செய்யு - 43
நரிவலம் பள்ளியின் பிரதானக் கட்டிடத்தின்
மேல் மாடியில் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூவுக்கான அனைத்து வகுப்பறைகளும் இருந்தன. மையமாக தலைமையாசிரியர் அறை இருந்தது. மாடியேறிச்
செல்பவர்கள் தலைமையாசிரியர் அறையைப் பார்க்காமல் இடது பக்கமோ வலது பக்கமோ செல்ல முடியாது.
அதற்காகத்தான் அப்படி ஓர் ஏற்பாடு. தலைமையாசிரியர் அறைக்கு இடது புறமாக வரிசையாக ப்ளஸ்
ஒன் குரூப்புக்கான வகுப்பறைகள் இருந்தன. வலது புறம் ப்ளஸ் டூ குரூப்புக்கான வகுப்பறைகள்
இருந்தன. அதில் இரண்டு பக்கமும் கடைக்கோடியாக மேத்ஸ் குரூப்புக்கான வகுப்பறைகள் இருந்தது.
அதாவது இடதுபுறக் கடைக்கோடி என்றால் ப்ளஸ் ஒன்னுக்கான மேத்ஸ் குரூப் வகுப்பறை, வலது
புறம் என்றால் ப்ளஸ் டூவுக்கான மேத்ஸ் குரூப் வகுப்பறை. மாடியின் கீழ்ப் பகுதியில்
ஆய்வகங்களும், ஆசிரியர்களுக்கான ஓய்வறைகளும், அலுவலகமும் இருந்தன.
பிரதான மாடிக் கட்டிடத்தின் இரண்டு பக்கமும்
தெற்கு நோக்கி நீண்ட வாக்கில் கூரைக் கொட்டகைகள் இருந்தன. அதில் ஆறாம் வகுப்பிலிருந்து
பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புப் பிரிவுகளும் இருந்தன. இந்தப் பள்ளிக்கூடத்தின்
அமைப்பைப் பார்ப்பதற்கு 'ப' வடிவில் இருக்கும். மேலண்டைப் பக்கம் விளையாட்டு மைதானம்
இருந்தது.
இடதுபுறக் கடைக்கோடி வகுப்பறையின் ஜன்னலை
ஒட்டிய மூன்றாவது டெஸ்கில் விகடு உட்கார்ந்திருந்தான். அங்கிருந்து ஜன்னல் வழியே இடது
பக்கம் பார்த்தால் மைதானமும், அதன் முடிவில் இருக்கும் காம்பெளண்ட் சுவரும், அதை ஒட்டிய
மெயின்ரோடும், மெயின்ரோட்டில் போகும் வாகனங்களும் நன்றாகத் தெரியும். வலது பக்கம்
பார்த்தால் வகுப்பறை. பாடம் பிடித்தால் வலது பக்கம் பார்ப்பதையும், பிடிக்காவிட்டால்
இடது பக்கம் பார்த்துக் கொண்டிருப்பதையும் வழக்கமாக வைத்திருந்தான் விகடு. அத்துடன்
புத்தகத்தை விரித்த படி கவனிப்பது போல கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்கவும்
செய்தான்.
பொதுவாக ஹாஸ்டல் பிள்ளைகள் வகுப்பறையில்
ஒன்றாகச் சேர்ந்து உட்கார மாட்டார்கள். ஹாஸ்டலில் சேர்ந்ததும் சீனியர் பிள்ளைகள் இதைத்தான்
முதன்மையானப் பாடமாகச் சொல்லித் தருவார்கள்.
அதிகாலையில் எழுந்து விடுவதாலும், இரவு
படுப்பதற்கு பத்து மணி ஆகி விடுவதாலும் வகுப்பில் வாத்தியார் பாடம் நடத்தத் தொடங்கியதும்
ஹாஸ்டல் பிள்ளைகள் தூங்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே
பெஞ்சில் ஒன்றாக உட்கார்ந்து தூங்கி ஹாஸ்டல் பிள்ளைகள் வாத்தியாரிடம் வசமாக சிக்கியிருந்திருக்கிறார்கள்.
அப்படி மாட்டிய பிள்ளைகள் ஹெட் மாஸ்டரிடம் அனுப்பப்பட்டு நன்றாக கவனிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அப்படி வசமாய்ச் சிக்கிக் கொண்ட பிள்ளைகள் யோசித்திருக்கிறார்கள், வருங்காலத் தலைமுறை
ஹாஸ்டல் பிள்ளைகளுக்குத் தங்களுக்கு நேர்ந்த இக்கஷ்டம் நேர்ந்து விடக் கூடாது என்று.
