செய்யு - 53
"பள்ளியோடத்துல போயி காணாம போனதுக்கு
நாம்ம என்ன பண்றது?" என்று எதிர்கேள்வி கேட்க எந்தப் பெண் பிள்ளைகளுக்கும் தோன்றவில்லை.
ஒவ்வொன்றுக்கும் தம்பி காணாமல் போய் விட்ட அதிர்ச்சி இருந்தது.
பள்ளிக்கூடத்தில் குமரு மாமா காணாமல் போன
செய்தியைச் சொல்ல வந்த லாலு மாமாவுக்கு உடம்பெல்லாம் நடுங்கி வியர்த்துக் கொட்டியது.
வைத்தி தாத்தா எப்படியெல்லாம் திட்டப் போகிறாரோ என்ற பயம் லாலு மாமாவை ஆட்டிப் படைத்தது.
"பள்ளியோடத்துல ந்நல்லா தேடி பாத்தீயளா?"
என்ற கேள்வியைக் வைத்தி தாத்தா கேட்டதும் லாலு மாமா மயக்கமடித்து விழுந்து விட்டது.
"இருக்குற ரோக்குதியில இவம் வேற?
புள்ளிய பள்ளியோடத்துக்கு பத்திரமா கொண்டோய் பத்திரமா கொண்டாடான்னா காணாடிச்சிட்டு
வந்து நிக்குறாம். இவம்லாம் ன்னா வேல பாக்குறானோ? இந்தப் பொச கெட்ட பயலுக்கு சர்க்காரு
சம்பளம் வேற!" என்ற மயக்கமடித்து விழுந்த லாலு மாமாவை விடாமல் திட்டியது வைத்தி
தாத்தா.
குமரு மாமாவை வடவாதியே சல்லடைப் போட்டுத்
தேட ஆரம்பித்தது. தேடலின் ஒரு கட்டமாக ஆறு, குளம், குட்டை, கிணறு என்று ஒன்று விடாமல்
ஆட்கள் தேட ஆரம்பித்தனர். தப்பித் தவறி எங்கேயாவது நீர் நிலைகளில் விழுந்திருக்கலாம்
என்ற அச்சம் எல்லாரையும் ஆட்டிப் படைத்தது. அப்படி ஒரு கோணத்தில் தேட ஆரம்பித்ததும்
எதற்கும் கலங்காத, எதற்கும் சொட்டு கண்ணீர் விடாத வைத்தித் தாத்தாவின் கண்கள் கலங்க
ஆரம்பித்தன.
சாமியாத்தா ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தது.
"அவனுக்குப் பள்ளியோடம் நடந்து கூட போகத் தெரியாதே. திரும்பி வார வழியும் தெரியாதே.
இந்த லாலு பயதாமே அழச்சிட்டுப் போவாம். கொண்டாந்து விடுவாம். மண்ணுல கூட நடக்க வுட்டதில்லயே
எம் மவன. காலு பாதம் மண்ணுல படாம இந்த சிறுக்கியோதான்ன தூக்கி வெச்சுப்பாளுவோ. எவனாவது
புள்ள புடிக்கிறவனுவோ தூக்கிட்டுப் போனானுவோளோ! மண்டையோட்டுல மை எடுக்குற குடுகுடுப்பக்காரங்
கொண்டுட்டுப் போனானுவோளோ! ருசியா மிட்டாயி தாரன்னு மந்திரவாதிய்யோ தூக்கிட்டுப்
போனானுவோளோ! ஒண்ணுமே தெரியலியே! கண்ணும் புரியலியே! ஏந் நெலம இப்படியாச்சே! ஏம்
புள்ள எங்கேயோ போச்சே! ஏம் வூட்டுக்குப் பக்கத்துல இருக்குற பாஞ்சாலம்மா! வடவாதி
பொன்னியம்மா! தஞ்சாவூரு சமயபுரத்தா! அவம் எங்கிருந்தாலும் காப்பாத்திக் கொண்டாந்துடுங்களேடி!"
அந்தி மசங்க ஆரம்பித்து இருள் கவ்வத் துவங்கியப்
பொழுதில் எல்லாருடைய மனதிலும் பயமும், பீதியும் கவியத் துவங்கியது.
"ஒத்த புள்ள ஆம்புள புள்ளயா வந்துப்
போறந்தானே! தங்கத் தட்டுல வெச்சுத் தாங்காத கொறய்யா வளந்தானே! ராசா போல இருந்தானே!
எம் மவம் இப்படி எங்கள வுட்டு மோசம் பண்ணிப் போனானே!..." என்று சாமியாத்தா நிறுத்தாமல்
புலம்ப, "அடச்சீ! நிறுத்து! பனை மட்டையில ஒண்ணுக்கு அடிக்குற மாரி படபடன்னுகிட்டு!"
