6 Apr 2019

ஏ டிபிகல் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்



செய்யு - 47
            திருஞானம் ஹெட்மாஸ்டர் பிள்ளைகளை விசாரிக்க தனிமுறை ஒன்றை வைத்திருந்தார். மாடிப்படியேறி வகுப்புக்குச் செல்லும் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும் பிள்ளைகள் அவரது அறையைப் பார்த்தபடிதான் சென்றாக வேண்டும். அதனால் அவர் யாரை விசாரித்தாலும் தனது அறை முன் வெளியே வைத்து விசாரித்தார். பிள்ளைகள் வருவதும் போவதுமாக இருக்கும் காலை நேரம், இடைவேளை நேரம் போன்ற நேரங்களைத்தான் அவர் விசாரணைக்குத் தேர்ந்து கொண்டார்.
            மிகவும் கண்டிப்பான குரலில் அவரிடமிருந்து கேள்விகள் வந்து கொண்டிருக்கும். விசாரிக்கப்படும் பையன் கூனிக் குறுகி வெடவெடத்து நின்று கொண்டிருக்கும் அந்த நேரத்தில் அவனது மோவாய்க் கட்டையில் மடக்கியிருக்கும் தன் புறங்கையால் ஒரு தட்டு தட்டுவார். திடீரென்று தட்டும் அந்த தட்டலில் அவன் பொறி கலங்கியது போல ஆகி விடுவான். பரிதாபமாக நின்று கொண்டிருக்கும் அந்த நேரத்தில் கன்னம் இரண்டிலும் பளார் பளார் என்று அறை விழுந்து கொண்டிருக்கும். இந்தக் காட்சிகளையெல்லாம் போகின்ற வேகத்தில் பார்த்தும் பார்க்காதது போல பிள்ளைகள் போய்க் கொண்டிருக்க வேண்டும். நின்று பார்த்தால் அந்தப் பிள்ளை தொலைந்தான். அடுத்த விசாரணை நின்று பார்த்த அவன் மேல் தொடங்கும்.
            அவரது விசாரணையைப் பற்றி, "ஹெட்மாஸ்டரு அவ்ளவோ சீக்கிரத்துல யாரு மேலயும் கை வெச்சிட மாட்டார். அப்படி கை வெச்சிருக்காருன்னா விசயம் பெரிசா இருக்குன்னு அர்த்தம். அத யாரும் கிராஸ் பண்ணிட முடியாது." என்று நரிவலத்தில் பேசிக் கொண்டார்கள்.
            அவரது இந்த விசாரணை முறை பார்த்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்குக் கிலியை ஏற்படுத்தியது. ஒரு மேனிலைப் பள்ளியில் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும் பிள்ளைகளை அடக்கி விட்டால் ஒட்டு மொத்தப் பள்ளிக்கூடத்தையும் அடக்கி விடலாம் என்பதைக் காட்டுவது போலிருந்தது. அப்படி விசாரணை நடக்கும் நாட்களில் பள்ளிக்கூடமே அதைப் பற்றிதான் பேசிக் கொண்டிருந்தது. அப்படி பேசிக் கொண்டிருப்பதே விசாரணையில் சிக்கும் பிள்ளையை ஒரு வழியாக்கி விடும். வாத்தியார்களும் இதைத் தனியே கூப்பிட்டுத் துருவித் துருவி விசாரிப்பார்கள். விசாரணைக்கு உட்படும் பிள்ளைக்கு அது ஒரு தொடர் சித்திரவதை. இந்த விசாரணை பயம் நரிவலம் பள்ளியை ஒரு துர்மேகம் போல சூழ்ந்திருந்தது. சமயங்களில் அந்த துர்மேகம் காதைக் கிழித்து விடும் இடியைப் போல ஒலித்தும், கண்களைப் பறித்து விடும் மின்னலைப் போல மின்னியும் தன்னுடைய இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தது.
