22 Mar 2019

Do Nothing - A Curiosity way to save nature


Do Nothing - A Curiosity way to save nature
            எவ்வளவு வாகனங்கள்? எவ்வளவு புகை? காற்றை மாசுபடுத்த மனிதருக்கு என்ன உரிமை இருக்கிறது? தனக்கு சகலவித உரிமைகளுக்கும் இருப்பது போல மனிதர்கள் காற்றை மாசுபடுத்துகிறார்கள்.
            மனிதர்கள் காற்றை மாசுபடுத்துகிறார்கள். அதன் விளைவை அவர்களே அனுபவிக்கிறார்கள் என்று மட்டுமா முடிகிறது இந்தப் பிரச்சனை. இந்தப் பூமியின் எல்லா உயிர்களும் அல்லவா அதன் விளைவை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
            நாட்டில் எந்த விலங்கு, எந்த பறவை, எந்த பூச்சி எந்த வாகனத்தைப் பயன்படுத்துகிறது? எல்லாம் மனிதர்கள் பயன்படுத்தும் வாகனங்கள்தான். மனிதர்கள் பயன்படுத்தும் வாகனப்புகைக்கு அவைகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
            தானும் செத்து மற்ற உயிரினங்களையும் சாகடிப்பதில் மனிதர்கள் கில்லாடியாகி விட்டார்கள்.
            ஒரு விலங்கோ, பறவையோ, பூச்சியோ, தாவரமோ பாலிதீனைத் தயாரிக்கிறதா அல்லது பயன்படுத்துகிறதா? பாலிதீனின் பாதிப்பு மனிதர்களை விட மிக அதிகமாக அவைகளைப் பயன்படுத்தாத அந்த உயிரினங்களை பாதிக்கிறது. எத்தனை தாவரங்களின் வேர்களை மண்ணோடு உறவாட விடாமல் உட்பகையை உருவாக்கும் வேலையை இந்த பாலிதீன் செய்கிறது தெரியுமா!
            ஆற்றிலும் கடலிலும் வாழும் எந்த மீன் சாக்கடையையோ, தனது மின்சார பயன்பாட்டுக்கு அணு மின்சாரக் கழிவுகளையோ உருவாக்கிக் கொண்டிருக்கிறது? மனிதர்கள் எவ்வளவு சாக்கடையை உண்டாக்கினாலும் அவ்வளவையும் உண்டுதான் அது வாழ்கிறது. சாக்கடையை உண்டு விடும் அவைகள் அணுமின்சாரக் கழிவுகளை என்ன செய்யும்? தப்பித் தவறி அந்தக் கழிவுகள் அதன் வாயில் போகும் போது தூண்டில் புழுவுக்கு வித்தியாசம் தெரியாமல் சிக்கிக் கொள்ளும் அவைகள் என்னதான் செய்யும்?
            இருக்கின்ற நீரையெல்லாம் உறிஞ்சியெடுத்து காசாக்கிக் கொண்டே போனால் விலங்குகளும், பறவைகளும் மற்ற உயிரினங்களும் எப்படிப் சம்பாதித்து காசு கொடுத்து தண்ணீர் வாங்கும்? அவைகளுக்கான புறம்போக்கு நீர் நிலைகளையும் அழித்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறார்களே இந்த மனிதர்கள்?
            மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கும் உள்ளவர்களாயிற்றே இவர்கள்! இவர்களா சக உயிரினங்களின் தண்ணீரை, உணவைப் பூர்த்தி செய்யப் போகிறார்கள்?
            தேவைக்குப் போக அதுவும் அத்தியாவாசிய தேவைக்குப் போக எஞ்சிய இயற்கையை இயற்கையாக விட்டு விட வேண்டாமா!
            இயற்கையைக் காக்க இந்த மனிதர்கள் எதுவும் செய்ய வேண்டாம்! அதை அப்படியே விட்டு விட்டாலே இயற்கை இயற்கையாக இருக்கும். செய்வார்களா? இந்த மனிதர்கள் செய்வார்களா? இவர்களின் ஆதாயக் கண்களை அந்த ஒற்றைக் கண்ணன் வந்து பிடுங்கிக் கொண்டு போகும் வரையில் அது சாத்தியமோ என்ன! இந்த மனிதர்களிடம் இந்த முறை எதையாவது செய்யுங்கள் என்று மன்றாடவில்லை பாருங்கள்! எதையும் செய்யாமல் இருங்கள் என்றுதான் மன்றாட வேண்டியிருக்கிறது பாருங்கள்!
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...