1 Apr 2019

ரெட்ட ஊசி டாக்டர்



செய்யு - 42
            நரிவலத்தின் கோயில் குளத்தை நினைக்கும் போதெல்லாம் மொகஞ்சதோராவில் இருந்த பெரியகுளம்தான் விகடுவின் நினைவுக்கு வரும். அது மொகஞ்சதாரோவில் இருந்த மக்கள் கூடிக் குளித்த பொதுகுளம். நரிவலத்தின் கோயில் குளமும் அப்படித்தான். பெரியகுளம் மற்றும் பொதுகுளம்.
            ஊரே கூடி குளிக்கும் குளம், ஊரே கூடி குளிக்கும் ஆறு என்று நரிவலத்தின் குளியல் துறைகள் எப்போதும் திருவிழாக் கோலம் கொண்டிருக்கும். எந்நேரமும் குளியல் துறைகளில் நான்கைந்து பேர் குளித்துக் கொண்டிருப்பார்கள். அது காலை நேரமென்றால் இருபது முப்பது பேர் வரை மாற்றி மாற்றி குளித்துக் கொண்டிருப்பார்கள்.
            ஊரே கூடி குளித்ததால் என்னவோ அந்த ஊருக்கே ஒரு பொதுப்பிரச்சனையும் இருந்தது. அரிப்பு பிரச்சனை இல்லாதவர்களை நரிவலத்தில் பார்க்க முடியாது. அரிப்புக்கான வைத்தியமும் நரிவலத்தில் பிரசித்தம். அங்கிருக்கும் சின்ன குழந்தையைக் கேட்டால் கூட அரிப்புக்கான மருந்துகளை வரிசையாகச் சொல்லும்.
            அரிப்பு என்றால் சிறியதாக இருக்கும் அவில் மாத்திரையை வாங்கிப் போட்டுக் கொண்டு, கேண்டிட் பீ அல்லது ‍கேண்டிட்டொரமா ஆயின்மெண்ட்களை வாங்கித் தடவிக் கொள்ள வேண்டும். நரிவலத்தின் பெட்டிக்கடைகளில் கூட நீங்கள் இவற்றை வாங்க முடியும் என்பதுதான் நரிவலத்தின் சிறப்பு. அதையும் தாண்டி அரிப்புப் பிரச்சனை நீண்டால் அப்துல் டாக்டரிடம் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். அவர் ஓர் ஆர்.எம்.பி. கைலியோடு கட்டம் போட்ட சட்டையில் இருப்பார். அரக்கபரக்க வேலை பார்த்து விட்டு வியர்வை ஒழுக வந்து உட்கார்ந்திருக்கும் ஒரு கூலித்தொழிலாளி போலத்தான் உட்கார்ந்திருப்பார்.
            அப்துல் டாக்டர் விசாரிக்கும் விதமே தனி. "ன்னா பண்ணுது? அரிப்பா?" என்பார்.
            "ம்!" என்றால் போதும்.
            அரைக்கை சட்டை போட்டிருந்தாலும் சரிதான், முழுக்கை சட்டை போட்டிருந்தாலும் சரிதான் சட்டையோடு சேர்த்தே ஊசியைக் குத்துவார். சின்ன பிள்ளைகள் என்றால் ஊசி பின்பக்கம்தான். கால்சட்டையைக் கழற்றச் சொல்லியெல்லாம் சிரமப்படுத்த மாட்டார். கால்சட்டை வழியாகக் குத்தித் தள்ளுவார். ஒரு சிறிய பிரச்சனை அவரிடம் என்னவென்றால் அவர் தன் வாழ்நாளில் ஒற்றை ஊசிப் போட்டு பழக்கம் இல்லாதவர், ரெண்டு ஊசி போடுவார்.  அதுவும் இரண்டு கைகளில். சின்ன பிள்ளைகளுக்கு பின்பக்கத்தின் இரண்டு பகுதிகளிலும். இதனால் அவருக்கு ரெட்ட ஊசி அப்துல் டாக்டர் என்ற பெயரும் ஏற்பட்டிருந்தது. ட்ரிட்மெண்ட் முடிந்ததும் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். "மனுசனுக்கு மசுரு இருக்குற வரிக்கும் மண்டையில பேனு இருக்கும் மக்கா!" என்பார்.
            அப்துல் டாக்டர் ரெண்டு ஊசி போட்டாலும் அரிப்பு நிற்காது. அவில் மாத்திரைகள் போட்டாலும் நிற்காத அரிப்பு அது. கேண்டிட் பீக்கோ, கேண்டிட்டொரமாவுக்கோ நிற்காது அரிப்பும் அதுவே. அரிப்புக்கெல்லாம் ஆசான், பேராசான் நரிவலத்தின் அரிப்பே. அதற்காகவெல்லாம் அப்துல் டாக்டரிடம் ரெட்ட ஊசி போடுவது நிற்காது. தொடர்ந்து அவரிடம் ரெட்டை ஊசிப் போடுவதக்கு ஒரு காரணம் இருந்தது. அது ஒரு வேடிக்கையான காரணம் என்று புறந்தள்ள முடியாது. அபத்தமான காரணம் போன்று தோன்றினாலும் அது சாசுவதம் உள்ள காரணந்தான். ரெட்டை ஊசிப் போட்டுக் கொண்டால் குறைந்தது ரெண்டு நாளைக்கும் வலிக்கும் வலியில் அந்த அரிப்பு கொஞ்சம் குறைந்தது போலிருக்கும். குறைந்தது போலிருக்கும் என்று சொல்வதை விட அந்த வலியில் அரிப்பு மறந்தது போலிருக்கும். மறுபடியும் அரிப்பு வரும் போது ரெட்ட ஊசியைப் போட்டுக் கொண்டு வலியை ஏற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.
