செய்யு - 52
வைத்தி தாத்தாவுக்கு வரிசையாக பிறந்த ஐந்தும்
பெண் பிள்ளைகள். தாத்தாவுக்கு பெண் குழந்தைகள் மேல் இருந்த விருப்பத்தின் பேரில் பிறந்தவர்கள்
அல்லர் அந்த ஐந்து பெண் பிள்ளைகளும். அடுத்தது பிறப்பது ஆண் பிள்ளையாக இருக்காதா என்ற
ஆசையில் மாறிப் பிறந்தவர்கள் அந்த ஐந்து பெண் பிள்ளைகளும். தாத்தாவின் ஆண் குழந்தை மோகம் அவருக்கு ஆறாவது
பிள்ளை பிறந்த போதுதான் நிறைவேறியது. அந்த ஆறாவது பிள்ளைதான் குமரு மாமா.
அடுத்து ஏழாவதாக ஓர் ஆண் பிள்ளை பிறக்கும்
என்ற வைத்தி தாத்தாவின் நம்பிக்கையில் பெண் பிள்ளையாக பிறந்ததுதான் வள்ளி சித்தி. எப்படியும்
இன்னோர் ஆண் பிள்ளை வேண்டும் என்ற அவரது தளராத ஆசையில் எட்டாவதாக பிறந்தது வீயெம்
மாமா. இந்த எட்டுக் குழந்தைகளுக்குப் பிறகு அவருக்கு குழந்தைகள் மீதான ஆசை நின்று போனதோ?
அல்லது மீண்டும் பெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டதோ? தெரியவில்லை,
வீயெம் மாமா கடைகுட்டியாகப் போனது.
பெண் பிள்ளைகள் மேல் அவருக்கு இயல்பாக
ஒரு வெறுப்பு இருந்தது. எந்தப் பெண் பிள்ளையும் அவர் எதிரில் நிற்கக் கூடாது. விளாசித்
தள்ளி விடுவார். அதில் அம்மா மட்டும் விதிவிலக்கு. அம்மாவுக்கு மட்டும் சின்ன வயதிலிருந்தே
அவர் முன்னே நிற்பதும் அவரை எதிர்த்து கேள்வி கேட்பதும் வேடிக்கையாகப் போய் விட்டது.
இது போன்று மற்ற பெண் பிள்ளைகள் செய்தால் அடித்துத் துவைத்து விடும் அவர் அம்மாவை
மட்டும் அப்படிச் செய்யாதது ஏனென்று புரியாத ஒன்றுதான்.
இப்போது அம்மா எதிரில் நின்று பேசினாலும்,
"ஒம்மோட வாயாட நம்மால முடியாது ஆயி! நீ கெளம்பு!" என்று சொல்லி விடுவார்.
"இந்த மனுசம் ஓங்கிட்ட மட்டும் ஏன்
இப்படி பம்முதுன்னு தெரியல. நாங்க நின்னா மட்டும் எரிஞ்சி எரிஞ்சி வுழும்!" என்று
சாமியாத்தாவும் தாத்தாவுக்குத் தெரியாமல் திட்டும்.
வைத்தி தாத்தா இருக்கும் போது அவர் எதிரில்
எந்த பெண் பிள்ளைகளும் நிற்கக் கூடாது என்பதால் அவர் வேலைக்குப் போனதும் முதல் வேலையாக
அவரது கட்டிலில் ஏறி படுப்பது, அவரைப் போல் உட்கார்ந்து கொண்டு தோரணையாக நடித்துக்
காட்டுவது என சிறிய வயதில் பெரியம்மா, அம்மா, சித்திகளுக்கு அது ஒரு விளையாட்டாகவே
இருந்தது.
