13 Apr 2019

மனிதர்கள் விசித்திரமானவர்கள்!



செய்யு - 54
            வைத்தி தாத்தாதான் எவ்வளவு விசித்திரமானவர்! படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்காமல், படிக்க விரும்பாத ஆண் பிள்ளையைப் படிக்க வைத்து அவர் நிறைய விசித்திரங்களைச் செய்து விட்டார்.
            அவர் குமரு மாமாவின் மேல் காட்டிய பிரியத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கையேனும் தன் பெண் பிள்ளைகளில் எவரிடமாவது காட்டியிருப்பாரா என்பது சந்தேகமே. இது குறித்தெல்லாம் நாம் முன்பே இலைமறை காயாக பேசியிருக்கிறோம்தான். அவரைக் குறித்த சித்திரம் இப்படி உருவாகி உருவாகி கலைந்து போகிறது. என்ன செய்வது? தங்களை நேசிக்காத அவரை அத்தனைப் பெண் பிள்ளைகளும் அவ்வளவு நேசித்தார்கள்.
            தங்களை அடித்துத் துவம்சம் செய்த நிகழ்வுகளைத் தங்களைக் கட்டுபாடாக வளர்க்க அவர் மேற்கொண்ட முறைகள் என்றார்கள், முயற்சிகள் என்றார்கள்.  அவர் வெகு அரிதாக கல்யாணம் காட்சி, சாவு, கருமாதி என்று வருவதைக் கூட அவர்கள் பெரிதாகப் பேசிக் கொண்டார்கள். அவைகளுக்கு எல்லாம் அவர் வருவது அவரது கடமைதான் என்றாலும் அவர்கள் பேசிக் கொள்வதை நீங்கள் கேட்க வேண்டும். அதிசயித்துப் போய் விடுவீர்கள். அவர் அதிகம் வராதததால், அதிகம் பேசாததால், அதிகம் மனம் விட்டுப் பழகாததால் ஏற்பட்ட ஏக்க உணர்வின் வெளிப்பாடுதான் இப்படி அவர்களைப் பேச வைத்ததோ என்னவோ!
            அந்தப் பெண் பிள்ளைகள் மனதில் இப்போதும் வைத்தி தாத்தா அசகாய சூரர்தாம். அவரைப் பற்றிப் பேச்சு வந்தால், "எங்கப்பா மாரி வருமா?" என்று மருகுவார்கள்.
            அவர் ஆறு பெண் பிள்ளைகளின் கணவன்மார்களிடம் எந்த விதத்திலும் இறங்கிப் போனதில்லை. மருமகன்களின் முறுக்கு எடுபடாத ஒரே மாமனார் என்றும் அவரைப் பற்றி ஊரில் பேசிக் கொண்டனர். கடைசி வரை தனக்குரிய கெத்து குறையாமல் இருந்தவர் என்றும் அவரைப் பற்றி இப்போது நினைவு கூர்ந்து சொல்பவர்களும் இருக்கிறார்கள். கடைசி வரை கெத்து என்பதில் அவர் வயோதிகத்தின் தள்ளாமையால் அவதிப்பட்ட அந்த நாட்களை மட்டும் கழித்துக் கொள்ளலாம். அந்தக் கட்டத்தில் மட்டும் அவர் தன் ஆதிக்கத்தை நிலை நாட்ட முடியாமல் தளர்ந்து போனார். மற்றபடி ஊரார் பேச்சைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதில் இம்மிப் பிசகில்லை.
            சாகும் கடைசி நொடி வரை வைத்தி தாத்தா பார்த்தது பார்த்த மாதிரியான உருவத்தில்தாம் இருந்தார். உடல் பெருக்கவோ, சிறுக்கவோ உடலின் சிவப்பு குறையவோ இல்லை. முடி மட்டுமே வெளுத்திருந்தது. மற்றபடி அவரை இளம் பிராயத்தில் பார்த்த ஒருவர் அவரை முதுமைப் பிராயத்தில் பார்த்தாலும் அவரை அடையாளம் கண்டு விட முடியும். தன்னளவில் மிகுந்த மனநிறைவாக வாழ்ந்த மனிதராக அவர் இருந்தார்.
            அதிகபட்சம் பத்து பதினைந்து வார்த்தைகளுக்கு மேல் பேசத் தெரியாத மனிதரைப் போலத்தான் அவர் பேசினார். பேசும் போது அவர் மனதுக்குப் பிடித்து விட்டால் "ஹ்ஹஹா" என்று அவர் சிரிப்பது நூறடி சுற்றுக்காவது அதிர்ந்தபடிக் கேட்கும். அந்தச் சிரிப்போடு "சபாஷ்!" என்பார். அவருக்கு மனம் பிடித்தபடி நடந்து கொண்டு விட்டால், "வெரிகுட்" என்பார். இந்த ஆங்கில வார்த்தையை அவர் எந்த வயதில் கற்றுக் கொண்டாரோ! விகடு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர் இந்த வார்த்தையைப் பயன்படுத்திக் கேட்டிருக்கிறான். சபாஷ் என்ற வார்த்தைக்கு அதிகப்படியாக அவர் "பேஷ்! பேஷ்!" என்ற வார்த்தையையும் அவர் அதிகம் பயன்படுத்தினார். இவைகளையன்றிப் பார்த்தால்,
            "நமக்குப் பிடிக்கல! ஒத்து வாராது! கெளம்புங்க!"