            இரண்டு மாதங்களுக்கு இப்படியே ஊசிப் போட்டுக் கொண்டே இருந்தால் அப்புறம் அது பழகி விடும். தன்னை அறியாமல் சொரிந்து கொண்டும், அரிப்பது புரியாமல் சொரிந்து கொண்டும் அது ஓர் அனிச்சை செயலாகி விடும். நரிவலத்தில் இருப்பவர்களும் அதை பெரிதுபடுத்த மாட்டார்கள். ஒருவேளை நரிவலத்துக்கு வந்த பிறகும் விகடு சொரியாமல் இருந்தால் நிச்சயம் அதை பெரிதுபடுத்தியிருப்பார்கள்.
            திட்டைக்கும், நரிவலத்துக்கும் மருத்துவ ரீதியாக இருந்த வேறுபாடு இதுதான். திட்டையில் சளி பிரச்சனை இருப்பவர்கள் அதிகம் இருந்தார்கள். நரிவலத்தில் அரிப்பு பிரச்சனை இருந்தவர்கள் அதிகம் இருந்தவர்கள். இன்னோர் ஆச்சரியமான விசயம் என்னவென்றால் சளிப் பிரச்சனையால் அடிக்கடி அவதிக்குள்ளாகும் விகடு நரிவலத்துக்குப் போன பிறகு சளி பிரச்சனையில்லாமல் அரிப்புப் பிரச்சனையால் அவதிப்பட ஆரம்பித்தான்.
            எல்லா பிள்ளைகளுக்கும் ஒத்து வந்த கேண்டிட் பியும், கேண்டிட்டொராமாவும் அவனுக்கு ஒத்து வரவில்லை. அவில் மாத்திரைகளைப் போட்டுக் கொண்டதில் தூக்கம் பொங்கிப் பொங்கி வந்தது. அதுவும் ஹாஸ்டல் பிள்ளைகள் வகுப்பறையில் தூங்கினால் ரிப்போர்ட் ஹெட் மாஸ்டரிடம் போய் விடும். இப்போது இந்த அரிப்புப் பிரச்சனையைப் பற்றிப் பேசி முடிக்காமல் அவரைப் பற்றி பேசுவது முறையாக இருக்காது. அவரை நாளைக்குப் பார்த்துக் கொள்வோம்.
            நரிவலத்தில் இந்த அரிப்புப் பிரச்சனை ஆண்களுக்கு ஒரு விதத்தில் செளகரியமானது. ஆண் பிள்ளைகள் பேண்ட் போட்டிருப்பதால் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டுக் கொள்வது போல விட்டுக் கொண்டு கவுட்டிப் பகுதியில் உனக்கையாகச் சொரிந்து கொள்ள முடிந்தது. பெண்கள் பாவம் இந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளித்தார்களோ? இப்போது நினைத்தாலும் பெருத்த வருத்தமாகத்தான் இருக்கிறது.
            வகுப்பறையில் பாடம் நடத்தும் வாத்தியார்மார்கள் பேண்ட் பாக்கெட்டுகளில் கை விடுவதைப் பிள்ளைகள் ரொம்ப கவனமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சில வாத்தியார்கள் அதை நாசுக்காகச் செய்வார்கள். இங்கிலீஷ் எடுத்த சபரி வாத்தியார் இந்த விசயத்தில் நாசுக்குப் போதாதவர். பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டு வறட்டு வறட்டு என்று இழுப்பது நன்றாகக் கேட்கும். பிள்ளைகள் லைவ் கமெண்டரி அடிப்பார்கள். "சபரி வாத்தியார் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைளை விட்டு விட்டார். இன்னும் சில மணித்துளிகளில் வறட் வறட் என்ற சத்தம் கேட்கத் துவங்க இருப்பதால் மாணவச் செல்வங்கள் காதுகளைக் கூர்மையாக வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அங்கு இங்கு அநாவசியமாக வெட்டிக் கதைகள் பேசும் மாணவக் கண்மணிகள் எச்சரிக்கையாக அமைதி காக்குமாறு வகுப்பறை நிர்வாகத்தின் சார்பாக வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்!" என்பார்கள். சபரி வாத்தியாருக்கும் இது ஓரளவு தெரிந்துதான் இருந்தது. ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது என்பார்களே! இந்த நரிவலத்தில் சிரிப்பை அடக்கினாலும் அரிப்பை அடக்க முடியுமா? ஆடிய பாதமும், பாடிய வாயும் சும்மா இருக்காது எனும் போது அரிப்புக்கு சொரிந்து கொண்ட கை மட்டும் சும்மா இருக்குமா?
            விகடு நரிவலத்தில் இருந்த காலந்தொட்டும் சொரிந்தான், சொரிந்து கொண்டே இருந்தான். சில நேரங்களில் ஆத்திரத்தில் இந்த ஊருக்கு ஏன் நரிவலம் என்று பேர் வைத்தார்கள், சொரிவலம் என்று வைத்திருக்கலாம் என்று மனதுக்குள் திட்டிக் கொண்டான்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...