27 Apr 2019

க.நா.சு.வின் பொய்த்தேவு - நாவல் அறிமுகம்



முக்திக்காக மனிதரைத் தின்னும் தெய்வம்
            முக்தி, ஆன்ம விடுதலை என்பதை முன் வைக்காத படைப்பிலக்கியங்கள் குறைவு. அதற்கான ஆன்ம விசாரம் மிக நீண்ட சிந்தனைப் பரப்பை உறிஞ்சி எடுத்து விடக் கூடியவை.
            ஆசை காட்டி உள்ளே இழுத்து, அந்த ஆசைகளை நிறைவேற்றித் தருவதாகச் சொல்லி, பின் அவைகள் எல்லாம் மாயைகள் என்று சொற்களைச் சுழற்றி, செய்த பிழைகளையெல்லாம் மாயைக்குள் ஆழ்த்தி சிக்கிக் கொண்ட மனதுக்கு சிக்கெடுக்கும் வேலையை பலவிதங்களில் முயன்ற பார்க்கின்றன ஆன்ம விசாரங்கள் செய்யும் இலக்கியங்கள்.
            க.நா.சு.வும் அப்படி ஓர் ஆன்ம விசாரணையைத்தான் ஒரு கதைப் போக்கில் பொய்த்தேவு எனும் நாவல் வடிவில் முயன்று பார்க்கிறார். எதுவும் இல்லாமல் தொடங்கி எல்லாம் கிடைத்த பின்னும் அதுவே போதுமானதாகி விடுகிறதா? இல்லை அந்த இடத்திலும் ஒரு விடுபடல் தேவையாகிறதா? என்பது அவரது ஆழ்மனதின் அழிக்க முடியாத கேள்வியாக இருந்திருக்கக் கூடும். அடிப்படையில் படைப்புகள் ஆழ்மனதில் தொக்கி நிற்கும் கேள்விகளுக்கான விடை காணு முயலும் முயற்சியாகவே இருக்கிறது. தம் ஆழ்மனதில் மரபார்ந்து ஊறி விட்ட தத்துவ விசாரணைக்கு ஒரு நாவல் போக்கில் விடையைத் தேடிப் பார்க்கிறார் க.நா.சு.
            கும்பகோணத்துக்குப் பக்கத்தில் உள்ள சாத்தனூரில் கறுப்ப முதலிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாகப் பிறந்தவன் சோமு. கறுப்ப முதலி சாத்தனூரில் அட்டாதுட்டி செய்து அலையும் போக்கிரி. வள்ளியம்மை பலரோடு இருந்து பார்த்து விட்டு கறுப்ப முதலியோடு நிலைத்தவள்.
            ஊரைச் சுற்றி அலைவதிலும், ஊரில் உள்ள ஒவ்வொன்றையும் அப்படியே பார்த்துக் கொண்டே நிற்பதிலும் சோமுப் பயலுக்கு அலாதிப் பிரியம். நொடிதோறும் அவன் மனதில் உருப்பெறும் ஆசைகள் அலாதியானவை. அந்த ஒவ்வொரு ஆசையும் அவனுக்கு அந்தந்த நேரத்துத் தெய்வங்கள்.
            குடிபோதையில் கறுப்ப முதலியால் நையப்புடைக்கப்பட்ட ஆசாமி இறந்து போக, அவரை ஒழித்துக் கட்ட சமயம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தூங்கிக் கொண்டிருந்த கறுப்ப முதலியைக் குண்டுகட்டாக கட்டித் தூக்கிக் கொண்டு போலீஸில் ஒப்படைத்த பின் கறுப்பு முதலி ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்.
            சோமுவை வளர்ப்பது வள்ளியம்மையின் பாடாக ஆகிறது. அவள் ராயர் வீட்டில் பாடுபட்டு சோமுவை வளர்க்கிறாள். அவளின் மனக்குறையாக சோமு ஆகும் போது, ஊரைச் சுற்றி வெட்டியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அலையும் சோமுவை ராயர் வீட்டில் வேலைக்குச் சேர்த்து விட்டு அமைதி கொள்கிறாள்.
