ஓசியில கொடுத்தா பினாயில கூட குடிப்பாம்ங்க!
என்று நம்மட கிராமத்தில் பேசிக் கொள்வார்கள்.
நம்மட கிராமத்துக்கும் பினாயிலுக்கும்
தொடர்பு வந்து பத்து வருஷங்களுக்கு மேல் இருக்காது. அதற்கு முன்பாகவே நம்மட கிராமத்தில்
இப்படிப் பேசியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்குப் பினாயிலைப் பற்றி அறிந்திருக்கிறார்கள்
என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
நம்மட கிராமத்தில் கழிவறைகள் அதிகம் புழக்கத்துக்கு
வந்து பத்து வருடங்களுக்குள்தாம் இருக்கும். அதற்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக
ஒரு சில வீடுகளில் இருந்த கழிவறை இப்போது அநேகமாக பெரும்பாலான வீடுகளில் வந்து விட்டது.
இது சந்தோஷம் தரும் விசயந்தாம். பல வீடுகளில்
ஒன்று ரெண்டு கழிவறைகள் உண்டும் நம்மட கிராமத்தில்.
அதுவும் சந்தோஷம் தரும் விசயந்தானே என்கிறீர்களா?
ஒண்ணுக்கு ரெண்டா இருந்தால் ஒரே நேரத்தில்
ரெண்டு பேருக்கு அவசரமாக வருகிறதென்றால் செளகரியம்தானே என்பீர்கள்.
அந்த செளகரியம் கிடக்கிறது விடுங்கள்.
ஒண்ணுக்கு ரெண்டாய் எப்படிக் கழிவறை வந்தது என்பது தெரிந்தால் அந்த சங்கதிதாங் எம்மட
கிராமத்திலும் என்பீர்கள். இதில் என்ன நம்மட கிராமம், உம்மட கிராமம்? பெரும்பாலான கிராமங்களில்
இப்படித்தான் நிலைமை இருக்கும் என்று நினைக்கிறேன்.
இரண்டு கழிவறைகளில் ஒன்று பக்கா செப்டிக்
டேங்கோடு அந்தந்த குடும்பமே கட்டியது.
மற்றொன்று கழிவறை கட்ட மானியம் கொடுக்கிறார்களே
என்பதற்காக சிமெண்ட் குழாய் உறைகளை மண்ணைத் தோண்டி விட்டுப் புதைத்து விட்டு ஹாலோ
பிளாக்கை வைத்து கட்டியது.
பெரும்பாலான வீடுகளில் இரண்டு கழிவறைகள்
வந்து விட்டாலும் அவர்களே கட்டிய கழிவறையைத்தான் பயன்படுத்துகிறார்கள் நம்மட மற்றும்
உம்மட கிராம மக்கள். மானியம் வாங்கிக் கட்டிய கழிவறையை என்ன பண்ணுகிறார்கள் என்று கேட்கிறீர்களா?
ஒரு சிலர் விறகுகளைப் போட்டு வைத்திருக்கிறார்கள்.
ஒரு சிலர் பழையப் பொருட்கள் போட்டு வைக்கும் குடோனாகப் பயன்படுத்துகிறார்கள். எல்லாவற்றுக்கும்
மேலாக நம்மட கிராமத்தில் ஆட்டுக் கொட்டிலாகப் பயன்படுத்துகிறார்கள். ஆடுகளுக்கு டேரக்ட்
டாய்லெட்!
ஓசியில கொடுத்தா பினாயில குடிக்கிறதென்ன?
டாய்லெட்டு இருந்தாலும் இன்னொரு டாய்லெட்டு வாங்கிக் கட்டிக்கிறதென்ன?
யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே!
இப்படிதாம் மக்களே! நம்மட ஊருக்கு டாய்லெட்டு வார்றதுக்கு முன்னாடியே பினாயிலு பத்தினப்
பேச்சு வந்து போச்சு!
*****
No comments:
Post a Comment