26 Mar 2019

இரும்புப் பெட்டியும் டிவியெஸ் பிப்டியும்



செய்யு - 36
            நரிவலம் ஹாஸ்டலில் விகடுவைச் சேர்ப்பது என முடிவானவுடன் ஒரு இரும்புப் பெட்டித் தேடி எடுக்கப்பட்டது. அது வைத்தி தாத்தா அம்மாவுக்கு வாங்கித் தந்த சீதனம். இந்தப் பகுதியில் அப்படி ஒரு பழக்கம் உண்டு. புகுந்த வீட்டுக்குப் போகும் பெண்ணுக்கு ஒரு இரும்புப் பெட்டி சகிதம் அதனுள்ளாக அந்தப் பெண்ணுக்குத் தேவையான அனைத்துச் சாமான்களையும் வைத்துக் கொடுத்தனுப்புவார்கள். இப்படிக் கல்யாணம் செய்து கொடுத்த அனைத்துப் பெண்களுக்கும் வைத்தி தாத்தா இரும்புப் பெட்டி வாங்கிக் கொடுத்திருக்கிறார். தேன்காடு சித்தியின் காலம் வரை இரும்புப் பெட்டிதான். வள்ளி சித்தியைக் கல்யாணம் கட்டிக் கொடுத்தக் காலத்தில்தான் இரும்புப் பெட்டி சூட்கேஸாக மாறியது.
            அந்தப் பெட்டியை அம்மாவோ வீட்டில் யாரோ பயன்படுத்திய ஞாபகம் விகடுவுக்கு இல்லை. வீட்டில் பீரோ செய்யப்பட்ட பிறகு அதற்கு எந்த மதிப்பும் இல்லாமல் போய் விட்டது. அதற்குள் பழந்துணிகள் இருந்தன. ஒதுக்கப்பட்ட பெட்டியாய் அது பரண் மேல் கிடந்தது.
            அந்த இரும்புப் பெட்டி காலத்தின் சாட்சியம். சாமியாத்தா சீதனமாக எடுத்து வந்த இரும்புப் பெட்டியை விகடு பார்த்திருக்கிறான். அதன் அழுத்தமும் எடையும் ரொம்பவே அதிகம். மெனக்கெட்டு மல்லுகட்டிதான் தூக்க முடியும். அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அம்மாவுக்கான சீதன இரும்புப் பெட்டி எடையும், அழுத்தமும் குறைவானதுதான். சரியாகச் சொல்வதானால் சாமியாத்தாவின் பெட்டியே இரும்புப் பெட்டி. அம்மாவின் பெட்டி தகரப் பெட்டிதான். என்ன கணேமோ அதை இரும்புப்  பெட்டி என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அம்மாவின் பெட்டியைச் சாதாரணமாக தூக்கி விடலாம். அதனோடு வள்ளி சித்திக்கு வாங்கிக் கொடுத்த சூட்கேஸை சர்வ சாதாரணமாகத் தூக்கி விடலாம். வள்ளி சித்திக்கும் தாத்தா இரும்புப் பெட்டி வாங்கும் யோசனையில்தான் இருந்தார்.
            "தகர பெட்டிய ல்லாம் தூக்கிட்டுப் போயி நம்மால எம்ம புகுந்த வூட்டுக்குப் போயி அசிங்கப்பட முடியாது. சூட்கேஸூதான் வேணும்." என்று அடம் பிடித்து சூட்கேஸாக வாங்கிக் கொண்டு போனது.
            அப்பங்காரன் அந்தப் பெட்டியின் மேல் பாய் தலையணையை வைத்து அதைத் தூக்கிக் கொடுக்கும் போது, அதை வாங்கும் பெண்ணுக்கு கண்ணில் பொலபொலவென கண்ணீர் கொட்டும். இந்த விசயத்தில் அம்மாவுக்கு நடந்த கதை வேறு. சாமியாத்தா அதை அடிக்கடிச் சொல்லும். "பெட்டிய வாங்குற பொண்ணுவோ அழுதுதாங் பாத்துருக்கிறன். இவ இருக்காளே கல்நெஞ்சக்காரி. சிரிச்சுகிட்டே வாங்குன மொத பொம்பள இவதாம். எப்ப பொறந்தவூட்ட வுட்டுட்டு போவலாம்னு நின்னுட்டு இருந்துருப்பா போலருக்கு!"