            ராயர் வீட்டில் சோமுவின் ஆசை முதல் முதலாக நிறைவேறுகிறது. அவன் விரும்பிக் கேட்ட கரைவேட்டியை வாங்கித் தருகிறார் ராயர். இதனால் ராயரோடு அணுக்கமாகி அவர் செல்லுமிடங்கள் எல்லாம் சென்று தொடர்புகளை வளர்த்துக் கொள்கிறான் சோமு.
            ராயரின் மகள் கங்காவுக்கு திருமண ஏற்பாடுகள் நிச்சயம் ஆகிறது. தங்கமும், வெள்ளியும், பித்தளையுமாக வீட்டை நகைநட்டு, பாத்திரப் பண்டங்கள் மற்றும் துணிமணிகளால் வீட்டை நிரப்புகிறார் ராயர். இதுதான் சமயம் என்று ஊரின் கொள்ளைக்காரன் பிச்சாண்டி தன் ஆட்களோடு ராயரின் வீட்டில் கை வைக்கிறான். சோமு இல்லாவிட்டால் பிச்சாண்டி ராயர் வீட்டைத் துடைத்துக் கொண்டு போயிருப்பான். சோமுதான் இதைச் சாமர்த்தியமாக யூகித்து குதிரையேறி கும்பகோணத்துக்குப் போய் மாஜிஸ்ட்ரேட்டிடம் விவரம் சொல்லி போலீஸ் பட்டாளத்தோடு சாத்தனூர் வந்து காபந்து செய்கிறான்.
            ராயருக்கு சோமுவின் மேல் பெற்றெடுக்காத மகன் போல அலாதி பிரியம் உண்டாகி விடுகிறது. ராயருக்கு மட்டுமில்லாமல் அவரின் மருமகன் சாம்பமூர்த்தி ராயருக்கும் அப்படியே ஆகி விடுகிறது. சோமுவின் வாழ்க்கை நல்லபடியாக அமைந்து விட்டதாக கருதி வள்ளியம்மை போய் சேர்ந்து விடுகிறாள். ராயரும் போய் சேர்ந்து விடுகிறார்.
            குடியும் கூத்தியாளுமாக களிக்க ஆரம்பிக்கிறான் சோமு. பாப்பாத்தியம்மாள் என்ற பெண்ணோடு உல்லாசமாக காலம் போகிறது சோமுவுக்கு. சாம்பமூர்த்தி ராயருக்கும், கங்காவுக்கும் இதனால் மனக்கிலேசம் உண்டாகிறது. சோமுவைத் திருத்தி விட வேண்டும் என்று சாம்பமூர்த்தி ராயர் ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறார். கல்யாணம் ஆன பின்னும் சோமுவின் அட்டகாசம் அதிகமாகிப் போகிறது. சோமுவைக் கட்டிக் கொண்ட அந்தப் பெண் இதையெல்லாம் பார்த்து மனம் நொந்து ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொடுத்து விட்டு இறந்து போகிறாள். நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் சோமுவின் களியாட்டங்கள் சாம்பமூர்த்தி ராயரின் மனதை அரித்தெடுக்கிறது. தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றியவன் கண் முன்னே சீரழிவதா என்று மனம் கலங்குகிறார்.
            கங்காவோடு கலந்தாலோசித்து அவரே தம் செலவில் இடம் பார்த்து சாமான்களை வாங்கி வைத்து ஒரு மளிகைக் கடையை ஆரம்பித்துக் கொடுக்கிறார். சோமுவின் வாழ்க்கையில் அபாரமான திருப்பு முனை உண்டாகிறது. சோமுப் பயலாகத் திரிந்தவன் சோமசுந்தர முதலியாராக விஸ்வரூபம் எடுக்கிறார்.
