செய்யு - 57
அவிழ்த்து வைத்த கோழி முட்டைகள் அப்படி
ஒரு பிரச்சனை செய்யும் என்று யார் எதிர்பார்க்க முடியும்? குமரு மாமாவின் கறி விருந்தில்
அதுதான் நிகழ்ந்தது. வைத்தி தாத்தா வீட்டோடு ஏற்பட்ட பலமான பிரிவுக்கு அந்த கறி விருந்து
வழிவகுத்து விட்டது. அப்பாவின் மீது வைத்தி தாத்தா வீட்டில் எல்லாரும் வருத்தமாக இருப்பதாக
சொல்லிக் கொண்டார்கள். அதை விட வருத்தம் அம்மாவின் மேல் இருந்தது. அந்த காணாமல் போன
முட்டைகளுக்காக மனைவியைக் காட்டிக் கொடுத்தற்காக குமரு மாமாவுக்கும், மருமகளைக் காட்டிக்
கொடுத்ததற்காக வைத்தி தாத்தாவுக்கும், சாமியாத்தாவுக்கும் வருத்தம் ஏற்பட்டிருக்க
வேண்டும். அந்த நேரத்தில் அதற்காக அவர்கள் சர்க்கரைப் பிள்ளையைத் தண்டித்திருக்க வேண்டும்
என்ற எதிர்பார்த்திருப்பார்கள் போல.
இந்தச் சம்பவத்தைப் பிற்பாடு பலமுறை பலவிதமாகப்
பேசி அப்பாவும், அம்மாவும் விவாதித்து இருக்கிறார்கள். விகடுவும் செய்யுவும் இதைக்
கேட்டுக் கேட்டு அலுத்துப் போயிருக்கிறார்கள். ஒரே மாதிரியாகப் பேசி ஒரே மாதிரியாகத்தான்
அந்தச் சம்பவத்தைப் பற்றி முடிப்பார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் புதிய விசயத்தைப்
பேசுவது போல பேசுவார்கள்.
குமரு மாமாவின் மீது ஆரம்ப காலங்களில்
ஏற்பட்ட வெறுப்பெல்லாம் இப்போது அப்பாவுக்குப் பெரிதாக இருந்தது.
அம்மாவை அப்பா கல்யாணம் செய்திருந்த அந்த
காலக் கட்டத்தில் குமரு மாமா கொட்டாப்புளியையும் உளியையும் தூக்கிக் கொண்டு வேலை
பழகிக் கொண்டிருந்தது. டவுசர் போட்டுத் திரிந்து கொண்டிருந்த அந்தக் காலத்தில் குமரு
மாமா நல்ல வளர்த்தியாக இருந்தது. வேலைக்குச் செல்வதானால் டவுசர் மேல் வேட்டியைக் கட்டிக்
கொள்ளும். வேட்டியைக் கட்டிக் கொண்டு சென்றால்தான் பெரிய ஆளின் கணக்கில் சேர்த்து
முழுச் சம்பளம் வாங்க முடியும். இல்லையென்றால் பேருக்கு கால் காசு சம்பளம்தான் கொடுப்பார்கள்.
டவுசர் மேல் வேட்டிக் கட்டிக் கொண்டு போய் பழக்கமாகி வேட்டி கட்ட ஆரம்பித்தது குமரு
மாமா.
நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்ப்பதில்
குமரு மாமாவுக்கு அலாதிப் பிரியம் இருந்தது. ஏழு ஏழரைக்கெல்லாம் பழைய சோறைச் சாப்பிட்டு
விட்டு மதியத்துக்கு ஒரு பெரிய டிபன் பாக்ஸில் அதே பழையச் சோற்றைத் தயிர் ஊற்றி கிளற
சொல்லி எடுத்துக் கொண்டு கிளம்பி விடும். ராத்திரி சாப்பாடு முக்கியம் குமரு மாமாவுக்கு.
மீனோ கருவாடோ இருக்க வேண்டும். கறிக் குழம்பு என்றால் ரொம்பப் பிரியமாகச் சாப்பிடும்.
பக்கத்தில் அல்லது பக்கத்து கிராமத்தில்
வேலை அமைவது அபூர்வம்தான். அப்படி அமைந்தால் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்து
விடும் குமரு மாமா. அப்படி வரும் நாட்களில் மட்டும்தான் மதிய சாப்பாடு செய்வார்கள்.
மற்றபடி மீன் குழம்போ, கறிக் குழம்போ எல்லாம் ராத்திரிச் சாப்பாடாகத்தான் செய்வார்கள்.
குமரு மாமா ராத்திரி சாப்பாடு சாப்பிடுவதை
விகடு பார்த்திருக்கிறான். பெரும்பாலும் கலா சித்தியோ, வள்ளி சித்தியோதான் சாப்பாடு
வைக்கும். மூன்று நான்கு தட்டுகள் போகும் வேகம் தெரியாமல் சாப்பிடும். அப்படிச் சாப்பாடு
வைக்கும் போது சாமியாத்தா, "ஒரு வேள சாப்பாடுதாம் ந்நல்ல ச்சாப்பாடா சாப்புடுறாம்.
