17 Apr 2019

வருணா! ஒய் ஆர் யூ ஒண்ணுக்கிங்?



செய்யு - 58
            நரிவலம் ஹாஸ்டலில் விகடு சேர்ந்த அந்த வருடத்தின் மழைக்காலம் ஆரம்பித்திருந்தது. ஹாஸ்டல் பழங்காலத்து ஓட்டு வீடு. வீடு பக்கா வீடு என்றாலும் ஓடுகள் நாட்டு ஓடுகள். ஒரு சில நாட்களுக்கு மழையைத் தாக்குப் பிடிக்கும் அந்த ஓடுகள் தொடர் மழை என்றால் ஊறிப் தண்ணீர் சலிய ஆரம்பித்து விடும். கால் வைக்கும் இடமெங்கும் நசநசவென்று ஆகி விடும். அது போன்று மிகு தொடர் மழை பெய்து ஹாஸ்டல் தரை முழுவதும் நனைந்து விடும் நாட்களின் இரவுகளில் பள்ளிக்கூடத்தில் படுக்க அனுப்புவார்கள். இரவு பள்ளிக்கூடத்தில் படுத்து விட்டு காலை ஹாஸ்டலுக்கு வந்து விட வேண்டும்.
            ஹாஸ்டலின் தென்னண்டைக் கீழ்ப் பக்க மூலையில் இருந்த குட்டை மிகுமழை தாங்காது. தண்ணீர் நிரம்பி வழிய ஆரம்பித்து விடும். அந்தத் தண்ணீர் அரை அடி உயரத்துக்கு ஹாஸ்டல் வீட்டுக்கு சற்று தள்ளி பத்தடி தூரம் வரை நிற்கும். தென்னை மரங்கள் எல்லாம் அந்த அரையடி தண்ணீரில் நின்று கொண்டிருக்கும்.
            மழைக்காலம் ஹாஸ்டல் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான காலமாக இருக்கும். ஒழுகிச் சலியும் தண்ணீரைக் காரணம் காட்டி பிள்ளைகள் படிக்காமல் நன்றாக ஓப்பி அடிப்பார்கள். ஒவ்வொரு நாளும் படிக்கச் சொல்லி வெறுப்பேற்றியதற்குப் பழி வாங்குவது போல பிள்ளைகள் நடந்து கொள்வார்கள். தண்ணீர் சொட்டிக் கொண்டிருக்கும் அந்த நாட்களில் படிப்பதும் சிரமமாகவே இருக்கும். ஹாஸ்டலுக்கும், பள்ளிக்கூடத்துக்கும் இடம் மாறி மாறிப் போய்க் கொண்டிருப்பதில் பெரும்பான்மையான நேரம் போய்க் கொண்டிருக்கும்.
            பள்ளி விடுமுறை நாட்களில் இந்த வேடிக்கை அதிகமாக நடக்கும். மிகு மழை பெய்வதாகத் தெரிந்தால் ஹாஸ்டலிலிருந்து பள்ளிக்கூடத்துக்கு மாற்றவார்கள். மறுபடியும் லேசாக வெயில் அடிப்பதாக தெரிந்தால்  வார்டன் பள்ளிக்கூடத்திலிருந்து ஹாஸ்டலுக்குப் போகலாம் என்பார். ஹாஸ்டல் வந்தவுடன் மழை ச்சோவென்று அடித்துக் கொண்டு ஊற்றும். அப்புறமென்ன? ஹாஸ்டலிலிருந்து திரும்ப பள்ளிக்கூடத்துக்குக் குடையைப் பிடித்துக் கொண்டு மறுபயணம் ஆரம்பிக்கும். அதற்கு மேல் பிள்ளைகள் தங்கள் சாமர்த்தியத்துக்கு ஏற்ப பள்ளிக்கூடத்துக்கும், ஹாஸ்டலுக்கும் ரவுண்ட் கட்டி அடிப்பார்கள்.