            சாத்தனூர் மளிகைக் கடையைத் தொடர்ந்து கும்பகோணத்திலும் பெரிய மளிகைக் கடையாகத் திறக்கிறார் சோமசுந்தர முதலியார். கோவிந்தப் பிள்‍ளையோடு சேர்ந்து பஸ் விட்டு வியாபாரம் பண்ணுகிறார். இன்ஸ்யூரன்ஸ் ஏஜெண்டாகி ஜில்லா ஆர்கனைஸராகி தொட்டதெல்லாம் துலங்கும் கைராசிக்காரர் ஆகிறார்.
            இவரை உயர்த்தி விட்டுச் சரிந்து போன ராயர் குடும்பத்தை கை தூக்கி விட ஆனது செய்கிறார். இவை எல்லாம் அவர் மனதில் உண்டான ஆசைதான் என்கிறார் க.நா.சு. நொடிக்கு நொடி அவர் மனதில் உண்டாகும் ஆசையை நிறைவேற்றும் திராணியும், நுட்பமும் அவருக்குக் கைகூடிக் கொண்டே போகிறது.
            பேர் சொல்லும் பெரும் பணக்காரராய் ஆன பின்னும், கும்பகோணத்தில் பெரும் பங்களா கட்டி குடியேறிய பின்னும் அவர் மனதில் ஒசைகள் கேட்க ஆரம்பிக்கின்றன. குறிப்பாக சாத்தனூர் கோயில் மணியின் ஓசை.  அவருக்கு விடுபடல் தேவையாயிருக்கிறது. அவரது ஒரே பிள்ளையும் இந்தக் கிழம் எப்போது செத்தொழியும் என்று நினைக்கிறான்.
            சோமசுந்தர முதலியார் பழைய சோமு பயலாக மாறி காமக் களியாட்டங்களில் ஒரு கலக்கு கலக்குகிறார்.
            அரிசிப் பதுக்கல் தொடர்பான ஒரு குற்றச்சாட்டில் உண்மையை ஒத்துக் கொண்டு அபராதம் செலுத்தி விட்டு சிறைக்கும் செல்கிறார். சிறைவாசம் முடிந்த பின்னும் அவரது அறிவுக்கும், சாமர்த்தியத்துக்கும் அவரது சகாக்கள் அவரை பின் தொடர விரும்பினாலும் யாருக்கும் தெரியாமல் காணாமல் போய் சோமு பண்டாரமாகி இறக்கிறார்.
            அவரது கருத்துப்படி ஒவ்வொரு நொடியும் தோன்றும் ஆசைகள் ஒவ்வொன்றும் தெய்வங்களாக மனதுக்குள் உருபெறுகின்றன. அடுத்த நொடியே அது சலிக்கும் போது அந்த ஆசைகளுக்குண்டான தெய்வங்கள் பொய்த்தெய்வங்களாக அதாவது பொய்த்தேவாக ஆகின்றன. பணத்தாசை ஒரு தெய்வமாக, பெண்ணாசை ஒரு தெய்வமாக, மண்ணாசை ஒரு தெய்வமாக, பொன்னாசை ஒரு தெய்வமாக இப்படி எல்லாமே தெய்வங்கள்தான். எந்தத் தெய்வத்திடம் நிலைக்கிறது மனசு? மனசுக்கு ஒரு கட்டத்தில் எல்லாம் பொய்த்தேவுகள்தான்.
            கடைசியில் பண்டாரத்துக்குண்டான குடுக்கை, கந்தைத் துணிக் கூட இல்லாமல் செத்துக் கிடக்கிறார் சோமு பண்டாரம். பொதுவாக சமயங்கள் மாயை என்று சொல்லும் கருத்தாக்கத்தை க.நா.சு. பொய்த்தேவு என்ற கருத்தாக்கம் வழியே காட்ட விழைகிறார். ஆசைகள், லட்சியங்கள், அபிலாஷைகள், கனவுகள் கை கூடிய பின் ஏற்படும் சலிப்பிற்குப் பின் எல்லாம் பொய்யாய்த் தேடிய தெய்வங்களாகி விடுகின்றன. கடைசியில் அத்தெய்வங்களை உண்டாக்கிய மனசு செத்தொழிந்து உடம்பும் செத்தொழிகிறது.
