22 Apr 2019

உருமாறும் பாம்புகள்



செய்யு - 62
            வரிசையாகப் ஹாஸ்டலில் அடுக்கியிருக்கும் பெட்டிகள் பாம்பு போல ஊர்ந்து செல்கின்றன. அந்த நகர்வு ராட்சச அனகோண்டாவை நினைவில் கொண்டு வருகின்றன. ஹாஸ்டலின் ஒவ்வொரு மூலை முடுக்கும் விடாமல் நகர்கிறது. எதையோ விழுங்கும் ஆவேசத்தில் அது இயங்கிக் கொண்டிருக்கிறது. அது பெட்டிகளை விழுங்கலாம். துரதிர்ஷ்டம் பாருங்கள். பெட்டிகள்தாம் பாம்பாய் எதையோ விழுங்க துடித்துக் கொண்டிருக்கிறது.
            பாம்பாய் மாறி விழுங்கத் துடித்துக் கொண்டிருக்கும் பெட்டிகள் ஒவ்வொன்றும் ஏகப்பட்ட ரகசியங்களை விழுங்கி வைத்திருக்கின்றன. எந்தப் பெட்டியைத் திறந்து எந்த ரகசியத்தை எடுத்துப் பார்ப்பது? வெறும் பெட்டிகள் என்றால் அதைச் செய்வதில் பயமேது? பெட்டிகள் ஒவ்வொன்றும் பாம்பின் உடலின் ஒவ்வொரு அங்கம். பாம்பைப் பார்ப்பதில் மிரட்சி இருக்கிறது. பயம் கூடிக் கொண்டிருக்கிறது. பாம்பை நெருங்கித் தொட்டுப் பார்ப்பது எப்படி?
            பெட்டிப்பாம்பாய் அடங்கும் பாம்பா இது? பெட்டிகளே பாம்பாய் நகரும் பாம்பு.
            பாம்பு நகரும் அந்த ஹாஸ்டலில் யாரும் இல்லை விகடுவைத் தவிர. அவன் மட்டும் நடுக்கூடத்தில் படுத்திருக்கிறான். ஒரு கோரைப்பாய். அதன் மேல் ஒரு போர்வை. அதன் மேல் தலைக்கு ஒரு தலையணை வைத்து விகடு படுத்திருக்கிறான். நகர்ந்து வரும் பாம்புக்கு இரை கிடைத்து விட்ட மகிழ்ச்சி.
            இப்படி ஒரு பாம்பைப் பார்த்ததும் வாயடைத்துப் போகிறான் விகடு. கத்த நினைக்கிறான். கத்த முடியவில்லை. எழுந்து ஓட நினைக்கிறான். எழ முடியவில்லை. கால்களை அசைத்துப் பார்க்கிறான். அசைக்க முடியவில்லை. எல்லாம் செயலிழந்தது போல இருக்கிறது. கண்கள் மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது. மனம் மட்டும் படபடவென அடித்துக் கொண்டிருக்கிறது.
            விழுங்க வேக வேகமாக வருகிறது பாம்பு. பாம்பின் வாயை உற்றுப் பார்க்கிறான். பிரேம்குமாரின் பெட்டிதான் பாம்பின் வாயாக இருக்கிறது. கண்களைச்  சுழல விட்டு முழுபாம்பையும் பார்க்க முயல்கிறான். முழுக்கூடமும் பாம்பின் உடலால் நிறைகிறது. அது உடலைச் சுருட்டிச் சுருட்டி நடுக்கூடத்தில் நிறைந்து கொண்டிருக்கிறது. இப்போது பாம்பின் வால் தெரிகிறது. வாலாய் மாறியிருக்கும் அது பவித்ரனின் பெட்டி.
