14 Apr 2019

சர்க்கரைப் பிள்ளை



செய்யு - 55
            திட்டைக் கடைத்தெருவிலிருந்து ஒய் போல பிரியும் ரோட்டின் முக்கத்தில் தள்ளுவண்டி கடை வைத்திருந்தார் சர்க்கரைப் பிள்ளை. பேர்தான் பிள்ளை என்றாலும் ஆள் வயதானவர் போல் தலைமுடியெல்லாம் பஞ்சு பஞ்சாய் புசுபுசுவென்று இருக்கும். வயது நாற்பத்தைந்திலிருந்து ஐம்பதுக்குள் இருந்திருக்க வேண்டும். முடியும், தோற்றமும் அவரை எழுபது வயதைத் தொட்டவர் போல் காட்டியது.
            தள்ளுவண்டிக் கடையில் வடை, பஜ்ஜி, போண்டா, மெதுபகோடா போடுவார். தள்ளுவண்டியிலேயே அதற்கான எல்லா ஏற்பாடுகளும் இருக்கும். பர்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மேல் எண்ணெய் சட்டியை வைத்து எண்ணெயை ஊற்றி சுட்டு தர வேண்டிய வேலைதான் பாக்கி.
            நான்கு மணி வாக்கில் தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு வந்து சுட ஆரம்பித்து விடுவார். அந்தப் பக்கமாய்ப் போனால் அப்பா வடையோ, போண்டாவே, பஜ்ஜியோ அல்லது மெதுபகோடாவோ வாங்காமல் வர மாட்டார். விகடுவும் அப்படியே. பணமெல்லாம் கொடுக்காமல் வாங்கி வந்து விடுவான். பணத்தை அப்பா அந்தப் பக்கம் போகும் போது கொடுத்து விடுவார். அவர் சுட்டுத் தரும் பலகாரத்துக்கு அப்படி ஒரு ருசி இருந்தது. திட்டை சனங்களுக்கு அவர் முக்கியமான சிற்றுண்டி வியாபாரியாகி விட்டார். இரவு எட்டு மணி வரை தள்ளுவண்டியில் சர்க்கரைப் பிள்ளை நேரம் கிடைக்காமல் இயங்கிக் கொண்டிருப்பார். சமயங்களில் அவரின் மனைவி உதவியாக வந்து நிற்பார். அவர் ஒரு நோயாளியாக இருந்தார். சர்க்கரைப் பிள்ளைக்கு சிற்றுண்டி வியாபாரத்தில் நல்ல வருமானம். வந்த வருமானத்தில் அவர் அதிகமாக மனைவிக்காக மருந்த மாத்திரை வாங்குவதற்குச் செலவிட வேண்டியிருந்தது.
            கடையை முடித்ததும் எட்டு அல்லது எட்டே காலுக்கு திருவாரூரிலிருந்து வடவாதிக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறி வடவாதியில் இறங்குவார். வடவாதி மருந்து கடையில் மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு அந்த பஸ் திரும்பும் போது அதே பஸ்ஸில் ஏறி திட்டையில் இறங்கி விடுவார்.
            விகடு சர்க்கரைப் பிள்ளையிடம் கேட்டிருக்கிறான், "ஏம் இப்புடி தெனஞ்சாரம் அலஞ்சிட்டு இருக்கீங்க? ஒரு வாரத்துக்கு தேவயானத வாங்கி வெச்சுக்கிலாம்ல!"
            "அம்புட்டு காசுக்கு நாம்ம எங்கப் போறதும்பி? அன்னன்னிக்குச் சம்பாரிச்சு வாங்குறதே கஷ்டமா இருக்கும்பி. ரொம்ப காசு பிடிச்ச மாத்திர மருந்துவோம்பி!" என்பார்.
            "அவுங்களுக்கு என்ன பண்ணுது?" என்று கேட்டால் சர்க்கரைப் பிள்ளை பதில் சொல்ல மாட்டார். கொஞ்ச நேரம் மெளனமாக இருப்பார். பிறகு அழுத்தமும் நிதானமும் நிறைந்த சன்னமான குரலில், "அது ஏதோ ஒரு நோயிம்பி! இருக்குற வரிக்கும் காப்பாத்திப் புடணும்னு நெனக்குறேம்."  என்பார். அதற்கு மேல் பேச விரும்பாதவரைப் போல் தோளில் போட்டிருக்கும் துண்டால் வாயைப் பொத்திக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்து விடுவார். கேட்டவர்களுக்கு ஏன் கேட்டோம் என்றாகி விடும்.
