இஞ்ச ஊருக்குப் பக்கத்துல ஒரு பள்ளியோடம்
உண்டு பாருங்க!
யாருக்கும் அந்தப் பள்ளியோடத்துல தம்மோட
புள்ளைகள சேர்க்கிறதுக்கு ரொம்ப யோசனைதாம்.
நல்ல பள்ளியோடம்தாம். வாத்தியாருமாருக
போதுமான எண்ணிக்கையில இருக்காங்க. பாடஞ் சொல்லி கொடுக்குறதிலயும் கொறையில்ல.
என்னா ஒரு பெரச்சினைன்னா? அந்தப் பள்ளியோடத்துல
படிச்ச பொம்பள பிள்ளைகள்ல பல பேருக்கும் சிறுநீரகக் கல்லு வந்து போச்சி.
காசு செலவு பண்ணி அந்தக் கல்ல கரைக்குறதுக்குள்ள
பெத்தவகளுக்குப் போதும் போதும்னு ஆகிப் போச்சு.
என்னடா இது! ஒருத்தரு ரெண்டு பேருக்கு
வந்திருந்தா இது அத்தோட போயிருக்கும். இருபது முப்பது பேருக்கு வந்ததால சந்தேகமாகிப்
போச்சு.
கடைசியில பொம்பள புள்ளைகள ஒரு மாதிரியா
விசாரிச்சு உண்மையைக் கண்டுபிடிச்சா, ரொம்பவே வெட்கப்பட்டு, ரொம்ம்ம்ப ரொம்ம்ம்ப
வெட்கப்பட்டு அந்தப் புள்ளைங்க சொன்னதோட சாராம்சம் என்னான்னா... டாய்லெட்டு சரியில்லேன்னு
அந்த பிள்ளைக எல்லாம் டாய்லெட்டே போகாம இருந்திருக்குங்க. தண்ணிக் குடிச்சா டாய்லெட்டுப்
போகணும்னு தண்ணியும் குடிக்காம இருந்திருக்குவோங்க.
என்னய்யா விசயம் இப்படியிருக்கேன்னு ஹெட்மாஸ்டருகிட்ட
விசாரிச்சா, "அத சுத்தம் பண்றதுக்குலாம் பண்டு இல்ல. இப்ப பண்ற செலவே கைகாசைப்
போட்டுதாம் பண்ணுறேன்!" அப்படின்னுட்டார்.
அப்புறம் என்ன பண்றது கருமத்தை! பத்து
கிலோ மீட்டர் தள்ளி இருக்குற பள்ளியோடத்துல புள்ளைகள சேர்க்க வேண்டியதாகிப் போச்சு.
பக்கத்துல பள்ளியோடம் இருந்தும் பிரயோஜனமில்லாமப் போச்சு.
பத்து கிலோ மீட்டர் தள்ளியிருக்குற பள்ளியோடத்துல
டாய்லெட்ட பராமரிக்க நிதியிருக்கு? பக்கத்துல உள்ள பள்ளியோடத்துல நிதியில்லாமப் போயிட்டே?
அப்படின்னும் யாரும் சிந்திக்கல.
பத்து கிலோ மீட்டர் தள்ளியிருக்கிறத பள்ளியோடத்துக்கு
செலவு பண்ணி அனுப்புறதுக்கு ஆளுக்குக் கொஞ்சம் காசைப் போட்டு பக்கத்துல இருக்குற
பள்ளியோடத்து டாய்லெட்டு சுத்தத்துக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணுவோம் அப்படின்னும் ஒருத்தருக்கும்
தோணல.
இதெல்லாம் கட்டாதப்ப மறைவாத்தாம் புள்ளைங்க
டாய்லெட்டுப் போச்சுதுங்க. அங்கங்க கருவக்காட்டை வளர்க்குறதுக்கு என்ன செலவு? அது
பாட்டுக்கு வளந்துச்சு. கருவக்காடே டாய்லெட்டா இருந்துச்சு.
இப்போ வீட்டுக்கு வீடு டாய்லெட்டக் கட்டி
அதுல போயி பழக்கப்பட்டு வெளியில மறைவா போறதுக்கே புள்ளைங்க கூச்சப்படுதுங்கோ.
உடம்புக்கென்ன? அது பாட்டுக்கு கழிவை வெளியே
தள்ளிவிட்டுட்டு பேசாம இருக்குது! மனுசரா பொறந்தவங்களுக்கு அது மாதிரி முடியுதா? அதை
உடம்புக்கு வெளியே தள்ளி விடறதுக்கு இந்தப் புள்ளைங்கோ என்னா பாடு பட வேண்டியிருக்கு!
அது சரிதாம்!
இதையெல்லாம் சரி பண்ணுனா அப்புறம் உள்ளூரு
பள்ளியோடத்துலயே எல்லாரும் புள்ளைகள சேர்த்துடுவாங்க. டவுன்ல இருக்குற பள்ளியோடம்
என்னாகும்? இதுக்குன்னே பஸ் ஓட்டிட்டுப் போறவங்க நிலைமை என்னாகும்? இதுக்குன்னே முதல்
போட்டு பள்ளியோடம் நடத்துறவர் நிலைமை என்னாகும்?
அதுவும் இல்லாம புள்ளைகளுக்கு சிறுநீரகக்
கல்லு வராம போச்சுன்னா... அதுக்கு வைத்தியம் பார்க்குற வைத்தியரு நிலைமை என்னாவுறது?
அதுக்கு மருந்து மாத்திரை தயாரிக்குற மருந்து கம்பெனிகளோட நிலைமை என்னாவுறது?
படிக்கிற புள்ளைகள் சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும்
இருந்துட்டா அப்புறம் நாட்டோட மருத்துவ கட்டமைப்பு வசதிகளை எப்படிதாம் பெருக்க முடியும்?
அந்த ஊர்லயே பள்ளியோடம் டாய்லெட்டோட நல்லா இருந்துட்டா டவுன சுத்தி கல்விக்கூடங்களின்
கட்டமைப்பு எப்படி மேம்படுத்துறது?
டாய்லெட்டு சரியில்லாத ஒரு பள்ளியோடம்
போதும், நாட்டின் மருத்துவக் கட்டமைப்பையும், நகரத்தைச் சுற்றிய கல்விக் கூடங்களின்
பெருக்கத்தையும் புற்றுநோயைப் போல உண்டு பண்ண.
*****
No comments:
Post a Comment