22 Mar 2019

திருட்டுச் சாராயம்



செய்யு - 32
            வாழ்க்கப்பட்டுப் பெரியப்பாவின் துக்கத்தை முடித்து விட்டு ஊரில் விசாரிக்க பெரியப்பாவைப் பற்றி பல விசயங்கள் தெரிய வந்தன.
            வாழ்க்கப்பட்டு பெரியப்பாவின் குடி முற்றத் தொடங்கியது. கள்ளு, சாராயம் என்று சதா சர்வகாலமும் குடியிலேயே மிதந்து கொண்டிருந்தது. சரக்கு வாங்கிக் கொடுக்க ஆள் கிடைத்து விட்டால் அந்த ஆள் பின்னாலேயே போய் வீட்டையும் மறக்க ஆரம்பித்தது பெரியப்பா.
            அரிதாக வீடு வரும் நாட்களில் மூன்று பெண் பிள்ளைகளைப் பெற்று விட்டதைச் சொல்லிப் புலம்பியிருக்கிறது. புலம்பல் எல்லாம் வெற்றுப் புலம்பல்கள். பெற்றது பெற்றாகி விட்டது அந்தப் பிள்ளைகளுக்காக என்ன செய்யலாம் என்பதை அது யோசிக்கவேயில்லை. மறுநாள் விடிந்தால் எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் குடிப்பதற்கு வழி தேடி புறப்பட ஆரம்பித்தது. குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு என்பார்களே கிராமத்தில். அது அப்படியே பெரியப்பாவுக்குப் பொருந்தியது.
            பெரியப்பாவின் நடத்தைகள் பிறழத் தொடங்கியிருந்தது. சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசத் தொடங்கியது. பெரியப்பாவைப் பற்றி எந்தக் குறையையும் சொல்லாத பெரியம்மாவையே அது ஒரு முறை குறை சொல்லியிருக்கிறது. "வூட்டுல எந்தப் பொம்பளையும் என்னை மதிக்கல. பெத்த புள்ளீங்க கூட என்னை மதிக்கல!" என்று அழுதிருக்கிறது.
            குடிப்பதற்கு பணமே இல்லை என்றான நிலையில் பெரியப்பா வேலைக்குப் போயிருக்கிறது. பெரியப்பாவால் இழைப்புளி போடவோ, துளை அடிக்கவோ முடியவில்லை. இங்கிருக்கும் சட்டங்களை அங்கும், அங்கிருக்கும் சட்டங்களை இங்குமாக மாற்றி மாற்றி வைத்துக் கொண்டிருந்திருக்கிறது. சுத்தியல் பிடித்து ஆணி போட முடியாமல் கைகள் நடுங்கத் தொடங்கியிருந்தன. ஓர் ஆணி போட்ட போது அது விலகிப் பொய் விரல்களில் விழுந்திருக்கிறது. பெரியப்பாவை வேலைக்கு அழைத்து வந்தவர்களுக்கு தர்ம சங்கடமாகப் போய் விட்டது. வேலைக்குப் போன வீட்டுக்காரர்களிடம் பெரியப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி விட்டு பெரியப்பாவை ஓரமாகப் போய் படுத்துக் கொள்ள சொல்லியிருக்கிறார்கள்.
            பெரியப்பா அங்கிருந்த குறுகலான பெஞ்சில் உடலைக் குறுக்கிப் படுத்துக் கொண்டது. அது ஒரு டீக்கடை சைஸ் பெஞ்சு. உட்காரும் பலகை அரை அடிக்கு மேல் இருக்காது. நீளம் மூன்றடி இருக்கும். வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் இதைப் பார்த்து விட்டு பெரியப்பாவிடம் வந்து துண்டைத் தரையில் விரித்து நன்றாகப் படுக்குமாறு சொன்னார்கள். பெரியப்பா கேட்கவில்லை. அப்படியே பிடிவாதமாகப் படுத்துக் கிடந்தது. அப்போதும் அழைத்துச் சென்றவர்களுக்கு யோசனையாகத்தான் இருந்தது. பெரியப்பாவை அழைத்துக் கொண்டு வீட்டில் விட்டு விடலாமா என்று யோசனை கலந்திருக்கிறார்கள். வீட்டில் அழைத்துக் கொண்டு போய் விட்டு மட்டும் ஆகப் போவது என்ன? மீண்டும் ஒரு குடிகார சோக்காளியைத் தேடி போய் விடும் பெரியப்பா என்று யோசித்து அப்படியே கிடக்கட்டும் என்று விட்டு விட்டார்கள்.
            அரை மணி நேரத்துக்கும் மேலாக அப்படியே படுத்திருந்த பெரியப்பா அப்புறம் எழுந்து வேலை பார்த்த வீட்டின் கொல்லைக்கும் திண்ணைக்குமாக அலைய ஆரம்பித்தது. இந்த அலைச்சல் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அப்புறம் போய் அதே பெஞ்சில் போய் படுத்த பெரியப்பா மதியம் வரை படுத்துக் கிடந்தது.
