2 Mar 2019

களிமண் பூட்ஸ்



செய்யு - 12
            "நம்ம ஊரு ரோடே இப்படிச் சேறும் சகதியுமா ஒலைய்யா இருக்கே! ஓகையூருக்குப் போற ரோடு எப்படி இருக்குமோ? சைக்கிளு டயரெல்லாம் சேறா அப்பிக்கப் போகுது! அப்புறம் சைக்கிளை மிதிக்க முடியாது! தள்ளிகிட்டுதான் போகுற மாதிரிதான் இருக்கப் போவுது!" என்றார் அப்பா.
            "நாம சுத்திப் போனா என்னப்பா?" என்றான் விகடு.
            "அதாண்டா சரி தம்பி!" என்றார் அப்பாவும்.
            சுற்றிப் போவது என்றால் வடவாதி கடைத்தெரு வழியாக உள்ளே புகாமல் கடைத்தெருவைக் கடந்து, திட்டையூரான் சர்க்கரை ஆலையைக் கடந்து வலது புறமாக செல்லும் ரோட்டில் ஒடித்து மூலங்கட்டளை பொன்னியம்மன் கோயில் வழியாகச் செல்ல வேண்டும். எப்படியும் ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் சுத்திப் போக வேண்டும். ரோடு தார் ரோடு என்பதால் நன்றாக மிதித்துக் கொண்டு செல்லலாம்.
            வானம் லேசாக தூவானம் போட ஆரம்பித்தது.
            விகடு ரெண்டு பட்டனைக் கழட்டி விட்டு சட்டையை தலைக்கு ஏற்றி விட்டுக் கொண்டான்.
            ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லை. மழைக்குளிருக்கு மக்கள் எல்லாம் வீட்டில் ஒதுங்கிக் கிடப்பார்கள்.
            அப்பா சைக்கிளை வேகமாக மிதித்தார். "தம்பி போக்ஸ்ல காலை விட்டுடாதடா! சூதானமாக உக்கார்ந்துக்கோ!" என்றார்.
            ஒருமுறை அப்படி சைக்கிளில் கேரியரில் உட்கார்ந்து போய்க் கொண்டிருக்கும் போது கா‍லை விட்டிருக்கிறான் விகடு. அவனது வலது குதிகால் சதையை அப்படியே வயட்டி எடுத்து விட்டது. குதிகால் எலும்பு லேசாக தெரியும் அளவுக்கு வெள்ளையாகி விட்டது. மூன்று வாரங்களுக்கு அந்தப் புண் ஆறும் வரை கெந்திக் கெந்தி நடந்து கொண்டிருந்தான். அப்பாதான் அவனை தூக்கிக் கொண்டு அலைந்தார்.
            மூலங்கட்டளை பொன்னியம்மன் கோயிலை ஒட்டிய டீக்கடையை நெருங்கிய போது மக்கள் சிலர் பீடி வலித்துக் கொண்டும், டீ குடித்துக் கொண்டு நின்றிருந்தனர்.
            "டீ குடிக்கிறீயாடாம்பி?" என்றார் அப்பா.
            "ம்!" என்றான் விகடு.
            அப்பா சைக்கிளை நிறுத்தினார். விகடு கேரியலிருந்து குதித்து இறங்கிக் கொண்டான்.
            "மூணு டீ போடுங்க! ரெண்டுல சீனி தூக்கலா போடுங்க!" என்று அப்பா சொன்னதும் நிமிடத்தில் கடைக்காரர் டீயை ஆற்றி டபரா செட்டில் ஒவ்வொன்றாக நீட்டிக் கொண்டே "ரெண்டு பேர்தான இருக்கீங்க?" என்றார்.
            "பய ரெண்டு டீ குடிப்பான்!" என்றார் அப்பா.
            "அப்படியா சங்கதி?" என்றவர் டபரா செட்டில் இருந்த அந்த ரெண்டு டீயையும் பக்கத்தில் வைத்திருந்த லோட்டாவில் ஊற்றி நன்றாக ஆற்றி விகடுவிடம் நீட்டி, "ச்சும்மா வாய் வெச்சே குடி!" என்றார்.