            உஸ் என்ற சத்தத்தோடு பாம்பின் வாய் வால் பகுதியை நெருங்கி அதைச் சப்பி விட்டு மீள்கிறது. பார்ப்பதற்கு பாம்பின் தலைக்குள் வால் உள்ளே சென்று மீள்வதைப் போல இருக்கிறது. பாம்பின் வாயாய் இருக்கும் பெட்டி ஒவ்வொரு பெட்டியாய் நாக்கை நீட்டி நக்கிக் கொண்டே போகிறது. விகடு அதில் தன் பெட்டி எங்கே இருக்கிறது என்று பார்க்கிறான். தன் உடல் பெட்டியில் பக்கிரிசாமியின் பெட்டி வரும் போது பாம்பு அதைச் சீறிக் கொத்துகிறது. மற்றப் பெட்டிகளை முத்தமிடுவது போல வருடுகிறது. சில பெட்டிகள் கூச்சத்தால் ஒதுங்கிக் கொள்கின்றன. பாம்பு விடுவதாயில்லை. வாஞ்சையோடு விலகிச் செல்லும் தன் உடலை தலையால் தழுவுகிறது.
            விகடுவுக்கு தன் பெட்டியை விரைவில் பார்த்து விட்டால் தேவலாம் போலிருக்கிறது. என்ன ஒரு மோசமான ஒரு பாம்பு? ஒவ்வொரு பெட்டியாய் எவ்வளவு மெதுவாய்...
            பாம்பின் நடுவில் விகடுவின் பெட்டித் தெரிகிறது. எப்படியாவது தன் பெட்டிக்குள் புகுந்து விட வேண்டும் என்று தோன்றுகிறது விகடுவுக்கு.
            தன் உடல் பெட்டி ஒவ்வொன்றையும் நாக்கால் வருடிய பாம்பு வாலில் எழுந்து நிற்கிறது. ஒரு பாம்புக்கு இது சாத்தியம்தானா? அது எழுந்து நிற்கும் உயரத்துக்கு ஓட்டுக்கட்டடம் எப்படி உயர்ந்து போகிறது? எதுவும் சாத்தியம், எதுவும் நடக்கும் என்பது போல எல்லாம் நடக்கின்றன.
            விகடுவை அப்படியே சுற்றிக் கொள்கிறது பாம்பு. பாம்பின் தலை அவனை முத்தமிடுகிறது. வால் வருடுகிறது. விகடுவின் உடலெங்கும் அருவருப்புப் படருகிறது. அவன் வாந்தி மேல் வாந்தியாய் எடுக்கிறான். பாம்பு அதை வாஞ்சையோடு நக்கி நக்கிக் குடிக்கிறது. நிஜத்தில் பாம்புகள் நக்கிக் குடிக்குமா? நக்காமல் குடிக்குமா? என்ற குழப்பம் விகடுவை ஆட்டிப் படைக்கிறது.
            தன்னைச் சுற்றியிருக்கும் அந்தப் பெட்டிப் பாம்மை அறுத்தெறியும் மூர்க்கத்தோடு தன் கைகளை ஒரு பயில்வான் போல எடுத்து பலம் காட்ட நினைக்கிறான் விகடு. கைகள் மரத்துப் போனது போல அப்படியே உடலோடு ஒன்றிக் கிடக்கின்றன. தன் நிலையை நம்ப முடியாமல் நெஞ்சு படபடவென துடிக்கிறது விகடுவுக்கு.
            ஹாஸ்டலில் இருக்கும் ஒவ்வொருவர் பெயராய்ச் சொல்லிக் கத்துகிறான். ஒவ்வொருவர் பெயராய்ச் சொல்ல சொல்ல தாங்கள் பெட்டிக்குள் இருப்பதாக பதில் குரல் வருகிறது. பாம்பு எல்லாரையும் விழுங்கி விட்டது, தான்தான் கடைசி என்பதாக நினைத்துக் கொள்கிறான் விகடு.
            ஒருவேளை தன்னை விழுங்கினால் தான் தலைப்பெட்டியின் வழியே உள்ளே போவது எவ்வளவு அசிங்கம் என்று நினைக்கிறான் விகடு. சுற்றியிருந்த பாம்பு ஒரு நொடியில் விகடுவை விட்டு விட்டு, அவன் முன்னே படம் எடுத்து அவனை விழுங்கப் போவதைப் போல வாயைப் பிளந்து நிற்கிறது.
