செய்யு - 61
ப்ளஸ் ஒன் சயின்ஸ் குரூப் அருட்செல்வத்துக்கும்,
வேகேஷன் குரூப்பில் பயிர் பாதுகாப்பியல் படிக்கும் பக்கிரிசாமிக்கும் அடிக்கடி சண்டை
வந்து விடும்.
அருட்செல்வமும், பக்கிரிசாமியும் நெடுநெடுவென
நல்ல உயரம். அருட்செல்வம் கருப்பு. பக்கிரிசாமி சிவப்பு. இருவருமே ஒல்லியாக இருந்தனர்.
இதில் பக்கிரிசாமி ஒரு அளவுக்கு மேல் சாப்பிடாது. அருட்செல்வம் அளவைத் தாண்டிச் சாப்பிட்டது.
அருட்செல்வம் அப்படிச் சாப்பிடுவதைப் பார்த்து பக்கிரிசாமி ஒருநாள், "இவம் என்ன
இப்படிச் சாப்பிடுறாம்? இவ்ளோ சாப்பிட்டும் இம்புட்டு ஒல்லியா இருக்காம்? சரியான பாம்பு
வயித்துக்காரம்!" என்று சொன்னதுதான் பிரச்சனையின் ஆரம்பப்புள்ளியானது. அதிலிருந்து
பக்கிரிசாமி மேல கடுகடுவென இருக்க ஆரம்பித்தது அருட்செல்வம். "நாம்ம காசு கட்றோம்.
அதுக்குச் சாப்புடுறோம். இவனுக்கும் வேணுன்னா சாப்பிட்டுக்க வேண்டியதுதாம். யாரென்ன
சாப்புடக் கூடாதுன்னா சொல்லப் போறா? திங்குறவம் பேளுறாம்!" என்று சொன்னதுதான்
சண்டைக்குத் துவக்கப் புள்ளியானது. எப்போது எப்படி சண்டை ஆரம்பித்தது என்பது தெரியாத
வண்ணம் ரெண்டு பேரும் அந்தப் பேச்சுக்குப் பின் கட்டிப்புரள ஆரம்பித்தார்கள்.
சுற்றி நின்று கொண்டிருந்த பிள்ளைகள்
யாருக்கும் அதைத் தடுக்க வேண்டும் என்றோ, நிறுத்த வேண்டும் என்றோ தோன்றவில்லை. எல்லாரும்
கைதட்டி, விசிலடித்து ரசிக்க ஆரம்பித்தார்கள்.
அவர்கள் சிறிது நேரம் கட்டிப் புரண்ட பிறகு
அவர்களுக்கே அலுத்துப் போனது போல, "போடா மசுரான்!" என்றபடியே இருவரும்
முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொண்டு பிரிந்து சென்றனர்.
அந்தச் சம்பவத்துக்குப் பின் பக்கிரிசாமி,
"இந்த அருட்செல்வம் பய சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள சாப்பிட்டு முடியுங்கடா!
இல்லேன்னா யாருக்கும் எதுவுமே யில்லாமலே போயிடும்!" என்று அருட்செல்வம் சாப்பிடும்
போதெல்லாம் கிண்டல் செய்தது.
"நீ எம்புட்டுச் சாப்பாடு கொறைச்சுச்
சாப்பிட்டாலும் ஒமக்கு மட்டும் பீஸைக் கொறைச்சுப் போட மாட்டாங்க! ஒமக்கும் அதே பீஸூதாம்
போ!" என்றது பதிலுக்கு அருட்செல்வம்.
"அவங்கவங்க வயித்துக்குச் சாப்புடுறத
நாம்ம இப்படி கொறப் பிடிச்சுக்க வாணாமே!" என்றான் விகடு.
விகடு இப்படிச் சொன்னதில் அருட்செல்வத்துக்கு
விகடுவின் மேல் ஒரு நெருக்கம் ஏற்பட்டது. பக்கிரிசாமிக்கு எரிச்சல் ஏற்பட்டது.
"இவம் ன்னாடா எடையில காட்டேரி மாரி வந்து கத அடிச்சிப் பாக்குறாம்!" என்றான்.
பக்கிரிசாமிக்கு யோசனை என்பது பிடிக்காது. டக்கென்று கையை வைத்து விடும். அடித்து
விட்டுதான் பேச்சு. இப்படி சண்டியர் கணக்காய் இருக்கும் பக்கிரிசாமியின் எரிச்சலுக்கு
ஆளானது விகடுவுக்கு மனதில் பயத்தை ஏற்படுத்தியது. எதையாவது காரணத்தை வைத்து தனக்கும்
அடி விழுமோ என்ற அச்சம் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.
ப்ளஸ் ஒன் பர்ஸ்ட் குரூப் பிள்ளைகள் எந்நேரமும்
படித்துக் கொண்டே இருந்தார்கள். வேகேஷன் குரூப்புக்கு அந்த அளவுக்குப் படிக்க வேண்டிய
அவசியம் இல்லாமல் இருந்தது. இதனால் எந்நேரமும் படித்துக் கொண்டிருக்கும் பர்ஸ்ட் குரூப்
பிள்ளைகளை வெகேஷன் குரூப் பிள்ளைகள் கிண்டல் அடித்துக் கொண்டிருப்பார்கள்.