            விகடு சப்புக் கொட்டி உறிஞ்சி உறிஞ்சி டீயைக் குடித்தான்.
            "பய ந்நல்லா டீ குடிக்கிறானே! இன்னொன்னு போடவா?" என்றார்.
            "குடிக்கிறாயாடாம்பி?" என்றார் அப்பா.
            "போதும்பா! வாரப்ப குடிக்குறேன்!" என்றான் விகடு.
            கடைக்காரருக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. "வாரப்ப வேறயா? போட்டு ரெடியா வெச்சுருக்கிறேன். வந்துபுடு." என்றார்.
            அப்பா காசைக் கொடுத்து விட்டு சைக்கிளை எடுத்தார். விகடு நின்ற இடத்திலேயே ஒரு குதி குதித்து கேரியரில் ஏறி ஊட்கார்ந்தான். அப்பா வேட்டியைச் சரிசெய்து கொண்டே பெடலை ஒரு காலில் மிதித்து மறுகாலைப் போட்டு ஏறினார்.
            வெள்ளையாற்றுப் பாலம் வந்தது. திட்டை ஊரின் வெண்ணாறு போலல்லாமல் வெள்ளையாறு ஆழம் கம்மியாக இருக்கும். தண்ணீர் திறந்து விடும் போது மட்டும் ஆறு கொண்ட அளவு தண்ணீர் ஓடும். மற்ற நாட்களில் ஓர் ஓரமாக தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். ஆற்றில் இறங்கி குறுக்காக நடந்தே போய் விடலாம். வெண்ணாற்றில் இல்லாத சிறப்பாக வெள்ளையாற்றில் மணலைப் பார்க்க முடியும்.
            ஓகையூரில் விகடு வீட்டின் நிலம் ரெண்டரை மா உண்டு. விகடு பிறந்து நான்காவது வருடத்தில் வாங்கியது. குறுவை, தாளடி முடிந்தால் வயலில் உளுந்து, பயிறு போடுவார்கள். உளுந்து, பயிறு எடுக்கும் காலம் வரும் போது கோடைக்காலம் வந்து விடும். அப்போது விகடுவை அழைத்துக் கொண்டு வந்துதான் அப்பாவும், அம்மாவும் வயலில் உளுந்தோ, பயிறோ விதைத்ததை எடுப்பார்கள். "ஆள் வுடாம எடுத்தா நல்ல லாபந்தான்!" என்பார்கள் அப்பாவும், அம்மாவும் ஒருமித்தக் குரலில்.
            தாகம் என்றால் ஒரு எட்டு நடந்து வந்து வெள்ளையாற்றில் இறங்குவார்கள். மணல் மணலாய் என்று ஏதோ ஒரு நெய் விளம்பரத்துக்குச் சொல்கிறார்களே அப்படி ஆறு பார்ப்பதற்கு அம்சமாக மணல் மணலாய் இருக்கும். களிமண்ணாலான அந்த ஊரின் ஆற்றில் இருக்கும் ஆற்றின் மணல் மஞ்சளும், வெள்ளையுமாக தவிட்டுப் பானையை ரொப்பியதைப் போல இருக்கும்.
            ஆற்று மணலில் எங்கு கை வைத்து அரையடித் தோண்டினால் போதும். தண்ணீர் ஊற்றெடுக்கும். அள்ளிப் பருகினால் இளநித் தண்ணி மாதிரி அப்படி ஒரு சுவையாக இருக்கும். தவிக்கா விட்டாலும் அதில் தண்ணீர்க் குடிப்பது விகடுவுக்கு ரொம்பவே குடிக்கும். வயிறு பெருக்கும் வரை அள்ளி அள்ளிக் குடிப்பான்.
