செய்யு - 46
கோயில் பிரகாரத்தில் தெய்வசிகாமணிப் புலவரின்
(நரிவலத்தில் வாழ்ந்தவர்) விருத்தப்பா குறித்து நடந்த பிரசங்கம் முடிந்தும் நெடுநேரம்
அங்கேயே உட்கார்ந்திருந்தார் திருஞானம். அவர் தனது மனதோடு பிரசங்கித்துக் கொண்டிருந்தார்.
"உலகத்துல யாரும் செய்யாததையா யாஞ்
செஞ்சிட்டம்? அப்படியே அந்த பையம் செத்தாலும் அதுதாம் இந்த ஒலகத்துல மொதச் சாவா என்னாம்?
எவ்ளோ பேரு சாவுறாம், பொறக்குறாம்? அது கொலயாவே இருந்தாலும் அதுதாங் உலகத்துல நடக்குற
மொத கொலயா என்னாம்? புள்ளீங்களாம் ந்நல்லா படிச்சு வேலய்க்குப் போகணும்னு நாம்ம
நெனைக்கிறோம். அந்தப் புள்ளீங்களும் அப்படி நினைச்சாதாங் சரியாருக்கும். அடியாத மாடு
படியாது. அடிக்காத புள்ள படிக்க மாட்டாம். செஞ்சது தப்பா இருந்தாலும் அந்த தப்புதாம்
வருங்காலத்துல அவம் வாழுக்கய சரியாக்கும். அது சரி, உலகத்துல புள்ளீங்க படிக்கிறத்துக்காக
மட்டுமா பொறந்துருக்காங்க? ம்ஹூம்! ஆனா படிக்கிறதுக்காக மட்டுந்தாம் அவுங்க பொறந்திருக்காங்.
அவுங்க ந்நல்லா படிக்காட்டி பாடஞ் சொல்லிக் கொடுக்குற வாத்தியாருங்களத்தாம கொறையா
சொல்றாங்க. கண்ணு ரெண்டயும் வுட்டுட்டு தோல உரிச்சியெடுங்றாங்க. எங்க உரிச்சியெடுக்குறது?
அதுக்கு முன்னாலம் மயக்கம் போட்டு வுழுந்துடுறானுவோங்க." அவரது மனம் மறுபடியும்
மறுபடியும் புயல் அடித்து ஓயும் கடற்கரையைப் போலிருந்தது. இப்படியும் அப்படியுமாக
பலவிதங்களில் அவர் மாற்றி மாற்றி சிந்தித்து ஒரு நிலைக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
பிரசங்கம் முடிந்த பின் தரப்பட்ட பிரசாதம்
அவரின் பசிக்குத் தணிவாக இருந்தது. மேற்கொண்டு அவரால் நகர முடியாத அளவுக்கு அவரது
உடல் சோர்ந்து போயிருந்தது. "சைக்கிள எடுத்துகிட்டு ஒரு மனுசம் இப்படியா மிதிப்பாம்?
ச்சே!" என்று அலுத்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டார். கோயில் நடை சார்த்தும்
நேரம் வரை அப்படியே உட்கார்ந்திருந்தார். அவர் அப்படியே உட்கார்ந்திருப்பதைப் பார்த்து
கோயில் ஏவலாட்கள் அவரைப் பற்றி விசாரித்தனர். அவர்தான் மேலப்பனையனூர் ஹெட்மாஸ்டர்
திருஞானம் என்பது தெரிந்ததும் நரிவலம் வேலாயுத முதலியாருக்குச் செய்தி அனுப்பப்பட்டது.
அவர் வந்து பார்த்தார். இந்தச் சூழ்நிலை அவருக்கு அருமையான யோகமாகப் பட்டது. உடனே
அவர் பெரும்புள்ளியும், நரிவலம் பள்ளியின் நிறுவனரும் கரஸ்பாண்டுமான கண்டியப்பநாதரை
கோயிலுக்கு வரச் சொன்னார்.
திடீரென்று மேலப்பனையனூர் ஹெட் மாஸ்டர்
இப்படி வந்து நரிவலம் கோயிலில் உட்கார்ந்திருப்பது அவர்களுக்கு ஆச்சரியமாகப் பட்டது.
"வாரும்வே! வந்து கூப்புட்டப்பா ஆகாங்
ஊகூங்ன்னீர்! இப்போ பாத்த நம்மூரு கோயில்ல இருக்கீர்! என்ன விஷேசம்னேம்?" என்றார்
கண்டியப்ப முதலியார்.