            மதிய சாப்பாட்டு வேளை நெருங்கும் வேளையில் வீட்டுக்காரர் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் வந்து சத்தம் போட்டிருக்கிறார். "கொல்ல கொட்டுலுக்கு மேல இருந்த சாராயத்த எவம்டா எடுத்துக் குடிச்சது?" என்று.
            வேலைக்குப் போனவர்களுக்கு கோபம் வந்திருக்கிறது. "நாங்க வேல பாக்க வந்தோமா? சாரயம் குடிக்க வந்தோமா?" என்று பதிலுக்குச் சத்தம் போட்டிருக்கிறார்கள்.
            "நீங்க சாராயம் குடிக்கலன்னா வாய ஊதிக் காட்டுங்கடா!" என்று சத்தம் விட்டிருக்கிறார் வீட்டுக்காரர்.
            வேலைக்குப் போனவர்களுக்கு அவமானமாகப் போய் எல்லாரும் வாயை ஊதிக் காட்டி விட்டு, அத்தோடு வேலையைப் போட்டு விட்டு கொண்டு போன சாமான்களை மூட்டைக் கட்டிக் கொண்டு கிளம்ப தயாரானார்கள். "இனுமே ஒம்ம வூட்டு வேலய எந்த ஆளுகள வெச்சுப் பார்க்குறீர்னு பாத்துப்போம்!" என்று கோபாவேசத்துடன் பொங்கியிருக்கிறார்கள்.
            அப்போதுதான் பெஞ்சில் படுத்திருந்த பெரியப்பாவைப் பார்த்திருக்கிறார் வீட்டுக்காரர். "அது யாரு? நீங்க அளச்சுட்டு வந்த வேலக்கார மவராசம்தானே! அவரயும் வாய ஊதிக் காட்டச் சொல்லுங்க! தப்பு எம் பேர்ல இருந்தா உங்க எல்லாரு கால்ல வுழுந்து மன்னிப்புக் கேட்குறன். அதுவே உங்க பேர்ல இருந்தா எல்லாரும் எம்ம கால்ல வுழுந்து மன்னிப்புக் கேட்கணும். வேலக்கி வந்த இடத்துல சாராயம் வேணும்னா சொல்லுங்க. வாங்கித் தர்ரேன். அது வுட்டுபுட்டு இப்படி வாங்கி வெச்சிருக்கிற சாராயத்த யாருக்குந் தெரியாம எடுத்துத் திருடிக் குடிக்கிறதுன்னா ன்னா அர்த்தம்?"
            "இந்தாப் பாருங்க. அவம் குடிகாரம்தான். வாங்கிக் குடிப்பாம் தவிர. திருடிக் குடிக்க மாட்டாம். முடியலன்னு படுத்துக் கெடக்கிறவன போய் எழுப்பி வுட்டு வாய ஊதச் சொல்லுன்னா ன்னா அர்த்தம்? வேல பாக்குறதுக்கு கூலி கொடுக்கறன்னா அவ்வளவு கிருச கெட்டுப் போயிடுமோ?" என்ற கொதித்திருக்கிறார்கள் வேலைக்குப் போனவர்கள்.
            "இந்த வூட்டுல சாராயம் குடிக்கிற ஆம்பள நாந்தான். எம்ம வூட்டுப் பொண்டுக யாதும் சாரயம் குடிக்காது. இந்த வூட்டச் சுத்தி எம்ம வூட்டுக்காரங்க, வேலை பாக்குற உங்களத் தவிர யாருமில்ல புரிஞ்சுக்குங்க. எம்ம வூட்டுல யாரும் குடிக்கலன்னா அப்பால அது குடிச்சிருக்குறதுக்கு உம்மல தவிர வேற யாருங்றன்?"
            "ச்சும்மா நிறுத்துய்யா உம்ம பேச்ச! ன்னம்மோ சாராயம் வாங்கி வெச்சாராம். அது நாங்க வந்துதான் குடிச்சுப்புட்டோமாம். இந்த மாதிரில்லாம் பேசுனீன்ன வெச்சுக்க அப்புறம் எந்த ஊரு ஆளுகளும் உம்ம வூட்டு வேலய வந்து பாக்க வுடாமா பண்ணிப்புடுவோம் பாத்துக்கோ!"
            "அவ்ளோ ரோசம் இருந்தா படுத்துக் கெடக்குற சோக்காளிய எழுப்பி வந்து வாய ஊதிக் காட்டச் சொல்லுங்கய்யா. பெருசா பெனாத்திகிட்டு. எதுலயும் ஒரு ஞாயம் தர்மம் வேணாமா?" என்று சொல்லி விட்டு காறித் துப்பியிருக்கிறார் வீட்டுக்காரர்.
            அழைத்துக் கொண்டு போன ஆசாரிகளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வர, பெஞ்சில் படுத்திருந்த பெரியப்பாவைப் எழுப்பப் போனார்கள்.
            பெரியப்பாவின் பக்கத்தில் போக முடியாத அளவுக்கு சாராய நெடி வீசியது.