            அப்பா பாலத்தைக் கடந்து வலது கை பக்கமாக இருந்த ரோட்டில் ஒடித்தார். இனி அப்பா சொன்ன அந்த வெள்ளெருக்கு இருக்கும் இடம் வரை களிமண் சாலைதான். சாலை முழுவதும் சேறாக இருந்தது.
            "எறங்கிகிட்டு தள்ளிகிட்டுப் போவோம்டாம்பி!" என்றார் அப்பா.
            விகடு குதித்தான்.
            புல் படர்ந்திருந்த சாலை ஓரமாகப் பார்த்து சைக்கிளைத் தள்ளியபடி அப்பாவும் விகடுவும் நடந்தனர்.
            வயக்கரையோரம் வந்தது. விகடு வீட்டு வயலுக்கு நான்கு வயல் தள்ளி வெள்ளையாற்றின் எதிர்க் காரையில் அப்பா சொன்ன அந்த இடம் இருந்தது. சைக்கிளை கரையோரமாக படுக்கப் போட்டார் அப்பா. சமயத்தில் அடிக்கிற காற்று ஸ்டாண்ட் போட்ட சைக்கிளை தள்ளிவிட்டு படுக்கப் போட்டு விடும். இப்போது காற்று அடிக்கிற மாதிரி தெரியவில்லை. கோடைக்காலத்தில் வயக்கரையோரம் நிற்க முடியாத அளவுக்கு காற்று அடிக்கும். மனுசனே பறந்து போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காத்து கருப்பு அடிச்சிட்டுப் போயிடும் என்று சொல்வார்களே, அது அநேகமாக ஓகையூர் வயக்கரையோரம் அடிக்கும் காற்றைப் பார்த்துதான் சொல்லியிருப்பார்கள். பொதுவாக ஓகையூர் வயக்கரையோரம் சைக்கிளோடு வருபவர்கள் சாய்த்துப் போட்டு விட்டுதான் வயல் பார்க்கப் போவார்கள்.
            வெள்ளையாற்றின் எந்தக் கரையிலிருந்து இறங்க வேண்டுமானாலும் வெகு கவனமாக இறங்க வேண்டும். களிமண் வழுக்கி விட்டு உருட்டுக் குப்புறத் தள்ளி விட்டு விடும். அப்பா கவனமாக இறங்க இறங்க அவனைக் கைத்தாங்கலாக இறக்கிக் கொண்டே வந்தார்.
            தண்ணீர் கெண்டைக்கால் அளவுக்கு ஓடிக் கொண்டிருந்தது. நடுவில் மணல் மேடாக இருந்தது. மேட்டைக் கடந்ததும் தண்ணீர் அதே கெண்டைக்கால் அளவுக்கு ஓடிக் கொண்டிருந்தது. தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் மணலின் அடியில் கால் வைக்கும் போது காலுக்கு அடியும் மணல் அரித்துக் கொண்டு ஓடுவது ரொம்ப சுகமாக இருந்தது விகடுவுக்கு. அவன் மெதுவாக அதை நின்று நின்று ரசித்துக் கொண்டே போனான்.
            அங்கே போய் நின்றதும் அப்பாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. "இப்படியாடம்பி ஒரு குத்துக் கூட இல்லாம ஒடச்சிட்டுப் போவானுங்க?"
            "ஏம்ப்பா இல்லியா?" என்றான் விகடு.
            "ம்ஹூம்!" என்றவர், "வந்தது வந்துட்டோம்! அப்படியே வாரிக்கரைப் பக்கமா போனோம்னா எப்படியும் கண்டுபிடிச்சிடலாம்!" என்றார்.
            அது திட்டையூருக்குக் குறுக்காகப் போகும் வழி. எந்தக் களிமண் சகதியில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று நினைத்து ஊர் சுற்றி வந்தார்களோ அதே களிமண் சகதிச் சாலை வழியாகத்தான் இனிப் போக வேண்டும்.
