26 Apr 2019

சாவின் பேரொலி



செய்யு - 66
            வார்டனும், ஹெட்மாஸ்டரும் பதறியடித்துக் கொண்டு சைக்கிளில் வந்தனர். அவர்களின் பின்னால் செய்தி சொன்ன ப்ளஸ்டூ பிள்ளைகள் ஓடி வந்தனர். நிலைமையின் விபரீதத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தவிப்பில் இருந்தனர். ஹெட்மாஸ்டர் சைக்கிளை விட்டு இறங்கி அப்படியே போட்டு விட்டு கீற்றுக் கொட்டகையின் பக்கம் ஓடினார். பின்னால் ஓடி வந்த பிள்ளைகள் சைக்கிளை நிமிர்த்தி ஸ்டாண்ட் போட்டனர். வார்டன் அப்படி சைக்கிளைக் கீழே போட்டு விட்டு ஓடவில்லை. அவர் அவசர அவசரமாக நிறுத்தி விட்டு ஓடினார்.
            ஹெட்மாஸ்டரையும், வார்டனையும் பார்த்ததும் எல்லா பிள்ளைகளும் விலகி வழிவிட்டனர். அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த முகிலனைப் பார்த்தார். அவர் கண்களை மூடிக் கொண்டு நெற்றியைச் சுருக்கினார். அவர் கண்களை மூடிக் கொண்டு அழுகிறாரா, யோசிக்கிறாரா என்பது குழப்பமாக இருந்தது. அப்படி அவர் நின்று கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு வாத்தியாராக வரத் தொடங்கியிருந்தனர்.
            "ன்னா சார் இப்படி ஆகிப் போச்சு!" என்றார் சபரி வாத்தியார் வந்ததும். அதற்கு ஹெட்மாஸ்டர் எந்தப் பதிலும் தரவில்லை. சபரி வாத்தியார் சொன்னதற்கு எந்தப் பதிலும் கிடைக்காததால் மற்ற வாத்தியார்கள் இது குறித்து நெருங்கி வந்து பேச யோசித்தனர். மெளனத்தையே கவசமாக கொள்வது நல்லதாக அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.
            "பிள்ளைகளா ஆஸ்டலுக்கு உள்ளே போங்க! வார்டன் நீங்க போங்க! உள்ள கொண்டு போய் உட்கார வைங்க. இன்னும் சாப்புடலல. சாப்பிட்ருக்க மாட்டாங்க. அது அப்பறம் பாத்துக்கலாம். டீச்சர்ஸ் ரண்டு பேர் போங்க!" என்றார் ஹெட்மாஸ்டர்.
            அப்படிச் சொல்லியும் பிள்ளைகள் அங்கேயே நிற்பதா, ஆஸ்டலுக்கு உள்ளே போவதா என்ற குழப்பத்தில் இருந்தனர். எல்லாரின் கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. வழக்கமாக இப்படி ஹெட்மாஸ்டர் சொன்னால் அலறியடித்துக் கொண்டு அவரின் அடுத்த வார்த்தையைக் கேட்கக் கூட நிற்காமல் ஓடும் பிள்ளைகளா இப்படி நிற்கிறார்கள் என்று அவர் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இருந்தது.
            "அதாஞ் சார் சொல்றாங்கள்ல! வாங்க!" என்று நான்கைந்து பிள்ளைகளின் தோளில் கை வைத்து இழுத்தபடி ஆஸ்டலை நோக்கி வார்டன் நடந்தார். நின்று கொண்டிருந்த வாத்தியார்கள் அதைப் புரிந்து கொண்டவர்கள் போல நடந்து கொண்டனர். அவர்களும் வார்டனைப் போல நான்கைந்து பிள்ளைகளின் தோள் மேல் கை போட்டு ஆஸ்டலை நோக்கி நடத்திக் கொண்டு வந்தனர். ஆஸ்டலை நோக்கி நகராமல் நின்று அழுது அடம் பிடித்த ஒரே ஒரு பையனை மட்டும் சபரி வாத்தியார் கைதாங்கலாய் கொண்டு வந்தார்.
