செய்யு - 50
குமரு மாமாவுக்கும் அருவாமணி கணேசமூர்த்தியின்
மகள் மேகலாவுக்கும் கல்யாணம் செய்வது என்று பேசி நிச்சயம் ஆனது.
அருவாமணி கணேசமூர்த்தி அந்தக் காலத்தில்
தட்டு தடுமாறிப் படித்து எப்படியோ ஐ.டி.ஐ. முடித்தார். படித்தாலே வேலை கிடைத்துக்
கொண்டிருந்த அப்போது அவருக்கு டான்சியில் வேலை கிடைத்தது. டான்சியையே அள்ளிச் சுருட்டிக்
கொள்ளாத குறையாய் அவர் வேலை பார்த்ததில் அருவாமணி வகையறாவில் அவர் பசையுள்ள பார்ட்டியாக
மாறியிருந்தார்.
அருவாமணி அக்கிரகாரத்திலிருந்த ஒரு ஓட்டு
வீட்டை வாங்கி வேலை பார்த்து ஏக சொகுசாய் தடபுடலாய் வாழ்ந்து கொண்டிருந்தார். அப்பா
மேல் அவருக்கு ஒரு தனிமதிப்பு இருந்தது. அப்பா சொன்னதும் அவர் குமரு மாமா பற்றி விசாரித்திருக்கிறார்.
"பையம் நல்ல துடிப்பான பய. நெனச்சா
நெனச்ச காரியத்த முடிக்காம உட்கார மாட்டாம். கெட்டப்பழக்கம் ஏதும் கெடயாது. நம்ம சனத்துலயே
முப்பது வயசுக்குள்ள மச்சுவூடு கட்டுனவம் இவம் ஒருத்தம்தாம். சம்பாத்தியத்துல ரொம்ப
கெட்டி!" என்று கேள்விபட்டதும் அந்த மாதத்திலேயே கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டார்.
கணேசமூர்த்தி தன்னளவில் யோகக்காராய் இருந்த
போதும் அவரது மூத்த மகன் சூரியமூர்த்தி எம்.எஸ்ஸி. வரை படித்து விட்டு வேலையில்லாமல்
இருந்தது. படிச்சு ஐ.ஏ.எஸ். ஆகப் போவதாக ஊரில் அலம்பல் விட்டுத் திரிவதாக அதைப் பற்றி
ஊரில் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சூரியமூர்த்தியைப் பற்றி மாணிக்கவிநாயகம்,
"நானும் அத்தானும் சம்பந்திப் பத்திரிக்கை வைக்குறதுக்காக வூட்டுக்குப் போறம்.
வூட்டுக்கு முன்னாடி கல்யாணப்பந்தல் போட்டுட்டு இருந்தாங்கல்ல, இந்த சூரியமூர்த்திப்
பய என்ன செஞ்சாம் தெரியுமுல்ல. மூங்கி மேல ரசமட்டத்த வெச்சு சமம் பாத்துட்டு இருக்காம்.
நமக்குத் தெரிஞ்ச இந்த சில்லாவுல, ஏம் இந்த ஒலகத்துலயே பந்தகாலுக்கு மேல மூங்கிய வெச்சு ரசமட்டம் பார்த்தவம்
இவம்தாம்!" என்று சொல்லிச் சொல்லி சிரிக்கும்.
கணேசமூர்த்தியின் இரண்டாவது மகன் சந்திரமூர்த்தி
படிக்கப் பிடிக்காமல் படிப்பைப் பாதியிலேயே அதாவது ஏழாம் வகுப்பிலேயே நிறுத்தி விட்டு
வீட்டு வேலைகளைப் கவனித்துக் கொண்டிருந்தது. அவரது மூன்று மகள்களில் மேகலாவும், சந்திரகலாவும்
ப்ளஸ்டூ வரைப் படித்திருந்தார்கள். வத்சலா ப்ளஸ்டூ முடித்து விட்டு டிகிரிப் படிக்க
வேண்டும் என்ற ஆசையோடிருந்தது. பிறகு அந்த ஆசையில் யார் கண் பட்டதோ! டிகிரியெல்லாம்
தன்னால் படிக்க முடியாது என்று வத்சலா சொல்லி தன்னுடைய கனவுக்கு தானே ஒரு முற்றுப்புள்ளி
வைத்து விட்டது.
பெண் பார்க்கப் போன அன்றே மேகலா மாமிக்கு
குமரு மாமாவைப் பிடித்து விட்டது. குமரு மாமா அப்படி ஒரு சிவப்பு. "கருப்பானவளுக்கு
இப்படி ஒரு செவப்பான மாப்புள கெடச்சா எவதாம் கட்டிக்க மாட்டான்னு சொல்லுவா! இந்தப்
பயதாம் இந்த மாசத்துக்குள்ள கல்யாணம் முடிஞ்சால்லியான்னுல்ல நிக்குறாம்!" என்று
அங்கலாயத்துக் கொண்ட சாமியாத்தாவும் கருப்புதாம்.
இந்த வடவாதி வகையறாவிடம் ஒரு வழக்கம் இருந்தது.
சாதகப் பொருத்தம் எல்லாம் பார்த்து விட்டுதான் பெண் பார்க்கச் செல்வார்கள். அதாவது
பெண்ணைப் பார்ப்பதற்கு முன் சாதகத்தைப் பார்த்து விடுவார்கள். அப்படிப் பார்த்தாலும்
பேசி நிச்சயத்துக் கொண்ட பிறகு இன்னொரு சோசியரை வைத்து மறுபடியும் ஒருமுறைப் பொருத்தம்
பார்ப்பார்கள்.
