15 Apr 2019

காணாமல் போன முட்டைகள்



செய்யு - 56
            ஒரு கறிவிருந்தைச் சண்டை சச்சரவில்லாமல் முடிப்பது சாமான்யமில்லை. அது கறி விருந்துக்காக இறந்து போகும் ஆட்டின் சாபமோ என்னவோ! பொதுவாக கறி விருந்துகளில் குடித்து விட்டு ரகளை தூள் பறக்கும். அல்லது உப்புப் போறாத பிரச்சனை ஒன்றை எடுத்துக் கொண்டு அதற்கு அல்பத்தனமான சண்டை அரங்கேறும். எப்படியும் ஒரு கறி விருந்தில் துண்டுபடும் கறிகளைப் போல சண்டை வந்து இரண்டு குடும்பங்கள் பிரியாமல் இருப்பது அபூர்வம்தான்.
            சர்க்கரைப் பிள்ளை கையறு நிலையில் நின்று கொண்டிருந்தார். இல்லாமல் போன முட்டைகளுக்குப் பதில் சொல்வதற்கான வார்த்தைகள் எதுவும் அவரிடம் இல்லை. இந்த நிலைமைக்கு எப்படிப் பேசுவது என்றும் அவருக்குப் புரியவில்லை. அவர் தன்னையும் அறியாமல் பேச ஆரம்பித்தார்.
            "வேல முடியறதுக்கு முன்னாடி நாம்ம எதையும் சாப்பிடறதில்லீங்க! இன்னும் வெத்தல சீவ கூட போடலீங்க! கால சாப்பாடும் ஆகலீங்க! முட்டய்கள எடுத்துச் சாப்பிட்டு என்னவாகப் போகுதுங்க?" என்றார் சர்க்கரைப் பிள்ளை.
            முதலில் வாயை ஊதச் சொன்ன கணேசமூர்த்தி "ஒம்ம பைய்ய காட்டுய்யா பாப்பம்!" என்றார்.
            "பைய்யல்லாம் ஒண்ணுமில்லீங்க! இந்த வெத்தல சீவ பொட்டணம்தாங்க!" என்று விரித்துக் காட்டினார் சர்க்கரைப் பிள்ளை. ஒரு ஜவுளிக்கடை பாலிதீன் பையைக் காகிதம் போல மடித்து அதற்குள் வெற்றிலை, சீவல், சுண்ணாம்பை வைத்திருந்தார் அவர்.
            இதற்குள் அப்பாவுக்குக் கோபம் வந்து விட்டது.
            "அந்த மாரி பண்ற ஆளில்ல அவரு! வயித்துக்கு சமச்சுப் போடறவற வஞ்சனயா பேசக் கூடாது!" என்றார்.
            "யாரு வஞ்சனய்யா பேசுறது? வாங்கிக் கொடுத்த முட்டய்களுக்குக் கணக்கு இருக்கு. முட்டய்களும் வீணாப் போகலங்றாரு. இவர்ர தவிர யாரு இதுல கைவெச்சா? இவருதாம்ல ன்னாமோ டாட்டா பிர்லா சொத்த பாகம் பிரிக்கிற மாரி உக்காந்துகிட்டு எடுத்துக் கொடுக்குறாரு. இவரும், இந்தப் பொம்பள ஆளும் திங்கலன்னா வேற யாரு தின்னது? விருந்துல யாரும் ரெண்டு முட்ட வாங்குனாவுகளா?" என்றார் கணேசமூர்த்தி.
            "யாருக்கும் ரண்டு முட்டய்களலாம் போடலீங்க! எல்லாருக்கும் ஒண்ணுதாம் வெச்சம். பொம்பள ஆளப் பத்தி ஒண்ணும் பேசாதீங்க. காலயிலர்ந்து படாத பாடு பட்டுப் போச்சு. பச்ச தண்ணி வாயில ஊத்தல." என்றார் சர்க்கரைப் பிள்ளை.
            "இப்படி எடையில எடையில புகுந்து நல்லவம் மாரியும் பேசு. அல்ப தனமா முட்டய்கள திருடியும் தின்னு!" என்றார் கணேசமூர்த்தி.