என்று சத்தம் போட்டுக் கொண்டு வந்த கோனார் தாத்தாவின் தோள்களைப் பார்த்ததும் எல்லாருக்கும்
நிம்மதி வந்தது.
கோனார் தாத்தாவின் தோள்களில் குமரு மாமா
அம்மணாஞ்சியாக வெறிக்க வெறிக்க எல்லாரையும் பார்த்தது. கழற்றியிருந்த கால்சட்டையையும்,
சட்டையையும் கைகள் இரண்டால் இறுகப் பிடித்திருந்தது.
"எங்கடா இருந்தாம் இவம்?" என்றது
வைத்தி தாத்தா.
"ஆடு மாட ஓட்டிட்டு தியேட்டரு கருவக்காடு
பக்கமா வாரன். இந்தப் பய அம்மணக்குட்டியா காலு சிராயையும், சட்டையும் கக்கத்துல வெச்சுட்டு
வெளிக்கிப் போற மாரி அப்படியே உக்காந்திருக்காம். ஏம்டா இங்ஙன உக்காந்திருக்கன்னா
பதில் சொல்ல மாட்டங்கறாம். அம்முக்குளி கணக்கா அப்படியே உக்காந்திருக்காம். சரி வாடான்னா
தூக்கப் போனா பல்ல கடிச்சிட்டு தூக்க வுடாம கைப்புடியிலேர்ந்து நழுவுறாம். நாலு போடு
போட்டு இவனயும் தூக்கிட்டு ஆடு, மாடுவோள ஓட்டிட்டு வார்ரம். ஏண்டி தங்கச்சியோளா
அப்படியேதான ஆடு மாடுகள ஓட்டிட்டு வாரியே. இவன பாக்கலையா?" என்றது கோனார் தாத்தா.
"இல்லத்தா இன்னிக்கு வாரிக் கர்ர
பக்கமா போனோம். அந்தப் பக்கம் வாரல!" என்றது பேச்சிப் பெரியம்மா.
"நீ ஏம்டா அங்ஙனப் போனே? பள்ளியோடத்துலர்ந்து
எப்புடிடா அங்ஙனப் போனே?" என்று குமரு மாமாவைப் பார்த்து அதட்டியது வைத்தி தாத்தா.
குமரு மாமா பதில் சொல்லாமல் உதடுகளைக்
குவித்து கண்களை அகலத் திறந்து பார்த்தது. பேச்சி பெரியம்மா, குணவதி பெரியம்மாவும்
ஓடி வந்து குமரு மாமாவைத் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடின.
"எப்படியோ வந்தாம்? போனாம்? துணுக்கித்
துணுக்கி விசாரிச்சுப்புட்டு. அதாங் புள்ள கெடச்சிட்டானே. வுட்டுட்டுப் போடா!"
என்று கோனார் தாத்தா சொல்லி விட்டு வீட்டுக்கு நடையைக் கட்டினார்.
"மயங்கிக் கெடந்த பய எழும்பிட்டானா?"
என்றது வைத்தி தாத்தா.
மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்திருந்த
லாலு மாமா தாத்தாவின் பக்கத்தில் வந்தது. "இனுமே ரொம்ப பத்தரமா வெச்சுக்குறந்த்தான்.
எப்பூடி இவம் பள்ளியோடத்துலர்ந்து அங்ஙன வந்தாம்னே புரியலத்தான். தப்பா நெனச்சுக்காதீங்கத்தான்.
பாஞ்சலம்மா சத்தியமா இனுமே ரொம்ப சூதானமா இருந்துப்பேம்த்தான்."
"கிழிச்சே போ! ஏம்டா அஞ்சு பொட்ட
புள்ளீங்களப்புறம் பொறந்துருக்காம். படிக்க வெச்சு ஆபீஸரா ஆக்கிப்புடணும்னு நெனச்சா
வம்சத்தய அழிச்சுபுடுவே போலருக்கே. இனுமே நீ இவன அழச்சிட்டுப் போவ வாணாம், அழச்சிட்டும்
வார வாணாம். நல்லா இருக்குடா உம்ம ரோக்கியத!" வைத்தி தாத்தா லாலு மாமாவை வார்த்தைகளால்
வறுத்தெடுத்தது.
லாலு மாமா தலையைக் குனிந்து கொண்டது.
"இனுமே இப்படி நடக்காதுத்தான். இது எப்பூடி ஆச்சுன்னே புரியலத்தான்! இனுமே ரொம்ப
ரொம்ப பத்தரமா அழச்சிட்டுப் போயி பத்தரமா வச்சிருந்து அழச்சிட்டு வார்றந்த்தான்!"