            மறுகரையில் கவனமாக அவனை ஏற்றி விட்டு, "நீ இக்கரையில கவனமா நில்லு. நான் அக்கறையிலேர்ந்து சைக்கிளைத் தூக்கிட்டு வந்துடறேன்!"  என்று கிளம்பி அப்பா சைக்கிளைத் தூக்கிக் கொண்டு இக்கரைக்கு வந்தார். வாரிக்கரையோரம் வரை அப்பா சைக்கிள் பிரேமில் இரண்டு கைகளையும் பிடித்தபடி தூக்கிக் கொண்டே போகும்படி ஆயிற்று. விகடு பேருக்கு ஸ்டாண்டைப் பிடித்தபடி வால்பிடித்துப் போவது போல பின்தொடர்ந்து போய்க் கொண்டிருந்தான். களிமண்சேறு ஒரு சாண், ஒன்றரைச் சாண் அளவுக்கு காலை உள் இழுத்தது. நடப்பது பெரும்பாடாயிருந்து.
            வாரியில் தண்ணீர் சுழித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. "ஆத்துல தண்ணி அவ்வளவா இல்ல. வாரியில சுழிச்சுகிட்டு ஒடுதே. எங்கேயோ பள்ளத்துலத்திலேர்ந்து வாங்கிகிட்டு ஓடுது! ஆங்! அந்தோ இருக்குடாம்பி! இதுக்கு நாம கீழக்கோட்டத்து வழியா சைக்கிளே இல்லாம குறுக்கால வந்துருக்கலாம்டாம்பி!" என்றார்.
            அப்பா வெள்ளருக்கின் இலைகளைக் கழித்து கம்பு கம்புகளாய் ஒடித்து என் கைகளில் கொடுத்தார். பத்துப் பதினைந்து கம்புகள் சேர்ந்ததும் அதை அப்படியே பக்கத்திலிருந்த கொடி ஒன்றைப் பிடுங்கி என் கையில் இருந்த வாகிலேயே அப்படியே ஒரு கட்டு கட்டினார்.
            அப்பா சைக்கிளைத் தூக்கிக் கொண்டார். விகடு கட்டைத் தூக்கிக் கொண்டான். இருவரும் அந்த சேற்றுச் சாலையில் களிமண் பூட்ஸ்களை அணிந்தபடியே ஒன்றரைக் கிலோ மீட்டர் நடந்து வந்தனர். விகடுவுக்கு அப்படியே அந்தக் களிமண்ணிலே விழுந்து படுத்து விடுவோமா எனும் அளவுக்கு ஆயாசமாய் இருந்தது. சைக்கிளைத் தூக்கிக் கொண்டு வரும் அப்பாவைப் பார்த்ததும் அந்த ஆயாசம் கொஞ்சம் குறைவது போலிருந்தது.
            நடந்து நடந்து மாயனூரைக் கடந்ததும் வடவாதியிலிருந்து திட்டைக்குப் போகும் தார்சாலை வந்தது. அப்பா சைக்கிளை நிறுத்த விகடு கேரியர் மேல் கட்டை வைத்தான். இருவரும் காலில் இருந்த சேற்றை வழித்து விட்டு வாய்க்காலில் இறங்கி காலை நன்றாக கழுவிக் கொண்டனர்.
            அப்பா கேரியர் மேலிருந்த கட்டை ஒரு கையால் எடுத்தார். மறுகையால் விகடுவைத் தாங்கலாகத் தூக்கி உட்கார வைத்து அவன் கையில் கட்டைக் கொடுத்தார். சைக்கிள் ஸ்டாண்டை எடுத்து விட்டு பெடலில் கால் போட்டு ஏறி மிதிக்க ஆரம்பித்தார். தார்சாலையில் சைக்கிள் வேகமெடுக்கத் தொடங்கியது.
            விகடுவுக்கு மூலங்கட்டளை டீக்கடைக்காரர் ஞாபகம் வந்தது. அவர் இந்நேரம் டீ போட்டு அதுவும் ரெண்டு டீ போட்டு ரெடியாகக் காத்திருந்தால் என்ன செய்வது? என்று அவன் யோசித்து ஆரம்பித்தான்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...