இதில் சிப்பூர் பெரியம்மா ஒரு படி மேலே
போய் அவர் பணம் வைத்துப் பூட்டியிருக்கும் பெட்டியைக் கம்பி போட்டு லாவகமாகத் திறந்து
அதில் உள்ள பணத்தை எடுத்துப் பார்ப்பதும், வைத்தி தாத்தாவைப் போல எண்ணிப் பார்ப்பதும்
என்று அதகளம் பண்ணுமாம். அந்தப் பெட்டி தாத்தா படுத்திருக்கும் கட்டிலுக்கு மேல் சுவரோடு
சுவராக வைத்து ஆணி அடித்து வைக்கப்பட்டிருந்தது. பெட்டி ரெண்டுக்கு ஒன்றரைக்கு ஒன்று
என்று கனச்செவ்வகமாக இருக்கும். அதற்குள்தான் தாத்தா பணத்தையும், வரவு செலவு கணக்கு
நோட்டுகளையும், அவருக்கு வரும் கடிதங்களையும் வைத்திருந்தார்.
அந்தப் பெட்டியைத் திறக்கும் போது யாரையும்
அருகில் வைத்துக் கொள்ள மாட்டார் வைத்தி தாத்தா. தனியாக தான் இருக்கும் வேளைகளில்
மட்டும்தான் அதற்கு திறப்பு விழா நடத்துவார். மற்ற நேரங்களில் அற்புதப் பெட்டி போல
மூடியிருக்கும் அந்தப் பெட்டியில் என்னென்ன இருக்கும் என்ற கற்பனை தாத்தாவின் வீட்டுக்குப்
போனதெல்லாம் விகடுவுக்கு இருந்தது. அந்தப் பெட்டியை அவன் குட்டிப் போட்ட நாயைப் போல
பல விதங்களில் சுற்றிச் சுற்றிப் பார்த்தான்.
சிப்பூர் பெரியம்மா வரும் ஒரு நாளில் சொல்லி
அதைத் திறந்து பார்த்து விட வேண்டும் என்று கூட அவன் துடித்தான். அப்படி சிப்பூர் பெரியம்மா
ஒருமுறை வாகாக வந்த போது தன்னுடைய ஆசையைச் சொன்ன போது அது மறுத்து, "அதெல்லாம்
சின்னப் புள்ளியா இருக்குறப்ப அறியாம தெரியாம வெள்ளாட்டுக்குப் பண்ணது. இப்பயுமா பண்றது?
போடா அந்தாண்ட!" என்றது. விகடு அழுது அடம் பண்ணினான். அவனது அடத்தை அடக்குவதற்காக
ஒரு கம்பியைப் போட்டு நெம்புவது போல நெம்பிப் பார்த்தது. உண்மையில் சிப்பூர் பெரியம்மாவால்
அந்தப் பெட்டியைத் திறக்க முடியும்தான். அனால், "பாருடா தம்பி! பூட்டு தெறக்க
மாட்டேங்குது. அதில்லாம் சின்ன புள்ளியோலா இருக்கிறப்ப நாம்ம பண்ணதுடா. இப்ப மறந்து
பூட்டுது. தெறக்க மாட்டேங்குதே!" என்று நாசுக்காக சிப்பூர் பெரியம்மா ஏமாற்றி
விட்டது.
குமரு மாமா பிறந்த பிறகு வீட்டில் இருந்த
பெண் பிள்ளைகளுக்கு நெருக்கடியை அதிகப்படுத்தினார் வைத்தி தாத்தா. எந்நேரமும் குமரு
மாமாவை ஒருத்தர் மாற்றி ஒருத்தர் தூக்கி வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். குமரு மாமா
கீழே விளையாடுவதையோ, நிற்பதையோ வைத்தி தாத்தா பார்த்தால் பெண் பிள்ளைகள் ஒவ்வொன்றையும்
அடித்துத் துவம்சம் பண்ணி விடுவாராம். அப்படி அதீத செல்லமாக வளர்ந்தது, வளர்க்கப்பட்டது
குமரு மாமா.
எந்தப் பெண் பிள்ளையையும் படிக்க அனுமதிக்காத
வைத்தி தாத்தா குமரு மாமா படிப்பதற்காக லாலு மாமாவை ஒரு வேலையாள் போலவே நியமித்திருந்தார்.
