தூக்கி வளர்ப்பது அம்மை.
பெரும்பாடு படும் குடும்பங்களில் அம்மைக்கு
அம்மையாய் தூக்கி வைத்து, அப்பனுக்கு அப்பனாய் ஆற்றுப்படுத்துவது அக்காக்கள்தான். அதுவும்
பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகள் என்றால் தனிப்பிரியம் வந்து விடும் இந்த அம்மைகளுக்கும்
அக்காக்களுக்கும்.
இப்படிப்பட்ட அம்மையையும், அக்காவையும்
இந்த ஆண் பிள்ளைகள் மதிக்கும் மரியாதையை இந்த ஒட்டு மொத்த ஆண் வர்க்கமே பயன்படுத்தும்
கெட்ட வார்த்தைகளிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
தோ..., ஓ... வில் தொடங்கும் அந்த வார்த்தைகளுக்குள்தான்
எத்தனைக் குரூரம்? எத்தனை வன்முறை?
அத்தனை கெட்ட வார்த்தைகளும் அம்மையையும்,
அக்காவையும் பாலியல் ரீதியாக அசிங்கப்படுத்துவது போலலல்லவா இருக்கிறது?
சண்டையிடுவது இரண்டு ஆண்கள் என்றாலும்
அங்கே அசிங்கமாக பேசப்படுவது அந்த இரண்டு ஆண்களைப் பெற்ற பாவத்துக்காகப் பெண்கள்தாம்.
வளர்த்த கடா வார்த்தையில் பாய்வது என்பது இதுதாம்.
அப்படியென்ன அப்பன்களும், அண்ணன்களும்
உயர்வாகி விட்டார்கள், அம்மைகள், அக்காக்கள் மட்டமாகி விட்டார்கள், பாலியல் ரீதியான
கெட்டச் சொற்கள் அவர்களை மட்டும் மையமிடும் அளவுக்கு?
மனிதக் கூட்டத்தின் முதல் வன்முறை தொடங்கியது
அம்மையிடமும், இரண்டாவது வன்முறை தொடங்கியது அக்காவிடமும்தான் என்பதற்கு இந்த மகா
மட்டரகமாக பாலியல் கெட்டச் சொற்களே மகத்தான சாட்சியங்கள்.
அம்மையையும், அக்காவையும் பாலியல் ரீதியான
கெட்டச் சொற்களால் மட்டப்படுத்திய இந்த ஆண் வர்க்கத்துக்கு மற்றப் பெண்கள் எம்மாத்திரம்?
இந்த வர்க்கத்திடமா போய் ஒரு பெண் தன்னை அம்மை போல், அக்கா போல் நினைத்துக் கொள்
என்று கெஞ்ச முடியும்?
உடல் வாதைகளுக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும்
மட்டுமில்லாமல் வார்த்தை வன்முறைகளுக்கும் அதிகம் பலியாவது பெண்கள்தாம்! அப்படிப் பலியாக்குவதைத்தாம்
வீரம் என்று மீசையை முறுக்கிக் கொள்கிறதே இந்த ஆண் வர்க்கம்!
*****
No comments:
Post a Comment