            "வாத்தியார்ரே! பாருங்கய்யா! நம்மள திருடனுட்டாங்க! நமக்கு சமச்ச கூலியும் வாணாம். ஒண்ணும் வாணாம். ஆள வுட்டுடுங்க. நாம்ம சமச்சதுக்கு நாம திருடித் தின்னதா சொன்ன முட்டய்களே கூலியா இருந்துட்டுப் போகட்டும்." என்று சொல்லி விட்டு விடுவிடுவென்று மாடியிருந்து கிளம்பினார்.
            தோளில் போட்டிருந்த துண்டால் வாயைப் பொத்திக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதபடியே அவர் மாடியிலிருந்து படியிறங்கினார். இடுப்பில் லுங்கி, தோளில் ஒரு துண்டு, அந்த லுங்கி மடிப்பில் வீங்கியது போலிருக்கும் வெத்தலைச் சீவல் பொட்டலம் அவ்வளவுதான் சர்க்கரைப் பிள்ளை. இப்போது லுங்கி மடிப்பு மெல்லிய பாம்பைப் போல அவர் இடுப்பில் சுருண்டிருந்தது. வீக்கம் இல்லை. அவிழ்த்துக் காட்டிய வெத்தலைச் சீவல் பொட்டலத்தை எடுக்க ஞாபகம் இல்லாமல் இறங்கிக் கொண்டிருந்தார்.
            "என்னய்யா பெரிய யோக்கியம் மாரி பேசிட்டுப் போறே! சாப்பிடுறவங்களுக்கு முட்டய்க இல்லியே! அத ஒம்ம காசு போட்டு வாங்கியாந்து அவிச்சுக் கொடுத்துட்டுப் போய்யா!" என்றார் கணேசமூர்த்தி.
            "மாமா! இவுங்க பேசுறது நல்லதில்ல! நாமளா அவர்ர சமய்க்கக் கூப்புட்டுருக்கோம். அப்படியே ரண்டு முட்டய்கள தின்னாத்தாம் என்ன? இப்படியல்லாம் பேசப் படாது. அது நல்லாயில்ல சொல்லிட்டம் ஆமா!"
            "என்னய்யா பேசுறே நீ? வாத்தியார்ர இருக்கேங்றே! இன்னமட்டும் பேசுறத கேட்டுட்டுதான இருந்தே? இருபது இருபத்தஞ்சு முட்டய்கள காணம்ங்றம். நீ என்னான்னா ரண்டு முட்டய்கள்னுங்ற! சரியான செவிட்டு மூதியா இருப்பியா நீ?"
            "யோசன பண்ணிப் பேசுங்க! ஒங்க பொண்ண எம் மச்சானுக்குக் கொண்டாந்து கட்டி வெச்சவம் நாம்தாம்!"
            "ன்னா பெரிய மைசூரு மகாராசாவுக்காகக் கொண்டாந்து கட்டி வெச்ச? திங்குறவங்களுக்கு நாளு முட்டய்களப் போட வக்கில்ல. பஞ்சத்துக்குப் பறக்குற பயலுகள கஞ்சத்தனம் பண்ணி காச மிச்சம் பண்றேய்ன்னு சமய்க்கிறதுக்குக் கூட்டியாந்துட்டு பெர்ரிசா பீத்திகிட்டுப் பேசுறே!"
            "மாமா! இவுங்க பேசுறது சரியாயில்ல. நீங்கதாம் பெரியவங்க. கண்டிக்கணும். எப்பாடி குமர்ரு! ஒங்க மாமா பேசுறது முறையில்ல. ஒண்ணும் இல்லாதத ஒம்போதா ஆக்குறாங்க! எள்ள கொட்டிட்டா பொறுக்கிப்புடலாம். சொல்ல கொட்டிட்டா முடியாதுப்பா!"
            "என்னய்யா நானும் பாத்துகிட்டே நிக்குறேம்? இங்க இருக்குற யாராவது வாய்ய தெறக்குறாங்களா? அதாம்யா சாதிச் சனங்றது? நீய்யி இந்த சாதியிலதாம் பொறந்தியா? யில்ல எச்ச எளவெடுத்த சாதியில பொறந்தீயா? சமய்க்கிற ஆளோட எதாச்சும் கமிஷனு கிமிஷனு பேசிட்டு அந்த எச்ச காசுக்கு அலயிறீயா?"