            பெட்டியை வாங்கிய விதத்தில் மிக மோசமாக அழுதது தேன்காடு சித்தி. அதையும் சாமியாத்தா சொல்லும். விகடுவும் அதை நேரில் பார்த்திருக்கிறான். "பெட்டிய வாங்குறப்ப இவ்வோ அழுத அழுக இருக்கே. நிறுத்தவே மாட்டேங்றா. ஏண்டி இப்படி அழுவுறோன்னு கேட்டா, புருஷங்காரனோடு இங்கய இருந்துகிடவாங்றா. அதுவும் உங்க தாத்தன்கிட்டயா? நாளு கெழமன்னு வந்தாவே எப்ப கிளம்புறீர்ருனு நிப்பாரு. அட கருமத்தே! ஒவ்வொண்ணும் ஒவ்வொரு தினுசு. எப்டி ல்லாத்தையும் கரயேத்த போறேன்னு நனச்சுகிட்டு இருந்தன். ல்லாம் எப்படியோ கரயேறிப் போயிடுச்சுங்க!" சொல்லி விட்டு சாமியாத்தா விடும் பெருமூச்சில் ஓர் ஆசுவாசம் இருக்கும்.
            வைத்தி தாத்தா அம்மாவுக்கு வாங்கிக் கொடுத்த அந்தப் பெட்டி இப்போது பெயிண்ட் போயிருந்தது. அதற்கு பச்சைவண்ண பெயிண்ட் வைத்து மூலைகளில் கால் வட்டம் மாதிரி ரோஸ் நிற பெயிண்ட் வைத்திருந்தார்கள். அப்பா அதற்கு ஆலிவ் கிரீன் பெயிண்ட் வைத்தார். ஒட்டுமொத்தத்துக்கும் அதே பச்சை நிறம். பெட்டி இப்போது புதுப்பெட்டி போலிருந்தது.
            ஹாஸ்டலில் அந்தப் பெட்டியோடு அப்பா இறக்கி விட்ட நாள் விகடுவுக்கு ஞாபகம் இருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்பு வாங்கிய புதிய டி.வி.எஸ்.பிப்டியில் முன்னே பெட்டியை வைத்து, பின்னால் விகடுவை உட்கார வைத்து கொண்டு வந்து அப்பா விட்டு விட்டுப் போனார்.
            அந்த டிவியெஸ் பிப்டியைப் பற்றியும் சொல்ல வேண்டும்.
            சம்பள லோன் போட்டு ஆசிரியர்கள் அப்போது மோட்டார் வண்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். மாதா மாதம் சம்பளத்தில் வண்டிக்கானத் தவணைத் தொகையை அலுவலகத்திலிருந்தே பிடித்துக் கட்டி விடுவார்கள். அதைத்தான் ஆசிரியர்கள் சம்பள‍ லோன் என்பார்கள்.
            விநாயகம், கணேசன் வாத்தியார்கள் எல்லாம் அப்பாவுக்கு முன்பே கியர் வண்டியை லோன் போட்டு எடுத்திருந்தார்கள். லாலு மாமா பஜாஜ் எம் எய்டியை எடுத்திருந்தார். அப்பா இந்த விசயத்தில் யோசித்துக் கொண்டே இருந்தார். விகடுவை நரிவலத்தில் சேர்க்க வேண்டியிருந்ததால் அழைத்துக் கொண்டு போக, விட்டு வர வசதியாக இருக்கும் என்று நினைத்துதான் அவர் டிவியெஸ் பிப்டி வாங்க முடிவெடுத்தார். அவரது எதிர்பார்ப்பிற்கு மாறாக அந்த டிவியெஸ்பிப்டியிலே நரிவலத்துக்கும் திட்டைக்கும் நாள்தோறும் வந்து போக வேண்டியிருக்கும் என்று அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அது பின்னர் நடந்த கதை. இந்தக் கதையின் போக்கிலேயே அதை பிறகு சொல்கிறேன்.