ஹாஸ்டலில் இந்த கிண்டல் வேறு மாதிரியாக
இருந்தது. எப்போதும் படித்துக் கொண்டிருக்கும் அருட்செல்வம் இந்த விசயத்தை வைத்துக்
கொண்டு பக்கிரிசாமியைச் சாடையாகக் கிண்டலடித்துக் கொண்டிருந்தது. "நாமெல்லாம்
நம்ம வூட்டுல எவ்ளோ செலவு பண்ணி ஆஸ்டலுக்கு அனுப்பி படிக்க வெக்குறாங்கன்னு பொழுதேனிக்கும்
மாய்ஞ்சு மாய்ஞ்சு படிச்சிட்டிருந்தா ஒரு சில காட்டாம் பயலுங்க எப்பப் பாத்தாலும் காலு
மேல காலு போட்டுட்டு உக்காந்தே இருக்குதுங்க! வெட்டித் தண்டங்க! உருப்படாம போவப்
போற தண்டங்க!" ஆரம்பத்தில் இப்படி அருட்செல்வம் பேசும் போதெல்லாம் அடிக்கப்
பாய்ந்தது பக்கிரிசாமி.
கிளாஸ் டெஸ்ட் ஒன்றில் முட்டை மார்க் வாங்கியதாக
பக்கிரிசாமி பற்றிய செய்தி வந்த அன்று பக்கிரிசாமியை விட உயரம் குறைவாக இருந்த வார்டனிடம்
அது வாங்கிய அடி தர்ம அடியாக இருந்தது. அதனால் பக்கிரிசாமிக்குப் படிப்பு பற்றி எதைச்
சொன்னாலும் பதில் பேச முடியாத தாழ்வு மனப்பான்மையே ஏற்பட்டு விட்டது. இந்த இடம்தான்
அருட்செல்வத்துக்கு வசதியாய்ப் போனது. எந்நேரமும் பக்கிரிசாமியை வைத்தேனா இல்லையா
பார் என்று ரவுண்ட் கட்டியது.
இந்த ஒரு விசயத்தில் பம்மிய பக்கிரிசாமியிடம்
ப்ளஸ்டூ மற்றும் ப்ளஸ் ஒன் பிள்ளைகளைத் தவிர்த்து
விட்டுப் பார்த்தால் அடி வாங்காத பிள்ளைகள் ரொம்ப சொற்பம். பெரும்பாலான பிள்ளைகளுக்கு
இதனாலேயே பக்கிரிசாமியைப் பிடிக்காமல் போனது. ஆஸ்டலில் நடக்கும் அடிதடிப் பிரச்சனைகள்
சொற்பம்தான் என்றாலும் அதில் முக்கிய ஆளாய்ப் போனது பக்கிரிசாமி.
மழை நிற்கும் பாடாகத் தெரியவில்லை. தோள்பட்டைக்குக்
கீழே ராமராஜூக்கும், விகடுவுக்கும் நன்றாக நனைந்து விட்டிருந்தது.
"நீ ன்னா நேரத்துக்கு ஜட்டி மாட்டணும்னு
கேட்டீயோ! நாம்ம ஹாஸ்டலுக்குப் போயி எல்லாத்தியும் மாத்தணும் போலருக்கு. இத்தோட
போயி பள்ளியோடத்துல ஒக்கார முடியாது. நசநசன்னு இருக்கும்!" என்றான் விகடு.
"இத்தோடத்தாம் போவணும்ணா! அப்பதாம்
போயிட்டு வாரதுக்குள்ள டிரெஸ் நனஞ்சிப் போச்சின்னு சொல்லி இத்த மாத்த உடனே திரும்ப
ஒரு ரவுண்டு வாரலாம்." என்றான் ராமராஜ்.
"ஒன்னயெல்லாம் பக்கிரிசாமியாண்ட வுட்டுதாம்டாம்பி
அடிக்கணும்!"
"பக்கிரியண்ணா பண்ண மேட்டரு தெரியாதுல்லண்ணா
ஒங்களுக்கு?"
"ன்னம்மோ பிரேம்குமாரு, பவித்ரனு
பத்தி ஏத்தோ சொல்லப் போறதா சொல்லிட்டு ஒண்ணும் வெசயம் இல்லேன்னு அடி வாங்கப் போற
பயத்துல பக்கிரிசாமியப் புடிச்சு இழுக்கிறீயா?"
"இதாண்ணா! ஒங்ககிட்ட நமக்குப் பிடிக்காது.
ஆஸ்டலுக்கே தெரிஞ்சிருக்க சேதி ஒங்களுக்கு மட்டும் தெரிஞ்சிருக்காது. ஒண்ணுந் தெரியாத
அப்புராணிய இருக்கக் கூடாதுங்றதுக்குத்தாம் சொல்றேம். அவனுங்க அத்தாம் அந்த பிரேமும்
பவித்ரும் ரெண்டியேரும் ராத்திரில கட்டிப் பிடிச்சிருக்கானுவோ. முத்தம் போட்டுக்கிறானுவோ.