லாலு மாமா அப்போது வடவாதி பள்ளிக்கூடத்தில் வாத்தியாராக இருந்தது. லாலு மாமா காலையில்
பள்ளிக்கூடத்துக்குப் போகும் போது வீட்டுக்கு வந்து குமரு மாமாவைச் சைக்கிளில் பின்னாடி
கேரியரில் வைத்து அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும், பள்ளிக்கூடம் விட்டதும் அதே போல்
கொண்டு வந்து விட்டு விட வேண்டும் என்று ஏற்பாடு. இது நாள் பிசகாமல் அப்படியே நடந்தது.
"அந்தக் கெழவன் எங்களயும் படிக்க
வெச்சிருந்தா நாமளும் படிச்சு ஒரு வேலய்க்குப் போயிருப்போம்! பள்ளியோடம் போனது
தெரிஞ்சா மனுஷம் மிளார வெச்சுதாங் அடிப்பாம்! அடிச்சா அடியில தோலு சதயெல்லாம் மிளாரோட
வந்துடும். கொஞ்ச நஞ்ச பாடா படுத்துனா அந்த மனுஷம்?" என்று அம்மா சொல்லும் போது,
விகடு கேட்பான்,
"நீ எத்தனியாவது வரிக்கும்மா படிச்சே?"
"மூணாவது வரிக்கும் படிச்சேம். ஆட்டு
மாட்ட ஓட்டிகிட்டு ஒங்க ஆத்தாவோட போவோம். ஆத்தாதாம் நாம்ம ஆட்டு மாட்ட பாத்துக்கிறம்.
நீங்க ஓடிப் போயி பள்ளியோடத்துல படிச்சிட்டு மத்தியானச் சாப்பாட சாப்பிட்டுட்டு யாருக்குந்
தெரியாம ஓடியாந்துடுங்கன்னு சொல்லும்! அப்ப புத்தகஞ் சிலேட்டு நோட்டா இருந்துச்சு.
கிழிஞ்ச பாவாடய இழுத்து முடிஞ்சிகிட்டு, மேலுக்கு சட்ட கூட இருக்காது. அப்படியே ஓடுவம்.
பள்ளியோடத்துக்கு ஓடுனா வாத்தியாருமாருக ஏம் தாமசமுன்னு சூத்தாமட்டையிலயே அடிப்பாவுக.
மூணாவதுக்கு அப்புறம் இதுக்கு மேல நம்மால அடி வாங்க முடியாதின்னு நிறுத்திப்புட்டேங்.
அவ அதாங் தேன்காடு சித்தி இருக்காளே கலா அவ மட்டுந்தாங் அஞ்சாவது வரிக்கும் தாங்குனா.
அவதேம் பொட்டப் புள்ளைகள்ல அதிகம் படிச்சவ." என்று அம்மா சொல்வதைக் கேட்பதே
ஒரு மாதிரியாக இருக்கும்.
தன்னுடைய எந்தப் பெண் பிள்ளைகளும் படிக்கக்
கூடாது என்பதில் குறியாக இருந்த வைத்தி தாத்தாதான் குமரு மாமாவை நல்லவிதமாகப் படிக்க
வைத்து ஆபிசர் வேலைக்கு அனுப்பி விட வேண்டும் என்ற கனவோடு இருந்தார். வீட்டிலிருந்த
சாமியாத்தா உட்பட ஒவ்வொரு பெண் பிள்ளைகளும் குமரு மாமாவைக் கவனித்து லாலு மாமா வரும்
போது சைக்கிள் கேரியரில் ஏற்றி விட வேண்டியது அவர்களின் அன்றாட முக்கிய பொறுப்பு.
குமரு மாமாவும் மூன்றாம் வகுப்பு வரையில்
சரியாகத்தான் பள்ளிக்கூடத்துக்குப் போனது. மூன்றாம் வகுப்புப் படித்த போது காலையில்
லாலு மாமாவோடு பள்ளிக்கூடம் போன குமரு மாமா சாயுங்காலத்துக்குள் காணாமல் போய் விட்டது.
காணாமல் போன குமரு மாமாவைத் தேடி வைத்தி
தாத்தாவின் வீடே அல்லோகலப்பட்டது. பெண் பிள்ளைகள் ஒவ்வொன்றையும் உரித்து எடுத்துக்
கொண்டிருந்தார் வைத்தி தாத்தா!
*****
No comments:
Post a Comment