17 Apr 2019

இறைவன் எங்கே இருக்கிறார்?



            தனக்குத் தானே சிந்தித்துக் கொள்ளும் ஆற்றல் மனிதருக்கு வாய்த்திருப்பது ஒரு பெரிய அபூர்வம்தான். தன்னைப் பற்றி ஆழ தானே சிந்தித்துக் கொள்ள முடிகிறது மனிதர்களுக்கு என்பது ஒரு மாபெரும் ஆச்சரியம்தான்.
            தனக்குத் தானே சிந்தித்துக் கொண்டே செல்லும் இந்தச் செயல்முறை ஒரு கட்டத்தில் திருப்தி ஏற்பட்டு நின்று விடுமோ? திருப்தி ஏற்படாமல் நீண்டு கொண்டே செல்லுமோ? எது எப்படி என்பது ஒவ்வொருக்கும் ஒவ்வொரு மாதிரியானது.
            தனக்குத் தானே சிந்தித்துக் கொண்டே செல்லும் இந்தச் செயல்முறையை நிறுத்த முடியாமல் அவதிப்படுபவர்கள் அதிகமாக இறைவனை நெருங்கிப் போகிறார்கள். அது மனதின் செயல்முறை. எப்படி இதயத் துடிப்பை, இரத்த ஒட்டத்தை, சுவாசத்தை உங்கள் கட்டுபாட்டில் வைக்க முடியாதோ அப்படி தங்களது மன ஓட்டத்தைத் தங்களது கட்டுபாட்டில் வைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறுபவர்களுக்கு ஒரு மனரீதியான தோழமை தேவைப்படுவதைத் தடுக்க முடியாது.
            தங்களது மன ஓட்டத்தைத் தங்களது கட்டுபாட்டில் வைக்க ஒரு பிரேக் மனிதர்களுக்குத் தேவைப்படுகிறது. அந்த பிரேக்தான் பல பேருக்கு இறைவன். அந்த பிரேக்கைப் போட முடியாமல்தான் பல பேர் இறைவனைப் பிரேக்காகப் பயன்படுத்துகிறார்கள்.
            மனிதர்களுக்கு அந்த பிரேக் தேவையில்லை என்றால் இறைவன் இந்த உலகத்தில் எப்போதோ மாண்டு போயிருப்பார். அந்த பிரேக்கின் தேவை இருப்பதால்தான் இறைவன் இப்போதும் உயிரோடு இருக்கிறார்.
            ஓர் அச்சம் மனதை இடைவிடாமல் தனக்குத் தானே சிந்திக்கச் செய்யக் கூடியது. ஒரு கோபம் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் நினைவுகளைக் கிளறி விடக் கூடியது. ஒரு பழி வாங்கும் உணர்ச்சி என்பது முப்பொழுதும் நிற்காமல் சதா எண்ணங்களைக் கிளப்பிக் கொண்டே இருப்பது. இந்த எண்ணங்களிலிருந்து ஒரு பிரேக் அப்பை உங்களால் நிகழ்த்திக் கொள்ள முடியுமானால் உங்களுக்கு இறைவன் தேவையில்லை. ஒருவேளை பிரேக் அப்பை நிகழ்த்தத் தெரியவில்லை என்றால் ஒவ்வொரு இறைவனாக நீங்கள் தேடி அலைந்து கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
            உங்களது அச்சம், கோபம், பழிவாங்கல் உணர்ச்சி இன்னும் என்னென்னவோ உணர்ச்சிகள் இருக்கின்றன. அவைகள் ஒரு பாவத்தை, அசம்பாவிதத்தை உருவாக்கி விடும் போது அதிலிருந்து மன்னிப்பு எனும் இடைவிடாத சிந்தனைக்குள் நீங்கள் விழுந்து விடுவீர்கள். அப்போது இறைவன் இன்னும் நெருக்கமாக உங்களுக்குத் தேவைப்படுவார். அவர் ஒருவரால் மட்டுமே அப்போது உங்களது சிந்தனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்பது போன்ற தோற்றத்துக்கு ஆளாவீர்கள். அவர் அதற்கான பரிகாரங்களை வைத்துக் கொண்டு உங்களுக்காகவே காத்திருக்கும் போது உங்களது இறைவனை எப்படி உங்களால் ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியும்.