பாத்து வையுங்கடி." என்று திட்டும் தோரணையும் அடுப்பங்கரையிலிருந்து குரல் கொடுக்கும்.
அதற்கு ஒரு காரணம் இருந்தது.
குமரு மாமா சாப்பிட சாப்பிட சரியாக கவனித்துப்
பரிமாற வேண்டும். சோறு குறைந்தால் சோறு போட வேண்டும். குழம்பு இல்லாமல் இருந்தால்
சரியாகப் பார்த்து சரியாக ஊற்ற வேண்டும். மீனோ, கறியோ குறைந்தால் அதையும் பார்த்து
சரியாக வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி வைப்பதில் நொடி நேரம் தாமதம் ஏற்பட்டாலும்
தொலைந்தது. தட்டில் கையைக் கழுவி விட்டு எழுந்திரித்து விடும். மனசு முழுவதும் பரிமாறுவதிலேயே
குறியாக இருக்கும் ஒருவர்தான் குமரு மாமாவுக்குப் பரிமாற முடியும். கொஞ்சம் அசந்தாலும்
அவ்வளவுதான்.
குமரு மாமா சரியாகச் சாப்பிடாமல் எழுந்து
போன எத்தனையோ நாட்கள் சாமியாத்தா சித்திகளைப் போட்டு அடித்திருக்கிறது. "பொண்டுகளாடி
நீங்க? காலயில வெறுஞ் சோத்த தின்னுட்டு, அதையே டப்பாவுல அடச்சிட்டு போயி ஒடம்பு தேய
ஒழச்சிட்டு வார்றாம். சாப்பாடு போடத் தெரியுதா ஒங்களுக்கு? நீங்களாம் எப்புடிடி போயி
குடும்பம் பண்ணப் போறீங்களோ? நமக்குன்னு வாந்து வாச்சிருக்குங்களே பிசாசு கணக்கா!
உக்காந்து திங்கச் சொல்லு! ஒவ்வொண்ணும் நாலு குண்டாஞ் சோறு தின்னும்." என்று
வேண்டா வெறுப்பாகத் திட்டும்.
காலையில் பழஞ்சோற்றை எடுத்து வைக்கும்
போது ராத்திரி வைத்தக் குழம்பைச் சூடு பண்ணி ஒரு டபராவில் சோற்றுக்கு ஊற்றிச் சாப்பிடும்
வகையில் எடுத்து வைக்க வேண்டும். மீன் என்றால் ஓரிரு துண்டு சிறு தட்டில் வைத்து பக்கத்தில்
பழந்தாள் ஒன்று இருக்க வேண்டும் முள்ளை எடுத்துப் போடுவதற்காக. இந்த வேலைகளில் சித்திகள்
அதிக கவனமாய் இருக்க வேண்டும். கொஞ்சம் பிசகினால் சாப்பிடாமல் வேலைக்குக் கிளம்பி
விடும். அப்படி குமரு மாமா கிளம்பினால் சித்திகளைப் பின்னி பெடலெடுத்து விடும் சாமியாத்தா.
எவ்வளவுதான் குமரு மாமாவுக்குச் செய்தாலும்
அது சித்திகளுக்கு பாசமாய் வளையலோ, மணியோ வாங்கித் தராது. திருவிழா காலம் என்றாலும்
எதையாவது வாங்கிக்கோ என்ற பணமும் தராது. இந்த விசயத்தில் வீயெம் மாமா வித்தியாசமானது.
வைத்தி தாத்தாவின் பணத்தைத் திருடியாவது எடுத்து சித்திகளுக்குப் பணம் கொடுக்கும்.
எங்கு சென்றாலும் சித்திகளுக்கு வளையல், மணி இல்லாமல் வாராது. இதனால் வீயெம் மாமாவைக்
கூப்பிட்டு சாப்பாடு வைக்கும் சித்திகள், குமரு மாமா என்றால் அது வரும் வரைக்கும் சாப்பாட்டை
எடுத்து வைத்துக் கொண்டு அப்படியே நிற்கும்.
வைத்தி தாத்தா செலவுகளில் கட்டுசெட்டி.
சம்பாதித்த காசை பைசா காசு கொடுக்க மாட்டார். வீட்டுச் செலவுகளுக்கு சாமியாத்தா பால்
கறந்து விற்கும் காசை வைத்து சமாளித்துக் கொள்ளும். பெரியம்மாக்களும், சித்திகளும்
பூக்கடையிலிருந்து உதிரிப் பூக்களை வாங்கி வந்து கட்டிக் கொடுத்து சம்பாதிக்கும் காசை
வைத்துக் குடும்பத்தை ஓட்டும். குமரு மாமா சம்பாதிக்க ஆரம்பித்தப் பின்னும் வைத்தி
தாத்தாவின் அதே முறையைத்தான் கடைபிடித்தது. குடும்பச் செலவுக்குக் கூட காசு கொடுக்காவிட்டாலும்
வைத்தி தாத்தாவுக்கோ, குமரு மாமாவுக்கோ எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது, குடும்பச்
செலவுக்குக் கூட பணம் கொடுக்க மனசில்லாத அந்தக் கெட்டப் பழக்கத்தைத் தவிர.
