செய்யு - 63
படித்ததை நன்றாக மனதில் பதிய வைத்துக்
கொள்ளும் திறமை படைத்த பிள்ளைகளுக்கு ஹாஸ்டலில் தனி மரியாதை இருந்தது. ஒரு ரோபோட்டைப்
போல புரோகிராமிங் செய்யப்பட்ட குழந்தைகள் என்றால் அந்தக் குழந்தைகளை இந்தக் ஹாஸ்டல்
கொண்டாடவே செய்தது.
ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு ரகம். இந்த
ஹாஸ்டலில் ஷாகுலைப் போல சினிமா பாடல்களை மனதில் பதிய வைத்துக் கொள்ள ஆளில்லை. ஆனால்
அவன் படிப்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ள தடுமாறினான்.
விகடு ரெகார்ட் நோட்டுகளில் அழகு அழகாகப்
படங்கள் போட்டான். அதுவும் தாவரவியல், விலங்கியல் ரெகார்ட் நோட்டுகள் என்றால் புத்தகத்தில்
இருப்பதை அப்படியே அச்சடித்தது போல படமாக வரைந்து தள்ளினான். படங்கள் அவன் மனதில்
தங்கிய அளவுக்குப் பாடங்கள் தங்க அடம் பிடித்தது.
அவன் சில நேரங்களில் தன்னையறியாமல் கவிதைகள்
போல எதையாவது எழுதிக் கொண்டிருந்தான். அப்படி எழுதுவது எல்லாவற்றிலிருந்தும் தப்பித்து
இந்த உலகின் எங்கோ ஒரு மூலையில் பாதுகாப்பாக இருப்பதைப் போன்ற ஓர் உணர்வை உருவாக்கின.
போகப் போக விகடுவுக்கு இயற்பியல் ஒரு
கடினமானப் பாடமாக ஆகத் தொடங்கியது. அதில் வருவிக்கப்பட்ட சூத்திரங்களும், அதன் கருத்துகளும்
அவனை ஒரு திரிபு நிலைக்குத் தள்ளிக் கொண்டிருந்தன. அவனது இயற்பியல் ஆசிரியர் இந்த
திரிபு நிலையை இயற்பியல் ரீதியாக விளக்கியது ஒன்றுதான் அவனது நினைவில் நின்றது. பாக்கி
ஒமேகா, கப்பா, தீட்டா என்று அவர் சொன்னது எதுவும் அவன் மனதை விட்டு ஓட்டம் பிடித்தன.
புரியாதப் பாடங்களை மனதில் பதிய வைப்பதற்கு
ஹாஸ்டல் பிள்ளைகள் இரண்டு விதமான வழிகளைக் கையாண்டார்கள். ஒன்று அப்படியே அதை நெட்டுரு
அடித்தார்கள். மற்றொன்று அதை எழுதி எழுதிப் படித்தார்கள். விகடு நெட்டுரு அடித்துப்
பார்த்தான். பல இடங்களில் ஞாபகச் சங்கிலிகள் அறுந்து விழுந்து தொங்கின. அவனுக்கு எழுதி
எழுதி படிப்பதே வசதியாக இருந்தது. அவன் எந்நேரமும் இயற்பியல் புத்தகத்தை வைத்துக் கொண்டு
எழுதி எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பொதுவாக கணக்குப் புரிந்தால் இயற்பியல்
புரியும் என்று ஹாஸ்டல் பிள்ளைகள் பேசிக் கொண்டார்கள். இந்தக் கணக்கு விகடுவுக்கு
ஒத்து வரவில்லை. கணக்குப் புரிந்த போதிலும் தனக்கு ஏன் இயற்பியல் புரியவில்லை என்பது
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படியோ எழுதி எழுதிப் படித்து நிலைமையை அவன் சமாளித்துக்
கொண்டிருந்தான்.
ராமராஜைப் போல விளையாட ஹாஸ்டலில் ஆளில்லை.
பந்தைப் பலவிதமாகப் போட்டு பலவிதமாக பிடிப்பான். ஓடுவதில், குதிப்பதில், பிடிக்கும்
போது சாமர்த்தியமாக நழுவுவதில் என்று விளையாட்டில் அவனுக்குப் பலவிதமான லாவகங்கள்
தெரிந்திருந்தன. அவ்வளவும் விளையாட்டில்தான். படிப்பு என்றால் தடுமாறினான். அவனால்
சாதாரண பாடச் செய்தியைக் கூட மனதில் பதிய வைத்துக் கொள்ள முடியவில்லை. நாள் முழுக்க
ஒரு பாராவைப் படித்தாலும் அதில் இரண்டு வரிகளை விட்டு விட்டுதான் சொன்னான்.