            "வுடுங்க மாமா! அத்தானுக்கு தெரிஞ்சது அவ்வளவுதாம்! அவங்கவங்கள வெக்க வேண்டிய எடத்துல வெக்கணும். அவரு அப்படிதாம் தராதரம் தெரியாம எல்லார்ட்டயும் பழகுவாரு. கொஞ்சிக் குலாவுவாரு." என்று குமரு மாமா சொன்னதும் அதுவரை அமைதியாக இருந்த அம்மாவுக்குக் கோபம் வந்து விட்டது.
            "எம்ம எச்சிப்பாலு குடிச்ச நாயீ! ன்னாடா பேசுறே? ன்னா வெளிநாடுல போயி காசு சம்பாதிச்சு வூடு கட்டிட்டங்ற திமிருல்ல பேசுறீயா? அதாம் கல்யாணம் ஆச்சிடுச்சு. இனி யாரு தயவும் தேவயில்லங்ற கொழுப்புல பேசுறீயா? அத்தாம்ங்ற மரியாதயோட பேசுடா ரோக்கிதிய கெட்டப் பயலே!"
            "அந்தப் பொம்மனாட்டிய மரியாதய்யா பேசச் சொல்லுங்க! ல்லன்னா நடக்குறதே வேற. நாம்ம நம்ம வகையறாவோட மாப்பிள்ளையையும் பொண்ண கூட்டிட்டுப் போற மாரி ஆயிடும்! நடக்குறது நல்லாருக்காது!" என்றார் கணேசமூர்த்தி.
            "போடா கூட்டிட்டு ஒம் பொண்ணயும் மாப்பிள்ளையையும்! ன்னா மெரட்டிகிட்டு இருக்கிறீய்யா! ல்லாம் இந்தப் பய கொடுக்குற எடம்ங்க! ஏ எப்பா! ல்லாத்துக்கும் கட்டு செட்டா பேசுவேயில்ல! இப்ப ஏம் அப்படியே கல்லுசெல மாரி நிக்குறே! ஒம்மோட மாப்புள்ளதான எம்ம புருஷம். அவர்ரு இப்படி ஒம்ம கண்ணு முன்னால அவமானம் பட்டு நிக்குறாரு. பாத்துகிட்டே நிக்குதியே?"
            "யார்ரு இவர்ர அவசரப்பட்டு வாய வுடச் சொன்னா? நமக்கு சமைக்குறகாரங் முக்கியமா? சொந்தக்காரங் முக்கியமா?" என்றது வைத்தி தாத்தா.
            "அப்படிக் கேளுங்க சம்மந்தி! புள்ளய ந்நல்லா வளத்துபுட்டீங்க. பொண்ண வளக்குறதுல்ல கோட்ட வுட்டுட்டீங்க. பொண்ணா அது? த்த்தூ! ன்னாப் பேச்சுப் பேசுது? மரியாத தெரியாத சென்மமா இருக்கும் போலிருக்கே!"
            "மான மரியாத கெட்டுப்புடும்! பெரச்சன ன்னான்னு யோசிச்சுப் பேசு. ஒம்ம மருமவம் அதாங் எம்மோட தம்பி எம்மாம் பெரிய கருவக்காட்டு அம்மணாஞ்சிங்றது நம்மளுக்குத்தாங் தெரியும்!"
            "அத்தாம்! ஒங்க பொண்டாட்டி பேசுறது சரியில்ல! அடங்கி ஒடுங்கி வாய மூடச் சொல்லுங்க!" என்றது குமரு மாமா.
            "அடச்சீ நாயே! நாம்ம மொதல்ல ஒமக்கு அக்காடா! அப்புறம்தாம் அவுகளுக்குப் பொண்டாட்டி. நம்மளப் போயி அடக்கி வெக்க அவருகிட்டச் சொல்றே? நாம்ம ன்னாடா அடங்காப் பிடாரி கணக்கா ஊரு மேஞ்சிட்டு கெடக்கோம்? நீயி ஒம் பொண்டாட்டிய அடக்க ஒடுக்கமா வெச்சு எப்படிக் குடித்தனம் பண்றேன்னு பாக்குறோம்டா!"
            "ஏ ஆயி! வந்தோமோ தின்னோம்மா! கெளம்புனோம்மான்னு இருக்கணும். இது சுத்தப்படல! ஆமாஞ் சொல்லிட்டம்!" என்றது வைத்தி தாத்தா.