            கிட்டே போனவர்களுக்கு தர்ம சங்கடமாய் போனது. பெரியப்பாவை எழுப்பிக் கூட உட்கார வைக்க முடியவில்லை. போதை உச்சத்தில் இருந்தது.
            "ஒரு பாட்டுல சாராயம்னா கூட பரவாயில்லய்யா. வாங்கி வெச்சுருந்த மூணு பாட்டுல சாராயத்தயும் குடிச்சா மனுசனுக்குக் கோபம் வர்றாதா?" என்று வீட்டுக்காரர் சொன்னதும் அவர் பக்கத்து கோபத்தின் நியாயத்தைப் புரிந்து கொண்ட வேலைக்குப் போனவர்கள் வீட்டுக்காரரிடம் ஒருவாறாக சமாதானம் பேசி வேலையைத் தொடர்ந்திருக்கிறார்கள்.
            சாயுங்காலம் நான்கு மணி வாக்கில் பெரியப்பா போதை தெளிந்து எழுந்தது.
            "வேலக்கி வந்த இடத்துல சாராயத்த திருடிக் குடிக்கலாமா? யாஞ் சாமி! வூட்டுக்காரரு எவ்ளோ கேவலமா பேசிபுட்டாரு தெரியுமா? நம்ம வகையறாவுக்கே கெட்டப் பேரா போச்சு. ஏதோ வேலப்பாடு ல்லாமா கஷ்டப்படுறீயேன்று அளச்சிட்டு வந்ததுக்கு மூஞ்சல காறித் துப்புற மாரில்ல பண்ணிப்புட்டே. நாண்டுகிட்டு செத்தர்லாம் போல போயிடுச்சுப் போ. அப்படி ன்னா உனக்குக் குடிக்கத் தோணுதுங்றன்? இப்படித் திருடிக் குடிக்கிறதுக்கு வெசத்தக் குடிக்கிறது?" வேலைக்கு அழைத்து வந்தவர்கள் அவமானத்தின் வேதனை தாளாமல் பேசினார்கள்.
            பெரியப்பா ஒன்றும் சொல்லாமல் தலைகவிழ்ந்தபடியே நின்றது. வேலை முடியும் வரை அப்படியே நின்றிருக்கிறது.
            ஆறு மணி வாக்கில் வேலை முடிந்த போது வீட்டுக்காரர் கொடுத்த கூலியை வாங்கிக் கொண்டு புறப்பட்டவர்கள், பெரியப்பாவின் சட்டைப் பையில் இருபது ரூபாய் தாளைத் தாளை திணித்து விட்டு சொல்லாமல் கொள்ளாமல் அத்துடன் கூட அழைத்துக் கொள்ளாமல் கிளம்பினார்கள்.
            பெரியப்பா நெடுநேரம் அப்படியே நின்றிருக்கிறது.
            "நாளிக்கும் வேலக்கு வாய்யா. மூணு பாட்டிலு சாராயம் வாங்கி வெச்சு இருக்கேன். ந்நல்லா குடிச்சுபுட்டு கட்டில்லா மெத்தய வாங்கிப் போட்டு வெச்சு இருக்கேன். சொகமா படுத்துக்கலாம். ஒம்மால ந்நல்லா சொலி பாக்குற மனுசங்களயும் பேசிபுட்டன். நீயில்லாம் நாண்டுகிட்டு சாவாமா உசுர வெச்சுகிட்டு ஏம்யா எல்லாரயும் கொன்னுகிட்டு இருக்கே?" என்று சொல்லி விட்டு உள்ளே போனார் வீட்டுக்காரர்.
            பெரியப்பா விடுவிடுவென்று நடந்து போனது. திரும்பி மீள முடியாத நடையில் அது போய்க் கொண்டே இருந்தது. பூமி பிளந்து கொள்ளும் அளவுக்கு, வானம் இடிந்து விழும் அளவுக்கு ஒரு வேகநடையில் போய்க் கொண்டே இருந்தது. வேகநடையினால் உண்டான பெருமூச்சு எப்படி இருந்ததோ என்னவோ! அந்த பெருமூச்சே கடைசி மூச்சாகும் அளவுக்கு அது போய்க் கொண்டே இருந்தது.
            அதன் பின்,
            வாழ்க்கப்பட்டு கருவக்காட்டில் செத்துக் கிடந்த பெரியப்பாவைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.
            வீட்டுக்குப் போங்க என்று சொன்னாலோ, குடிபோதையின் காரணமாக யாரேனும் வீட்டுக்கு கைத்தாங்கலாக அழைத்து வந்தாலோ அது குறித்துக் கோபப்படும் பெரியப்பாவுக்கு தானாகத்தான் வீட்டுக்கு வர வேண்டும். இதுநாள் வரை அப்படித்தான். முதன்முறையாக மற்றவர்கள் வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு வந்தார்கள் பெரியப்பாவை. இனிமேல் பெரியப்பாவை யார் வீட்டுக்குப் போங்க என்று சொல்ல முடியும்? இனிமேல் குடிபோதையில் இருக்கும் பெரியப்பாவை கைத்தாங்கலாக யார்தான் வீட்டுக்கு அழைத்து வர முடியும்?
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...