14 Apr 2019

இலவச தண்ணீர், கழிவறை - தேர்தல் அறிக்கையாகட்டும்!



            கழிவறைக் கட்டுவதை விட அதற்குத் தண்ணீர் முக்கியம் என்பார்கள்.
            இந்தக் கோடையில் குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்காம சனம் அல்லாடுறப்ப கழிவறையை விட வெட்ட வெளியே போறதுதாம் செளகரியமா இருக்குங்றாகுவோ நம்மட கிராமத்து மக்கள். தண்ணியும் சிக்கனமா சேமிக்க முடியுதுங்னு சந்தோஷப்படுகுதுவோ.
            நம்மட கிராமத்துல பெரும்பாலான டாய்லெட்டுகள் காத்து வாங்கிக் கிடக்குது. மறுபடியும் தண்ணீர் பிரச்சனைச் சரியானா மக்கள் டாய்லெட்டைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். "அதென்னடே! ஒரு தடவ போயிட்டு வந்தா ஒரு வாளி தண்ணிய ஊத்தி... வெளியில போனீனாக்க ஒரு மக்கு போதும்டே!" என்று சனம் பேசிக் கொள்வதைப் பக்கத்தில் நின்று பார்க்க வேண்டும். தண்ணீர் சேமிப்பில் மக்கள் எவ்வளவு அக்கறையாக இருக்கிறார்கள் என்பது புரியும்.
            "டாய்லெட் இல்லாத வீட்டுக்குக்கு கல்யாணம் கட்டிட்டுப் போயிடாதீங்க!" அப்படின்னு கழிவறையின் அவசியத்தை வலியுறுத்தி நம்மட கிராமத்தில் ஒரு நேரத்தில் கூட்டமே போட்டிருக்காங்க. அதுக்காகவே டாய்லெட்டைக் கட்டியாச்சு. ஆக டாய்லெட் இல்லாத வீடுகள் இல்லை நம்மட கிராமத்தில். எந்தப் பெண்ணும் நம்மட கிராமத்துக்கு கல்யாணம் கட்டிட்டு வாரலாம். ஆனா, அந்த டாய்லெட்டுல போகணுமே! அதாங் பிரச்சனையா இருக்கு!
            இந்த சனங்கதான் டி.வி., மிக்ஸி, கிரைண்டர், மாசத்துக்கு ஆயிரத்து ஐநூறு, ரெண்டாயிரம், வருஷத்துக்கு அறுபத்து ரெண்டாயிரம், எழுபத்தைந்தாயிரம்னு எது இலவசமாக கொடுத்தாலும் விழிப்புணர்வா வாங்க தயாரா இருக்கே! தண்ணீரை இலவசமாக கொடுத்துதான் வாங்கணும்ங்றதுல விழிப்புணர்வா இருக்கா? அதைக் குடத்துக்கு ரெண்டு ரூபாயில் ஆரம்பிச்சு அஞ்சு ரூபாய், பத்து ரூபாய் என்ற விலை கொடுத்து வாங்க கியூவுலல்ல நிற்குது!
            யப்பாடி! யம்மாடி! எந்த இடத்துக்குப் போனாலும் தண்ணீரை இலவசமாக கொடுக்கணும். ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போக இலவசமாகப் போகணும்!
            இலவசமாக ஏதேதோ பொருட்கள் கொடுக்குறாங்கன்னு வாங்கிகிட்டு... தண்ணீர் பாட்டிலை பதினெட்டுக்கும், ஒண்ணுக்குப் போக ரெண்டு ரூபாயும், ரெண்டுக்குப் போக அஞ்சு ரூபாயும் இலவசமாக கிடைக்க வேண்டியதைக் காசு கொடுத்து வாங்கிட்டு இருக்கிறோமே மக்கா! எம் மக்கா! அங்கதாம் மக்கா நாம்ம நிற்குறோம்!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...