பனையாகக் கடந்து போய், காணாமல் போன முகிலன் கிடைத்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் பேச்சும், கற்பனையும் இருக்கிறதே, அது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் அனைத்து முரண்களிலும் பல்வேறு கோணங்களில் சுழன்று கொண்டிருந்தது.
            மதியச் சாப்பாட்டு வேளைக்கு இல்லாமல் போன முகிலன் பள்ளிக்கூடத்தில்தான் இருக்க வேண்டும் என்று பிள்ளைகள் பேசிக் கொண்டே ஹாஸ்டலின் சகல சந்து பொந்துகளிலும் முகிலனைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அப்படி அவன் பள்ளிக்கூடத்தில் இருந்து ஹாஸ்டலுக்குக் கொண்டு வரப்பட்டால் அவன் வாங்கப் போகும் அடியைப் பற்றியும் பிள்ளைகள் பரிதாபமாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு சில பிள்ளைகள் அவன் கிடைத்து விட வேண்டும் என்று ஆண்டியப்பநாதருக்கு வேண்டிக் கொண்டார்கள்.
            சில நேரங்களில் ஹாஸ்டலில் படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகள் தங்களை மறந்து உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்த நிலையில் தூங்கி விடுவதும் உண்டு. எப்படியும் அப்படித் தூங்கும் பிள்ளையின் பக்கத்தில் தூங்காத ஒரு பையன் இருந்தால் அவனை எழுப்பிக் கொண்டு வந்து விடுவான். சில நேரங்களில் தூங்கிக் கொண்டிருக்கும் பையன் பக்கத்தில் யாரும் இல்லாமல் போயிருந்தால் அவனாக எழுந்து வந்தால்தான் உண்டு. அப்படி எங்காவது முகிலன் தூங்கிக் கொண்டு கூட இருக்கலாம். இனம் புரியாமல் பதற்றத்தை உண்டாகிக் கொண்டிருக்கும் இந்த அசாதாரணச் சூழலில் அப்படி தூக்கத்திலிருந்து எழுந்து வருபவன் போல் எழுந்து வந்தால் எல்லாம் ஒரு நொடியில் முடிந்து விடும்.
            ஒருவேளை அப்படி நடந்தால் சலிக்க சலிக்க அவனைத் தேடிக் கடைசியாக கிடைத்த திருப்தியில் வார்டன் அவனை அடிக்காமல் கூட விட்டு விடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
            என்ன நடக்கப் போகிறது என்பது எல்லாருக்கும் ஒரு புதிராகத்தான் இருந்தது.
            காணாமல் போன முகிலனுக்கு என்ன நடந்திருக்கும் என்ற கேள்வி பல விதங்களில் பல்வேறு பேச்சுகளாய் சுழன்று கொண்டிருந்தது.
            ஹாஸ்டலுக்கு நோட்டு எடுக்க வருவதாகச் சொல்லி விட்டு முகிலன் வீட்டுக்குக் கூட பஸ் ஏறிப் போயிருக்கலாம் என்று பக்கத்தில் இருந்து வாசனைப் பிடித்தவர்களைப் போலவும் பிள்ளைகள் மத்தியில் ஒரு பேச்சு பரவியது. அப்படி அவன் வீட்டுக்கு ஓடியிருந்தால் இனி ஜென்மத்துக்கும் ஹாஸ்டலுக்கு வர முடியாதே என்று அந்தக் கற்பனையைப் பின்தொடர்ந்த சில பிள்ளைகள் கவலைப்பட்டார்கள்.
            முகிலனைப் பற்றிய யூகங்கள் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போவதாகப் பட்டது. அவனைக் கண்ணால் பார்க்காத வரை அந்த யூகங்களுக்கு ஒரு முடிவு கிடையாது. அதுவும் இல்லாமல் அவன் இல்லாத நேரத்தில் யூகங்கள்தான் அவன் இருப்பை ஆறுதலாக உறுதிபடுத்திக் கொண்டிருப்பதாகப் பட்டது. ஒருவேளை அவனைத் தேடிக் கொண்டு பள்ளிக்கூடம் சென்ற வார்டன் திரும்பி வந்தால் அந்த யூகத்துக்கு ஒரு முடிவு கிடைக்கலாம். வார்டனோடு ஹெட்மாஸ்டர் வந்தும் யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.
            எல்லா யூகங்களையும் தவிடுபொடியாக்கும் வகையில், யாரும் யோசிக்க முடியாத புதிய கோணத்தில் முகிலன் அந்தக் கணத்தில் காணக் கிடைத்தான். கற்பனையை விட உண்மை எவ்வளவு மோசமாக இருக்கும் என்று எப்படி விளக்கிச் சொல்வது?