என்ன சொல்வதென்று ஒரு நொடி தயங்கிய திருஞானம்
தன்னையும் அறியாமல் வார்த்தைகளைக் கோர்த்து அள்ளி வீசினார், "வேல பாக்குறதுல
ஒரு திருப்தியில்லா. அதாங் அப்படியே சைக்கிள்ல வுட்டம். அது பாட்டுக்கு இங்க வந்து
நிக்குது. உக்காந்த நமக்கு எழுந்திரிக்க மனசில்ல!" அவர் மிக் சாமர்த்தியமாக மேலப்பனையனூரில்
நடந்த எந்தச் சம்பவத்தையும் சொல்லாமல் இருந்தார். அவர் மனதுக்குள் ஒரு கணக்கு ஓடிக்
கொண்டிருந்தது.
"அந்த ஸ்கூல்லுல திருப்தியில்லன்னா,
நம்ம ஸ்கூல்லுல வேல பாக்குறது! வாத்தியாருமாருக ல்லாம எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கேம்
தெரியுமா? நாகர்கோயில்லு, திருநெவேலின்னு போயி ஆளு புடிச்சாந்து வர வேண்யிருக்கேம்!
ஊம்னு ஒரு வார்த்த சொன்னா போச்சு. நம்ம பள்ளியோடத்துல வேல பாக்கலாம்!"
திருஞானம் நெற்றியைச் சுருக்கி யோசித்தார்.
"என்ன யோசனன்னு தெரிஞ்சிக்கலாமோ?"
"அங்கயிருந்து இங்க எப்புடி வாரதுன்னு
யோசிக்குறம்?" என்றார் திருஞானம்.
"அந்த யோசன உமக்கு எதுக்குங்றம்?
நீம்ம அங்க போக வாணாம். போனா வும்ம வுட மாட்டாங்கம். நம்ம ஊர்லயே இரும். நாள கழிச்சு
நாம்ம தஞ்சாரூ போயி ஆர்டர் போட்டு வாங்கியாறம். ஏதோ ஒரு தெய்வப் பிராப்தம்தாம் ஒம்ம
இங்க கொண்டாந்து சேத்துருக்கும்!" என்று கண்டியப்பநாதர் சொன்னதும் திருஞானம்
எழுந்து போய் ஆண்டியப்பர் சன்னதியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார்.
"வார முடியாதுன்னு அடம் புடிச்சவர்ரு
வந்துருக்காம். இத்த வுட்டுப்புடக் கூடாது. அப்படியே புடிச்சு அமுக்கிப்புடணும். இம்மாரி
ஆள ஜில்லாவுல பாக்க முடியாது. திருநெவேலியே போயி சல்லட போட்டு சலிச்சாலும் இம்மாரி
ஆள புடிக்க முடியாது ஆமா!" என்று வேலாயுத முதலியாரின் காதைக் கடித்தார் கண்டியப்பநாதர்.
அதை ஆமோதிப்பது போல வேலாயுத முதலியார், "ஆகட்டுங்றம். நம்ம வூட்டுலய தங்க வெச்சு
வேலய முடிச்சிடுவம்!" என்றார்.
அந்த ரா முச்சூடும் திருஞானம் வேலாயுத
முதலியார் வீட்டில் தங்கியிருந்தார். அவருக்குக் காய்ச்சல் கண்டது. உடம்பு அனலாய்க்
கொதித்தது. இரவெல்லாம் பினாத்த ஆரம்பித்தார். பொழுது விடிந்தும் அவரது காய்ச்சல்
நின்றபாடில்லை. இந்த நிலையில் மேற்கொண்டு அவரை எங்கு அனுப்புவது எப்படி அனுப்புவது
என்று புரியாமல் வேலாயுத முதலியாரும், கண்டியப்பநாதரும் ஆட்களை விட்டு அவர் குடும்பத்தை
நரிவலத்துக்குக் கொண்டு வந்தார்கள். ஒரு வார காலம் அவர் காய்ச்சலில் கிடந்தார். டாக்டரைக்
கொண்டு வந்து வைத்தியம் பார்க்க வேண்டும் என்ற வேலாயுத முதலியார் சொன்னதை கண்டியப்பநாதர்
ஏற்றுக் கொள்ளவில்லை. "கைவைத்தியமா செஞ்சுக்கலாம். இது ஆண்டியப்பரோட வேல. விளையாடுறாரு.
வெரட்டிப் பாப்பம், ஓடாம இருந்தா வெச்சுப்போம்னு நெனக்குறாரு. புரிஞ்சிடுத்தா? நமக்குப்
புரிஞ்சிட்டு. சோதன. அவசரம் காட்டப்புடாது." என்றார் கண்டியப்பநாதர்.