            இந்த விசயத்தில ராமராஜையே எடுத்துக் கொண்டால்,
            ஹாஸ்டலிலிருந்து பள்ளிக்கூடம் வந்த பிறகுதான் ராமராஜூக்குப் பேனாவை மறந்து ஹாஸ்டலில் வைத்து விட்டது ஞாபகம் வரும். உடனே வார்டனிடம் சொல்லி விட்டு குடையைப் பிடித்துக் கொண்டு கொட்டும் மழையில் ஹாஸ்டலுக்குப் போவான். பேனாவை எடுத்து வந்த பிறகு புத்தகம் ஒன்றை எடுத்து வராமல் வந்து விட்டதாகச் சொல்லிக் கொண்டு மறுபடியும் ஹாஸ்டலுக்குப் போவான். அதிகபட்சமாக கால் மணி நேரத்தில் போய் திரும்பி விடலாம் என்றால் அவன் அரை மணி நேரத்துக்கு அதிகமாக எடுத்துக் கொள்வான். காரணம் கேட்டால் பேனாவைக் காணாமல், புத்தகத்தைக் காணாமல் தேடியதாகப் பலவித காரணங்களை அடுக்குவான். இந்த விசயத்தில் அவனுக்கும் வார்டனுக்கு நடக்கும் பேச்சுகள் பிள்ளைகளக்குச் சிரிப்பை வரவழைத்து விடும்.
            இப்படி எதையாவது மறந்து விட்டதாகச் சொல்லிக் கொண்டு குடையைப் பிடித்துக் கொண்டு ஹாஸ்டலுக்கும், பள்ளிக்கூடத்துக்கும் மாறி மாறி அலைந்து கொண்டிருப்பது ராமராஜூக்கு ரொம்ப பிடித்தமானது என்பதால், இதற்காகவே அவனோடு சேக்காளியாக இருக்கும் பிள்ளைகள் அதிகம். எந்தப் பிள்ளையையும் தனியே ஹாஸ்டலுக்குச் சென்று வர அனுப்ப மாட்டார்கள் என்பதால் துணைக்கு யாரையாவது அழைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். இதனால் ராமராஜ் ஹாஸ்டலுக்குப் போகும் போது துணைக்கு அவனுக்குப் பிடித்த சேக்காளியை அழைத்துக் கொள்வான். அந்தச் சேக்காளியாய் தாம் இருக்க வேண்டும் என்பதற்காகவே பிள்ளைகள் அவனிடம் நெருங்கிப் பழகுவார்கள்.
            இந்த ராமராஜின் விசயம் பள்ளிக்கூடம் வரை பிரசித்தமானது. பள்ளிக்கூடத்தில் பாடம் நடக்கும் போதும் அவன் இப்படி எதையாவது மறந்து விட்டதாகச் சொல்லி ஹாஸ்டல் வரை வந்து போவது அவனது வழக்கமாக இருந்தது.
            இதனால் ஹாஸ்டலிலிருந்து கிளம்பும் போதே வார்டன் ராமராஜைக் குறிப்பிட்டு எச்சரிப்பார். "டேய் ராமராஜூ! மறந்துடாம ஞாபவமா எல்லாத்தையும் எடுத்துக்கோ. அப்புறம் பள்ளியோடம் போயி அத மறந்துட்டேம், இத மறந்துட்டேம்னு சொன்னா பாத்துக்கோ! வுட மாட்டேம்! இது அவனுக்கு மட்டுமில்ல. அல்லாருக்கும்தாம். ஞாபவமா அல்லாத்தையும் எடுத்துக்கோணும் பாத்துக்குங்க!"
            அப்படி வார்டன் எச்சரித்து அன்று கூட பள்ளிக்கூடம் வந்தும் ராமராஜ் ஹாஸ்டலுக்குப் போவதற்காக வார்டன் முன் நின்றான். அவன் வந்து நிற்பதைப் பார்த்ததும் வார்டனுக்குப் புரிந்து விட்டது.