            "வந்து நேரமாச்சு போலருக்கு. சீக்கிரம் கெளம்புங்க!"
            "எந்த பஸ்ஸூக்குத் திரும்ப கெளம்புறீங்க?" என்பவைகளைத்தான் அவர் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.
            சடாரென மூஞ்சில் அடித்தப்படி பேசி விடும் அவரிடம் பயபக்தியோடுதான் எல்லாரும் நடந்து கொண்டார்கள். அது எப்படியோ! இந்தச் சுற்றுப்பட்டு மனிதர்களும் வைத்தி தாத்தாவை விட மோசமான விசித்திரம் நிரம்பியவர்கள்தாம். அன்பாக நடந்து கொள்ளும் மனிதர்களிடம் இவர்கள் அடாவடியாக நடந்து கொண்டவர்கள். அத்தோடு அவர்கள் எப்போது நல்லவர்களாக நடந்து கொள்வார்கள்? எப்போது கெட்டவர்களாக அவதாராம் எடுப்பார்கள்? என்பது புரிந்து கொள்ள முடியாதது. வைத்தி தாத்தா இந்த விசயத்தில் மாறுபட்டவர். அவர் எப்போதும் ஒரே மாதிரியாகத்தாம் இருந்தார். அவர் யாரையும் கெடுத்ததில்லை. எவர் விசயத்திலும் மூக்கை நுழைத்ததில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என இருந்தார். அப்படி இருந்த ஒருவர் எப்படி அத்தனைக் குடும்பங்களிலும் முக்கியமானவராக இருந்தாரோ?
            முக்கியமான விசயங்கள் பலவற்றில் முடிவெடுக்க பலரும் அவரைத்தான் கலந்தாலோசித்தார்கள். செய் அல்லது செய்யாதே என்ற இரண்டு வார்த்தைகளைத் தவிர அதற்கு மேலதிக விளக்கம் சொல்லத் தெரியாத அவரின் அந்த இரு வார்த்தைகளுக்குப் பலரிடம் நல்ல செல்வாக்கு இருந்தது. அவருக்குக் குழப்பமே இருந்ததில்லையோ என்னவோ! எல்லாவற்றிற்கும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பதாகத்தான் பேசினார். அப்படிப் பேசிக் கொண்டே இருக்கும் போதே கூட, "வந்து நேரமாச்சுப் போலருக்கு. சீக்கிரம் கெளம்புங்க!" என்று மூஞ்கில் அடித்தாற் போன்ற வார்த்தையை விட்டு விடுவார். வந்தவருக்குத் தர்ம சங்கடமாகப் போய் விடும். ஆனால் அவரை மறுபடியும் ஒரு சந்தர்ப்பத்தில் வைத்தி தாத்தாவிடம் ஆலோசனைக் கேட்கும் சூழ்நிலையைக் காண முடியும்.
            அவரிடம் ஒரு பெரிய தீர்க்கம் இருந்ததாக நினைத்தார்கள். என்ன பெரிய தீர்க்கம்? தனக்குத் தெரிந்தவைகளைக் கொண்டு தன்னளவில் எப்படி வாழ முடியுமோ அப்படி அவருக்கு வாழ முடிந்தது. அப்படி ஒரு மன அமைப்பு அவருக்கு அவரை அறியாமலே இருந்திருக்க வேண்டும். அல்லது அவர் உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.
            அவருக்குத் தெரியாத ஒரு விசயத்தை அவரிடம் பேசுவது குறித்து அலட்டிக் கொள்ள மாட்டார். "அந்த உருப்படாத சங்கதியெல்லாம் நம்மகிட்டப் பேசாதே. நேரமாயிட்டே இருக்கு. சீக்கிரம் கெளம்புற வழியப் பாரு!" என்று ஒரே போடாகப் போடுவார்.
            மற்றவர்கள் மனம் காயம் படும் என்பதைப் பற்றிச் சிந்திக்காத மனிதராக அவர் இருந்தார். அது சரி! அவராக சென்று யாரையும் காயப்படுத்தியதில்லை. அவரிடம் வந்து அவரது மனதுக்கு மாறுபட்டு நடந்து கொண்டு காயம் படுபவரை அவர் என்ன செய்ய முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். அவர் அந்தப்படியே குமரு மாமாவின் விசயத்திலும் நடந்து கொண்டிருந்தால் அப்படிக் கேட்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். அவர் அப்படியா நடந்து கொண்டார்? இரட்டை மனிதர் போல அல்லவா நடந்து கொண்டார்.
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...