            "இப்புடியா தெனமும் பஸ்ஸில போயி திரும்பி காச செலவழிக்கணும்? ஒரு சைக்கிள் வாங்கி வெச்சுகிட்டா சம்பத்தா இருக்குமுல்ல!" என்றும் விகடு அவரிடம் கேட்டிருக்கிறான்.
            "ம்ஹூம்! ன்னா சம்பத்தும்பி? பஸ்ஸூல போய்ட்டு வந்தா ஒரு நாலு பேர பாக்கலாம். பேசலாம். சைக்கிள்னா ஒத்தையில உடணும் தம்பி. சனங்களோட போயிட்டு வாரது ஒரு சந்தோஷம்பி!" என்பார்.
            மணமங்கலம் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்த நாட்களில் விகடு அவரை அதிகம் கவனித்திருக்கிறான். காலையிலிருந்து மதியம் வரை அவர் ஆட்டுக்கல்லில் போட்டு எதையாவது அரைத்துக் கொண்டே இருப்பார். மதியத்துக்கு மேல் வீட்டுக்கு எதிரே இருந்த பிள்ளையார் கோயிலில் துண்டை விரித்து படுத்து இருப்பார். மூன்று மணி வாக்கில் எழுந்திருத்தார் என்றால் வியாபாரத்துக்குத் தயாராகி நான்கு மணிக்கெல்லாம் முக்கத்தில் தள்ளவண்டியோடு நிற்பார்.
            அவர் சாப்பிட்டு விகடு பார்த்ததில்லை. எந்நேரமும் வாயில் வெற்றிலைச் சீவலை மென்றபடி இருப்பார். வேலை நேரத்தில் மட்டும்தாம் விடுதலை கொடுப்பார். அவர் மிகவும் குறைவாகத்தான் சாப்பிடுவார் என்று பேசிக் கொண்டார்கள். வெற்றிலைச் சீவலே அவரது சாப்பாடாக ஆகியிருக்க வேண்டும். சமைப்பதில் அவர் அபார கெட்டிக்காரர். குறிப்பாக அசைவ சமையலில் அபார கைப்பக்குவம்.
            அப்பாவுக்கு அவருக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்து விட வேண்டும் என்ற விருப்பம் ரொம்ப காலமாகவே இருந்தது. சரியான வாய்ப்பாக குமரு மாமாவின் கல்யாணத்தின் கறி விருந்துக்கு அவரைப் பிடித்து விட்டார்.
            "இஞ்சி தோல உரிச்சி, பூண்டு வெங்காயம் உரிச்சி அரிஞ்சிக் கொடுத்து பாத்திர பண்டம் புழங்க ஒரு பொம்பள ஆளு இருந்தா போதும் வாத்தியாரே. மத்ததயெல்லாம் நாம்ம பாத்துப்பேன்!" என்றார் சர்க்கரைப் பிள்ளை. அவருக்கும் வாத்தியாருக்கு ரொம்ப செலவில்லாமல் விருந்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனால் நேரம் பாருங்கள்! சர்க்கரைப் பிள்ளை கடைசியாகப் போன வெளிச்சமையல் வேலையாக அந்த வேலை அமைந்து விட்டது. அதற்குப் பின் அவர் எவர் சமையலுக்குக் கூப்பிட்டாலும் போகவில்லை. தன் தள்ளுவண்டி வியாபாரத்தோடு தன் காலத்தை முடித்துக் கொண்டார்.
            வடவாதி வைத்தி தாத்தா வீட்டின் தென்னண்டைப் பக்கம் ஒரு படுதாவைக் கூரை கணக்காகக் கட்டி விட்டு செங்கற்களை அடுக்கி அடுப்பாக்கிக் கொண்டு வேலையை ஆரம்பித்தார் சர்க்கரைப் பிள்ளை.
            சமைக்க சமைக்க சாப்பாட்டின் மணம் எட்டு ஊருக்கு நாசியைத் துளைத்துக் கொண்டிருந்தது. ஆட்டுக்கறிக் குழம்பு அதில் தனி வறுவல், வஞ்சி மீன் பொறியல் அத்தோடு முட்டை அவித்து சோறாக்கி முடித்திருந்தார் சர்க்கரைப் பிள்ளை.
            சமைத்ததை எல்லாம் அவரும் பொம்பளை ஆளுமாகச் சேர்ந்து மாடிக்குக் கொண்டு சென்று பரிமாறுவதற்கு ஏதுவாக வைத்து விட்டார். மாடியிலும், வீட்டுக்கு முன்புறத்திலும் கல்யாணத்துக்கென பந்தல் போடப்பட்டிருந்தது. எல்லா வேலைகளையும் பனிரெண்டு மணிக்குள் முடித்து, சாப்பிட வந்தால் பந்திப் போட்டு விடலாம் என்று கீழே இறங்கி வந்து அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தார் சர்க்கரைப் பிள்ளை.