            ஹெட்மாஸ்டரின் ஹாஸ்டல் விசாரணையும் மேற்பார்வையும் இன்னும் வித்தியாசமாக இருக்கும். சைக்கிளை ஹாஸ்டலுக்கு சற்று தூரத்துக்கு முன்னே நிறுத்தி விடுவார். ஓசைபடாமல் நடந்து வந்து ஹாஸ்டல் கேட்டை திறந்து கொண்டு கொல்லைப்பக்கத்திலிருந்து நுழைந்து வருவார்.  சில நேரங்களில் கேட் திறக்கும் சத்தம் கேட்டு விடும் என்பதற்காக சுவரேறிக் குதித்தும் அவர் வருவார் என்று பேசப்படுவதுண்டு. அப்படி அவர் ஏறிக் குதித்து வர முடியுமா என விகடு யோசித்து இருக்கிறான். சற்றே கனத்த உருவம் அவர். அப்படி வருவது சிரமந்தான். அப்படி அவர் வர மாட்டார் என்றும் உறுதியாக கூறி விட முடியாது. அவருக்கு அவர் சொன்னது சொன்ன மாதிரி இருக்க வேண்டும். அதற்காக எந்த எல்லைக்கும் இறங்கி வேவு பார்க்க அவர் தயாராக இருந்தார்.
            அவரிடம் ஒரு டிவியெஸ் சாம்ப் இருந்தது. அவரது சைக்கிளும் சரி, டிவியெஸ் சாம்பும் சரி படு சுத்தமாக இருக்கும். வாங்கி வைத்த புது வண்டி எப்படி இருக்குமோ அப்படி. அவர் ஒருமுறை திருவாரூர் கிளம்பிய போது கனமழை. கனமழையென்றால் நிஜமாகவே அதுதான் கனமழை. உடம்பில் விழுந்த அத்தனை மழைத்துளிகளும் ஜல்லி இறக்கும் லாரியிருந்து பொல பொலவெனக் கொட்டுவதைப் போல கனமாகவே விழுந்தன. ரோட்டில் போனால் அடுத்த ரெண்டடி தூரத்தில் யார் வருகிறார்கள், போகிறார்கள் என்று கண்களால் பார்க்க முடியாத அளவுக்குக் கனமழை. அவர் கிளம்ப வேண்டும் என்று முடிவெடுத்தப் பிறகு யார் அந்த முடிவைத் தடுத்து நிறுத்த முடியும்? அந்த கனமழையிலேயே அவர் திருவாரூர் போய் திரும்பியிருக்கிறார். நரிவலத்தில் இதைப் பிரசித்தமாக, "மனுசம் முடிவெடுத்துக் கிளம்பிட்டா பெய்யுற மழைகிட்டப் பேசிக் கூட பெய்யாம போயிடுன்னு பேசிடலாம். அவருகிட்ட ஆகாதுப்பா!" என்று பேசிக் கொண்டார்கள். அவரும் இந்த நிகழ்வை அடிக்கடிக் கோடிட்டு காட்டி, "ஒண்ண செய்யணும்னு நெனச்சிட்டா ஒன்ன யாராலயும் தடுத்து நிப்பாட்டிட முடியாத அளவுக்கு இருக்கணங்றேம்! அந்த வானம் இன்னிக்கு வெயில் அடிக்கணுமா, மழை பெய்யணுமான்னு நம்மள கேட்டுட்டுதாங் நடக்கணுங்றேம். அது மாத்தி செஞ்சா அதுக்காகல்லாம் நம்மள நாம மாத்திக்கிட கூடாது. ன்னா நெனச்சியோ அத செஞ்சிகிட்டே இருக்கணுங்றேம். ஒம்ம பாத்துட்டு ஒம்ம உறுதிய பாத்துட்டு அதுதாம் மாத்திக்கணுங்றேம்." என்பார்.