திருஞானம் உடம்பெல்லாம் பத்துப் போடாத
குறையாகப் படுத்திருந்தார். அவரும் டாக்டரை வைத்து வைத்தியம் பார்க்க வேண்டும் என்பதை
ஏற்றுக் கொள்ளவில்லை. டாக்டர் வந்து பார்த்து
அவர் எதாவது கேட்டு தாம் எதாவது உளறிக் கொட்டி விடுவோமோ என பயந்தார். அவருக்கு மேலப்பனையனூரில்
அடித்ததால் மயங்கி விழுந்த பையன் குறித்த பயம் காய்ச்சலாக பரவிக் கொண்டிருந்தது. அந்தக்
காய்ச்சலை அவர் விரும்பவும் செய்தார். காய்ச்சல் காரணமாக யாரும் அவரிடம் அதிகம் பேசவில்லை.
பேசும் போது எதையாவது உளறிக் கொட்டி எதாவது பிரச்சனை வந்து விடுமோ என்ற பேரச்சம்
அவரைப் பீடித்திருந்தது. அப்படிப் பேசாமல் இருப்பதற்கு காய்ச்சலே காப்பே எனக் கருதினார்.
எது நடந்தாலும் பரவாயில்லை என்று அவர்
மனம் ஒரு நிலை கண்ட பிறகு ஒரு வார காய்ச்சலுக்குப் பின் திடகாத்திரமாக எழுந்தார் திருஞானம்.
அதற்குள் அவர் நரிவலம் பள்ளியில் வந்து வேலை பார்ப்பதற்கான எல்லா வேலைகளையும் நருவிசாக
காதும் காது வைத்தது போல செய்து வைத்திருந்தார் கண்டியப்பநாதர். அப்போது அவர் காங்கிரஸில்
பெரும்புள்ளியாக இருந்தார். அவரின் கண்ணசைவுக்கும், கை அசைவுக்கும் பல காரியங்கள் நடக்கும்
அளவுக்கு அவரது செல்வாக்கு இருந்தது. அவர் ஒரு கைலெட்டர் கொடுத்தால் ஆகாத காரியங்கள்
எதுவும் இல்லை என்ற நிலை நிலவியது.
மேலப்பனையனூரில் திருஞானம் அடித்து மயங்கி
விழுந்த பையன் அவர் அங்கிருந்து சைக்கிளில் சென்ற பத்து நிமிடங்களுக்குப் பின் கண்
விழித்தான். அவனுக்குக் காய்ச்சல் கண்டது. உடனடியாக வீட்டிற்குச் சொல்லியனுப்பி அவனைத்
தூக்கிக் கொண்டுப் போகச் சொன்னார்கள்.
அதே நேரத்தில் சுற்றியிருந்த வாத்தியார்மார்களில்
ஒருத்தர் கரஸ்பாண்டன்ட் வீட்டுக்குச் சென்ற ஹெட்மாஸ்டரைத் தேடிச் சென்றார். அவர் அங்கு
வரவில்லை என்பதை அறிந்து அவர் வீட்டுக்கும் தேடிச் சென்றார். அவர் அங்கும் வரவில்லை
என்பது அறிந்து பல இடங்களில் தேடிப் பார்த்தனர். அவரது குடும்பமும் மறுநாள் நரிவலம்
வேலாயுத முதலியார் அனுப்பி ஆட்களோடு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போனதும் மேலப்பனையனூர்
பள்ளிக்கூட நிர்வாகம் குழம்பிப் போனது.
திருஞானத்தைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர்.
அவரை சைக்கிளில் நாகப்பட்டிணத்தில் பார்த்ததாக, திருத்துறைப்பூண்டியில் பார்த்ததாக,
வேதாரண்யத்தில் பார்த்ததாக ஆளாளுக்குக் கதை சொல்ல ஆரம்பித்தனர். பத்து நாட்களுக்குப்
பிறகு அவர் நரிவலம் பள்ளியில் ஹெட்மாஸ்டர் ஆகி விட்ட செய்தி கிடைத்து அதன் பின்னணியில்
கண்டியப்பநாதர் இருக்கிறார் என்பதை அறிந்தது அவர்களால் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறொன்று
செய்ய முடியாமல் போனது. அவர்கள் கப்சிப் என்று ஆனார்கள். ஹெட்மாஸ்டர் திருஞானம் அடித்ததால்
மயங்கி விழுந்த பையன் தொடர் காய்ச்சல் கண்டு எதுவும் சாப்பிட முடியாமல், எந்த மருத்துவத்துக்கும்
குணமாகாமல் ஒரு மாதத்தில் எலும்பும் தோலுமாகி செத்துப் போனான். இந்த நிலையில் திருஞானம்
இப்படித் தொலைந்து போனது அவர்களுக்குச் செளகரியமாய் இருப்பது போலானது.
