24 Apr 2019

டேலியாகாத ஒருவன்!



செய்யு - 64
            ஒரு மரணத்தின் முடிச்சு எப்படி விழுகிறது? அந்த மரணத்தின் முடிச்சுக்குள் ஒரு உயிரின் கழுத்து எப்படிச் சிக்குகிறது? உலகில் எந்த உயிராவது மனிதரைப் போல கயிறைக் கட்டி அதில் தொங்குகிறதா?
            'செய்யு' என்ற இந்த தொடர் எழுதுகைக்கும், நரிவலத்தில் விகடு பற்றிய பக்கம் பக்கமான எழுதுகைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம். ஒரு தொடர்பு இருக்கவே செய்கிறது. அதைப் பற்றி நாம் முடிவில் விவாதிக்கலாம். அதில் பெரிய சாரம் இல்லை என்று சொன்னால் விவாதிக்காமல் கூட விட்டு விடலாம். ஆனால் மரணத்தை நோக்கிய தள்ளிய ஒரு பின்னணியின் ஒரு சிறு துளியாவது உங்கள் நாவில் பட்டு அது வயிற்றில் அமிலத்தைக் கரைக்க வேண்டுமே! அந்த அமிலம் எங்கோ ஒளிந்து இருக்கலாம்.
            உங்கள் வாழ்வில் விவரம் அறியாத பிராயம் வரை நீங்கள் ஒரு மரணத்தைத் தரிசிக்கவில்லை என்பதற்காக மரணத்தின் பின்னணிகள் இல்லாத உலகில் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பதாகக் கொள்ள முடியுமா என்ன!
            மரணத்துக்கு முன் அழுத்தமாக உணராத ஒரு பெயரை அதற்குப் பின் அழுத்தமாக நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அந்த மரணத்துக்காக தூக்கம் தொலைந்த நாட்களை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? அல்லது தூக்கத்தில் நடக்கும் வியாதியைத்தான் நீங்கள் அடைந்திருக்கிறீர்களா? மரணித்தவர் மறைந்த பின்னும் மறையாத வடு அது.
            மரணம் என்பதன் வலி மரணித்தவர்களுக்கு அத்தோடு முடிந்து விடுகிறது. அதைச் சந்தித்து வாழ்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒரு வகையில் புரையோடிய புண்ணின் வலி போல தொடர்கிறது. சில நாட்களில் அழுகி ஒழுகும் சீழின் நாற்றம் கொண்டு நள்ளிரவு தூக்கத்தைக் கெடுக்கிறது.
            நரிவலம் ஹாஸ்டலில் விகடு தன் வகுப்புப் பிள்ளைகளோடு நெருங்கிப் பழகினான். தன்னோடு தாமாக முன்வந்து பேசிய பிள்ளைகளிடம் பேசினான். அதைத் தாண்டி ஹாஸ்டலில் இருந்த எல்லா பிள்ளைகள் பற்றியும் அவர்களின் பெயர் பற்றியும் அவனுக்குத் தெரியும் என்று சொல்வதற்கில்லை. ஒவ்வொரு பிள்ளையாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவனுக்கில்லை.
            ஒட்டுமொத்தமாக அவனோடு ஹாஸ்டலில் நெருங்கியத் தொடர்பில் இருந்த பிள்ளைகள் குறைவே. மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்க்கும் போது அந்த பெயர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.
            பிரேம்குமாரும், பவித்ரனும் மறக்க முடியாத உருவங்கள். இப்போது படமாகப் போட்டுக் கொடுக்கச் சொன்னாலும் விகடுவால் அது முடியும். ராமராஜின் உருவம் மங்கலாகத்தான் இருக்கிறது. அவன் இப்போது எங்கிருக்கிறானோ? எப்படி இருக்கிறானோ? பக்கிரிசாமி மறக்க முடியாத இன்னொரு உருவம். அதற்கு ஒரு வெகு முக்கியமான நிகழ்வுகள் காரணமாக அமைந்தன. பக்கிரிசாமி எடுத்த முடிவும் ஒரு காரணம். அந்த முடிவைப் பற்றியும் நாம் பேசியாக வேண்டும்.