அப்படி மறுபடியும் ஒருமுறை பொருத்தம்
பார்க்கவும், அப்படியே கல்யாணத்துக்கு நாள் குறிக்கவும் வேறு எந்த சோதிடரைப் பார்ப்பது என்ற யோசனை வந்ததும்,
மாணிக்கவிநாயகம்தான் அந்த யோசனையைக் கொடுத்தது. அதனுடைய யோசனைப்படி நகை ஆசாரியாய்
இருந்து சோதிடராய் மாறி விட்ட பாக்குக்கோட்டை ராசாமணி தாத்தாவிடம் பொருத்தம் பார்க்கப்பட்டது.
சொந்தப் பந்தங்களில் அந்தத் தாத்தா முதல் பொருத்தம் பார்த்து, கல்யாணத்துக்கு நாள்
குறித்துக் கொடுத்தது குமரு மாமாவுக்குதான்.
குமரு மாமாவுக்கு அவர் சோதிடராய் மாறியிருந்தது
திகைப்பாயிருந்தது. "எப்படியிருந்த மனுஷம் தெரியுமா! சிலுக்கு வேட்டி, சிலுக்கு
சட்ட போட்டுகிட்டு தெனாவெட்டா நின்னவரு, இப்படி பரதேசி மாரி காவி கட்டிட்டு, காவிச்
சட்ட போட்டுட்டு ன்னாம்மா ஆயிட்டாரு! ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஜாதகம்! அவரோட
ஜாதகம் இப்படி மாரி அவரே ஜாதகம் பாக்குறவரா நிப்பாருன்னு நெக்கல!" என்று பரிதாபப்பட்டது.
குமரு மாமாவுக்கும், மேகலா மாமிக்கும்
பொருத்தத்தைப் பார்த்து விட்டு, "பொருத்தம்னா பொருத்தம்! ஏகப் பொருத்தம்!"
என்றார் ராசாமணி தாத்தா.
"அப்படியே இந்த மாசத்துக்குள்ளேயே
ஒரு நாளயும் குறிச்சிட்டா தேவலாம்!" என்று மாணிக்கவிநாயகம் சொல்ல ராசாமணி தாத்தா
கல்யாணத்துக்கு ஒரு நாளையும் குறித்து முடித்தது.
"மண்டபம் லேசுல கிடைக்குமான்னுதான்
சந்தேகமா இருக்கு! ஜாதகக்காரங்க குறிச்சா நல்ல தேதி நாளாப் பார்துல்ல குறிப்பீங்க!
மண்டபத்துக்கு என்ன அலைச்சல் அலையப் போறம்னு தெரியலயே! கமலாலயக் கரையில நமக்குத் தெரிஞ்ச
மண்டபம் ஒண்ணு இருக்கு. நாம போய் கேட்டோம்னா எப்படியும் முடிச்சிடலாம்" என்று
மாணிக்கவிநாயகம் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அப்பாவை அழைத்துக் கொண்டு கிளம்பியது.
அவ்வளவு சுலுவாய் மண்டபம் கிடைக்காது என
எதிர்பார்த்துப் போன அவர்களுக்கு கேட்ட தேதியில் மண்டபம் கிடைத்தது ஆச்சரியமாக இருந்தது.
அதே போல ஐயர், மேளம், சமையல்காரர் எல்லாம் எந்த வித அட்டியில்லாமல் சரசரவெனக் கிடைத்தார்கள்.
"இந்த குமருப் பய அதிர்ஷ்டக்கார பயத்தாம்.
இவ்ளோ சடசடன்னு பத்து நாளுக்குள்ள கல்யாணத்த வெச்சு எல்லாம் இப்படி சட்டு சட்டுன்னு
முடியுதே!" என்றது மாணிக்கவிநாயகம்.
அவ்வளவு சுலுவாய் இப்படி எல்லாம் கிடைத்ததன்
ரகசியம் கல்யாணம் நடந்து முடிந்த மறுநாள்தான் எல்லாருக்கும் தெரிய வந்தது.
ஏகப் பொருத்தம் என்று பொருத்தம் பார்த்த
பாக்குக்கோட்டை ராசாமாணி தாத்தா மேல் எல்லாருக்கும் ஏகக் கோபமாக வந்தது.
"இப்படி இந்த சாமியாருப் பய எம் மொவன்
கல்யாணத்துக்கு பாட்டிமொகத்துல நாளு குறிச்சிக் கொடுத்துருந்துக்கானே! அவம் ந்நல்லா
இருப்பானா? அவம் குடும்பம்தாம் விளங்குமா? இவம் நக செய்யுறப்பயும் சரியில்ல. இப்ப சோசியம்
பாக்குறப்பயும் சரியில்ல. அவம்லாம் ஒரு மனுஷம்னு நெனச்சுகிட்டு அவம்கிட்ட போயி நாளு
குறிச்சிட்டு மறுபொருத்தம் பாத்துட்டு வந்திருக்கியேளே!" என்று அழுதது சாமியாத்தா.
குமரு மாமாவின் கல்யாணம் பாட்டிமுகத்தில்
நடந்து முடிந்தது ஒட்டு மொத்தமாக ஒரு பீதியைக் கிளப்பியிருந்தது.
*****
No comments:
Post a Comment