எனக்குப் பிடிக்கவில்லை என்பது உனக்குப்
பிடித்திருக்கிறது. ஆகவே என்னை விட்டு விடு.
*****
நீ வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்கிறாய்.
புரிந்து கொள்ள வைக்க முயற்சிப்பதில் பயனில்லை. உன் மனநிலைக்கேற்ற புரிதல்களை மட்டுமே
நீ புரிந்து கொள்கிறாய். அல்லது அதை மட்டுமே உன்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என்னிடம்
நிறைய ஆறுதல்கள் இருந்தால் உனக்குக் கொடுப்பேன். அல்லது அது இல்லாமல் போனால் மெளனமாக
நீ சொல்வதைக் கேட்பேன். அதுதானே நீ என்னிடம் விரும்புவது. அப்படியே ஆகட்டும்.
*****
என்னுடைய மகிழ்ச்சியில் உனது சோகம் தெரிகிறது.
என்னுடைய சோகத்தில் உனது மகிழ்ச்சி தெரிகிறது. ஆனால் வார்த்தைகள் மட்டும் எப்படி நேர்மாறாய்ப்
போகிறதோ? நீ என்னைக் குருடனாக்கிக் குரூரமாய்ச் சந்தோசித்திருக்கிறாய்.
*****
நெடுநாளாக என்னில் தேடி ஏமாந்திருக்கிறாய்
நீ. பாவந்தான் நீ. இந்த முறை உன்னில் தேடிப் பார். நீ தேடியது என்னில் இருக்கும் என்னையில்லை.
உன்னில் இருக்கும் என்னை. அது உன்னிடம்தான் இருக்கிறது. என்னிடம் ஏது?
*****
நீ மற்றும் நான், இருவரும் சந்தோஷமாக
இல்லை. நீ என்னை உன்னைப் போல் எதிர்பார்க்கிறாய். நான் உன்னை என்னைப் போல் எதிர்பார்க்கிறேன்.
நீதான் நீ. நான்தான் நான். நீ நானல்ல. நான் நீயல்ல. நீ என்னை நானாகவும், நான் உன்னை
நீயாகவும் கண்டுகொள்ளாமல் விட்ட பிறகு எங்கிருந்ததோ தெரியவில்லை நெடுநாளைக்குப் பின்
சந்தோஷம் வந்து நெஞ்சில் குந்திக் கொண்டது. அதற்குப் பின் நீ எனக்கு நீயாகவோ, நான் எனக்கு நானாகவோ தெரியவில்லை.
இரண்டும் அழிந்ததுதான் மிச்சம். அழிவின் எச்சத்தில் சந்தோஷம் என்பது ஆச்சர்யம்தான்.
என் கண் முன் நிற்காதே. அழிந்து போய் சந்தோஷப்படு.
*****
No comments:
Post a Comment