10 Apr 2019

செலக்டிவ் அம்னீசியாஸிஸ்ட்டுகள்



            தற்போதையச் சூழ்நிலையில் இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத மூன்று தொகுதிகள் எவை? என்று பார்த்த பத்து பேரிடமாவது கேட்டிருப்பேன். கேட்ட பத்துப் பேரில் நாலைந்து கட்சிப் பெரும்புள்ளிகளும் அடக்கம். எல்லாம் தலையைச் சொரிந்ததுதான் மிச்சம்.
            அதில் ஒருத்தர், "கள்ளக்குறிச்சி மட்டும் ஞாபவம் இருக்கு தம்பி. மத்த ரெண்டு ஞாபவத்துல வர மாட்டேங்குது பாருங்க!" என்றார்.
            "அடப் பாவி மனுஷா! கள்ளக்குறிச்சி புதுசா பிரிச்ச மாவட்டம்யா! அரவக்குறிச்சிக்கும் கள்ளக்குறிச்சிகுமா ஒமக்கு வித்தியாசம் தெரியாமா போச்சு!" என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டேன்.
            ஒருத்தர் மட்டும் செல்லைத் தட்டிக் கூகுளில் போய் பார்த்து, "ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி" என்றார்.
            கொஞ்ச நாள் ஆகி விட்டால் மக்கள் எல்லாவற்றையும் தங்களையும் அறியாமல் மறந்து விடுவார்கள் போலிருக்கிறது.
            மக்களின் இந்த மறதி மட்டும் இல்லாவிட்டால் அரசியல்வாதிகளின் பாடு திண்டாட்டமாகி விடும். அரசியல்வாதிகளின் பாடு திண்டாட்டமாகி விடக் கூடாது என்ற உயரிய நோக்கத்துக்காகத்தான் மக்கள் எல்லாவற்றையும் மறந்து போகிறார்கள். ஏன் இப்படி என்கிறீர்களா? யாரைக் குறை சொன்னாலும் மக்களைக் குறை சொல்ல முடியுமா சொல்லுங்கள்!
            இந்த காலக் கட்டத்தில் ஒரு கருத்தை மக்கள் மனதிலிருந்து மாற்றவதற்கு அதற்கு எதிரானக் கருத்தையெல்லாம் திணிக்க வேண்டியதில்லை. கொஞ்ச நாட்களுக்கு அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டாலே போதும் போலிருக்கிறது. மறந்து விடுகிறார்கள்.
            பெரும்பாலான விசயங்கள் மக்கள் மனதில் ஞாபகத்திலேயே இல்லை. சில மாதங்களுக்கு முன் டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட கஜா புயலைப் பற்றிக் கேட்டால் கூட "அது அடிச்சு நாலஞ்ச வருஷம் இருக்கும்ல!" என்று பேசிக் கொள்வார்கள் போலிருக்கிறது.
            அந்த அளவுக்கு வேகமாக வாழ்கிறார்கள். வேகமாக மறந்து போகிறார்கள். எல்லாவற்றையும் கூகுள் ஞாபகம் வைத்துக் கொள்ளும் என்று கையில் செல்பேசியோடு அலைகிறார்கள். எது ஞாபகம் வராவிட்டாலும் கூகுளில் தட்டுகிறார்கள்.
            அது சரி! என்ன செய்வது?
            ஞாபகம் வராத விசயத்துக்கு எல்லாம் கூகுளைத் தட்ட வேண்டும் என்பதை மறந்து விடாமல் இருந்தால் சரிதான்!
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...