            "பேனா இல்லையோன்னா பக்கத்துல யார்கிட்டயாவது வாங்கிக்கோ! புத்தகம் இல்லையோன்னா ஒம்ம வகுப்பு படிக்குற எவம்கிட்டயாவது உக்கார்ந்து படிச்சுக்கோ! வேற எது இல்லின்னாலும் எப்படியோ சமாளிச்சுக்கோ! இன்னிக்கு ஒன்னய ஆஸ்டலுக்கு அனுப்புறதா இல்லியாக்கும்!" என்றார் வார்டன்.
            ராமராஜ் மெளனமாக நின்றான்.
            "அதாம் சொல்லிபுட்டோம்! அப்புறன்னா? போ!" என்றார் வார்டன்.
            மறுபடியும் ராமராஜிடம் அதே மெளனம். இடத்தை விட்டு நகராமல், பேசாமல் அப்படியே தலையைக் குனிந்து கொண்டு நின்றான்.
            "அதாம் கெளம்பும் போதே சொன்னோம்ல. அப்புறம் எத மறந்து வெச்சிட்டே வந்தேம்?"
            ராமராஜ் யோசிப்பது போல முழிகளை அசைத்துக் கொண்டிருந்தான்.
            "சொல்லித் தொலைடா எதே மறந்து வெச்சிட்டு வந்தேம்னு? ஆன்னா, நீ எத மறந்துட்டு வெச்சிட்டு வந்தாலும் பரவாயில்ல. பக்கத்துல இருக்குறவோளுட்ட வாங்கிச் சமாளிச்சுக்க. இன்னிக்கு ஒன்னய அனுப்புறாப்புல யில்ல ஆமா!"
            ராமராஜ் முன்னை விட வெகு பவ்வியமாக மெளனத்தை அசை போட்டுக் கொண்டிருந்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைகள் அனைவரும் உதட்டைத் தாண்டி வந்து கொண்டிருந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அப்படி அவன் எதை மறந்து விட்டு வந்திருப்பான் என யோசித்துக் கொண்டிருந்தனர்.
            வார்டனுக்கும் அவன் அப்படி எதை மறந்து வந்திருப்பான் என்ற சுவாரசியம் தொற்றிக் கொண்டிருக்க வேண்டும். அவன் கைகளைக் கவனித்தார். புத்தகம், ‍நோட்டு, பேனா எல்லாம் இருந்தது.
            "அதாம் ல்லாம் இருக்குல்ல. அப்புறன்னா? போ! போயி படி!" என்று வார்டன் சொல்லியும் ராமராஜ் நகராமல் நிற்க, "அடேய் கல்லூளிமங்கா! எத மறந்து வெச்சிட்டு வந்து தொலைஞ்சே! சொல்லித் தொலைடா! அத நானே யார்கிட்டயாவது வாங்கித் தர்ரேன்!" என்று சத்தமிட்டார்.
            "அத்து வந்து... எத்தையும் மறந்துடாம எடுத்துக்கோன்னு உஜார் பண்ணீங்களா! எதையும் மறந்துடாம எடுத்துகிர்ரணும்ங்ற ஞாபவத்துலயே அல்லாத்தையும் ஞாபவமாக எடுத்துக்கிட்டே இருந்ததுல இன்னிக்கு ஜட்டி போட மறந்துட்டேம்! இங்ஙன வந்ததும்தான் ஞாபவமே வர்ருது சார்! ஒரு மாரியா இருக்குதுங்க சார்! இந்த ஒரு தபா வுட்டீங்கன்னா செத்த நேரத்துல போயி எடுத்துப் போட்டுட்டு செத்த நேரத்துல வந்திடுவேம் சார்!" என்றான்.
            "அடக் கருமம் புடிச்சவனே! நெசமாவே போடலியா? ல்லே அத்த யாருகிட்டயும் வாங்கித் தர்ற முடியாதுங்றதுக்குச் சொல்றீயா?" என்றார் வார்டன்.