            கடைசியில் எதுவுமில்லை என்று செத்தொழியும் உடலுக்குத்தான் எவ்வளவு பசி, ஆசைகள், ஏக்கங்கள்.
            க.நா.சு.வே சொல்லும் வகையில்... 'எச்சிற்கலைகள் வந்து விழுந்து உடனே குறப்பாளையத்துக்கும் நாய் மந்தைக்கும் பாரதப் போர் தொடங்கியது. குறப்பாளையந்தான் இறுதி வெற்றி அடைந்தது என்று சொல்லவும் வேண்டுமா?'
            க.நா.சு.வின் இந்த வரிகளை ஏற்றுக் கொள்ள முடியுமானால் அவரின் போய்த்தேவையும் ஏற்றுக் கொள்ளலாம். அதை ஏற்றுக் கொள்ள முடியாது போனால் பொய்த்தேவும் ஒரு பொய்த்தேவே.
            எல்லாருக்குமா சோமுவைப் போல் முயன்றதெல்லாம் நிறைவேறுகிறது? எவ்வளவு கடினமாக முயன்றும் பசியோடு போராடிப் பசிக்குப் பலியானவர்களும் இருக்கிறார்கள் எனும் போது பசி எனும் பிணியைப் போக்கிக் கொள்ள விழையும் ஆசைக்கானத் தெய்வம் இந்த உலகில் பொய்த்தேவு ஆகி விடப் போவதில்லை. நம்முடைய தெய்வங்களுக்கானப் படையல்கள் அதையே உறுதிபடுத்துகின்றன. காலம் காலமாக நீண்டு கொண்டே போகும் மனித குலத்தின் பசியெனும் ஏக்கத்தின் நிஜமான குறியீடு அது.
            சோமுவைப் போலப் பண்டரமாகி இறக்க தனித் துணிச்சல் வேண்டுந்தான். அதை விட துணிச்சல் அதிகம் இருந்தால்தான் மக்களோடுப் பழகி, மக்களுக்கு சேவை செய்யும் மனநிலைக்கு வர முடியும். அவரைப் பண்டாரமாக்கும் சிவன் கோயிலின் மணியோசை கூட 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்றுதானே ஒலிக்கிறது.
            பொய்த்தேவுகளை உருவாக்கும் மனதை அழிக்க நினைப்பதை விட, நிஜ தெய்வங்களாக பசியோடு இருக்கும் உலகை நோக்கி அதைச் செலுத்துவதுதான் தெய்வமாக மனிதர் முற்று பெறுவதற்கான சரியான வழியாக இருக்கும். மனிதர்கள்தான் நிஜ தெய்வங்கள். தெய்வங்கள் பெரும்பாலும் மனித உருவதில்தானே இருக்கின்றன. அல்லது தெய்வங்கள் இருக்கும் மனித உருவில்தானே மனிதர்கள் இருக்கிறார்கள்.
            மனிதர்கள் உருவாக்கிய தெய்வங்கள் அழிந்து போகலாம். அவர்கள் எதற்காக தெய்வங்களை உருவாக்கினார்களோ அது அழிந்துப் போகப் போவதில்லை. அவைகள் புதிய புதிய தெய்வங்களாக உருவாகிக் கொண்டேதான் இருக்கப் போகின்றன. படையலை விரும்பிக் கேட்கும் எல்லா தெய்வங்களையும் பார்க்கும் போது அவைகள் பசிக்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பசியைப் போக்கும் என்ற நம்பிக்கையில்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பின் அதே தெய்வங்கள் ஆன்ம விசாரம், ஆன்ம விடுதலை, முக்தி என்று மனிதர்களையே தின்னத் தொடங்கி விட்டன.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...