செய்யு - 48
குமரு மாமா ஆறெழு வருடங்களுக்கு மேல் வெளிநாட்டில்
இருந்தது. விகடு கால்சட்டைப் போட்டுத் திரிந்த காலத்தில் அவன் குமரு மாமாவைப் பார்த்தது.
அதற்கப்புறம் வெளிநாட்டிலிருந்து எப்போதாவது குமரு மாமா அனுப்பி வைக்கும் போட்டோவில்
பார்த்ததுதான். குமரு மாமா சம்பாத்தியத்தில் குறியாக இருந்தது. அதனால் வருசத்துக்கு
ஒருமுறை ஊருக்கு வந்து போக கம்பெனி தந்த காசையும் மிச்சபடுத்திக் கொண்டு வெளிநாட்டிலே
இருந்தது. இப்போதும் குமரு மாமாவுக்கு ஊருக்கு வருவது யோசனையாகத்தான் இருந்தது. கல்யாண
வயது கடந்து கொண்டிருப்பதால் மூணு மாத லீவில் வருமாறு வைத்தி தாத்தா சொன்னதுக்கு
கட்டுபட்டுதான் குமரு மாமா வந்தது.
ஊருக்கு வந்ததும் வராததுமாக குமரு மாமா
அப்பாவையும், வைத்தி தாத்தாவையும் பார்த்து போட்ட முதல் கண்டிஷன், "இந்தாருங்கத்தான்!
இந்தாருங்கப்பா! மூணு மாசத்துக்குள்ள கல்யாணத்த முடிச்சிடணும். அதுக்கு மேல ஒரு நாளு
கூட நாம ஊரு தங்க மாட்டம். கம்பெனில சொல்லிட்டுதாங் வந்திருக்கேம்!"
குமரு மாமாவுக்குப் பெண் பார்க்க அப்பாவும்,
மாணிக்கவிநாயகமும் அலையோ அலையென்று அலைந்தார்கள். மூன்று மாதத்திற்குள்ளாக நிச்சயம்
செய்து கல்யாணம் என்றதும் பெண் பார்க்கப் போன இடத்தில் எல்லாம் வேண்டாம் என்றார்கள்.
இந்தப் பக்கம் தஞ்சாவூர், கும்பகோணம், அந்தப் பக்கம் நாகப்பட்டிணம், வேதாரண்யம் வரை
இரண்டு மாதங்கள் அலைந்த அலைச்சலில் களைத்துப் போனார்கள் அப்பாவும், மாணிக்கவிநாயகமும்.
"இதல்லாம் பாத்து வச்சிட்டு என்ன
வரச் சொன்னான்னா?" என்று அப்பாவிடம் சத்தம் போட்டது குமரு மாமா.
"எனக்கென்ன சங்கதி தெரியுமா? மாமா
ஏதாச்சும் சொன்னாத்தான்ன?" என்றார் அப்பா.
"அதாங் வீடு இருக்கு. வெளிநாட்டுல
கை நெறைய சம்பாதிக்குறாம். பொண்ணா கிடைக்காம போயிடும்னு நெனச்சு வாரச் சொல்லிட்டேம்!
இப்ப என்னாம்னா சாதகம் ஒத்து வந்தா பொண்ணு வூட்டுகாரம் ஒத்து வார மாட்டேங்றாம். பொண்ணு
வூட்டுகாரம் ஒத்து வந்தா சாதகம் ஒத்து வார மாட்டேங்குது!" என்றார் வைத்தி தாத்தா.
"ஏன்த்தான்! நீங்க ஒங்க ஓரஞ் சாரத்துல
ஏதும் விசாரிச்சுப் பாத்தீங்களா?" என்றது மாணிக்கவிநாயகம்.
"விசாரிக்காம இருப்போமா? கெழக்கால
அருவாமணியில ஒரு பொண்ணு இருக்கு. குடும்பம் கொஞ்சம் தெனாவெட்டா இருக்கும்னு யோசிக்கிறேம்!"
என்றார் அப்பா.
"யோசிக்கலாம் நேரமில்ல இப்போ! அந்தப்
பொண்ணய பாத்து முடிச்சு விடுங்க!" என்றது குமரு மாமா.
"இவம் என்னடா! ஒரு மாசந்தாங் இருக்குன்னு
எந்தப் பொண்ணயாவது கட் டி வையின்னு எந்தப் பொண்ணு கெடச்சாலும் கட்டிக்குவாம் போலருக்கு!
அத்தான்! இவம் பேச்சயெல்லாம் கேட்க வாணாம். மொதல்ல சாதகம் பாத்துட்டு நாம ஒரு தபா
பாத்துட்டு வந்திடுவோம்!" என்றது மாணிக்கவிநாயகம்.
