3 Apr 2019

ஏம் இப்படிப் பண்ணே?



செய்யு - 44
            நரிவலம் பள்ளியின் ஹெட்மாஸ்டர் திருஞானம். ஆள் ஆஜானுபாகுவான தோற்றம். அந்தத் தோற்றத்துக்கு ஏற்ற உயரம் கொஞ்சம் கம்மி. ஆள் கருப்பு என்றாலும் வெள்ளை பேண்டிலும், வெள்ளைச் சட்டையிலும் பார்க்க அம்சமாக இருப்பார். அபூர்வமாக சில நாட்களில் வேட்டி கட்டிக் கொண்டு வருவார். வேட்டி நான்கு பக்கமும் சதுரித்து விட்டது போல கட்டி வருவார். அதற்கேற்றாற் போல் கஞ்சி போட்டு வேட்டியை அயர்ன் செய்திருப்பாரோ என்னவோ! ஒரு வெள்ளை பெட்டிக்குள் இடுப்பு வரை இருப்பது போல கட்டியிருப்பார்.
            அழுத்திக் கம்மியது போல ஒரு மாதிரியாகப் பேசுவார். அந்தப் பேச்சே ஒரு அச்சத்தை மனதுக்குள் கொண்டு வரும். தான் நினைக்கும் கருத்தை மனதில் பதியும் படி பேசுவதில் ரொம்பவே கெட்டிக்காரர். காலை வழிபாட்டுக் கூட்டம் நடக்கும் நாட்களில் சில நாட்கள் சுருக்கமாகவும், பல நாட்கள் விரிவாகவும் பேசுவார். விரிவாக பேச ஆரம்பித்தால் ஒன்பது ஐம்பதுக்கு ஆரம்பிக்கும் வழிபாட்டக் கூட்டம் பத்தரை மணிக்கு மேல்தான் முடிவுக்கு வரும். அவர் அப்படிப் பேசும் நாட்களில் பள்ளியில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை அனுமானித்துக் கொள்ளலாம். அதை நேரடியாகச் சுட்டிக் காட்டாமல் மறைமுகமாக குத்திக் காட்டிப் பேசுவார்.
            திருஞானம் ஹெட்மாஸ்டர் வரும் வரை நரிவலம் பள்ளிக்கு பெரிய பேர் இல்லை. பத்தோடு பதினொன்றாக அதுவும் ஒரு பள்ளியாக இருந்தது. அந்தப் பள்ளியைப் பேர் பெற்ற பள்ளியாக தூக்கி நிறுத்தியது திருஞானம் ஹெட் மாஸ்டர்.
            நரிவலம் பள்ளிக்கு வருவதற்கு முன் அவர் மேலப்பனையனூரில்  ஹெட்மாஸ்டராக பணியாற்றிக் கொண்டிருந்தார். மேலப்பனையனூரில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பற்றி நரிவலத்தில் பேசிக் கொள்வார்கள். அப்படி ஒரு சம்பவம் நடந்து இருபது வருடங்களுக்கு மேல் இருக்க வேண்டும். அந்த நிகழ்வு நேற்று நடந்து போல அவ்வளவு உயிர்ப்போடு அந்த நிகழ்வைப் பற்றி நரிவலத்தில் அநேகம் பேர் பேசிக் கொண்டிருந்தார்கள், "மனுசம் படிக்கலேன்னா கொன்னே புடுவாம்!" என்று. பிள்ளைகளுக்கும் அது குறித்த ஒரு பீதி இருந்த கொண்டே இருந்தது. அவர் இப்போதெல்லாம் கம்பு எடுத்து அடிப்பது என்பது வெகு அரிது. கம்பு எடுத்து அடிப்பதே இல்லை. ஆனால் அந்தச் செய்தி குறித்த பீதி அவர் அடிப்பதை விடவும் மிகு பயத்தை ஒவ்வொரு பிள்ளைகள் மனதிலும் உருவாக்கிக் கொண்டிருந்தது.
            மேலப்பனையனூரில் அவர் கண்டிப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் நரிவலம் பள்ளிக்கூடத்தின் மேனேஜ்மேன்டுக்கு அவர் மேல் ஒரு கண் இருந்திருக்கிறது. எப்படியாவது அவரை நரிவலம் பள்ளிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். இதற்காக மேலப்பனையனூர் பள்ளிக்கூடத்தின் மேனேஜ்மெண்டுக்குத் தெரியாமல் மறைமுகப் பேச்சுவார்த்தையும் நடந்திருக்கிறது. திருஞானம் "ம்ஹூம்" என்றிருக்கிறார். அதற்கப்புறம் நரிவலம் மேனேஜ்மெண்ட் அதை அத்தோடு விட்டிருக்கிறார்கள்.
            ஆனால் எதிர்பாராமல் நடந்த அந்தச் சம்பவம்தான் அவரை நரிவலம் பள்ளிக்குக் கொண்டு வந்தது.
            அந்தப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் திருஞானம் ஹெட்மாஸ்டர் நரிவலம் பள்ளிக்கூடத்தில் இருந்ததைத் தாண்டி மிகுந்த கண்டிப்பாக இருந்திருக்கிறார். பொதுவாக எந்தப் பிள்ளைகள் ஓர் அளவுக்கு மேல் கண்டிப்பை விரும்புவார்கள்? கண்டிப்பு பிடிக்காதப் பிள்ளைகள் வேண்டுமென்றே குறும்புத்தனமான காரியங்களை நிறையவே செய்வார்கள். அப்போது கண்டிப்பை நிலைநாட்ட அடிப்பதைத் தவிர வேறு வழிகளைக் கையாளும் ஆசிரியர்கள் யார்? திருஞானமும் அதைத்தான் செய்தார். அடியென்றால் அடி அப்படி அடித்துத் துவம்சம் செய்திருக்கிறார். அவர் அடிக்கும் அடியைப் பார்த்து திருவடி ஹெட் மாஸ்டர் என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டிருந்திருக்கிறது.