            சம்பள லோன் என்றாலும் முன்தொகையாக ஒரு தொகையைக் கட்டிப் பதிவு செய்ய வேண்டும். மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் வண்டி லோடு திருவாரூர் ஏஜென்ஸி ஆபிஸில் வந்து இறங்கும். அப்போது திருவாரூர் ஏஜென்சி ஆபீஸில் போய் நின்று கொள்ள வேண்டும். லோடு இறங்கிக் கொண்டிருக்கும் போது நமக்குப் பிடித்தமான நிறமுள்ள வண்டியாகப் பார்த்து அதைப் பிடித்துக் கொண்டே போய் வண்டியோடு நின்று கொள்ள வேண்டும். அப்படி பச்சை நிற டிவியெஸ் பிப்டியோடு வண்டியைப் பிடித்துக் கொண்டே போய் விநாயகம் வாத்தியார் நின்று கொண்டார். அவர்தான் அப்பாவை வண்டியில் அப்பாவைப் பின்னால்  உட்கார வைத்து அழைத்துக் கொண்டு வந்தார். அந்த வண்டியை வாங்குவதற்காக திட்டைப் பள்ளியின் ஆசிரியர் வகையறாக்கள் அனைவரும் சென்றிருந்தார்கள். கணேசன் வாத்தியாரும் அப்பாவும் அவருடைய கியர் பைக்கில் சென்றிருந்தார்கள். லாலு வாத்தியாரின் எம்மெய்ட்டியில் அவரும் விநாயகம் வாத்தியாரும் சென்றார்கள். 
            அப்பாவுக்கு டி.வி.எஸ்.பிப்டியை ஓட்டக் கற்றுக் கொடுத்தது லாலு மாமாதான். அதில் ஓட்டக் கற்றுக் கொடுக்க என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். லாலு மாமா அப்பாவுக்குச் சொல்லிக் கொடுத்ததை நீங்கள் பார்த்திருந்தால் அதில் ஓட்ட கற்றுக் கொடுக்க எவ்வளவவோ விசயங்கள் இருக்கின்றன என்பதை மறுக்க மாட்டீர்கள்.
            லாலு மாமா பஜாஜ் எம் எய்டிக்காரர் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான். அதில் அவர் உருண்டு பிரண்டு விழுந்து எழுந்து பலவிதமாய் ஓட்டியிருக்கிறார். வண்டி ஓட்டுவதில் அனுபவம் அவருக்கு அந்த அளவுக்கு அதிகமாய் இருந்தது. வண்டியோட்டியதால் ஏற்பட்ட விழுப்புண்களும் அவரது உடலில் ஏரளமாக இருந்தன.
            லாலு மாமா வந்து சொல்லிக் கொடுக்கும் வரை வாங்கி வந்த வண்டி ஒரு வாரத்துக்கு மேல் போர்வை போர்த்தியபடி திண்ணையிலேயே கிடந்தது. யாரும் பார்க்காத நேரத்தில் போர்வையைத் தூக்கிக் கடாசி விட்டு செய்யு அதில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஓட்டுவதைப் போல பாவனை செய்து கொண்டிருப்பாள். ஆக்ஸிலேட்டரைத் திருகுவாள். ஹாரனை அடித்துப் பார்ப்பாள். அவ்வளவு ஆர்வமாய் இருந்தவள் பின்னாட்களில் அந்த வண்டியை ஓட்டக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் இல்லாமலேயே இருந்து விட்டாள்.
            ஊரில் இருந்தவர்கள் அப்பாவிடம் வண்டியை எடுத்து ஓட்டிப் பார்க்குமாறு சொன்னார்கள். குறிப்பாக எதிர் வீட்டு தாடி தாத்தா அதை அதிகமாகவே வலியுறுத்தினார். "எல்லாரையும் விசாரிச்சுப்புட்டேன் சார்! சைக்கிள் ஓட்டுற மாதிரிதான் இருக்குமா. ஸ்டார்ட் பண்ணி ஏறி உட்கார்ந்துட்டு ஆக்ஸிலேட்டரைத் திருக வேண்டிதானாம்!" என்றார்.
            "லாலு வாத்தியாரு வந்துடட்டுமேன்னு பாக்குறேன்!" என்றார் அப்பா.
            தெருவில் இருந்தவர்கள் அதுவரை வண்டியைத் தினமும் வந்து பார்த்து விட்டுச் சென்றார்கள்.
            லாலு மாமா வண்டி கற்றுக் கொடுப்பதற்கு சனி, ஞாயிற்றைக் கணக்குப் பண்ணி வைத்திருந்தார். சனிக்கிழமை வந்தவர் வண்டியை ஸ்டார்ட் செய்து அப்பாவைப் பின்னால் உட்கார வைத்து தெருவை ஒரு ரவுண்ட் வந்தார். அதற்குள் செய்யு அடம் பிடித்ததால் அப்பாவை இறக்கி விட்டு செய்யுவோடு ஒரு ரவுண்ட் வந்தார்.