            உண்மையைச் சொல்வதென்றால்,
            ஆரம்ப நிலையிலேய உங்கள் இறைவனை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரு வாய்ப்பை நீங்கள் இழந்து விட்டீர்கள்.
            உங்கள் பயத்தை நீங்கள் தரிசித்திருக்கலாம். உங்கள் கோபத்தை நீங்கள் தரிசித்திருக்கலாம். உங்கள் பழிவாங்கல் உணர்வையும்தான். இன்னும் உணர்வுகள் என்னென்ன இருக்கிறதோ அத்தனையையும்தான். அவைகளை நீங்கள் தரிசித்து இருந்தால் நீங்கள் ஒருபோதும் உங்களது இறைவனைத் தரிசிக்க வாய்ப்பு இல்லாமல் போயிருந்திருக்கும்.
            உள்முகமாகப் பார்க்கும் போது ஒவ்வொன்றும் புலனாகிறது. புரிந்து கொள்ளப்படுகிறது. யாரும் வழங்க முடியாத ஒரு மகத்தான அமைதியை அது தனக்குத் தானே வழங்கிக் கொள்கிறது. வெறுமனே ஒரு புரிதல் மட்டுமே. அது அறிந்ததலிருந்து அறியாத புலத்தை நோக்கி ஒரு விடுதலையைக் கொடுக்கிறது. அதற்கு மேல் அறிவதற்கு எதுவுமில்லை என்ற புலத்தில் நீங்கள் சிந்திக்காமல் நின்று விடுவீர்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
            எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விட்ட பிறகு எந்தக் கடவுளால் உங்களுக்கு ஆகப் போவது என்ன? உங்கள் இறைவன் உங்களுக்கான ஒரு சைக்காலஜிகல் சப்போர்ட் அவ்வளவுதான். உங்களுக்கு ஒரு சைக்காலஜிகல் சப்போர்ட் தேவையில்லை எனும் போது அவர் ஓட்டம் பிடித்து விடுவார். உங்கள் சைக்காலஜிகல் சப்போர்ட்டைத் தேடித் தேடித்தான் உங்கள் சிந்தனைகள் உங்களுக்குக் கட்டுபடாமல் தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்கிறது என்பது புரிகிறதா? உங்களுக்கு அப்படி ஒரு சப்போர்ட்டே தேவையில்லை எனும் போது நீங்கள் விடுதலை பெற்றவராகி விடுவீர்கள்.
            உங்களது இடைவிடாத சப்போர்ட்டைத் தேடும் மன ஓட்டமே உங்களை இறைவனைத் தேடி ஓட வைக்கிறது என்பதை நம்புவது சிரமம்தாம். ஊடுருவிப் பார்த்தால் அதைத் தவிர வேறு என்ன இருக்கிறது?! ஒன்றுமில்லை. அந்த ஒன்றுமில்லை என்பதைப் புரிந்து கொள்வதற்குதான் இறைவன் தேவையாய் இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் மறுபடியும் ஒரு மனவோட்டத்தைத் துவங்குகிறீர்கள்? ஒன்றுமில்லை என்றான பிறகு அங்கு எதுவுமில்லை. அதை எதை ஒன்றை வைத்தும் புரிந்து கொள்ள இயலாது. புரிந்து கொண்ட பின் புரிந்து கொள்வதற்கு எதுவுமில்லை என்பதைப் புரிந்து கொண்டு அந்த மனவோட்டத்தைத் தகர்க்கும் அந்த நிலையில் உங்கள் இறைவன் மரணத்தைச் சந்திப்பதை யாராலும் தடுக்க முடியாது.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...