அதன் விளைவாக அவர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள், இனிமேல் ஹாஸ்டல் பிள்ளைகள் வகுப்பறையில்
சேர்ந்து உட்காரக் கூடாது என்று. வீட்டிலிருந்து வரும் டே ஸ்காலர் பிள்ளைகளோடு கலந்து
கலந்து உட்காருவது என்று திட்டமிட்டுக் கொண்டார்கள். அவர்களோடு நல்ல சிநேகம் வைத்துக்
கொள்ள வேண்டும் என்பதையும் முடிவு செய்து கொண்டார்கள். அன்றிலிருந்து வீட்டிலிருந்து
வரும் டே ஸ்காலர் பிள்ளைகளோடு ஹாஸ்டல் பிள்ளைகளுக்கு நல்ல சிநேகம் உருவாக ஆரம்பித்தது.
அதைத் தொடர்ந்து மாட்டிக் கொள்ளாமல்
வகுப்பறையில் தூங்குவது குறித்து நிறைய யுக்திகள் வகுக்கப்பட்டன. அதில் முக்கியமானது
புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு ஆசிரியர் பாடம் நடத்த நடத்த அதை நன்றாக கவனிப்பதைப்
போல கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே தூங்குவது. பார்ப்பதற்குப் பிள்ளைகள் வகுப்பையும்
புத்தகத்தையும் நன்றாக கவனிப்பது போல இருக்கும். தூங்கிக் கொண்டு இருப்பது தெரியாது.
இதற்கெல்லாம் புதிதாகச் சேரும் ஹாஸ்டல் பிள்ளைகளுக்கு சீனியர் பிள்ளைகள் போதுமான பயிற்சி
கொடுப்பார்கள். ஒரு சில நாட்களில் புதிய பிள்ளைகள் இந்தப் பயிற்சியில் தேறி விடுவார்கள்.
இதில் இருந்த ஒரே குறைபாடு என்னவென்றால் திடீரென்று வாத்தியார் ஹாஸ்டல் பிள்ளைகள் கவனிப்பது
போல தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஏதேனும் கேள்விகள் கேட்டால் அப்படியே உட்கார்ந்து
இருந்ததுதான். பதில் தெரியாவிட்டாலும் வாத்தியார் கேள்வி கேட்கும் போது எழுந்து நிற்கவாவது
வேண்டுமே. அப்படியே ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தால் கண்டுபிடித்து விடுவார்கள்
இல்லையா! இந்த இடத்தில்தான் வீட்டிலிருந்து வரும் டே ஸ்காலர் பிள்ளைகளின் சிநேகம் ஹாஸ்டல்
பிள்ளைகளுக்கு உதவியது. அவர்கள் அப்போது தொடையில் கிள்ளி விடுவார்கள். திட்டப்படி
இதையெல்லாம் முன்கூட்டியே பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பிள்ளைகளோடு பேசி வைத்துக்
கொண்டு விடுவார்கள் ஹாஸ்டல் பிள்ளைகள். தொடையில் கிள்ளியதும் அனிச்சை செயலாய் எழுந்து
நின்று விடுவார்கள் ஹாஸ்டல் பிள்ளைகள். எழுந்து நின்று திரு திருவென்று விழிப்பார்கள்.
விழிப்பதைப் பார்த்து வாத்தியார் இன்னொரு முறை கேள்வியை அழுத்தமாய்க் கேட்பார். அதைப்
பற்றிதான் யோசித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு பால்வா காட்டி விட்டு அதை ஒட்டி எதையாவது
பதிலாகச் சொல்லித் தப்பி விடுவார்கள். இதே போல் பீரியட் மாறும் நேரம், இன்டர்வெல்
மணி அடிக்கும் நேரம் என்று பல நேரங்களில் தொடையில் கிள்ளி ஹாஸ்டல் பிள்ளைகளுக்கு உதவி
செய்வார்கள் வீட்டிலிருந்து வரும் டே ஸ்காலர் பிள்ளைகள். இதற்கு பிரதி உபகாரமாக அந்தப்
பிள்ளைகளுக்கு பாட நோட்டுகள் எழுதிக் கொடுப்பது, ரெகார்ட் நோட்டு எழுதிக் கொடுப்பது,
ரெகார்ட் நோட்டில் படம் வரைந்துக் கொடுப்பது என்று பல உதவிகளைச் செய்வார்கள் ஹாஸ்டல்
பிள்ளைகள்.