            பிள்ளைகள் அனைவரும் ஹாஸ்டல் வராந்தாவில் ஆங்காங்கே அமர வைக்கப்பட்டார்கள்.
            வாத்திச்சியம்மாக்களும் ஒவ்வொருவராய் வந்தனர். அவர்கள் வட்டமாக உட்கார்ந்து ஒருவர் தோள் மேல் ஒருவர் கை போட்டு ஒப்பாரி வைத்தனர். அவர்களின் ஒப்பாரி ஓலம் பிள்ளைகளின் அழுகையை மேலும் கிளறி விட்டது. பிள்ளைகளும் அவர்களைப் போல் வட்டமாக ஒருவர் தோள் மேல் கை போட்டு உட்கார்ந்து அழ ஆரம்பித்தனர். அழுகையின் ஒலி அதிகமாகத் துவங்கியது.
            "கொஞ்சம் யாரும் பதற்றப்படாதீங்க! அமைதியா இருங்க!" என்றார் வார்டன். அதற்கெல்லாம் பிள்ளைகள் கட்டுப்படுபவர்கள் போல இல்லை. அவர்கள் ஒரு சாவு வீட்டின் அவலப் பேரொலியை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
            அதுவரை ஹாஸ்டல் காம்பெளண்டின் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஹாஸ்டலின் உள்ளே வர ஆரம்பித்தனர்.
            "யாரும் உள்ள வர வாணாம். போலீஸ் வர வரிக்கும் உள்ள வர வாணாம். யாரயும் உள்ள வுட வாணாம்!" என்று சத்தம் போட்டார் ஹெட்மாஸ்டர்.
            வாத்தியார்மார்கள் அப்படி உள்ளே வந்தவர்களை வெளியே போகுமாறு கேட்டுக் கொண்டனர். மக்கள் பெருமளவில் உள்ளே வருவது போலத் தெரிந்ததும் உள்ளே வந்தவர்களை அனுப்பி விட்டு ஹாஸ்டலின் வெளிகேட் சாத்தப்பட்டது.
            உடனடியாக பள்ளிக்கூடம் விடப்பட்டிருக்க வேண்டும். வாத்தியார்மார்களைத் தொடர்ந்து வாத்திச்சியம்மாக்களும் வரிசையாக வந்து கொண்டிருந்தனர். போலீஸுக்கு தகவல் கொடுக்கபட்டிருக்க வேண்டும். அல்லது அவர்களாகவே செய்தி கேள்விபட்டும் வந்திருக்கலாம். போலீஸார் வந்ததும் தூக்கில் தொங்கிய முகிலன் இறக்கப்பட்டான். அவனது பிரேதம் அந்தக் கீற்றுக் கொட்டகையிலேயே கிடத்தப்பட்டது.
            போலீசாரும், ஹெட்மாஸ்டரும் கீற்றுக் கொட்டகையின் அருகில் மாறி மாறிப் பேசிக் கொண்டிருந்தனர். அதற்குள் கண்டியப்பநாதரின் மருமகன் மணிவாசகநாதரும், அவரின் மகன் ஆண்டியப்பநாதரும் வந்திருந்தனர். அவர்களின் சொல்படிதான் இதில் வழக்கு பதியப்படும் என்று பிள்ளைகள் பேசிக் கொண்டது ஆச்சரியமாக இருந்தது. ஹாஸ்டலில் இருந்தாலும் இந்தப் பிள்ளைகளுக்குத்தான் எவ்வளவு விசயங்கள் தெரிகின்றன. அவர்கள் அப்படிப் பேசியதில் பிழையேதும் இல்லை. நரிவலத்தில் அவர்களின் செல்வாக்கு அப்படிதான் இருந்தது.