            அரையாண்டுத் தேர்வுக்குப் பின் பள்ளி தொடங்கி நடந்த மூன்றாவது வாரத்தில் அது நடந்தது.
            திருத்தப்பட்ட விடைத்தாள்கள் பெரும்பாலும் விடுமுறைக்குப் பின் பள்ளி தொடங்கிய அன்றே கொடுக்கப்பட்டு இருந்தது. ஹாஸ்டலில் எந்த பிள்ளையும் பெயில் மதிப்பெண் இல்லை. மதிப்பெண் குறைவு ஒரு பெரிய விசயமாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது. மதிப்பெண் குறைவாக இருந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் உடனடியாக அஞ்சலட்டை எழுதப்பட்டு வரவழைக்கப்பட்டு அவர்களின் பிள்ளைகளின் யோக்கியாம்சம் பற்றி பேசுவது போல அச்சுறுத்தப்பட்டார்கள். நிலைமை இப்படியே தொடர்ந்தால் அடுத்த வருடம் ஹாஸ்டலில் அவர்களின் பிள்ளைகளுக்கு இடம் இருக்காது என்பது வரை எச்சரிக்கப்பட்டார்கள். வெகு சிறப்பாகப் படிக்கும் பிள்ளைகளுக்கே ஹாஸ்டல் என்பது அந்த எச்சரிக்கையின் சாராம்சம். ஹெட்மாஸ்டர் திருஞானமும், "ஒங்க பிள்ளயோட செயல்பாடு சரியில்ல!" என்றார் மிகவும் வெளிப்படையாக. இது அவர் அடிக்கடி உபயோகிக்கும் வாசகம்தான். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு அச்சுறுத்தல் தரும் வாசகம்.
            மதியச் சாப்பாட்டுக்காக ஹாஸ்டல் பிள்ளைகள் எல்லாரும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தனர். தட்டை அலம்பிக் கொண்டு, தம்ப்ளரில் தண்ணீரைப் பிடித்துக் கொண்டு பந்திப் பாயை விரித்துக் கொண்டு பிள்ளைகள் அமர்ந்தார்கள் என்றால் வார்டன் வந்து பிள்ளைகளின் எண்ணிக்கையைச் சரி பார்ப்பார். ஒவ்வொரு சாப்பாட்டு வேளையின் போது கடைபிடிக்கும் முறை அது. எண்ணிக்கை எப்படியும் டேலியாகி விடும். எப்போதுமே டேலியாக முடியாத, டேலி செய்ய முடியாத எண்ணிக்கை அந்த மதிய சாப்பாட்டு வேளையில் நிகழும் என்று யார் எதிர்பார்த்தார்கள்?
            வார்டன் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்தார். எண்ணிக்கையில் ஒன்று தப்பியது. வகுப்பு வாரியாக எண்ணிப் பார்த்தார். அப்போதும் எண்ணிக்கையில் ஒன்று தப்பியது. வகுப்பு வாரியாக ஒவ்வொருவர் பெயராக சொல்லச் சொன்னார். ஏழாம் வகுப்பில் ஒரு பிள்ளையின் பெயர் விடுபட்டது.
            பள்ளிக்கூடத்திலிருந்து மதிய சாப்பாட்டுக்காக திரும்பிய போதும் அந்தப் பிள்ளையை யாரும் பார்க்கவில்லை என்றார்கள்.
            வார்டன் நான்கைந்து பிள்ளைகளை வெளியில் அனுப்பி ஹாஸ்டலின் பல இடங்களிலும் பார்க்கச் சொன்னார். அந்தப் பையன் கிடைத்தபாடில்லை.
            ஹாஸ்டலில் இருந்த டெலிபோன் மூலம் பள்ளிக்கு உடனடியாகத் தொடர்பு கொண்டார் வார்டன். அவர் குரலில் நடுக்கம் இருந்தது. நாக்கு குழறியது. "இஞ்ச ஆஸ்டல்ல ஒரு பிள்ள காணல. பேரு ன்னான்னா..." என்று தழுதழுத்துக் கொண்டிருந்தார்.