            ஹாஸ்டல் விசிட்டில் எந்தப் பிள்ளையாவது மாட்டிக் கொண்டால் வார்டன் அறைக்குப் போகச் சொல்வார். அவன் அங்கேயே நெடுநேரம் நின்றாக வேண்டும். ஹாஸ்டலின் சகல சந்து பொந்துகளையும் ஆராய்ந்து விட்டு அவர் வார்டன் அறைக்குச் செல்வார். அவர் ஹாஸ்டலுக்குள் வந்திருப்பது தெரிந்ததும் ப்ளஸ் டூ படிக்கும் பிள்ளைகளில் ஒருவர் அவரிடம் சொல்லி விட்டு ஹாஸ்டலுக்கு வெளியே சற்று தூரத்தில் நிற்கும் சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்து ஹாஸ்டலுக்கு உள்ளே போட வேண்டும், அவர் விசிட் நேரத்தில் வார்டன் ஹாஸ்டலில் இல்லாவிட்டால் இன்னொரு பிள்ளை அதே போல அவரிடம் சொல்லி விட்டு வார்டனை அழைத்து வர அவரது வீடு வரை செல்ல வேண்டும்.
            ஹெட்மாஸ்டர் விசிட் என்றால் வார்டன் அவர் பின்னாலேயே அவர் செல்லும் இடமெல்லாம் சென்று கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் என்னென்ன குறைகள் என்பதைச் சொல்லிக் கொண்டே இருப்பார். அவைகளை உடனடியாக அவர் சரிசெய்ய வேண்டும். அவர் அதைச் சரி செய்திருக்கிறாரா என்பதற்கும் சம்பந்தம் இல்லாமல் இடையில் ஒரு விசிட் அடிப்பார். 
            கடைசியாக அவர் வார்டன் அறைக்கு வரும் போது மாட்டிக் கொண்ட பிள்ளைகள் புலியின் கூண்டுக்குள் விடப்பட்ட ஆட்டுக்குட்டிகளைப் போல நின்றிருப்பார்கள். மாட்டிக் கொண்ட பிள்ளைகள் படிக்காமல் கொள்ளாமல் சேட்டை செய்திருந்து முதல் முறை மாட்டியிருக்கிறார்கள் என்றால், "ஒஞ் செயல்பாடு சரியில்ல. மாத்திக்கோ. ல்லா ரொம்ப கஷ்டப்பட வேண்டிருக்கும்." என்பார். அவர்களை மறுமுறை அதே படிக்காத சேட்டைக்காரர்களாய்ப் பிடித்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்து விசிட் அடித்துப் பார்ப்பார். அவர்கள் அந்த கண்டத்தில் தப்பியாக வேண்டும். மாட்டினார்கள் என்றால் வார்டன் அறையிலிருக்கும் மேசையில் கையை வைக்கச் செய்து புறங்கையில் கோடு போட வைத்திருக்கும் ரூலரை ரோடு ரோலர் போல வைத்து உருட்டி எடுத்து விட்டு, "குண்டிக் கழுவுறப்பயும் பண்ண தப்புக்கான தண்டன ஞாபவம் வந்துட்டு போவணும்!" என்பார். அவருடைய அந்த ரூலர் உருட்டலில் புறங்கை நரம்புகள் பிசகி கை விரல்களை வலியின்றி மடித்து நீட்ட நான்கு நாட்களுக்கு மேல் ஆகி விடும். அவர் சொல்வதைப் போல் குண்டிக் கழுவும் போது மட்டுமில்லாமல் சாப்பிடுவதற்கும் சிரமமாகத்தான் இருக்கும். அடுத்து வார்டனைக் கண்டபடி திட்டுவார். வார்டன் அவர் போகும் வரை தலைகுனிந்து நிற்பார். போன பின் தலைநிமிர்ந்து மாட்டிக் கொண்ட பிள்ளையை வெளுத்து வாங்குவார். ஹெட்மாஸ்டரின் ஹாஸ்டல் விசிட்டில் ஒரு பிள்ளை மாட்டிக் கொண்டால் மேளத்துக்கு ரெண்டு பக்கமும் விழும் அடியை அவன் அனுபவித்துக் கொள்ள வேண்டும்.