            அசைாயமல் இருந்த கால்கள் ஓடத் துவங்குகின்றன. பாம்பின் உடலைச் சுற்றி ஓடுகிறான் விகடு. தன் பெட்டியைத் தேடிப் பார்க்கிறான். தன் பெட்டியை அந்த பச்சை நிறப் பெட்டியைப் பார்த்ததும் அதைத் திறந்து அதற்குள் பாய்ந்து குதிக்க எத்தனிக்கிறான். பாம்பின் தலைப்பெட்டி அதற்குள் அவனை விழுங்குகிறது. அதன் வாய் முழுவதும் கொழ கொழவென்ற திரவமாய் இருக்கிறது. உடலெங்கும் விகடுவுக்குப் பிசுபிசுப்பாய் இருக்கிறது.
            பாம்பின் உடல் வேக வேகமாய் அவனை உள் இழுக்கிறது. எல்லாருடைய பெட்டியையும் கடக்கும் விகடுவுக்கு அவனுடையப் பெட்டியைக் கடக்க முடியாமல் நழுவி நழுவிப் போவது படபடப்பைத் தருகிறது.
            "நம்மோட பெட்டி! நம்மோட பெட்டி!" என்று விகடு சத்தம் போடுகிறான்.
            "அடச் சீ! என்னாச்சிண்ணா கனவா?" என்று ராமராஜ் துடித்து அடங்கும் விகடுவின் உடம்பை அழுத்திப் பிடித்துக் கொண்டான்.
            ராமராஜூம், விகடுவும் இன்னும் மற்றப் பிள்ளைகள் எல்லாம் பள்ளிக்கூடத்தின் பிரதானக் கட்டடத்தின் மேல் மாடியில் ப்ளஸ்டூ வகுப்பறையில் படுத்துக் கிடந்தார்கள்.
            வெளியில் மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. ராமராஜோடு எப்போது வந்தோம், எப்போது படுத்தோம் எல்லாம் மறந்தது போலிருந்தது விகடுவுக்கு. 
            ராமராஜைப் பார்க்க பார்க்க ஆத்திரமாக வந்தது விகடுவுக்கு. அவனை அடித்துத் துவம்சம் செய்ய வேண்டும் என்ற அளவுக்கு ஆத்திரமாக இருந்தது.
            உடல் முழுவதும் வியர்த்து அடங்கியது விகடுவுக்கு.
            "என்னண்ணா! கனவுல அவ்வேம் வந்து கட்டிப் பிடிச்சானா?" என்றான் ராமராஜ். விகடுவுக்கு ராமராஜை அப்படியே தூக்கி மாடியிலிருந்து வெளியே வீசி விடலாமா என்று தோன்றியது. காலை இழுத்து ஓங்கி உதைக்க தயாரானான் விகடு. சாமர்த்தியமாய் நகர்ந்து விட்டான் ராமராஜ். "சாரிண்ணா! ஒங்ககிட்ட அத நாம்ம சொல்லியிருக்கக் கூடாது! எல்லாருக்கும் கெட்ட கெட்ட கனவா வருதாண்ணா. யார்ட்டயாவது சொன்னத்தாம் கனவு நிக்கிதாம். ஒங்ககிட்ட சொல்லியும் நமக்கு கனவு கனவா வருதுண்ணா! ஒரே பாம்பு பாம்பா வந்து சுத்திக்குதுண்ணா. நக்குதுண்ணா." என்றான்.
            "பாம்பு கனவு வந்துதாம் முழிச்சியா?" என்றான் விகடு.
            "அது கடிச்சதுக்கு அப்புறந்தாம் முழிப்பேம். அதுக்கு முன்னாடி ஒங்க கால ஓங்கி தூக்கி நம்ம மேல போட்டு...பாம்பு வந்துட்டு இருக்கிறப்பவே... வலி தாங்கலண்ணா!" என்றான் ராமராஜ்.
            "ஒனக்கும் பாம்பா?"
            ராமராஜ் பதில் சொல்லவில்லை. வெறித்துப் பார்த்தான்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...