இறந்துப் போன பையனின் பெற்றோர்கள் மேலப்பனையனூர்
மேனேஜ்மெண்டில் வந்து கேட்ட போது அவர்கள் கண்டியப்பநாதரின் செல்வாக்கில் திருஞானம்
இருப்பதைப் பற்றிச் சொல்லிப் பயமுறுத்தினார்கள். இறந்துப் போன பையனின் சகோதர சகோதரிகள்
பள்ளிக்கூடத்தில் படிப்பதைச் சுட்டிக் காட்டி, இந்தச் சம்பவம் குறித்து எதுவும் மூச்சு
விடக் கூடாது என்றார்கள். அப்படி மூச்சு விட்டால் அவர்களை படிக்க முடியாதபடி செய்து
விடுவோம் என்று பீதியைக் கிளப்பி விட்டார்கள்.
இந்தச் செய்திகள் எல்லாம் ஒரு கோர்வையாக
நரிவலத்துக்குள் தெரிவதற்கு ஆறு மாதத்துக்கு மேலானது. அதற்குள் தன்னை ஒரு தவிர்க்க
முடியாத சக்தியாக நரிவலத்தில் நிலைநிறுத்தியிருந்தார் திருஞானம். கண்டியப்பநாதரிடம்
சொல்லி நரிவலத்தில் ஒரு பாலிடெக்னிக் காலேஜூயையும், டீச்சர் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டையும்
ஆரம்பிக்க வைத்திருந்தார். அதன் போர்டு குழுவிலும் முக்கிய மெம்பராக இருந்தார். மெம்பர்
என்றாலும் அவர்தான் தலைவர் போலிருந்தார். கண்டியப்பநாதரும், வேலாயுத முதலியாரும் பெயரளவுக்கே
நிர்வாகத் தலைமையில் இருந்தனர். அனைத்தும் அவரது கட்டுபாட்டிலேயே இயங்கியது.
பிற்காலத்தில் கண்டியப்பநாதர் குடும்பத்துக்கும்,
வேலாயுத முதலியார் குடும்பத்துக்கும் விரிசல் விழுந்து சண்டைகள் வந்த போதும் பள்ளிக்கூடம்,
பாலிடெக்னிக் காலேஜ், டீச்சர் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட் இவைகளை நான்கு ஆண்டுகள் சுழற்சி
முறையில் நிர்வாக பொறுப்பில் அவரவர் குடும்ப உறுப்பினர்கள் நிர்வகித்து வசூலாகும்
பணத்தைப் பிரித்துக் கொள்வது என்ற உடன்பாட்டை திருஞானம்தான் செய்து கொடுத்தார்.
விகடு நரிவலம் பள்ளியில் சேர்ந்த போது
கண்டியப்பநாதர் மருமகன் மணிவாசகநாதர் கரஸ்பாண்டன்டாக இருந்தார். இதில் கண்டியப்பநாதர்
மகன் ஆண்டியப்பநாதருக்கும் மணிவாசகநாதருக்கும் ஓங்கு தாங்கல்கள் ஏற்பட்டு வேலாயுத முதலியார்
குடும்பத்துக்கும், கண்டியப்பநாதர் குடும்பத்தாருக்கும் இருந்த பிரச்சனைகளைத் தாண்டி
கண்டியப்பநாதர் குடும்பத்துக்குள்ளே உள்குத்துகள் நிறைய நடந்து கொண்டிருந்தன. எந்தக்
குடும்பத்தில் எது நடந்தாலும் அவர்கள் திருஞானம் ஹெட்மாஸ்டர் சொல்வதைத் தாண்டி எதையும்
செய்ய யோசித்தனர். அதனால் திருஞானம் ஹெட்மாஸ்டரால் எல்லா பிரச்சனைகளும் அவ்வபோது
ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருந்தன. அதற்குப் பின்னால் ஒரு காரணமும் இருந்தது. கண்டியப்பநாதர்
சாகும் தறுவாயில் தம் குடும்பம், வேலாயுத முதலியார் குடும்பம் உட்பட அனைவரையும் அழைத்து,
"யாது செய்யுறதா இருந்தாலுஞ் சரி அத திருஞான வாத்தியார கலந்துக்காம செய்யப்படாது.
அவரு சொல்றதுதாங் முடிவு. அதுல மாத்தம் இருக்கப்படாது!" என்று சத்தியவாக்கு வாங்கிக்
கொண்டு செத்துப் போனார்.
நரிவலம் பள்ளியை ஓர் இராணுவ ஒழுங்கோடு
நடத்த ஆரம்பித்தார் திருஞானம்.
*****
No comments:
Post a Comment