13 Apr 2019

குழந்தைகளிடம் கோபப்படாதீர்கள்!



            உங்களுக்குத் தைரியம் இருந்தால்...
            எந்த சிறு குழந்தையையாவது பார்த்து, "உனக்கு ஒண்ணும் தெரியாது போ!" என்று மிரட்டி, விரட்டி விடுங்கள் பார்ப்போம்!
            அப்படியெல்லாம் மிரட்டி, விரட்டி விடும் தைரியம் யாருக்குதாம் இருக்கிறது?
            தைரியமாய் விரட்டி விட்டப் பலர் பிறகு அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி, "இந்த போன்ல இப்படி இருக்கே! என்னான்னு பாரேன்! இத கொஞ்சம் சரி செஞ்சுக் கொடேன்!" என்று போய்ப் பரிதாபமாய் நிற்கிறார்கள்.
            செல்போனில் இந்தக் குழந்தைகள் என்னமாய்ப் புகுந்து புறப்படுகிறார்கள்!
            எப்போதாவது கொஞ்சம் கடுமை காட்டி செல்போனைக் கொடுக்காமல் விட்டு விட்டால்... நமக்குத் தெரியாமல் செல்லை எடுத்து எப்படியோ லாக் செய்து விடுகிறார்கள். பிறகு அப்படி கடுமை காட்டியதற்காக அவர்களின் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கூத்தாடி அந்த லாக்கை எடுத்து விடச் சொல்வதற்குள் "ஸ்ஸ்ஸ்! அப்பப்பா!" ஆகி விடுகிறது. "இனிமே கோபப்படுவே!" என்று மனதைத் திட்டிக் கொள்ள வேண்டியதாகி விடுகிறது.
            அண்மையில் பிரவுசரின் ஹிஸ்டரியில் பார்த்த போது குழந்தைகள் எவ்வளவு அட்வான்ஸ்டாக சிந்திக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்.
            பர்ஸ்ட் ஸ்டாண்டர்டு லீக்ட் கொஸ்டின் பேப்பர்
            செகண்ட் ஸ்டாண்டர்டு லீக்ட் கொஸ்டின் பேப்பர்
            தேர்டு ஸ்டாண்டர்டு லீக்ட் கொஸ்டின் பேப்பர்
                        என்றெல்லாம் தேடி இருந்திருக்கிறார்கள்.
            "எப்படிப்பா இவ்வளவு பெரிசா டைப் பண்ணி பிள்ளைங்க இதையெல்லாம் தேடுறாங்களோ!" என்று நான் ஆச்சரியப்பட்டதற்கு, தலையில் ஒரு குட்டு வைத்து நம்ம வீட்டு மவராசி சொன்னது, "அட அசடே! பிரவுசர்ல வாய்ஸ் டைப் இருக்குறது கூட ஒமக்குத் தெரியாதா?"
            குழந்தைகளிடம் மட்டுமா? பெண்டாட்டியிடமும் தலையில் குட்டு வாங்கிக் கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கவே செய்கின்றன.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...