எங்கெங்கோ இருக்கும் நிறுவனங்கள் எல்லாம்
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குகின்றன. நோக்கியா நிறுவனம் இங்கு ஒரு மொபைல் தொழிற்சாலையை
எளிதாக தொடங்க முடிகிறது. பின்னால் அது தேவையில்லை எனும் போது அப்படியே போட்டு விட்டு
அந்நிறுவனத்தால் ஓடிப் போய் விடவும் முடிகிறது. ஆனால், இதே தமிழ்நாட்டில் இருக்கும்
இளைஞர்கள் அந்த நிறுவனங்களில் வேலை பார்க்கலாம். அவர்கள் வேலையை விட்டுத் தூக்கினால்
வாய் மூடி மெளனியாக வெளியேறலாம். ஆனால் அப்படி ஒரு நிறுவனத்தைத் துவங்க முடியாது.
வங்கிகள் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடும்
திராணி உள்ளவர்களாகத்தான் பார்த்து கடன்களை வாரிக் கொடுக்கின்றன. ஆர்வமுள்ள தொழில்
தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு ஏமாற்றத்தையே அள்ளிக் கொடுக்கின்றன.
பெருநிறுவனங்கள் தொடங்கும் தொழில் வாய்ப்புகளில்
கறாரான வேலை வாய்ப்புகளே உருவாகின்றன. மாறாக அந்தந்தப் பகுதி இளைஞர்கள் தொடங்கும்
தொழில் வாய்ப்புகளில்தான் நெகிழ்வுத் தன்மையான வேலை வாய்ப்புகள் நிறைய உருவாகின்றன.
கல்வித்தகுதி இல்லாதவர்களும் தொழில்திறன் பெற்றவர்களாய் மாற்றப்படும் ஆக்கப்பூர்வமான
வேலைவாய்ப்பு என்பது அந்தந்தப் பகுதி இளைஞர்கள் தொடங்கும் தொழில்வாய்ப்புகளில்தான்
உண்டாகிறது.
தம் பகுதியில் இருக்கும் தொழில்திறன்
அற்றவர்களையும் தொழில்திறன் பெற்றவர்களாக மாற்றும் தகவல் தொடர்பு திறனும், உள்ளூர்
வள அறிவும் அந்தந்தப் பகுதி இளைஞர்களின் தனித்துவங்கள். அவர்கள் தொழில் தொடங்குவதற்கான
வாய்ப்புகளைத் திறந்து வைக்கும் போதுதான் இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம் எனும்
பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட முடியும்.
ஒரு கிராமத்தில் தொழில் தொடங்க வாய்ப்புள்ள
இளைஞர்களால் கணிசமான கிராம மக்களுக்கு அபரிதமான வேலை வாய்ப்புகளை அள்ளி வழங்க முடியும்.
நகரத்தை நோக்கி இடம் பெயரும் கிராம மக்களைத் தக்க வைப்பதோடு, நகரத்திலிருந்து தொழிலாளிகளைக்
கிராமத்தை நோக்கி ஈர்க்க வைக்கவும் முடியும்.
செய்ய வேண்டியதெல்லாம், பெருநிறுவனங்களுக்கான
தொழில் வாய்ப்புகளுக்குக் கொடுக்கும் அதீத முக்கியத்தை அதே அளவில் எவ்வித குறைபாடும்
இல்லாமல் தொழில் தொடங்கு விழையும் இளைஞர்களுக்கும் வழங்குவதுதான்.
நூறு இளைஞர்களைத் தாருங்கள், இந்தியாவை
மாற்றிக் காட்டுகிறேன் என்று விவேகானந்தர் சொன்னது இந்த அர்த்தத்தில்தான். இளைஞர்கள்
தயாராக இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவை மாற்றிக் காட்டுவதற்கான சரியான சூழலைக் அவர்களுக்குக்
கட்டமைத்துத் தர வேண்டியது நாம் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் அரசாங்கம்தான்.
*****
No comments:
Post a Comment