            "ஏ எப்பா! எம்ம வூட்டுல சோறுறு ல்லப் பாரு. ஒம்ம வூட்டுல நக்கித் தின்ன வந்துட்டேம்? எப்ப வந்தாப் பாரு! எப்ப கெளம்புற? எப்ப கெளம்புறன்னு கேட்டுகிட்டு? அப்படி ன்னாப்பா ஒம்ம வூட்டுச் சொத்த தின்னு நாங்க அழிச்சிடப் போறம்? பெரச்சன ன்னா? முட்டய்ங்கதான்ன. இந்த வூட்டுப் பாத்திர பண்டங்களல ஒண்ணு வுடாமா பாத்துப்புடுவோம்! அப்புறம் ஒத்துக்குறேம். நாம்ம எங்கூட்டுக்காரரு அழச்சிட்டு வந்த சர்க்கரைப் புள்ளதாம் தின்னுபுட்டாருன்னு."
            "ஏ தங்காச்சி! ஏண்டி இப்படி கொழப்பத்த உண்டு பண்ணுறே? சம்பந்தம் கலக்குறது கொழப்பத்துல முடியப்புடாதுடுடீ!" என்றது சாமியாத்தா.
            "கல்யாண வூட்டுல மாப்புள முறுக்கதாங் பாத்துருக்கோம். இந்த வூட்டுலதாம் அதிசயமா பொண்ணோட அப்பங்கார முறுக்க பாக்குறம்! இந்த வூட்டுக்கு மாப்புளங்காரய்ங்களா வந்த யாரயாவது முறுக்க வுட்டுருப்பீங்களா? பொண்ண அழச்சிட்டு சீக்கிரமா கெளம்பு கெளம்புன்னு ன்னா அழிச்சாட்டியம் பண்ணியிருக்கீங்க? இப்போ ன்னான்னான புள்ளிக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுபுட்டு பொண்ணு வூட்டுக்காரய்ங்கள ன்னா அலப்பற பண்ண வுடுறீயுவோ! கேட்டா அஞ்சு பொட்ட புள்ளிக்கு அப்புறமா பொறந்த அதிசயப் புள்ளீம்பியோ! ன்னா ரகள கட்டி அடிக்கிறீய்யோ!"
            "இந்தா பாரு! கிருஷகெட்டத்தனமாக பேசிட்டு இருக்கே! அக்கான்னு பாக்குறேம்..." என்றது குமரு மாமா.
            "ச்சும்மா நிறுத்துடா! நானும் போனா போவுது, போனா போவுது தம்பிகாரம் பொண்டாட்டி மானம் போவக் கூடாதுன்னு பாத்தா ன்னா பேச்சு பேசுற நீ?"
            "ஏம் எம் பொண்டாட்டிக்கு ன்னா? ஒம் புருஷம் மாரியா? பொண்டாட்டிய அடக்கத் தெரியாம..." என்று குமரு மாமா சொல்ல...
            அம்மா குமரு மாமாவின் கையைப் பிடித்து ஆவேசமாய் மாடியிலிருந்து வீட்டுக்குள் இழுத்து வந்தது.
            "இவ்வோ ன்னா பொம்பள? ஆம்பளிங்க பேசுற சபயில இப்புடிப் பேசுறா? இவ்வளம் பேரு நிக்குறோம்னு பாக்காம எம் மாப்புளையா அவ தம்பிங்காரனாவே இருந்தாலும் கையைப் பிடிச்சு இப்படி அழச்சிட்டுப் போறா?" என்றார் கணேசம் மூர்த்தி.
            நிலைப்படியிலிருந்து இடது பக்கமாக இருந்த குமரு மாமாவின் சாத்தி வைக்கப்பட்டிருந்த அறைக் கதவைக் காலால் ஓங்கி உதைத்தது அம்மா. அங்கே கட்டிலுக்கு அடியில் ஒரு எவர்சில்வர் உருளி வாழையிழைப் போட்டு முடியிருந்தது. அதைத் திறந்து காண்பித்தது அம்மா. அந்த எவர்சில்வர் உருளிக்குள் அவிழ்த்த முட்டைகள் பல்லை இளித்துக் கொண்டு காட்சியளித்தது.
            அறைக்கு வெளியே இருந்து எல்லாருடனும் இதைப் பார்த்துக் கொண்டிருந்த குமரு மாமாவின் பொண்டாட்டி மேகலா மாமி பேய் முழி முழித்தது.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...