இந்தச் சாவை நினைத்துப் பயப்படாதவர்கள்
யார் சொல்லுங்கள்!
ஒவ்வொருத்தருக்கும் இந்தச் சாவைக் குறித்து
ஒவ்வொரு விதமான அச்சம் இருக்கிறது.
பெற்ற பிள்ளைகள் மூன்றும் கை விட்ட அந்தப்
பொழுதிலே செத்து விட்டதாகச் சொன்ன மாணிக்கம் தாத்தாவுக்கு பாம்பு கடித்துச் சாவோம்
என்ற பயம் இருந்தது. அந்தப் பயத்துக்காக அவர் தினந்தோறும் மாரியம்மன் கோயில் புற்றடிக்குப்
போய் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கிக் கொண்டு இருந்தார்.
வெள்ளிக்கிழமை வந்தால் பால் வாங்கி ஊற்றினார்.
செவ்வாய் கிழமைகளில் கற்பூரம் கொளுத்தினார். இவ்வளவுக்கும் இடையில் வழியில் எங்காவது
பாம்பைப் பார்த்து விட்டால் கம்பெடுத்து அடித்துத் தூக்கிப் போட்டார். நல்ல பாம்பை
மட்டும் அடிக்காமல், கன்னத்தில் போட்டுக் கொண்டவாறே, "போயிடுர்ரா நாகராசா!
போயிடுர்ரா நாகராசா!" என்று சொல்லியபடியே குச்சியைத் தரையில் தட்டியவாறே விரட்டி
விடுவதற்குப் பிரயத்தனம் பண்ணிக் கொண்டிருந்தார். மற்ற வேறுவகைப் பாம்பு என்றால் அந்த
இடத்திலேயே சமாதி வைத்தார்.
இப்படி சாவை நினைத்து பயப்பட்டுக் கொண்டிருந்த
மாணிக்கம் தாத்தாவிடம், நாகப்பன் தாத்தா, "ஓய்! கவலைப்படாதீம்! நீரு செத்தா அது
ஒமக்கே தெரியாதும் ஓய்!" என்று கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் நக்கலடித்து
ஆறுதல் செய்து கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் மாணிக்கம் தாத்தா படுத்தப்
படுக்கையாகி சாவு வராமல் சின்னாபின்னப்படும் அளவுக்கு நிலைமை ஆகி விட்டது.
"சாவு வந்தா தேவலாம் போலருக்கு!"
என்று மாணிக்கம் தாத்தா அழ ஆரம்பித்து விட்டார்.
"இருந்த பாம்பையெல்லாம் அடிச்சே கொன்னுபுட்டே!
எந்த பாம்பு வந்து ஒன்னய கொத்தி சாவடிக்கிறதுக்கு! நீயே செத்தாத்தாம் உண்டு!"
என்று அப்போதும் நக்கலடித்து ஆறுதல் செய்வதாகப் பேசினார் நாகப்பன் தாத்தா.
அன்று இரவே சீரியஸானார் மாணிக்கம் தாத்தா.
தாத்தாவின் சாவு நெருங்கி விட்டதாகத்தான் எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்தோம். அதற்காக
அப்படியே விட்டு விட முடியுமா? 108 க்கு போன் போட்டு ஆம்புலன்ஸை வர வைத்தோம். தாத்தாவைத்
தூக்கி ஆம்புலன்ஸில் போட்டோம். கேவிக் கேவி அழ ஆரம்பித்த மாணிக்கம் தாத்தா,
"எப்புடியாவது காப்பாத்திப் புடுங்கடா! சாவுறதுக்கு பயமா இருக்குடா மக்கா! காப்பாத்திப்
போடுங்க!" என்றார் நடுங்கும் குரலில். இப்படிக் குழம்பிக் குழம்பிச் சாவறதும், குழப்பிக் குழப்பிச் சுற்றி இருக்கிறவர்களைச் சாகடிக்கிறதும்தான் வாழ்க்கை!
*****
No comments:
Post a Comment