அதிகரித்திருக்க வேண்டுமா அல்லவா?!
தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தொகுதிகள்
ஒவ்வொன்றையும் இரண்டாகப் பிரிக்கலாம். மக்களவைத் தொகுதிகள் ஒவ்வொன்றையும் நான்காகப்
பிரிக்கலாம். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியும், மக்களவைத் தொகுதியும் அந்த அளவுக்குப்
பெரிதாக இருக்கிறது.
மக்கள்தொகைக் குறைவாக இருந்த ஒரு காலத்தில்
(அது சரி! இந்தியாவில் எப்போது மக்கள்தொகைக் குறைவாக இருந்தது?) அவ்வளவு பெரிதாக
தொகுதிகள் இருந்தது ஏற்புடையதாக இருந்திருக்கலாம். நிலைமை இப்போது அப்படி இல்லை.
சராசரியாக ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியும்
சற்றேறக்குறைய இரண்டு லட்சம் மக்களுக்குக் குறையாமல் இருக்கும். மக்களவைத் தொகுதிகள்
சராசரியாக சற்றேறக்குறைய எட்டு லட்சம் மக்களுக்குக் குறையாமல் இருக்கும்.
ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு ஒரு சட்டப்
பேரவைத் தொகுதியும், நான்கு லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு மக்களவைத் தொகுதியும் இருக்கலாம்.
அப்படி ஒரு கணக்கின் படி பார்த்தால் தமிழ்நாட்டின்
மக்கள்தொகையை உத்தேசமாக ஆறு கோடி என வைத்துக் கொண்டால் 600 சட்டப்பேரவைத் தொகுதிகளும்,
150 மக்களவைத் தொகுதிகளும் அமைய வேண்டும்.
அல்லது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியை இரண்டாக,
மக்களவைத் தொகுதியை நான்காகப் பிரிக்கலாம் என்று மேற்சொன்ன வகையின்படி பார்த்தாலும்
468 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 156 மக்களவைத் தொகுதிகளும் அமைய வேண்டும்.
அப்படி அமைந்தால்தான் மக்கள் பிரதிநிதிகள்
தொகுதிகளைச் சுற்றிப் பார்க்கவும், மக்களின் குறைகளைக் கேட்பதற்கும் அது வசதியாக இருக்கும்.
கடந்த பல ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது.
உணவுத் தேவை அதிகரித்திருக்கிறது. குடியிருப்புகள் அதிகரித்திருக்கின்றன. தெருக்கள்
அதிகரித்திருக்கின்றன. நகர்ப்புறங்கள் அதிகரித்திருக்கின்றன. ஓடும் வாகனங்கள் அதிகரித்திருக்கின்றன.
கடைகள் அதிகரித்திருக்கின்றன. கல்விக் கூடங்கள் அதிகரித்திருக்கின்றன. மருத்துவமனைகள்
அதிகரித்திருக்கின்றன. அப்படியென்றால் சட்டப்பேரவைத் தொகுதிகளோ, மக்களவைத் தொகுதிகளோ
அதுவும் அதிகரித்திருக்க வேண்டுமல்லவா!
*****
No comments:
Post a Comment