            பிறகு வண்டியை எப்படி ஸ்டார்ட் செய்வது என்பதைச் சொல்லிக் கொடுத்தார். கிளட்சைப் பிடித்துக் கொண்டு பெடலை உதைத்து ஸ்டார்ட் செய்வது அப்பாவுக்கு பிரயத்தனமாக இருந்தது. வண்டி ஸ்டார்ட் ஆனவுடன் கிளட்சை விட்டு விடுங்கள் என்று சொன்னார் லாலு மாமா. நன்றாக ஞாபகம் வைத்து பாடம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார்தான் அப்பா. அது மட்டும் அவருக்கு சரியாக அந்த நேரத்தில் மறந்து போனது. ஒன்று கிளட்சைப் பிடிக்காமல் ஸ்டார்ட் பண்ணுவது அல்லது ஸ்டார்ட் செய்த பின்னரும் கிளட்சை விடாமல் இருப்பது என அப்பா வண்டியை ஸ்டார்ட் செய்ய கற்றுக் கொள்வதற்கே இரண்டு நாட்கள் ஆனது. இப்போதுள்ள பட்டன் ஸ்டார்ட்டை நினைத்துப் பார்க்கும் போது வண்டியை ஸ்டார்ட் செய்யக் கற்றுக் கொள்ளவே இரண்டு நாட்கள் ஆனது என்ற செய்தி ரொம்பவே வேடிக்கையானதுதான் இல்லையா!
            லாலு மாமா தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் அப்பாவுக்காக ஒரு வார காலம் வரை மெனக்கெட்டு வண்டி ஓட்டக் கற்றுக் கொடுத்தார். ஒரு சைக்கிளை ஓட்டக் கற்றுக் கொடுப்பதைப் போல அவர் டி.வி.எஸ்.பிப்டியை ஓட்டக் கற்றுக் கொடுத்தார். அப்பா வண்டியை ஸ்டார்ட் செய்து மெதுவாக நகர ஆரம்பித்த போது அப்பாவோடு வண்டியைப் பிடித்தபடியே ஓடினார் லாலு மாமா. அவரது கனத்த உருவத்துக்கு அவர் வண்டியின் பின் ஓடியதைப் பார்த்து தெருவில் வேடிக்கைப் பார்த்தவர்கள் எல்லாம் சிரித்தார்கள். அப்பா சற்று வண்டியில் வேகமாக போனது போது அவரும் வேகம் எடுத்து ஓடினார். அவர் ஓடிய வேகத்தில் தடுமாறி விழுந்து விடுவாரோ என்ற பயம் பார்த்துக் கொண்டிருந்த எல்லாருக்கும் இருந்தது.
            "வாத்தியாரே பின்னால ஓடுறேன்னு விழுந்துடாதீங்க!" என்றனர் அதைப் பார்த்த ஒவ்வொருவரும்.
            "நாம பின்னால ஓடலன்னா அவரு விழுந்துடுவாருங்க!" என்று சொல்லியபடி ஓடுவதை நிறுத்தாமல் ஓடிக் கொண்டிருந்தார் லாலு மாமா. மிகச் சரியாக மீண்டும் சொல்வதென்றால் டி.வி.எஸ்.பிப்டியைச் சைக்கிளாகப் பாவித்தே சைக்கிள் ஓட்டுவதைச் சொல்லிக் கொடுப்பதைப் போலவே அவர் சொல்லிக் கொடுத்தார். சைக்கிளை ஓட்டக் கற்றுக் கொடுக்கும் போது கேரியரை பிடித்துக் கொள்ள அந்த வாகிலேயே சில நாட்கள் ஓட்டப் பழகுவார்களே அதே போன்ற வாகிலேயே டி.வி.எஸ்.பிப்டியின் பின்னால் இருந்த கம்பியை அவர் பிடித்துக் கொள்ள அப்பா ஒரு வார காலத்துக்கு ஓட்டிக் கொண்டிருந்தார்.
            அப்பா வண்டியை ஓட்டக் கற்று முடித்த போது லாலு மாமாவுக்கு ஒரு ஏரோபிளேனையே ஓட்டக் கற்றுக் கொடுத்தது போல பெருமிதம் அவர் முகத்தில் இருந்தது.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...