1. சினிமா டிக்கெட்டின் விலையை விட குறைவாக
ஒரு புத்தகத்தின் விலை இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.
2. ஒரு குவார்ட்டர் வாங்கும் விலையை விட
குறைவான விலைக்கு புத்தகம் கிடைப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
3. புத்தக வாசிப்பு ஆரம்பித்த பின் முகநூல்,
சுட்டுரை பார்க்கும் நேரம் கணிசமாக குறைந்திருப்பதாகப் புறணிப் பேசிக் கொள்கிறார்கள்.
4. தொலைக்காட்சித் தொடர்கள், சதா செய்தி
சேனல்கள் என்று மூழ்கி கிடப்பவர்களைக் கரையேற்றி விடுவதாக உலகெங்மிருந்து தகவல்கள்
வந்து கொண்டிருக்கின்றன.
5. புத்தக வாசிப்பானது போதைப் பழக்கங்களில்
பெரும் போதையாகி புகை பிடித்தல், போதைப் பாக்குப் போடுதல், மது அருந்துதல் போன்றவற்றைப்
பின்னுக்குத் தள்ளி விடுவதாக உறுதிபடுத்தப்படாத ஆய்வுத் தரவுகள் கிடைத்த வண்ணம் உள்ளன.
6. ஒரு புத்தகமானது ஒரு மனிதருக்கு ஒரு
நாளின் ஒரு மணி நேரமாவது அலைபேசியிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதாகப் புள்ளிவிவரங்கள்
தெரிவிக்கின்றன.
7. புத்தகம் மட்டுமே தற்போதைய சூழ்நிலையில்
மின்சாரத் தேவையில்லாமல் இயக்கக் கூடியதாக இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன.
8. பல சரக்குக் கடைகளில் பல சரக்குகளுள்
ஒன்றாக புத்தகமும் இடம் பெறத் தொடங்கியிருப்பதாகவும், கூடிய விரைவில் டாஸ்மாக் கடைகளிலும்
புத்தகமும் ஒரு சரக்காக இடம்பெற குரல் எழுப்பப்படும் என செய்திகள் கிடைத்த வண்ணம் உள்ளன.
9. வீட்டின் வரவேற்பறை அலமாரிகளில் பெரிய
பெரிய புத்தகங்கள் கலைபொருட்களைப் போல இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன. எத்தனை நாட்கள்தாம்
படிக்காமல் அதைக் காட்டிக் கொண்டிருப்பது என வாங்கி வைத்தவர்கள் குற்ற உணர்ச்சிக்கு
ஆளாவதாக ரகசியத் தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன.
10. ஒரு புத்தகத்தை சில பக்கங்கள் வாசித்த
பின் வரும் தூக்கமானது தூக்க மாத்திரை தரும் தூக்கத்தை விட சிறப்பாக இருப்பதாக அநேக
அன்பர்கள் சொல்லி வருவதன் பின்னணியில் அண்மைக் காலமாக மருந்து பொருள்களும் ஒன்றாகவும்
புத்தகங்கள் மாறி வருகின்றன என்பதன் அடிப்படையில் இவ்விடயம் வருங்காலத்தில் முக்கிய
மருத்துவக் குறிப்பாக துணுக்குகளில் இடம் பெறவும் வாய்ப்பிருக்கிறது.
இந்த பத்துக் காரணங்களுள் ஒன்று உங்களைப்
புத்தகம் வாசிக்கச் செய்யுமானால் மகிழ்ச்சி. இல்லாது போனால் ஓர் அரசியல் கட்சி ஆரம்பித்து
வாசிப்பவர்களின் வங்கிக் கணக்கில் மாதத்துக்கு ஒரு லட்சம் போடப்படும் என தேர்தல் வாக்குறுதி
வழங்கும் ஒரு நல்வழியும்(!) இருக்கிறது. வேறு ஏதேனும் வழியிருப்பினும் தெரியப்படுத்துங்கள்!
*****
சிறந்த மதிப்பீடு
ReplyDeleteபாராட்டுகள்.
நன்றி ஐயா!
Delete