            ஹெட்மாஸ்டரின் விசிட் இப்படி என்றால், சபரி வாத்தியாரின் விசிட் ரொம்ப ஜாலியாக இருக்கும். அவர் தினந்தோறும் ஆறரை அல்லது ஏழு மணி போல் விசிட் வருவார்.
            சபரி வாத்தியார் என்றால் பிள்ளைகள் லைவ் கமெண்டில் இறங்கி விடுவார்கள். "மணி இப்போது சபரி வாத்தியார் பள்ளிக்கூட பேண்டைக் கழற்றும் நேரம். அவர் பேண்டைக் கழற்றி விட்டார். வேட்டியைக் கட்டி விட்டார். விசிட் கிளம்புவதற்கு முன் அவர் தன் முக்கிய கடமையை முடிக்க வேண்டியுள்ளதால் வரும் வழியில் இருக்கும் கருவக் காட்டில் ஒதுங்குகிறார். அவரது ஜட்டி தற்போது அவரது தலையில் குல்லாயைப் போல இருக்கிறது. நிச்சயம் இன்று அது சிவப்பு நிற ஜட்டியாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அல்லது பச்சை நிறமாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. வேறு நிறமாக இருக்க வாய்ப்பில்லை. அவர் தனது முக்கிய கடமையை முக்கி முடித்து விட்டார் என்று தோன்றுகிறது. அவர் எழுந்து விட்டார். அவரது பாடல் தொடங்குகிறது. பாடிக் கொண்டே செல்கிறார். நிச்சயம் அதே பாடல்தான். மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும் என்ற ‍அதே பாடல்தான். அந்தப் பாட்டின் வாசம் கருவக்காடு முழுதும் மணக்கிறது. முக்கி செய்த முக்கிய கடமையை முழுமையாக முடிப்பதற்கு அவர் குளத்தங்கரையில் இறங்குகிறார். தனது தூய்மைப் பணியை முடித்து விட்டு அவர் கிளம்பத் தயாராகிறார். அவரது தலையில் இருந்த குல்லாய் ஜட்டி தற்போது உரிய இடத்தில் சென்று சேர்ந்திருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் சபரி வாத்தியாரின் விசிட் நிகழ இருக்கிறது. தினந்தோறும் ஒரே மாதிரியாக சந்தேகம் கேட்கும் பிள்ளைகள் உடனடியாக தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!"
            சபரி வாத்தியார் வர சற்று தாமதமானால், "நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் சபரி வாத்தியாரின் வருகை அவரது முக்கிய கடமையை முடிக்க சற்று தாமதமாவதால் இன்னும் சற்று நேரத்தில் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. முடித்தவுடன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு பாடலைப் பாடியபடி அவர் ஓடி வருவார்." என்று லைவ் கமெண்ட்ரியை வெவ்வேறு விதமாக மாற்றிக் கொண்டு கேலியும் கொண்டாட்டமாக கழிந்து கொண்டிருக்கும்.
            சபரி வாத்தியார் விசிட்டுக்கு உள்ளே நுழைந்ததும் ராமராஜ் தயாராகி விடுவான், "சார் இத எப்படிப் படிக்கணும்? ரொம்ப பெரிய்ய வார்த்தய இருக்கு. நொழயவே மாட்டுங்குது சார்!" என்பான்.
            சபரி வாத்தியார் பல நாட்களாக அதையேத்தான் ராமராஜ் தினந்தோறும் கேட்கிறான் என்பது ஞாபகம் இருக்குமோ என்னவோ! அவர் புதிததாக சொல்லிக் கொடுப்பது போல ஆரம்பிப்பார். "பாரு! எம் ஐ எஸ் - மிஸ், யு என் - அன், டி இ ஆர் - டர், எஸ் டி ஏ என் டி - ஸ்டாண்ட், ஐ என் ஜி - ங். சொல்லு பாப்பம் மிஸ்அன்டர்ஸ்டாண்டிங்" என்பார்.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...