            மேலே மாடிக்கு குமரு மாமா கல்யாணம் கட்டிய அருவாமணி வகையறாக்களும், மேகலா மாமியும் சமைத்து வைத்திருப்பதைப் பார்ப்பதும், பார்த்து விட்டு கீழே வருவதுமாக இருந்தனர். குமரு மாமாவின் மாமனார் கணேசமூர்த்தி மேலே போய் எல்லாவற்றிலும் கொஞ்சம் எடுத்து நாக்கில் வைத்து சுவைத்துப் பார்த்து விட்டு, "பரவாயில்ல!" என்று சொன்னதாகப் பேசிக் கொண்டார்கள்.
            "சம்பந்தம் கலந்துட்டு வந்தீங்கன்னா பந்திய ஆரம்பிச்சுப் புடலாம்!" என்றார் சர்க்கரைப் பிள்ளை.
            வைத்தி தாத்தாவும், குமரு மாமாவும், அப்பாவும் சேர்ந்து கொண்டு பெண் வீட்டு ஆள்களையெல்லாம் பாக்கு வெற்றிலைக் கொடுத்து மாடிக்கு அழைத்து வந்து இலையைப் போட்டு கறி விருந்து சாப்பிட தயார் பண்ணிக் கொண்டிருந்தனர்.
            சர்க்கரைப் பிள்ளை கறி வறுவல் சட்டியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பொம்பிளை ஆளிடம் கறி வறுவலைக் கூடுதல் குறைவு இல்லாமல் எல்லா இலைக்கும் சரியாக வரும் வகையில் பிரித்துக் கொடுத்து  வைக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பா, வீயெம் மாமா மற்றும் கோனார் தாத்தா எல்லாரும் ஒத்தாசையாக பரிமாறும் வேலைகளில் இறங்கியிருந்தார்கள்.
            திருப்தியான விருந்து முடிந்து மாப்பிள்ளை வீட்டு வகையறாக்கள் சாப்பிட உட்கார்ந்ததும் பெண் வீட்டு வகையறாக்கள் தாங்கள்தாம் பரிமாறுவோம் என்று அடம் பிடித்து பரிமாறினர். இப்படி நடப்பது அபூர்வம்தான் என்றாலும் தாங்கள் எல்லாவற்றிலும் ஒரு படி மேல் என்பதைக் காட்டுவதற்காகவே அருவாமணி வகையறாக்கள் அந்த வேலையைச் செய்வதாகப் பேசிக் கொண்டார்கள்.
            எல்லா இலைகளுக்கும் கறி வறுவல், மீன் பொறியல் வைத்து முட்டை வைத்த போது ஏழெட்டு இலைக்கு முட்டை போதாமல் போனது.
            "முட்ட எல்லா எலைக்கும் சரியாக இருக்கணுமே! நெறயாத்தான வாங்குனம்!" என்றது வீயெம் மாமா.
            "ஆமாம் தம்பி! அவிச்சப்பவே எண்ணிப்புட்டேம். எல கணக்குப்படி பாத்தாலும் இருபத்து ரண்டு முட்டய்க இருக்கணும்பி!" என்றார் சர்க்கரைப் பிள்ளை.
            "அவ்ளோ முட்டய்க கொறையறதுக்கு வாய்ப்பில்லய. முட்டய்க வீணாப் போனாலும் ஒண்ணு ரண்டுதான அப்படி ஆவும்!" என்றார் அப்பா.
            "வாத்தியார்ரே! முட்டய்கள்ல ஒண்ணும் சோடயில்ல. எல்லாம் ரகமான முட்டய்க. எப்புடி முட்டய்க கொறயதுன்னுங்றதுதாம் புரியல!" என்றால் சர்க்கரைப் பிள்ளை.
            அங்கு ஓர் அசாதாரண அமைதி நிலவ ஆரம்பித்தது. அந்த அமைதியை உடைத்துக்குக் கொண்டு ஒரு கரடியின் பொறுமலைப் போன்ற குரல் கேட்க ஆரம்பித்தது.
            "யோவ்! நீந்தாம்யா தின்னுருக்கணும். வாய ஊதிக் காட்டுய்யா பாப்பம்!" என்றார் குமரு மாமாவின் மாமனார் கணேசமூர்த்தி சர்க்கரைப் பிள்ளையிடம்.
            சர்க்கரைப் பிள்ளையின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக ஊற்ற ஆரம்பித்தது.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...