            பள்ளிக்கூடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விசாரித்து பத்து நிமிடம் கழித்த பிற்பாடு தொடர்பு கொண்டார்கள். எந்தப் பையனைக் குறிப்பிட்டு வார்டன் கேட்டாரோ அந்தப் பையன் பத்தரை மணி வாக்கில் ஹாஸ்டலில் நோட்டு ஒன்றை எடுத்து வருவதற்காக ஹாஸ்டலுக்கு வந்ததாகத் முதல் கட்ட தகவல் கிடைத்தது. வார்டன் ராமராஜைப் பார்த்தார். வழக்கமாக இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும் ராமராஜ் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
            விகடு ராமராஜின் தொடையைச் சொரிந்து, "யாரு அந்த பையம்?" என்றான்.
            "முகிலேன். ஏழாவது படிக்குறான்ல!" என்றான் ராமராஜ்.
            மதிய சாப்பாட்டைப் பரிமாறச் சொல்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் வார்டனுக்கு இருந்திருக்க வேண்டும். அவர் அப்படியே குளிரால் நடுக்கம் எடுத்தவரைப் போல என்ன முடிவெடுப்பது என்று குழம்பியபடி நின்று கொண்டிருந்தார்.     
            ஹாஸ்டலுக்கு வந்த பையன் நோட்டை எடுத்து பள்ளிக்கூடத்துக்கு ஏன் திரும்பியிருக்கக் கூடாது என்ற எண்ணம் அவருக்கு வந்திருக்க வேண்டும். அவர் மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு தயங்கித் தயங்கி டெலிபோனில் பேசினார். பள்ளிக்கூடம் வந்திருந்தால் மீண்டும் மதியச் சாப்பாட்டுக்கு அவன் மீண்டும் ஹாஸ்டலுக்கு வந்திருக்க வேண்டும் என்று அவர்கள் பதில் சொல்லியிருக்க வேண்டும்.
            வார்டன் ஹாஸ்டலில் சமைக்கும் மூன்று பெண்மணிகளையும் விசாரித்தார். 'பத்தரை யில்ல பதினோரு மணி வாக்குல முகிலன ஆஸ்டலு பக்கம் பாத்தீயே?" என்றார். அவர்கள் உதட்டைப் பிதுக்கினார்கள். அதில் ஒருத்தர், "சமையல்ல இருந்ததுல்ல கவனிக்கல. யாரு வந்தாங்க, யாரு போனாங்கன்னு தெரியல" என்றார்.
            வார்டன் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ பிள்ளைகளை எழுப்பி ஹாஸ்டல் முழுவதும் தேடச் சொன்னார். அவரும் பிள்ளைகளோடு சேர்ந்து தேடத் தொடங்கினார். கொஞ்ச நேரத்தில் எல்லா பிள்ளைகளும் எழுந்து தேடத் தொடங்கினார்கள். பிள்ளைகள் அரை மணி நேரத்துக்கு மேலாகத் தேடிக் கொண்டிருந்தார்கள்.
            வார்டனுக்குப் பள்ளிக்கூடத்திலும் தேடிப் பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்க வேண்டும். பள்ளிக்கூடத்திலிருந்து சரியான விவரங்களைத்தான் சொல்கிறார்களோ இல்லையோ என்ற சந்தேகம் அவருக்கு இருந்திருக்க வேண்டும். அவர் சைக்கிளை எடுத்துக் கொண்டு வேக வேகமாக விடுவிடுவென்று கிளம்பினார்.
            வார்டன் மதியச் சாப்பாட்டு பற்றி எதுவும் சொல்லாமல் சைக்கிளை எடுத்துக் கிளம்பியதில், "இன்னிக்கு சாப்புட்டு பள்ளியோடம் போறதா ன்னா? மத்தியானம் சாப்டாப்புலதாம் போல!" என்றான் அருட்செல்வம்.
            "மவனே! இன்னிக்கு மத்தியானம் நீ சாப்புடப் போறதில்ல பாரேன்!" என்றான் பக்கிரிசாமி. அந்த மத்தியானம் அருட்செல்வம் மட்டுமல்லாது யாருமே சாப்பிட முடியாத ஒரு அமானுஷ்ய அசாம்பாவிதச் சூழல் ஏற்படும் என்று யார் நினைத்திருப்பார்கள் சொல்லுங்கள்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...