சபரி வாத்தியார் அன்று இங்கிலீஷ் பாடம்
நடத்திக் கொண்டிருந்தார். விகடு கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான்.
பொதுவாக ப்ளஸ் ஒன் மேத்ஸ் குரூப் பிள்ளைகளுக்கு வகுப்பறையில் தூங்குவது மிகவும் கடினமானது
மற்றும் சவாலானது. பக்கத்தில் இருக்கும் பிசினஸ் மேத்ஸ் குரூப் பிள்ளைகள் சதா சர்வகாலம்
சத்தம் போட்டுக் கொண்டே இருப்பார்கள். அதனால் தூங்கத் தொடங்கியதும் அவர்களின் அவட்டைச்
சத்தம் எழுப்பி விட்டு விடும். விகடுவுக்கு அந்தச் சத்தம் பழகி பின் தூங்கிப் பழகுவதற்கு
சில மாதங்கள் ஆனது.
சபரி வாத்தியார் கையோடு இங்கிலீஷ் புத்தகம்
கொண்டு வருவார். வழக்கமான இங்கிலீஷ் புத்தகத்தை விட அவரது புத்தகம் ரெண்டு மடங்கு
மொத்தமாக இருக்கும். அந்த மொத்தத்திற்கு காரணம், அவர் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்துக்கும்
இடையே ஒரு வெள்ளைத் தாளை வைக்கச் செய்து புத்தகத்தை அவர் பைண்டிங் செய்திருந்ததுதான்.
அந்த வெள்ளைத் தாளில் ஏகப்பட்ட குறிப்புகளை எழுதி வைத்திருப்பார்கள். எழுதி வைத்திருக்கும்
எல்லா குறிப்புகளையும் அவர் பாடம் நடத்தும் போது சொல்ல சொல்ல தூக்கம் அப்படியே சொக்கிக்
கொண்டு வரும். விகடு அப்படித்தான் சபரி வாத்தியார் வகுப்பில் பக்கத்து வகுப்பறையில்
இருந்த பிசினஸ் மேத்ஸ் பிள்ளைகளின் சத்தத்தைக் கடந்தும் தூங்கப் பழகியிருந்தான்.
அன்று சபரி வாத்தியார் பாடம் நடத்த நடத்த
பக்கத்தில் இருந்த பிசினஸ் மேத்ஸ் குரூப் பிள்ளைகளின் சத்தம் எகிறிக் கொண்டே இருந்தது.
விகடுவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரமேஷ் இவ்வளவு சத்தத்திலும் விகடு தூங்குவதை
ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
நீண்ட நேர சத்தம் பொறுக்காமல் சபரி வாத்தியார்
வெகுண்டு எழுந்து விட்டார். ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று விட்டார். பொறுமையிழந்த
வேட்டையாடும் புலியைப் போல வேக வேகமாக அவர் பிசினஸ் மேத்ஸ் வகுப்பறைக்குச் செல்ல எல்லா
பிள்ளைகளும் அவரைப் பின்தொடர்ந்து சென்றிருந்தார்கள். எல்லா பிள்ளைகளும் என்றால் விகடுவைத்
தவிர எல்லா பிள்ளைகளும். பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரமேஷ் ஓர் ஆர்வத்தில் கிளம்பியதில்
தொடையைக் கிள்ளி சிக்னல் செய்வதை மறந்து விட்டான்.
வாசலில் நின்றபடி சபரி வாத்தியார் வகுப்பில்
வாத்தியார் யாருமில்லை என்று நினைத்துக் கொண்டு பிசினஸ் மேத்ஸ் குரூப் பிள்ளைகளை,
"நாய்ப் பசங்களா! ஏன்டா இப்படி பிசாசுங்க மாதிரி சத்தம் போடுறீங்க..." என
ஆரம்பித்து முனா புனா, கனா, தேனா புனா, வேனா மனா என்றெல்லாம் கண்டபடி திட்டியிருக்கிறார்.
அவர் அப்படித் திட்ட திட்ட அதிர்ச்சியாகிப் பிள்ளைகள் அமைதியாகி விட்டார்கள். அழுகைக்
குரல் மட்டும் கேட்டிருக்கிறது. சபரி வாத்தியார் அழுகைச் சத்தம் கேட்டு வகுப்பறைக்குள்
உள்ளே நுழைந்திருக்கிறார். பிசினஸ் மேத்ஸ் எடுக்கும் வாத்தியச்சியம்மா நாற்காலியில்
உட்கார்ந்தபடி மேசையில் தலைகவிழ்ந்தவாறு அழுது கொண்டிருந்தார். "சாரி டீச்சர்!
