விபத்தன்றி வேறென்ன?
வாகனம் மோதி,
கட்டிடம் இடிந்து விழுந்து,
பாலம் நொறுங்கி விழுந்து சாவதை விபத்து
என்கிறோம்.
நல்ல தண்ணீர் கிடைக்காமல்,
சுத்தமான காற்றைச் சுவாசிக்க வாய்ப்பில்லாமல்,
ஊட்டச்சத்தான உணவு கிடைக்காமல்,
சுற்றிலும் சுகாதாரமில்லாமல் சாக்கடையிலும்,
குப்பையாலும் சூழப்பட்டு நோய்க்கிருமிகளின்
தாக்கத்தால் சாவதை நாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது?
வாகனங்கள் மோதி இறப்பது விபத்து என்றால்
நல்ல தண்ணீர் கிடைக்காமல் சாவதும் விபத்துதான்.
கட்டிடங்கள் இடிந்து விழுந்து இறப்பது
விபத்து என்றால் சுத்தமான காற்றைச் சுவாசிக்க வாய்ப்பில்லாமல் இறப்பதும் விபத்துதான்.
பாலம் நொறுங்கி விழுந்து இறப்பது விபத்து
என்றால் ஊட்டச்சத்தான உணவு கிடைக்காமல் இறப்பதும் விபத்துதான்.
அதை விபத்து என்று சொல்ல முடியாது, நோய்
என்று சொல்ல வேண்டும் என்று சொல்லலாம்.
திட்டமிட்டே தண்ணீரை மாசுபடுத்தி, காற்றை
அசுத்தப்படுத்தி, ஊட்டச்சத்தான உணவைக் கிடைக்க விடாமல் செய்து, குப்பைகள் மத்தியிலும்,
சாக்கடைச் சூழவும் மனிதர்களை வாழ வைத்துச் சாகடிப்பது எப்படி நோயாகும்? அது விபத்தன்றி
சத்தியமாய் வேறென்ன?
*****
No comments:
Post a Comment