            படிக்காத மாணவர்களைப் படிக்க வைத்து ரிசல்ட் காட்டுவதில்தான் அந்தக் காலத்தில் ஒரு பள்ளியின் பேர் இருந்தது. அந்த விசயத்தில் திருஞானம் ஹெட்மாஸ்டரின் பள்ளிக்கூடம் பத்தாம் வகுப்பானாலும் சரி  ப்ளஸ் டூவானாலும் சரி  நூற்று நூறு சதவீத தேர்ச்சியைப் பெறும். அப்படிப் பெறா விட்டால் பெற வைப்பார். பிள்ளைகளை எப்படிப் படிக்க வைக்க வேண்டும் என்பது குறித்து அவருக்கு சில மாற்ற முடியாத கருத்துகள் இருந்தன. அவர் இதற்காக காலை மற்றும் மாலை நேர படிப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்தார்.
            காலை நேர படிப்பு வகுப்பு எட்டு மணிக்குத் தொடங்கி பள்ளி தொடங்கும் வரை நடக்கும். மாலை நேர படிப்பு வகுப்பு பள்ளிக்கூடம் முடிந்ததிலிருந்து தொடங்கி மாலை ஆறு மணிவேரை நடக்கும். இந்தக் காலை மற்றும் மாலை நேர வகுப்புகளிலும் படித்து விட்டு ஆண் பிள்ளைகள் மட்டும் அதைத் தொடர்ந்து இரவு நேர படிப்பு வகுப்புகளுக்கு இரவு எட்டு மணிக்கெல்லாம் வர வேண்டும். அந்த நேரத்தில் பிள்ளைகள் வீட்டிலிருந்து பள்ளியில் வந்து தங்கிப் படித்து விட்டு காலையில் செல்ல வேண்டும். காலையில் ஆறு மணி வாக்கில் செல்லும் பிள்ளைகள் குளித்து முடித்து விட்டு மறுபடியும் எட்டு மணிக்கு நடைபெறும் காலை நேர வகுப்புக்கு வந்து சேர வேண்டும். பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அதுவும் ஆண் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் வெளியில் விளையாடிக் கொண்டும், வீட்டில் டி.வி.பார்த்துக் கொண்டும்  படிக்க மாட்டார்கள் என்பதை அவர் உறுதியாக நம்பினார்.
            இப்படி இயந்திரத் தனமாக காலை, மாலை, இரவு என்று பள்ளியில் படித்துக் கொண்டே இருக்கப் பிடிக்காத ஒரு பையன் டிமிக்கிக் கொடுத்திருக்கிறான். தவறைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு அசாத்தியத் திறமை இருந்தது. டிமிக்கிக் கொடுத்த பையனை இரண்டே நாட்களில் கண்டுபிடித்து விட்டார். அது காலை படிப்பு வகுப்பு முடிந்து பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் நேரம். அவருடைய கவலை இந்தப் பழக்கம் மற்றப் பிள்ளைகளுக்கும் பழகி விட்டால் என்னாவது என்பதில் இருந்தது. உரிய நடவடிக்கையில் இறங்கினார் திருஞானம் ஹெட்மாஸ்டர்.
            உடனடியாக வழிபாட்டுக் கூட்டம் நடக்க பத்து நிமிடங்கள் இருப்பதற்கு முன்பாகவே அனைத்து வாத்தியார்களும், பிள்ளைகளும் மேலப்பனையனூர் பள்ளியின் வழிபாட்டுக் கூடம் நடக்கும் மைதானத்துக்கு வரவழைக்கப்பட்டார்கள். வழிபாட்டுக் கூட்டம் நேரடியாக அவருடைய உரையிலிருந்து துவங்கியது. படிப்பு வகுப்புகளுக்கு டிமிக்குக் கொடுக்கும் பையன் பற்றி அவனது பெயரைச் சொல்லாமல் ஒரு மணி நேரத்துக்கு காட்டமான உரையை ஆற்றி முடிவில் அவனது பெயரைச் சொல்லி எல்லாருடைய முன்னிலையிலும் அவனை வரவழைத்தார் திருஞானம்.
            அந்தப் பையன் நடுங்கிக் கொண்டே வந்து நின்றான்.
            "ஏம் இப்படிப் பண்ணே?" என்று சொல்லி விட்டு அடிக்க ஆரம்பித்த அவர் அவன் மயங்கி விழும் வரை அடித்துக் கொண்டே இருந்தார். அடி வாங்கிய பையனை விட இதைப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்த பிள்ளைகள் மனதில் மரணத்தின் கோர பயம் நிழலாட ஆரம்பித்தது.
            அடித்த அடியில் பையன் மயங்கி விழுந்ததும் லேசான அச்சம் அவர் முகத்தில் எட்டிப் பார்த்தது. முகத்தில் வியர்வை அரும்பத் தொடங்கியது. வாத்தியார்கள் ஓடி வந்து பையனின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர். எல்லா பிள்ளைகளும் வேக வேகமாக வகுப்பறைக்கு அனுப்பப்பட்டார்கள். அரை மணி நேரத்துக்கும் மேலாக மயங்கி விழுந்த பையன் ஆடாமல் அசையாமல் அப்படியே கிடக்க அனைவரின் மனதிலும் ஒரு பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...