சாரி டீச்சர்! ஐயம் எக்ஸ்ட்ரீம்லி சாரி டீச்சர்!" என்று பலவாறாகப் புலம்பியிருக்கிறார்
சபரி வாத்தியார். வாத்திச்சியம்மா அழுகையை நிறுத்தியபாடில்லை. "ஹெச்சம் சாரு ஒரு
ரிட்டன் ஒர்க் கொடுத்திருந்தார். அத பாத்துட்டு புள்ளீங்கல படிக்கச் சொல்லிட்டு இருந்தம்.
ச்சீ! ஒரு லேடீ டீச்சர் இருக்குறாங்கன்னு கூட பாக்காம இப்படி நாராசமாக பேசுறீங்களே.
ன்னா மனுசம் சாரு நீங்க!" என்று அந்த வாத்திச்சியம்மா மேலும் மேலும் குலுங்கிக்
குலுங்கி அழ ஆரம்பித்து விட்டார்.
இதற்கிடையில் சபரி வாத்தியாரோடு வெளியே
வந்த பிள்ளைகளில் சிலர் ஹெட்மாஸ்டர் ரூமுக்கு போய் நடத்தை அவர் காதில் போட்டு விட்டிருக்கிறார்கள்.
ஹெட் மாஸ்டர் வேக வேகமாக வந்தார். பிள்ளைகள் வகுப்பறைக்கு ஓட முயல, "யாரும் அந்த
எடத்த வுட்டு நகரக் கூடாது! நகந்தே தொலச்சுடுவேம்!" ஹெட் மாஸ்டரிடமிருந்து குரல்
வர பிள்ளைகள் நின்ற இடத்தில் சிலையாய்ச் சமைந்தார்கள்.
ஹெட் மாஸ்டர் பிசினஸ் மேத்ஸ் வகுப்பறையில்
நுழைந்தார். அங்கே சபரி வாத்தியார் நிற்பதைப் பார்த்து, "ன்னா மேன்! ஒங்களுக்கு
இங்க ன்னா வேல?" என்றார். சபரி வாத்தியார் ஒன்றும் சொல்லாமல் அதாவது சொல்ல முடியாமல்
தலைகவிழ்ந்தபடி நின்றார்.
"ஏம் மேத்ஸ் குரூப்லாம் இப்டி அவுட்
சைட்ல நிக்குது? நீங்க வாரச் சொன்னீங்களா?" ஹெட் மாஸ்டர் கேட்க அதற்கும் சபரி
வாத்தியார் அப்படியே நின்றிருக்கிறார்.
"கொஸ்டீன் பண்ணா ஆன்சர் பண்ணுய்யா!"
என்று ஹெட் மாஸ்டர் கோபத்தில் இறங்கி, "ஒன் செயல்பாடு சரியில்ல!" என்று
ஒருமையில் இறங்கி அடித்தார். சபரி வாத்தியாரின் கண்கள் பொல பொலத்துக் கொட்ட ஆரம்பித்து
விட்டது.
"ஒன் கிளாஸ் ரூம்ல ஒரே ஒருத்தம் உள்ள
இருக்கட்டும் ஒன்ன வுட்டுர்ரம். இப்படி ஒருத்தம் கூட உள்ள ல்லாம ஒட்டு மொத்த கிளாஸே
வெளில நின்னா ன்னா நடக்குதீங்க? இதாங் நீ கிளாஸ் நடத்துற ரோக்கிதியா?" ஹெட் மாஸ்டர்
கேட்க கேட்க பிசினஸ் மேத்ஸ் வகுப்பறையிலிருந்து பொல பொலக்கும் கண்களோடு வெளியே எட்டிப்
பார்த்தார் சபரி வாத்தியார். ஒட்டு மொத்த மேத்ஸ் குரூப்பும் வெளியே நிற்பது அவர் கண்களுக்கு
நன்றாகத் தெரிந்தது.
"கம் இன்டு யுவர் கிளாஸ் ரூம்யா!"
என்றபடி ஹெட்மாஸ்டர் சபரி வாத்தியாரை அழைத்துக் கொண்டு மேத்ஸ் குரூப் வகுப்பறைக்குள்
நுழைந்தார். மூன்றாம் பெஞ்சின் சன்னலோரத்தில் இங்கிலீஷ் புத்தகம் டெஸ்கின் முன் விரிந்திருக்க
விகடு கண்கள் விரிய புத்தகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த வேகத்தில்
உள்ளே நுழைந்த ஹெட் மாஸ்டர் அப்படியே வெளியேறினார்.