            ஹாஸ்டலின் நேர் எதிரே தென்னண்டையில் இருந்த விறகுகள் வைக்கப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகையில் துணி காய வைக்க கொடிகள் கட்டப்பட்டிருந்தன. மழைக்காலத்தில் நனைந்து விடாமல் துண்டைக் காயப்போட அந்தக் கொடியைப் பிள்ளைகள் பயன்படுத்தினார்கள். சில பிள்ளைகள் வெயில் அடித்தாலும், மழை அடித்தாலும் குளித்து விட்டுத் துண்டை அங்குதான் காயப்போட்டார்கள். ஆளாளுக்கு முகிலனைத் தேடிக் கொண்டிருக்க காயப் போட்ட துண்டை எடுத்துப் போடுவோம் என விறகுக் கொட்டகை்குச் சென்ற பக்கிரிசாமிதான் அங்கு முகிலனைப் பார்த்தது.
            உயரமான விறகுக் கொட்டகை அது. ஹாஸ்டலாக இந்த ஓட்டுக்கட்டிடம் மாறுவதற்கு முன் கண்டியப்பநாதரின் கணக்குப் பிள்ளை வசிக்கும் வீடாக இருந்த போது நெல் மூட்டைகள் கொண்டு வந்து அடுக்குவதற்காகக் கட்டப்பட்டிருந்த விஸ்தாரமான உயரமான கொட்டகை அது. ஹாஸ்டலாக மாற்றப்பட்ட பிறகு அது விறகுக் கொட்டகையாக மாறிக் கொண்டது. விறகுகள் அடுக்கியது போக எஞ்சியிருந்த முன்பகுதியில்தான் பிள்ளைகள் அங்கே நான்கைந்து கொடிகளைக் கட்டி துண்டுகளைக் காய வைத்துக் கொண்டிருந்தனர்.
            கொட்டகை சரியாக முடியும் இடத்தில் அதற்குப் பின்பக்கத்தில் இருந்து வீட்டின் சுவர் இருந்தது. அந்த வீட்டில் இருந்தவர்கள் ஹாஸ்டல் பிள்ளைகள் மேல் எந்நேரமும் குறைச் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஹாஸ்டல் பிள்ளைகள் சத்தம் போடுவதாகவும், விறகுக் கொட்டகையில் வந்து கூத்தடிப்பதாகவும் வார்டனிடம் அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். அத்துடன் அந்தக் கொட்டகையில் விறகுகளைக் கொண்டு வந்து அடுக்கியிருப்பதால் பாம்புகள் வந்து அடைவதாகவும் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அந்தக் கொட்டகையை எவ்வளவு சீக்கிரத்தில் பிரிக்கிறார்களோ அவ்வளவு சீக்கிரம் ஹாஸ்டலுக்கு நல்லது என்கிற ரீதியில் ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
            குற்றம் குறை சொல்லப்பட்டிருந்த அந்தக் கொட்டகையின்  வெகு உயரத்தில்  நைலான் கயிற்றில் முகிலன் தொங்கிக் கொண்டிருந்தான். காய்ந்து போன துண்டை எடுத்து விட்டு அண்ணாந்து பார்த்த பக்கிரிசாமியின் மரண ஓலம் ஹாஸ்டல் பிள்ளைகள் எல்லாரையும் அந்த இடத்தில் குவித்தது.
            தூக்கில் தொங்கும் முகிலனைப் பார்த்து விட்டு ப்ளஸ்டூ பிள்ளைகளில் நான்கைந்து பேர் பள்ளிக்கூடத்தை நோக்கி ஓடினர். செய்தி அசாதாரண வேகத்தோடு நரிவலம் முழுவதும் பரவ ஆரம்பித்தது.
            ராமராஜ், "பாவிப் பயலே! பாவிப் பயலே!" என்ற நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழுதான். எல்லா பிள்ளைகளின் கண்களிலும் கண்ணீர் ஓட்டை விழுந்த பானையைப் போலக் கொட்டியது. "ஏய் முகிலா! ஏய் யா யய்யா முகிலா!" என்று பிள்ளைகள் ஒவ்வொருவரும் கதறிய அழுகையின் ஒலம் நைலான் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த முகிலனின் காதுகளைத் தவிர நரிவலத்திலிருந்த ஒவ்வொருவரின் காதுகளிலும் நெடுநாட்கள் எதிரொலிக்கும் ஒலியாய் காற்றில் உறைந்து போனது.
            ஓர் ஏழாம் வகுப்புப் படிக்கும் பிள்ளையின் மனதுக்குள் மரணத்தைத் தேட வைக்க வகையில் ஓடிய எண்ண ஓட்டங்கள் எதுவாயிருக்கும் என்ற கேள்விக்கானப் பதில் அவ்வளவு எளிதாக கூறி விட முடிவதா என்ன? அதை விடவும் நிகழ்ந்த மரணம் தற்கொலையா? கொலையா? என்பதை முடிவு செய்ய முடியாத வகையில் அந்த கேள்வியே அர்ததமற்றதாக அல்லவா மாறி விடும்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...