இன்னும் என்னென்னோமோ பண்ணிக்கிறானுவோ. அத்தாண்ணா அவுங்களப் பத்தின வெசயம்!"
என்றான் ராமராஜ்.
"ஏம் இப்படிப் பண்ணிக்கிறானுவோ?"
என்றான் விகடு தாங்க முடியாத அதிர்ச்சியோடு.
"இத்த மட்டும் ந்நல்லா கேளுங்கண்ணா!
அத்தெல்லாம் அப்படித்தாண்ணா!"
"இத்து எல்லாத்துக்கும் தெரியுமா?"
"ம்! இத்தல்லாம் ஊர கூட்டி வெச்சிட்டு
செய்வாங்க பாருங்க! ஒங்க ப்ளஸ்ஒன் கேங்கு வெகேஷன் குருப்பு பக்கிரிசாமிசாமிதாம், ஒரு
நாளு ராத்திரி இதப் பாத்துப்புட்டு ரெண்டியேரையும் சாத்து சாத்துன்னு சாத்தி, ஒத ஒதன்னு
ஒதச்சி ரகளையா போச்சுண்ணா!"
"நமக்கு எப்டி தெரியாம்மா போச்சி?"
"நீங்கதாம் எப்ப பொழுதாகும்? கொர்
கொர்னு தூங்கலாம்னு இருக்கீங்களே!"
"இத்தெல்லாம் வார்டனுக்குப் போகலியா?"
"வெசயம் ரொம்ப பேருக்குத் தெரியாதுண்ணா!
தெரிஞ்ச செட்டுக அவனுங்க அப்படிப் பண்றத அவனுங்களுக்குத் தெரியாமலே பாத்து ரசிச்சிட்டு
இருக்கானுங்கண்ணா! பக்கிரிண்ணா மட்டுந்தாம் பைட்டுல எறங்குனுது. இன்னொரு தடவ நடந்தா
வார்டனுக்கிட்ட போட்டுடுவேன்னு மெரட்டிருக்குண்ணா!"
"எனக்கு வாந்தி வாரது மாரி இருக்குடே!
கொடலெல்லாம் பொரட்டுது. ஒரு மாரியா இருக்குது. நாம்ம பள்ளியோடம் திரும்பிடுவோமா?"
என்று விகடு சொன்னதும் ராமராஜ் நம்பியாரைப் போல முகத்தை வைத்துக் கொண்டு சிரிக்க
ஆரம்பித்தான்.
"இப்டில்லாம் இருக்காதீங்கண்ணா! ஒன்னொண்ணும்
ஆஸ்டல்ல எத எதயெல்லாம் வெச்சிப் படிக்குதுங்க. இத்து என்னான்னா இப்படி இருக்குது!"
"என்னாடாம்பி சொல்றே? ஏம்டா நம்மள
கூப்பாடாந்து இப்படிப் படுத்துறே? நாம ஒமக்கு என்னடா பண்ணேம்?"
"நாளிக்கி அவனுங்க படிக்கிறதயெல்லாம்
காட்டித் தர்ரேன். இப்படியெல்லாம் இருக்காதீங்க. அத்த படிச்சுப் பாத்தாவது திருந்துங்கண்ணா!"
"இருக்குறப் படிச்சே மனப்பாடம் பண்ண
முடியலேடா! அத்தெல்லாம் வேறன்னா முடியாதுடாம்பி!"
ராமராஜ் படுமோசமாக சிரிக்க ஆரம்பித்தான்.
"நீங்க சமத்தா? இல்லே அசடா? சமத்தா இருந்தா படிப்பீங்கோ! அசடா இருந்தா படிக்க
மாட்டீங்கோ! அத்தெல்லாம் மனப்பாடம் பண்ணி பரீட்சையில எழுதிப்புடாதீங்கோ! பாவண்ணா
நீங்க! பொத்தகம்னா அதப் படிக்கணும், நெட்டுரு அடிக்கணும், பரீட்சையில எழுதணும். அப்படித்தான்னே!
பாவந்தாண்ணா நீங்கோ!"
"ஏம் நீ படிக்கிலியா? பரீட்சையில
எழுதலியா?"
"நாம்ம எங்கண்ணா படிக்கிறேம்? அக்கம்
பக்கத்துல பாத்துதேம் சமாளிச்சிட்டு இருக்கேம். அத்தாம் நமக்கெல்லாம் ஆஸ்டல் மேட்டரு
அத்தனியும் தெர்ரியுது. ஒங்களுக்கு அவ்ளோ பக்கத்துல நடக்குறது கோட தெர்ரிய மாட்டேங்குது!"
"வேறென்ன வெசயம் தெர்ரியல நமக்கு?"
என்று சொன்ன விகடுவுக்கு வானம் ரகசியத்தைக் கிழித்துக் கொண்டு மழையாய்க் கொட்டுவதைப்
போல இருந்தது.
*****
No comments:
Post a Comment