            போலீஸார்கள் கேட்டுக் கொண்டதன் பேரில்            முகிலன் படிக்கும் ஏழாம் வகுப்பின் அட்டென்டென்டஸ் கொண்டு வருவது தெரிந்தது. ஒரு செய்தித்தாளில் மடிக்கப்பட்டு பத்திரமாக அது போலீஸாரின் கைகளுக்குப் போனது. அதை அவர்கள் ஒரு முக்கிய ஆவணம் போல் வைத்துக் கொண்டனர். ஹெட்மாஸ்டர் அதை அவ்வபோது அவர்களின் கைகளிலிருந்து வாங்கி மீண்டும் மீண்டும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டார்.
            "இந்தப் பிள்ளைக இங்க இருக்க வாணாம். உடனடியா வேற எடத்துக்கு அனுப்புறது நல்லது. நம்ம வூட்டுக்கு அனுப்பலாமா? ல்ல பள்ளியோடத்துக்கு அனுப்பலாமா?" என்றார் ஹெட்மாஸ்டரிடம் கண்டியப்பநாதரின் மருமகன் மணிவாசகநாதர்.
            "பள்ளியோடத்துக்கு அனுப்பிடுவம். அதாஞ் சரி!" என்றார் ஹெட்மாஸ்டர்.
            வராந்தாவில் இருந்த ஹாஸ்டல் பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டனர். வார்டனும், ரெண்டு வாத்தியார்களும் துணைக்கு அனுப்பப்பட்டனர்.
            பள்ளிக்கூடத்தின் மேல்மாடியில் ப்ளஸ் டூ வகுப்பறையில் பிள்ளைகள் அமர வைக்கப்பட்டதும், பிள்ளைகள் முகிலனைப் பற்றி விதவிதமாக பேசிக் கொண்டிருந்தனர். அவனைப் போன்ற பையனைப் பார்க்க முடியாது என்றனர். மிகவும் துடிப்பான பையன் என்றனர். எல்லா பிள்ளைகளிடமும் அவன் அன்பாக இருந்ததாகவும் பேசிக் கொண்டிருந்தனர். விகடுவுக்கு அவனிடம் அதிகம் பழக்கம் இல்லாததால் அவனைப் பற்றி எதுவும் பேச முடியாமல் அவர்கள் பேசுவதைக் கெட்டுக் கொண்டிருந்தான்.
            அநேகமாக மதியம் சாப்பிடவில்லை என்பதே எல்லா பிள்ளைகளுக்கும் மறந்து போனது. ஹாஸ்டலில் என்ன நடந்து கொண்டிருக்கும் என்பது பற்றி பிள்ளைகள் பலவிதமாகப் பேச ஆரம்பித்தனர்.
            சாயுங்காலம் ஐந்து மணி வாக்கில் ஹாஸ்டலில் தண்ணீர் பிடித்து வைக்கும் அண்டாவைச் சைக்கிளில் கட்டிக் கொண்டு வந்தனர். அதில் மதியம் சமைத்திருந்த சாதத்தில் தயிரை ஊற்றிக் கிளறி வைத்திருந்தனர். ஹாஸ்டலில் இருந்த எல்லா பிள்ளைகளின் தட்டுகளையும் வந்தவர்களே எடுத்து வந்தார்கள். வகுப்பறையின் வெளியே இருந்த வராந்தாவில் உட்கார வைக்கப்பட்டு பிள்ளைகளுக்குச் சாப்பாடு பரிமாறினர். எந்தப் பிள்ளையும் சாப்பிடக் கூடிய மனநிலையில் இல்லை. ஏதோ பேருக்குச் சாப்பிட்டார்கள். சில பிள்ளைகள் சாப்பிடாமல் அப்படியே எழுந்திருந்தனர். எந்தப் பிள்ளையையும் சாப்பிடு என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
            எல்லா பிள்ளைகளும் அந்த இரவு பள்ளியிலே தங்க வைக்கப்பட்டார்கள். இரவுச் சாப்பாடாக உப்புமா கிளறி எடுத்து வந்தனர். பெரும்பாலான பிள்ளைகள் சாப்பிடாமல் நிறைய உப்புமா மீந்தது.