வீயெம் மாமா இதற்கு நேரெதிராக இருந்தது.
அதற்கும் காசு தண்ணி பட்ட பாடு. இல்லையென்றாலும் கடன் வாங்கிக் கொடுக்கும். வாங்கிய
கடனைத் திருப்பிக் கொடுக்காமல் அத்தனை டிமிக்கிக் கொடுக்கும் வேலைகளையும் செய்யும்.
குடி, போதைப் பாக்கு என்று குடும்பத்தில் யாருக்கும் இல்லாத கெட்டப் பழக்கங்களும்
அதற்கு இருந்தது. இதையெல்லாம் மீறிய வேறு சில கெட்டப் பழக்கங்களும் அதற்கு இருந்தது.
அதைப் பற்றி இப்போது சொல்வதை விட நேரம் வரும் போது பிற்பாடு சொல்வதுதான் சரியாக
இருக்கும்.
வைத்தி தாத்தாவிடமோ, குமரு மாமாவிடமோ
பணத்தை அவ்வளவு எளிதில் வாங்கி விட முடியாது. அப்பாவுக்கு மட்டும் இந்த விசயத்தில்
விதி விலக்கு இருந்தது. அதற்கு அப்பா வாத்தியார் வேலை பார்த்தது காரணமாக இருக்கலாம்.
பணம் வாங்கினால் எப்படியும் கொடுத்து விடுவார் என்று வைத்தி தாத்தாவும் நம்பியிருக்கலாம்.
அப்படித்தான் அப்பா வைத்தி தாத்தாவிடம் ஆயிரம், ரெண்டாயிரம் என்ற அவ்வபோது கைமாத்தாக
வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தது. அப்படி வாங்கும் பணத்தை அப்பாவால் முழுமையாக் கொடுக்க
முடியாது. அவ்வபோது நூறு, இருநூறு, ஐநூறு என்று கொடுத்துதான் சமாளிக்கும்.
குமரு மாமா வினா தெரிந்து சம்பாதிக்க ஆரம்பித்த
பின் ஒருமுறை அப்பா அப்படி வைத்தி தாத்தாவிடம் ஐயாயிரம் கைமாத்தாய் வாங்கிக் கொஞ்சம்
கொஞ்சமாக கொடுத்துக் கொண்டிருந்தது.
"என்னத்தான்! அப்பாகிட்ட வாங்குன
பணத்த கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்குறேன்னே கொறைச்சுக் கொடுத்து ஏமாத்திப் புடாதீங்க!
கஷ்டப்பட்டு கட்டையடிச்சு சம்பாதிச்சது. ஒங்கள மாரி ஒழைக்காம தண்டத்துக்குப் போய்
உக்காந்து நாக்காலிய தேச்சு சம்பாதிச்சதுல்ல." என்ற சொல்லி விட்டது குமரு மாமா.
அப்பாவுக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது.
மறுநாளே காசு போனாலும் பரவாயில்லை என்று அஞ்சு காசு வட்டிக்குப் பணம் வாங்கி மிச்சப்
பணத்தைக் கொடுத்து கணக்கைத் தீர்த்து விட்டது. அப்பாவின் மனதில் இந்த நிகழ்ச்சி நெருடலாகவே
இருந்து வந்தது. அதற்குப் பின் வைத்தி தாத்தாவோடு கொடுக்கல் வாங்கலை முற்றிலுமாக
அப்பா நிறுத்திக் கொண்டது.
இப்போது குமரு மாமாவின் கறிவிருந்து சம்பவத்தோடு
அப்பா குமரு மாமா அப்போது மனம் நோகுமாறு சொன்ன அந்த வாசகங்களைத்தான் முடிச்சுப்
போட்டுக் கொண்டிருந்தது. "டவுசர் போடுற காலத்துல வேட்டி கட்டிட்டு வேலய்க்குப்
போனப்பவே அப்படிப் பேசுன பய! பொண்டுகள சாப்பாடு வைக்குறதுக்குள்ள அன்னா பாடு படுத்துன
பய! இப்போ புதுப்பொண்டாட்டி வந்தப்ப எப்படிச் சாப்புடுறானாம்?" என்ற அப்பா கேட்டதும்,
"அத ஏம் கேக்குறீங்க? அவ ஆடி அசஞ்சு
வந்து வைக்குற வரிக்கும் அவ்ளவு பொறுமையா உக்காந்து சாப்புடுறானாம். கண்ட கருமத்த
ஆக்கிப் போட்டாலும் ஆகா ஓகோன்னு சாப்புடுறானாம்!" என்றது அம்மா.
அந்தக் கறிவிருந்து சம்பவத்துக்குப் பிறகு
அப்பா வைத்தி தாத்தா வீட்டுக்குச் செல்வதைக் குறைத்துக் கொண்டது. என்றாலும் வீயெம்
மாமா மட்டும் திட்டையிலிருந்து வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தது.
*****
No comments:
Post a Comment