"திஸ் இஸ் லாஸ்ட் வார்னிங். இனி ஒரு
தடவ வாத்தியாரு வெளில வந்தார்னு யாரும் வெளில வந்தீங்க டி.சி.யக் கிழிச்சு கையில கொடுத்துடுவம்.
கெட் இன்டு த கிளாஸ். ரிடிகுலஸ்!" என்று ஹெட் மாஸ்டர் சொன்னதுதான் தாமதம், வெளியில்
சிலையாய் நின்றிருந்த பிள்ளைகள் உயிர் பெற்று வகுப்பறைக்குள் உள்ளே ஓடி வந்தார்கள்.
விகடுவின் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும்
ரமேஷ் வேக வேகமாக ஓடி வந்து விகடுவின் தொடையில் கிள்ளினான். விகடு பதறியடித்தபடி எழுந்து
நின்று மேசைக்குப் பக்கத்தில் சபரி வாத்தியாரைப் பார்த்தான். மேசைக்குப் பின் கரும்பலகைதான்
இருந்தது. சபரி வாத்தியாரைக் கணவில்லையே என வகுப்பறையைச் சுற்றிலும் கண்களைச் சுழல
விட்டான். பிள்ளைகள் மரண அமைதியில் உட்கார்ந்திருந்ததைப் பார்க்க விகடுவுக்கு பல நாள்
திருடன் ஒரு நாள் அகப்பட்ட கதை ஞாபகத்தில் வந்து வியர்த்துக் கொட்ட ஆரம்பித்து விட்டது.
தான் தூங்குவதைப் பார்த்து சபரி வாத்தியார் தானே நேரடியாக ஹெட்மாஸ்டரிடம் ரிப்போர்ட்
பண்ண போய் விட்டார் போல நினைத்து என அவன் உடல் நடுங்க ஆரம்பித்தது.
"அநாவசியமாக இனிம க்ளாஸ் விட்டு வெளிய
வந்து வேற க்ளாஸ்ல புகுந்தே சீட்டக் கிழிச்சு வூட்டுக்கு அனுப்பிடுவம். பீரியட் முடிஞ்சதும்
உள்ள என்ன வந்து பாரூ! கெட் லாஸ்ட்!" என்று ஹெட் மாஸ்டர் சொல்வதைக் கேட்டு வகுப்பறைக்குள்
வந்தார் சபரி வாத்தியார்.
சபரி வாத்தியார் கண்ணீர் மல்க வியரத்து
விறுவிறுத்து நடுங்கிக் கொண்டிருந்த விகடுவைப் பார்த்தார். விகடு குழப்பத்தில் ரமேஷைப்
பார்த்து ஒரு கண்ணால் முன்பே எழுப்பி விடாமல் என்ன பண்ணினாய் என்பது போல அநியாயத்துக்குப்
பாவமாய் கேட்டான்.
"ஒன்லி ஒன் ஸ்டூடண்ட். தட் இஸ் விகடு.
இன்னிக்கு நம்மள காப்பாத்திட்டாம். ஹி இஸ் எ குட் ஸ்டூடண்ட். அவனும் ஒங்கள மாதிரி வெளில
ஓடி வந்திருதாம்னா இன்னிக்கு எஞ் சீட்டு கிழிஞ்சிருக்கும். ன்னா நடந்தா ஒங்களுக்கு
ன்னா? எதுக்கு நீங்க வெளில ஓடி வர்றீங்க? அவனப் பாருங்க. எவ்ளோ டிஸிபலின்! ன்னா நடந்தா
நமக்கென்னன்னு ஹெட் மாஸ்டர் வந்து பாக்குறப்பயும் புக்க வுட்டு அவனோட கண்கள் அந்தாண்ட
இந்தாண்ட நகர்ல தெரியுமா! ஆல் ஆப் அஸ் அவன பாலோ பண்ண கத்துக்கோங்க! விகடு! யூ சேவ்டு
மை லைப்!" என்று சொல்லி விட்டு ஆழ்ந்த
பெருமூச்சு விட்டார் சபரி வாத்தியார். அப்படி என்னதான் இவ்வளவு நேரம் நடந்தது இந்த
பள்ளிக் கூடத்தில் என்று புரியாமல் விகடுவும் ஓர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான்.
*****
No comments:
Post a Comment