"அதுல்லாம் சரிபட்டு வாராது. நாமளும்
வர்றேம். கிளம்புங்க. உங்க காரியமெல்லாம் வழவழ கொழகொழ சமாச்சாரம். பேசிப் பேசியே
கெடுத்துப்புடுவீய்ங்க. லீவு முடிஞ்சா ஒரு நொடி தங்க மாட்டேங். உடன கெளம்பிடுவேம்
பாத்துக்குங்க!" என்றது குமரு மாமா.
குமரு மாமாவின் பேச்சு எல்லாருக்கும் தர்ம
சங்கடத்தைக் கிளப்பி விட்டு விட்டது. மாணிக்கவிநாயகம்தான் அந்தத் தர்மசங்கடத்தை ஒருவாறாகப்
போக்கியபடி பேசியது, "இவனயெல்லாம் திருத்த முடியாதுத்தான்! நாளெக்கு ஒரு வேனைப்
புடிப்போம். ரொம்ப கூட்டம் வாண்டாம். இங்க அப்புறம் உங்க வூடு. நம்ம வூடு. ஊர்ல ஒருத்தரு.
போயி பார்ப்போம்! அருவாமணிகாரங்களுக்கு சேதி சொல்லிவுட்டா சுருக்கா இருப்பாங்களா?"
அப்பாவுக்கும், வைத்தி தாத்தாவுக்கும்
அது சரியான யோசனையாகப்பட்டிருக்க வேண்டும்.
மறுநாள் வேன் கிளம்பியது. வேனில் வைத்தி
தாத்தா, சாமியாத்தா, வீயெம் மாமா, அம்மா, அப்பா, செய்யு, மாணிக்கவிநாயகம், மாணிக்கநாயகத்தின்
அக்கா அப்புறம் குமரு மாமா. தெருவில் ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக எதிர்த்தெருவில்
இருந்த கோனார் தாத்தாவையும் அழைத்துக் கொண்டனர்.
வடவாதியில் கிளம்பிய வேன் திட்டை, மணமங்கலம்,
பாலக்குறிச்சி, சேந்தங்குடி வழியாகச் சென்று கொண்டிருந்தது. சேந்தங்குடியைத் தொடர்ந்தாற்போல்
தொடர்ச்சியாக வயல்வெளிகள். அதன் ஊடாகச் செல்லும் தார்ரோட்டிலிருந்து நான்கு கிலோ
மீட்டர்கள் சென்றால் அருவாமணி வந்து விடும். தார் ரோடு பள்ளமும் மேடுமாய் இருந்தது.
அது என்ன ரோடோ? பள்ளமும் மேடாய் இருந்த இடத்தில் தார் ரோட்டைப் போட்டார்களோ! அல்லது
தார் ரோட்டைப் போட்ட பின் அது இப்படி பள்ளமும் மேடாய் ஆனதோ! இருக்கிறாரா இல்லையா
என்று தெரியாத அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்! வேன் அலுங்கி குலுங்கிப் போய்க் கொண்டிருந்தது.
"இதென்னடா இப்படி சீட்டுக்கும், மேலய்க்கும்
தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்துட்டுப் போறீயேளே! போய்ச் சேர்றதுக்குள்ள ஆளு போயி
சேர்ந்துடுவாம் போலருக்கே!" என்றார் வைத்தி தாத்தா.
"வேனைப் பாத்து வுடுப்பா! பயமா இருக்கு!"
என்றது வீயெம் மாமா.
"எப்பாடி டிரைவரு! கொஞ்சம் மொல்ல
போப்பா! ச்சும்மா புர்புர்ருன்னு கெளப்பிகிட்டு!" என்றார் கோனார் தாத்தா.
குமரு மாமாவுக்கு இவர்கள் பேசிக் கொள்வது
பிடிக்கவில்லை. "சவுண்ட் விடாம வார மாட்டீங்களா? சத்தம் போடாதீய்ங்க!" என்று
சத்தம் போட்டது.
குமரு மாமா என்ன நேரத்தில் அப்படிச் சத்தம்
போடாதீர்கள் என்று சொன்னதோ! அது சொன்ன டைமிங் மிஸ்ஸானது.
எல்லாரும் "அய்யோடி! அம்மாடி! அப்பாடி!
ஆத்தாடி! காப்பாத்துங்க!" என்று சத்தம் போடும் அளவுக்கு வேன் ஒரு பக்கமாய்ச்
சாய்ந்து வயலில் கிடந்தது.
"நெனச்ச மாரியே பண்ணிப்புட்டாம் இந்த
வேனுகார்ரேன்!" என்று தன் தலையிலிருந்து வழிந்த ரத்ததத்தைத் தடவிக் கொண்டே சொன்னார்
கோனார் தாத்தா.
*****
No comments:
Post a Comment