என்றது.
"இவன இனுமே படிக்க அனுப்புறதா யில்லே.
வூட்டுலயே இருக்கட்டும். நமக்குப் புள்ள முக்கியம். கண்ட கண்ட நாய்ய நம்பி அனுப்பிசிட்டு
நாம்ம கோழி கனாவு கண்டுகிட்டு இருக்க முடியாது. ஏய் பொண்டுகளா! நீங்கதாம்லா இதுக்கு
பொறுப்பு. பாத்துக்குங்க. ஏ வூட்டுல இருக்குறவளே! ஒனக்கு இவன சூதானமா பாத்துக்கிறத
தவிர வேற வேலயில்ல பாத்துக்கோ!"
குமரு மாமா கிடைத்த சந்தோசத்தில் பலவிதமாய்ப்
பேசியபடியே கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டின் முன் கூடியிருந்த கூட்டம் கலைய ஆரம்பித்தது.
குமரு மாமாவை உள்ளே தூக்கிக் கொண்டுப்
போன பெரியம்மாக்களும், சித்திகளும் காணாமல் போன விசயத்தை விசாரிக்க ஆரம்பித்தனர்.
அழுது கொண்டே குமரு மாமா சொல்ல ஆரம்பித்தது.
"பள்ளியோடத்துல படிக்கல படிக்கலன்னு
அடிச்சாங்கல்லா. இப்படியே அடிச்சிட்டு இருக்காங்கல்லா. இன்னிக்கும் அடிப்பாங்கல்லா.
நாம்ம ஏம் அடி வாங்கணும்னு தோணுச்சா. அதாம் பள்ளியோடத்துல லாலு மாமா எறக்கி வுட்டதும்
யாருக்குந் தெரியாமா அப்படியே நடந்து வந்துட்டம்!" என்றது குமரு மாமா.
"அதுக்கு ஏன்டா அங்ஙன அந்தப் பக்கமா
போனே? ரோட்டுப் பக்கமா வந்தான்னா? யாராது பாத்துட்டு வந்து வூட்டுல வுட்டுருப்பாங்களேடா!"
என்றது பேச்சி பெரியம்மா.
"ரோட்டுல பாத்துட்டு பள்ளியோடத்துல
வுட்டுருவாங்கக்கா!" என்றது குமரு மாமா பரிதாபமாக.
"ரொம்ப சமத்துதாம் போ! இதல்லாம்
ந்நல்லா யோஜன பண்ணு! அப்படியே பள்ளியோடத்துக்குப் பின்னாடியால கருவக்காட்டு வழியாவே
நடந்து வந்து தியேட்டரு பக்கமா வந்துருக்காம் போலருக்குடி! ஏம்டா வந்தது வந்தே வூட்டுக்கு
வந்து தொலயக் கூடாது. ஏம்டா அங்ஙனயே உக்காந்து தொலச்சு இப்படி எல்லாரையும் அடி வாங்க
வுட்டே!" என்று கேட்டது பேச்சி பெரியம்மா.
"அதுக்கு மேல நமக்கு பாத தெரியலக்கா!"
என்று அழ ஆரம்பித்தது குமரு மாமா.
"பாருடி புள்ள அழுவுறாம்! நீ அழுவாதடா
ஏஞ் செல்லம். புள்ள எவ்ளோ சமத்தா கருவகாடு வழியா வந்து தியேட்டர்ரு பக்கமா வந்து உக்காந்து
சட்ட துணியல்லாம் அவுத்து கக்கத்துல சூதானமா வெச்சிட்டு உக்காந்திருக்காம்." என்று
சிரித்தபடியே குமரு மாமாவைத் தூக்கி கன்னத்தில் முத்தம் வைத்தது குணவதி பெரியம்மா.
அம்மாவுக்கு குமரு மாமாவின் மேல் அப்போது
தாங்க முடியாத கோபம் ஏற்பட்டிருந்தது. "இந்தக் குமரு பய அப்பயே காணாமா போயி
எங்கள அந்த அடி வாங்க வச்சாம்! எங்கப்பாரு எங்கள படிக்க வக்கலன்னாலும் இவம் படிச்சிருந்தான்னா
படிக்க வச்சிருப்பாரு. இவம்தான் பள்ளியோடம் போறன்னுட்டு கருவக்காட்டுல போயி உக்காந்திருந்தானே
கருவக்காட்டு அம்மணாஞ்சி!" என்று இப்போதும் சொல்லிச் சொல்லித் திட்டும்.
*****
No comments:
Post a Comment