இந்த ஹாஸ்டலில் ஒவ்வொரு பிள்ளைக்கும்
ஏதோ ஒன்று பிடித்தமாய் இருந்தது. அது பாடமாகத்தான் இருக்க வேண்டும் என்ற போதுதான்
அது பிரச்சனைகளை உண்டாக்கின. இந்தப் பிரச்சனை பலவித கோணங்கள் கொண்ட பிரச்சனைதான்.
பெற்றோர்களின் கோணத்தில் பார்த்தால்...
ஹாஸ்டலில் கொண்டு வந்து சேர்த்த பிள்ளைகளைப் பெற்ற எல்லா மகராசர்களுக்கும் தங்கள்
பிள்ளையை எப்படியாவது ஒரு படிப்பு இயந்திரமாக ஆக்கித் தந்து விட வேண்டும் என்ற நோக்கம்தான்
இருந்திருக்க வேண்டும். இது உண்மையில் எவ்வளவு பெரிய பிரச்சனை. சில நேரங்களில் இது
எவ்வளவு அபாயகரமான பிரச்சனையாகவும் உருவெடுத்து விடுகிறது தெரியுமா?
பிள்ளைகளைப் பெற்ற ஒவ்வொரு தகப்பனுக்கும்
வேலைவாய்ப்பைக் குறித்த ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது. வேலை வாய்ப்பு ஒரு போராட்டம்
என்பது அவர்களின் கணக்கு. அந்தப் போராட்டத்தில் தன் பிள்ளைத் தப்பிப் பிழைத்து விட
வேண்டும் என்ற கனவு அவர்களை வாட்டுகிறது. இவைகள் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு ஹாஸ்டலை
அவர்கள் மனதினுள் நிர்மாணிக்க வேண்டியதாகி விடுகிறது. நிஜத்தில் அப்படி ஒரு ஹாஸ்டல்
கிடைத்து விடும் போது அவர்களின் சந்தோஷம் இரட்டிப்பாகி விடுகிறது. அப்படித்தான் தங்கள்
பிள்ளைகளை ஏக மகிழ்ச்சியுடன் எல்லாரும் நரிவலம் ஹாஸ்டலில் சேர்த்திருக்க வேண்டும்.
பெற்றோர்களின் கனவை நிறைவேற்றும் ஹாஸ்டல்
என்பது இப்படித்தான் அதைத் தொடர்ந்த பிற்காலத்தில் நல்ல வியாபாரமாக ஆகியிருக்க வேண்டும்.
ஹாஸ்டலில் வந்து சேர்ந்த போது இருந்த
மகிழ்ச்சி போகப் போக விகடுவுக்குப் போய் விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக படிப்பதில்
நெருக்கடி அதிகரித்துக் கொண்டே போனது. ஒவ்வொரு டெஸ்டிலும் மார்க்குகள் ஏன் குறைகின்றது
என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. நன்றாகப் படிக்கும் பிள்ளைகளுக்குக் கூட இந்த
டெஸ்டில் போன டெஸ்டை விட ஒரு மார்க் ஏன் குறைந்தது என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
காலாண்டுத் தேர்வுக்கு முன்பிருந்த நெருக்கடியை விட அரையாண்டை நோக்கிப் போகும் போது
ஏற்படும் நெருக்கடி இன்னும் அதிகம்தான்.
பிள்ளைகள் மார்க் குறைவாக எடுத்ததற்காக
ஹாஸ்டலிலிருந்து பெற்றோர்கள் மிரட்டப்படுவதை அவர்கள் பெருமையாக எடுத்துக் கொண்டார்களோ
என்னவோ! உடனடியாக மார்க் குறைவைப் பற்றி ஹாஸ்டலிலிருந்து எழுதப்பட்ட அஞ்சலட்டைக்கு
அவர்கள் தலைவணங்கி தலைசாய்த்து வார்டன் முன் பறந்து வந்து நின்றார்கள். இந்த விசயத்தில்
பக்கிரிசாமியின் அப்பா அப்படி அடிக்கடி ஹாஸ்டலுக்கு வந்தார். அவரின் கால்கள் இரண்டும்
உள்பக்கமாக வளைந்து அவர் நடந்து வருவதே பார்ப்பதற்குப் பாவமாக இருந்தது. அந்த நிலையில்
அவர் வார்டன் முன் கூனிக் குறுகி நிற்பதைப் பார்ப்பது எவ்வளவு பாவமாக இருக்கும்!