            சாப்பாடு கொண்டு வந்தவர்கள் சில ப்ளஸ் டூ படிக்கும் பிள்ளைகளை மட்டும் அழைத்துக் கொண்டு போய் ஹாஸ்டலில் இருந்த பாய் தலையணைகளையெல்லாம் எடுத்து வந்தனர்.
            பிள்கைளைப் பார்க்க ஹெட்மாஸ்டரும், ஆண்டியப்பநாதரும் வந்திருந்தனர். யாரும் பயப்பட வேண்டாம் என்று அவர்கள் பொதுவாக சில விசயங்களைப் பேசினார்கள். இரவு முழுவதும் வகுப்பறை எங்கும் லைட்டுகள் எரியட்டும் என்றார்கள். ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் போனால் தனியாகப் போக வேண்டாம் என்றார்கள். துணைக்கு ஒரு பிள்ளையைக் கூப்பிட்டுக் கொண்டு போகுமாறு சொன்னார்கள். பள்ளிக்கூடத்தின் வாட்ச் மேன்களும், பியூன்களும் இரவு முழுவதும் துணையாக இருப்பார்கள் என்றார்கள். கூடுதலாக பண்ணையில் வேலை பார்க்கும் இரண்டு ஆட்களைத் துணைக்குப் போட்டிருப்பதாகச் சொன்னார் ஆண்டியப்பநாதர்.
            இரவில் படுத்ததும் பிள்ளைகள் ஒவ்வொருவரும் முகிலனைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த விசயங்களையெல்லாம் பேச ஆரம்பித்தார்கள். முகிலனின் மரணம் அவனைப் பற்றிப் பேசிய பேச்சுகளையே மீண்டும் மீண்டும் பேசிய‍ போதும் புதிதாகக் கேட்பதைப் போல கேட்க வைத்தது.
            தூக்கில் தொங்கிய முகிலனின் கையில் ஒரு காகிதம் இருந்ததாகவும் அதைப் பார்த்ததாகவும் ராமராஜ் சொன்னான். அதில் என்ன இருக்கும் என்பது குறித்தும் அவன் உத்தேசமாகச் சொன்னான். "பெத்தவங்க நெனச்ச மாரி என்னால படிக்க முடியல. வூட்டுல செலவுக்கே கஷ்டமா இருக்குற நிலயில என்னை செலவு பண்ணி படிக்க வெச்சு அவங்கள கஷ்டப்படுத்த விரும்பல. இப்படி எழுதி வெச்சிட்டுத்தான் தொங்கிருப்பான்!" என்றான்.
            அவன் உத்தேசமாக சொன்னாலும் அப்படித்தான் முகிலன் அந்த தாளில் எழுதியிருந்ததாக அடுத்தடுத்த நாட்களில் செய்தி பரவியது. போலீசார் அதை ஒரு முக்கிய ஆவணமாக பதிந்திருப்பதாகவும் பேசிக் கொண்டார்கள்.
            மறுநாள் காலை பிள்ளைகள் அனைவரும் ஹாஸ்டலுக்கு அனுப்பப்பட்ட போது தங்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்திருந்தது அவர்களின் மனதைக் கனக்கச் செய்தது. அவர்கள் மீண்டும் காலையிலும் குலுங்கிக் குலுங்கி அழுதனர். வழக்கமாக காலையில் வெளியே வந்து பள்ளி செல்லும் போது அவர்கள் வரிசையாக எண்ணைச் சொல்வார்கள். பிள்ளைகளின் கூட்டுப்புள்ளி சரியாக வந்த பின்புதான் வார்டன் அவர்களைப் பள்ளி செல்ல அனுமதிப்பார். இனி அந்த கூட்டுப்புள்ளியில் ஒன்று குறைந்துதான் இருக்கும்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...