            "பொய்யிலாம் கெடயாது சார்! வேணும்னா நீங்களே பாருங்க சார்!" என்று கையைக் கீழே விட்டு வெள்ளைக் கைலியை தூக்கிக் காட்ட ஆயத்தமாவது போல ராமராஜ் கைகளைக் கீழே இறக்கப் போனான்.
            "அடச் சீ! போய்த் தொலடா! இனிமே ஆஸ்டல்ல வுட்டு கெளம்புறப்ப ஞாபவமா ஜட்டியப் போட்டுத் தொலைஞ்சீங்களான்னும் கேக்கணும் போலருக்கு!" என்ற வார்டன் சொன்னதும், ராமராஜ், "சார்! விகடண்ணாவைத் தொணைக்கு அழைச்சிட்டுப் போறேம்!" என்றான்.
            "ம்! அல்லாரும் வரிசையா உக்கார்ந்து படிக்க ஆரம்பிக்கலாம்! ஹெட் மாஸ்டரு திடீர்ன்னு வந்தாலும் வர்ரலாம்!" என்றார் வார்டன்.
            விகடுவும், ராமராஜூம் ஒரு குடையில் ஒன்றியபடி ஹாஸ்டலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். மழை பெருமழையாக அடித்துக் கொண்டிருந்தது.
            "நீ நெஜமாவ்வே ஜட்டிப் போட மறந்துட்டியா ராஜூ எம்ம ராமராஜூ?" என்றான் விகடு.
            "இந்த மழயினால ஜட்டி காயவே மாட்டங்கேதுண்ணா! நல்லா காஞ்சுப் போட்டாலே அரிப்பு தாங்க முடியலண்ணா! இதுல காயாத ஜட்டியப் போட்டா  தோல சொரிஞ்செடுத்து அந்தாண்ட போட வேண்டியதாம். அதனால நாஞ் ஜட்டி போடறத வுட்டே நாலு மாசமாவதுண்ணா!" என்றான் ராமராஜ்.
            "எப்புடிடா ஒன்னால முடியுது?"
            "அதல்லாம் முயன்றா முடியும்ணா! ஜட்டி சுட்டுதுண்ணா! கால் வுட்டுதுண்ணா!"
            "அப்புறம் ஆஸ்டலுக்குப் போயி எதப் போடுவ்வே?"
            "எதயும் போட மாட்டேங்கண்ணா! இப்படி ப்ரியா வுடறதுதாண்ணா பிடிச்சிருக்கு! ச்சும்மா! இப்படிப் போயி திரும்புணா அதுல அர மணி நேரம் ஓடும்ல. அதாங். இந்த ஜட்டி மேட்டர வெளில வுட்டுறாதீங்கண்ணா! கலாய்ச்சே கொன்னுடுவாய்ங்கே! அதாண்ணா இந்த மேட்டருக்கு வுங்கள அழச்சிட்டு வந்தேங்! வேற யாரயும் அழச்சிட்டு வந்தேங்! என்னய ஜட்டிப் போடறத பாக்க வுட்டே கொன்னுடுவாய்ங்கண்ணா!"
            "நீ ஜட்டிப் போடறத பாத்து எவம் ன்னா பண்ணப் போறாம்?"
            "நீங்க சுத்த வேஸ்ட்ணா! ஆஸ்டல்ல நடக்குறது ஒண்ணுமே தெர்ரியல!"
            "நமக்கு ன்னா தெர்ரியல?"
            "அதல்லாம் வேணாண்ணா வுடுங்ணா!"
            "இப்போ சொல்றீயா ல்லியா? ல்ல பள்ளியோடம் போனதும் ஒஞ் ஜட்டி மேட்டர அவுத்து வுடவா?"
            "மழ எப்பூடி அடிச்சு வூத்துதுங் பாருங்கண்ணா! வருணா! ஒய் ஆர் யூ ஒண்ணுக்கிங்னு சொல்லுங்கண்ணா! ல்லேன்னா கொடைக்குள்ளயே மழ பேஞ்சு நனைஞ்சிரும்வோம்ணா!" என்றான் ராமராஜ்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...