இதையெல்லாம் நினைத்துப் பார்த்து பக்கிரிசாமி
படியோ படி என்று படித்துப் பார்த்தான். அவனுக்கு அதிகபட்சமாக படிக்க வேண்டியிருந்தது
நான்கு பாடங்கள்தான். தமிழ், ஆங்கிலம், உயிரியியல் மற்றும் பயிர் பாதுகாப்பியல். மற்ற
இரண்டுப் பாடங்கள் செய்முறைத் தேர்வுப் பாடங்களாக இருந்தன. அவன் எந்நேரமும் உயிரியியல்
புத்தகத்தையே கையில் வைத்துக் கொண்டு இருந்தான்.
இப்படி விழுந்து விழுந்து படித்தும் ஏன்
படிப்பது மனதில் நிலைக்க மாட்டேன்கிறது என்பது ஹாஸ்டலில் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு
புதிராகத்தான் இருந்தது.
ஹாஸ்டலில் தங்க வைத்து படிக்க வைக்கிறோம்
என்பதை வார்டனோ, ஹெட்மாஸ்டரோ ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஹாஸ்டலில்
தங்கிப் படிக்கும் பிள்ளை மார்க் குறைந்ததற்கு வீட்டிலிருக்கும் பெற்றோரையே கூப்பிட்டு
குறை சொல்லித் திட்டினார்கள். திட்டித் திட்டிப் பிள்ளைகள் குறித்த ஒரு குற்ற உணர்வைப்
பெற்றவர்கள் மனதில் உருவாக்கினார்கள். முடிவில் தன் பிள்ளைதான் சரியில்லையோ என்ற மனநிலையோடு
பெற்றோர்கள் வெளியேறினார்கள்.
அறிந்தோ அறியாமலோ ஒவ்வொரு பிள்ளைக்கும்
புரியாத பாடங்கள் ஒரு வகையில் பயமாகக் கிளர்ந்தெழுத்தால், வார்டன் முன் தன்னைப் பெற்ற
தகப்பன் வந்து நிற்பது மற்றொரு பயமாக கிளர்ந்தெழுந்தது. தன்னுடைய தகப்பன் இப்படி வார்டன்
முன்னோ, ஹெட்மாஸ்டர் முன்னோ தலைகுனிந்து நின்று விடக் கூடாது என்பது ஓர் உள்ளார்ந்த
உணர்வாக பெரும்பாலான பிள்ளையின் மனதிலும் நிலைத்திருந்தது.
காலாண்டுத் தேர்வு முடிவுகளுக்குப் பின்
மார்க் குறைந்த பிள்ளைகளின் பெற்றோர்களுக்காக அப்படி ஒரு கூட்டம் நடந்தது. அது எல்லா
பிள்ளைகளின் முன்னிலையில் ஹாஸ்டல் வராண்டாவில் நடந்தது. ஒருவகையில் பார்த்தால், தாங்கள்
சரியாகப் படிக்காவிட்டால் தங்களைப் பெற்றவர்கள் எப்படிப்பட்ட பேச்சைச் சுமக்க வேண்டியிருக்கும்
என்பதைப் பிள்ளைகள் நேரில் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் போலத்தான் அது
தெரிந்தது. இப்படி இதைப் பார்க்கும் பிள்ளைகள் அரையாண்டில் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண்களை
எடுத்து விடுவார்கள் என்று வழி வழியாக ஒரு ஹாஸ்டல் கணக்கு பின்பற்றப்படுவதாக பிள்ளைகள்
பேசிக் கொண்டார்கள்.
இதைச் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்ட
ஹாஸ்டல் பிள்ளைகளும் இருந்தார்கள். படுதீவிரமாக எடுத்துக் கொண்ட ஹாஸ்டல் பிள்ளைகளும்
இருந்தார்கள். ராமராஜூக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்தான். அவனது அப்பா இது போன்ற ஒவ்வொரு
கூட்டங்களிலும் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டார். அதை அவரும் பெரிதாக எடுத்துக்
கொள்வில்லை. அவனும் ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. அது குறித்துக்
கேட்டால், "மனசுல ஏறுனா மார்க் வாங்க மாட்டேனா? மார்க் எடுக்கக் கூடாதுன்னு எனக்கென்ன
வேண்டுதலா? ஆனா பாருங்கண்ணா! போன தபாக்கு இந்த தபா பரவாயில்ல. திட்டு கம்மிதான்"
என்று சொல்லி விட்டுச் சிரித்தான்.
*****
No comments:
Post a Comment